24/10/2022

ஊட்டி 200 - ஊட்டிக்கு வந்த ஐரோப்பா



தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வீற்றிருக்கும் நீலகிரியில் உள்ள ஊட்டி நகரம் உருவாகி 200 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ‘மலைகளின் ராணி’ என்றழைக்கப்படும் ஊட்டி நகரின் வளர்ச்சியில் பிரிட்டிஷாரின் கைவண்ணம் உண்டு. இந்த அழகிய நகரை அன்று அதன் இயல்பும் பசுமையும் மாறாமல் உருவாக்கினர் ஆங்கிலேயர்கள். இந்த ஊட்டி நகரம் உருவானதன் பின்னணியில் சுவராசியமான பிண்ணணி அம்சங்கள் உள்ளன.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீல நிற குறிஞ்சி மலர்கள் அதிகம் பூக்கும் பகுதி என்பதால்தான், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரிக்கு அந்தப் பெயரே வந்தது. சிலப்பதிகாரத்தில் இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே இந்த ஊரின் சிறப்பை அறியலாம். ஆண்டாண்டு காலமாகத் தோடர்கள், கோத்தர்கள், குரும்பர்கள் எனப் பழங்குடியினர் வாழும் பூர்வக்குடிகளின் நிலமாகத்தான் நீலகிரி இருந்தது. இந்தப் பகுதி ஆங்கிலேயர்கள் வசம் வந்த பிறகு இந்த ஊர் அடைந்த வளர்ச்சி அதீதமானவை.

திப்புவும் நீலகிரியும்

குளுகுளு வெப்பநிலையில் இருந்து பழக்கப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் நிலவிய வெப்பம் சுட்டெரித்தது. வெப்பத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எங்கெல்லாம் மலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் தஞ்சம் அடைந்தார்கள். அப்போது அந்த மலைப் பகுதியையும் வளர்த்தெடுத்தார்கள். அப்படித்தான் நீலகிரியும் ஆங்கிலேயர்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக மாறியது. 1600களில் தொடங்கி சென்னையை எப்படியெல்லாம் ஆங்கிலேயர்கள் வளர்த்தெடுத்தார்களோ, அதுபோலவே 1800களில் தொடங்கி நீலகிரியையும் வளர்த்தெடுத்தார்கள்.

நீலகிரியில் உள்ள ஊட்டி வளர்ந்ததன் பின்னணியில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பவர் ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேய அதிகாரிதான். இவர் இல்லாவிட்டால் ஊட்டியே இல்லை என்று சொல்லுமளவுக்கு, ஊட்டியின் வளர்ச்சியில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், 1799 மே 4 வரை நீலகிரி அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல்தான் இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு முன்பாக மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த திப்பு சுல்தானின் ஆளுகையில்தான் நீலகிரியும் இருந்தது.

மைசூரைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் தொடர்ந்து போரிட்டனர். ஆங்கிலோ - மைசூர் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் போர்கள் 4 முறை நடைபெற்றன. நான்காவது முறையாக நடந்த போரில் 1799 மே 4 அன்று திப்பு சுல்தான் கொல்லப்பட்டதோடு, அங்கு அவருடைய ஆட்சி முடிவுக்கு வந்தது. பிறகு ஆங்கிலேயர்களின் மேற்பார்வையில் உடையார்கள் அந்தப் பகுதியை ஆண்டனர். நீலகிரி வரை நீண்டிருந்த மைசூர் ராஜ்ஜியம், ஆங்கிலேயர்கள் வசம் வந்த பிறகு, அந்தப் பகுதி சென்னை மாகாணத்தில் இருந்த கோவை மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.



சல்லிவனின் பயணம்

அப்போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர்தான் ஜான் சல்லிவன். அந்தக் காலகட்டத்தில் பனி படர்ந்த மலைப் பகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தனர் ஆங்கிலேயர்கள். அப்போதுதான் நீலகிரி மலையை ஆராய்ந்து தகவல் தெரிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்கள் விஷ், கைண்டர்ஷ்லி ஆகியோருக்கு 1811இல் சல்லிவன் உத்தரவிட்டார். இவர்கள் ஆராய்ந்து ஜான் சல்லிவனுக்கு தெரிவித்தத் தகவல்கள் அவருக்கு ஆவலைத் தூண்டின. இதனையடுத்து மலை மேல் சென்று ஆராய சல்லிவன் முடிவெடுத்தார். இதற்காக யானைகள், குதிரைகள், வேட்டை நாய்கள், படை வீரர்கள் அடங்கிய படையை அனுப்பும்படி சென்னை மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் முன்றோவுக்குக் (சென்னை அண்ணா சாலை தீவுத்திடல் அருகே குதிரை சிலையில் அமர்ந்த நிலையில் இருப்பதுதான் தாமஸ் முன்றோ) கடிதம் எழுதினார்.

