09/05/2022

மு.க. ஸ்டாலின் ஆட்சியின் ஓராண்டு செயல்பாடு எப்படி?





இதற்கு முன்பு எந்த முதலமைச்சரும் பதவியேற்கும்போது இருந்திராத சூழலில்தான் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஒரு புதிய அரசுக்கு முதல் 6 மாதங்களில் கிடைக்கும் ‘ஹனிமூன்’ காலம் என்ற அனுகூலம் கூட ஸ்டாலின் அரசுக்குக் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே கரோனா இரண்டாம் அலையின் நெருக்கடியை ஸ்டாலின் அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் கரோனா; பிறகு மழை, வெள்ளம் என முதல் 6 மாதங்கள் பேரிடர்களிலேயே ஆட்சியாளர்கள் சக்தியைச் செலவழிக்க வேண்டியிருந்தது.

எனவே, ஒரு புதிய அரசை ஓராண்டில் மதிப்பிடுவதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை. அதே வேளையில், ஒரு புதிய அரசு ஆட்சி செய்யும் முறையை மதிப்பீடு செய்யலாம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பதவியேற்ற திமுக அரசு, எடுத்த எடுப்பிலேயே தொலைநோக்குப் பார்வையோடு பல துறைகளின் பெயர்களை மாற்றம் செய்திருந்தது. குறிப்பாக, பொதுப்பணித் துறையின் கீழ் இருந்த நீர்வளத் துறையைத் தனியாகப் பிரித்தது ஒரு நல்ல தொடக்கம்.

கரோனா இரண்டாம் அலையை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் ஓரளவு சிறப்பாகவே கையாண்டது. ஒருங்கிணைந்த பணிகள் எப்போதுமே நல்லதொரு முடிவைக் கொடுக்கும். இதில் முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், செயலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பிற முன்களப் பணியாளர்களின் ஒருங்கிணைப்பு சிறப்பாகவே இருந்தது.

கருணாநிதி சுறுசுறுப்பாக இருந்தவரை அவருடைய நிழலில்தான் ஸ்டாலினின் அரசியல் பயணம் இருந்தது. அப்போது ஸ்டாலினின் செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அது கருணாநிதியைச் சார்ந்து சென்றுவிடும். ஆனால், இப்போது முதலமைச்சராகத் தன்னுடைய கடமையையும் மாநிலத்துக்குச் செய்ய வேண்டிய பொறுப்பையும் ஸ்டாலின் உணர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

ஓர் ஆட்சியாளர் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்கக் கூடியவராக இருக்க வேண்டும். அந்த வகையில், அரசு அதிகாரிகளின் கருத்துகளை முதல்வர் கேட்பதையும், அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதையும் கோட்டையில் கேட்க முடிகிறது. இது ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இலக்கணம். அதேவேளையில