இதற்கு சென்னை மாகாண அரசு அனுமதி அளித்தவுடன் நீலகிரி மலைக்கு செல்ல ஆயத்தமானார் சல்லிவன். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 1819ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று ஒரு குளிர்க் காலத்தில் தன்னுடைய நீலகிரியை நோக்கி பயணத்தைத் தொடங்கினார். மலைக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத காலம் அது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் இருந்துதான் பயணத்தைத் தொடங்கினார் சல்லிவன். கடினமான கற்கள், காட்டுச் செடிகள், பெரிய மரங்கள், ஆங்காங்கே ஓடைகள், பெரிய பள்ளத்தாக்குகள் போன்றவற்றைக் கடந்துதான் செல்ல வேண்டியிருந்தது. குறுக்கே இருந்த சிறு பாறைகளை உடைத்தும் செதுக்கியும் படை வீரர்கள் ஒரு வழிப் பாதையை ஏற்படுத்தினர். இந்தப் பாதையில்தான் சல்லிவன் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஆனால், பயணம் சுலபமாக இல்லாமல் போனது. யானைகளால் மலைகளில் ஏற முடியாமல் போனது. பல வீரர்கள் வழுக்கி விழுந்து உயிரிழந்தனர். இன்னும் பலருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. இறுதியில் கயிறு கட்டிதான் கரடு முரடான பாதையில் பயணம் செய்தார் சல்லிவன். ஆறு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 8 அன்று சல்லிவன் குழுவினர் ஓரிடத்தை அடைந்தனர். அது, கோத்தகிரி. அதாவது, கண்ணேறிமூக்கு அருகே திம்ஹட்டி என்ற கிராமத்தைத்தான் அடைந்தனர். அவர்களை அங்கிருந்த தோடர்கள் இன்முகத்துடன் வரவேற்றதாகக் கூறப்படுகிறது. மலையில் தோடர்கள் வரவேற்ற நிகழ்வு சல்லிவனுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமவெளிப் பகுதியில் இருந்து இவ்வளவு கஷ்டப்பட்டு மலைக்கு வந்த ஓரிடத்தில் மனிதர்கள் வாழ்கிறார்களே என்ற ஆச்சரியம்தான் அது.

ஒத்தக்கல் மந்து - ஒட்டகமண்ட்

அங்கிருந்தவர்களிடம் ஊர் பற்றி விசாரித்திருக்கிறார் சல்லிவன். அதற்கு ‘ஒத்தக்கல்மந்து’ என்ற பதில் கிடைத்திருக்கிறது. இதில் ‘மந்து’ என்பது தோடர்களின் வாழிடம் என்று பொருள். ஆனால். சல்லிவனுக்கு ‘ஒத்தக்கல்மந்து’ என்ற வார்த்தை வாயில் நுழையவில்லை. அவர், ‘ஒட்டகமண்ட்’ என்று சொல்லியிருக்கிறார். அந்த வார்த்தைதான் காலப்போக்கில் மருவி ‘உதகமண்டலம்’ என்று திரிந்தது. ஆறு நாட்கள் பயணித்து நீலகிரி மலைக்கு வந்த சல்லிவன், அன்று இரவு அங்கேயே தங்கினார். அடுத்த நாள் காலையில் அவர் எழுந்தபோது மண் குடுவையில் இருந்த தண்ணீர் உறைந்து போயிருந்ததைக் கண்டு உறைந்துபோனார். தான் கண்ட காட்சியை அப்படியே உடனே விவரித்து, சென்னை மாகாண ஆளுநர் தாமஸ் முன்றோவுக்குக் கடிதம் எழுதினார்.



அந்தக் கடிதத்தில் நீலகிரியை சுவிட்சர்லாந்துக்கு இணையாக வர்ணித்து சல்லிவன் குறிப்பிட்டிருந்தார். பின்னர் கோவைக்குத் திரும்பிய சல்லிவன், சும்மா இருக்கவில்லை, இந்த மலையைப் பற்றி நேரடியாக விவரித்து கூறுவதற்காக மதராஸுக்கு சென்றார். அங்கு ஆளுநரைச் சந்தித்து நீலகிரியில் தான் நேரடியாக உணர்ந்தவற்றை சிலிர்ப்புடன் எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியாக மதராஸ் மாகாணா அரசு, நீலகிரி வாழத் தகுதியாக இருக்கிறதா என்பதை மெட்ராஸ் மெடிக்கல் சொசைட்டி மூலம் ஆராய உத்தரவிட்டது. அந்த ஆய்வின் முடிவு சாதகமாக கிடைக்கவே, பிரிட்டிஷ் அரசு, நீலகிரியில் ஆங்கிலேயர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு மலை பிரதேசத்தை உருவாக்க முடிவு செய்தது. அந்தப் பொறுப்பும் ஜான் சல்லிவனிடம்தான் பிரிட்டிஷ் அரசு ஒப்படைத்தது.

தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவையே ஆட்டிப் படைத்த பிரிட்டிஷ் அரசு, நீலகிரியில் பழங்குடியின மக்களிடமிருந்து இடத்தை அடாவடியாகப் பிடுங்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த மண், மலையை நம்பி வாழும் பழங்குடிகளுக்கு சொந்தமானது என்பதால், அந்த இடத்தை விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்பதில் ஜான் சல்லிவன் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.அந்த வகையில் நீலகிரி பழங்குடியினர் மீது ஜான் சல்லிவன் கரிசணத்தோடு இருந்ததாகவே கருதப்படுகிறது.

முதல் ஐரோப்பியக் கட்டிடம்

அப்படி விலைக்கு வாங்கிய ஓரிடத்தில் ஒரு பங்களாவைக் கட்ட வேண்டும் என்று சல்லிவன் விரும்பினார். அதாவது, கோவையில் இருந்து நீலகிரிக்கு வரும்போது தங்கி பணிகளை செய்யும் வகையில் பங்களாவைக் கட்ட இந்த முடிவை எடுத்தார். ஊட்டியில் தோடர்களிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு வாங்கிய இடத்தில்தான் முழுவதும் கல்லால் ஆன ஐரோப்பிய பாணியிலான பங்களாவைக் கட்டினார் சல்லிவன். அந்தக் கல் பங்களா இன்றும் ஊட்டியில் உள்ளது. அது தற்போது ஊட்டி அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த நவீன கல் பங்களா கட்டப்பட்டதிலிருந்துதான் ஊட்டியின் வரலாறும் தொடங்கியது.

இந்த பங்களா கட்டியதோடு சல்லிவன் நிற்கவில்லை. ஆளுநர், ஆங்கிலேய உயரதிகாரிகள் நீலகிரிக்கு வந்தால், அவர்கள் சகல வசதிகளுடன் தங்கும் வகையில் பல மாளிகைகளைக் கட்டவும் சல்லிவன் முடிவு செய்தார். நீலகிரியில் ஒவ்வொரு கட்டிடமாக கட்ட கட்ட, பிரிட்டிஷாரின் கைவண்ணத்தில் ஊட்டி ஒரு தனி நகராகவே மாறியது. ஊட்டியை வெறுமனே ஓய்வெடுக்க மட்டுமே பயன்படுத்தும் பகுதியாக மட்டும் சல்லிவன் உருவாக்கவில்லை. அந்தப் பகுதியில் வேளாண் வளர்ச்சியையும் முன்னெடுத்தார். இன்று ஊட்டியின் முக்கிய காய்கறி, பழங்களாகக் கருதப்படும் ஆப்பிள், பிளம்ஸ், உருளை, முட்டைகோஸ், கேரட் போன்ற ஐரோப்பிய காய்கறி வகைகளையும் தேக்கு, ஐரோப்பிய சின்கோனா மரங்கள், பார்லி, தேயிலை போன்ற பயிர்களையும் அறிமுகப்படுத்தி ஊட்டியில் வேளாண் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இன்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஊட்டி படகு இல்லம் அமைந்துள்ள செயற்கையான ஏரியை வெட்டியதும் ஜான் சல்லிவன்தான். பாசன வசதிக்காகத்தான் இந்த ஏரியை சல்லிவன் வெட்டினார். 1828இல் ஊட்டியில் பிரிட்டிஷாருக்கான ராணுவ கண்டோண்மெண்ட்டையும் சல்லிவன் உருவாக்கினார்.



1829இல் பிரிட்டிஷ் ஆயுதப் படை வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறிய மருத்துவமனையும் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனைதான் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு, இன்று உதகமண்டலம் அரசு மருத்துவனையாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அமைத்ததன் பின்னணியிலும் சல்லிவனே இருந்தார். இப்படி ஊட்டி என்ற ஊரைக் கண்டுபிடித்து, அந்த ஊரை செதுக்கிய சல்லிவனை ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் பந்தாடவும் செய்தனர். ஐரோப்பிய நாடுகளில் நிலவும் வெப்பநிலையில் அழகிய ஊராக இருந்த நீலகிரி ஆங்கிலேயர்களுக்குப் பிடித்த பிறகு, அந்த ஊரை மையமாக வைத்து ஆங்கிலேயர்களின் குடியேற்றங்களும் நடைபெற்றன. இதனால், நீலகிரி பூர்வக்குடிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் சல்லிவன் உறுதியாக இருந்தார். நீலகிரியில் பழங்குடியினருக்கு இருந்த உரிமைகள் பற்றி ஆங்கிலேய உயரதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களில் வாதிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது ஆங்கிலேய உயரதிகாரிகளுக்குப் பிடிக்காமல் போனதால், சல்லிவனை அங்கிருந்து வெளியேற்ற சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தபோது 1828-29இல் ஊட்டியை நிர்வகிக்கும் அதிகாரத்தை சல்லிவனிடமிருந்து பறித்து மேஜர் வில்லியம் கெல்சோ என்ற அதிகாரியிடம் வழங்கினர்.

வேகமாக வளர்ந்த ஊட்டி

கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு செல்லும் சாலை வழியை சல்லிவன் ஏற்படுத்தியிருந்த நிலையில், 1832க்குப் பிறகு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சாலை வழியையும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினர். அதன் பிறகான காலத்தில் ஊட்டியின் வளர்ச்சி இன்னும் வேகம் பிடித்தது. ஊட்டியில் ஐரோப்பிய பாணி கட்டிடங்கள் இன்னும் அதிகமாக கட்டப்பட்டன. குதிரை லாயங்கள், கொட்டில்கள், கோடைகால மாளிகைகள் என ஊட்டியின் தோற்றத்தையே ஆங்கிலேயர் மாற்றினார். ஊட்டியில் இன்றும் உள்ள புனித ஸ்டீபன் தேவாலயம் உள்பட பல தேவாலயங்களையும் ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் இருந்த பல வசதிகளையும் ஊட்டியில் கொண்டு வந்தனர். இன்று ஊட்டியின் இதயமாக விளங்கி வரும் தாவரவியல் பூங்கா 1848இல் அமைக்கப்பட்டது. 1877 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லிட்டன் பிரபு ஊட்டிக்கு வந்து சென்றிருக்கிறார். அப்போது ஊட்டியில் பெய்த மழையையும் களிமண் சாலையில் பயணித்ததையும் லிட்டன் விரும்பியதாகப் பதிவுகள் உள்ளன.

1876இல் ஊட்டியில் ஆளுநர் மாளிகை (இப்போது ஊட்டி ராஜ்பவன்) கட்ட முடிவு செய்யப்பட்டு, 1888இல் கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் காலத்திலேயே ரூ. 4 லட்சத்தில் கட்ட முடிவு செய்யப்பட்ட இந்த மாளிகை, கட்டி முடித்தபோது ரூ. 7.82 லட்சம் செலவு பிடித்திருக்கிறது. ஊட்டி நவீன ஊராக மாறிக்கொண்டிருந்த வேளையில், அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1899இல் ஆங்கிலேயர்கள் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை ரயில் போக்குவரத்தையும் தொடங்கினர். இந்த மலை ரயில் பாதையை மிகவும் சிரம்மப்பட்டுதான் அமைத்திருக்கிறார்கள். ரயில் பாதைக்குத் தடையாக இருந்த பாறைகளைக் குடைந்தார்கள். பாதைகளுக்குக் குறுக்கே வந்த பள்ளத்தாக்கில் பாலங்களை அமைத்தார்கள். செங்குத்தான மலை பாதை என்பதால் பற்சக்கரங்களைக் கொண்டும் ரயில் பாதையை ஏற்படுத்தினார்கள். இன்றுபோல தொழில்நுட்பம் பெரிய வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்திலேயே இவற்றையெல்லாம் முடித்துகாட்டினார்கள் ஆங்கிலேயர்கள். இதை ஆங்கிலேயர்களின் பொறியியல் அற்புதம் எனலாம்.

வந்தது மலை ரயில்

1899-ஆம் ஆண்டில் மலை ரயில் பாதை தயாரானது. முதலில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 27 கி.மீ. தொலைவுக்குதான் ரயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் குன்னூர் - ஊட்டி இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணியைப் பிரிட்டிஷ் அரசு தொடங்கியது. 19 கி.மீ. நீளமுள்ள அந்தப் பணி முடிந்ததையடுத்து, 1908 அக்டோபர் 15 அன்று குன்னூர் - ஊட்டி வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. அப்போது தொடங்கி நூற்றாண்டைக் கடந்து மலை ரயில் போக்குவரத்து இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலை ரயில் வருகைக்குப் பிறகு ஊட்டியின் வளர்ச்சி அடுத்தக் கட்டத்துக்கு சென்றது.



தொடக்கக் காலத்திலும் சரி, பிறகும் சரி ஊட்டியை ஆங்கிலேயர்கள் ஒரு கோடை வாழிடமாகத்தான் பார்த்தார்கள். ஆனால், ஊட்டி ஆங்கிலேயர்களின் மனதுக்கு நெருக்கமானதால்தான், அந்த ஊரை ஐரோப்பிய பாணியில் நிர்மானிக்கத் தொடங்கினார்கள். ஊட்டி நகரின் மீதிருந்த ஆங்கிலேயர்களுக்கு இருந்த காதல் காரணமாகத்தான் இன்றைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளை உள்ளடங்கிய மதராஸ் மாகாணத்தின் கோடைக் கால தலைநகராக 1870 முதல் 1937 வரை ஊட்டி 67 ஆண்டுகள் இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகும் 1959இல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோடைக் காலத்தில் அரண்மூர் பேலஸில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது.

இன்றைய ஊட்டி

நீலகிரி என்ற ஊரையே ஆங்கிலேயர்கள் வளர்த்தெடுத்திருந்தாலும், ஊட்டியில் ஆங்கிலேயர்கள் காலடி எடுத்து வைத்து சல்லிவன் கட்டிய முதல் கல் பங்களாவிலிருந்துதான் அந்த ஊரின் வரலாறும் தொடங்குகிறது. 1822இல் இந்த கல் பங்களாவை ஜான் சல்லிவன் கட்டத் தொடங்கினார். அந்த வகையில் ஊட்டி இந்த ஆண்டு (2022) 200 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இன்று ஊட்டி இந்தியாவின் முக்கியமான சுற்றுலாதளங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் பேர் ஊட்டிக்கு வருவதே அதற்கு சாட்சி. பழங்குடிகள் வாழ்ந்த இந்த ஊரை ஆங்கிலேயர்கள் நவீன நகராக மாற்றினர். புதிய பயிர்கள், ஐரோப்பிய மரங்களை அவர்கள் இங்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும் பெரிய அளவில் நீலகிரியின் இயல்பு மாறாமலேயே இருந்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு சுற்றுலாவையும் வணிகத்தையும் முதன்மைப்படுத்திய திட்டங்களால் நீலகிரி இன்று காங்கிரீட் வனமாக மாறும் அளவுக்கு அதன் தோற்றமும் பொலிவும் மாறி வருகிறது.

ஊட்டி 200 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த வேளையில், அந்த நகரின் இயல்பையும் பசுமையையும் மாற்றாமல், வருங்கால தலைமுறையிருக்கு விட்டுச் செல்வதே அந்த ஊருக்கு மனிதர்கள் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.



சல்லிவனுக்கு மரியாதை



ஊட்டியிலிருந்து ஜான் சல்லிவன் பணிமாற்றம் செய்யப்பட்டப்போதும், கோயம்புத்தூர் ஆட்சித் தலைவராக 1838ஆம் ஆண்டு வரை அவரே நீடித்தார். அந்தக் காலக்ட்டத்தில் ஊட்டியில் பெரும்பாலான காலத்தையும் கழித்திருக்கிறார். 1838ஆம் ஆண்டில் அவருடைய மனைவியும் மகளும் ஊட்டியில்தான் இறந்தனர். ஊட்டியில் உள்ள புனித ஸ்டீபன் தேவாலயத்தில் அவர்களுடைய கல்லறைகள் இன்றும் உள்ளது. அவர்களுடைய மரணத்துக்குப் பிறகு முதலில் மதராஸ் மாகாண பணிக்கும் பிறகு இங்கிலாந்துக்கும் தன்னுடைய 8 குழந்தைகளுடன் திரும்பினார். 1855இல் இங்கிலாந்தில் உயிரிழந்தார். சுதந்திர இந்தியாவில் சல்லிவனைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய கல்லறையைக் கண்டுபிடிக்கும் பணி 1999இல் தொடங்கி 10 ஆண்டுகளாக நடைபெற்றது. இறுதியில் 2009 ஜூலை 14 அன்று இங்கிலாந்தில் ஈத்ரு விமான நிலையம் அருகே புனித லாரன்ஸ் பேராலயத்தில் அவருடைய கல்லறைக் கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊட்டி 200ஆம் ஆண்டுவிழாவையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஜான் சல்லிவன் சிலையை தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment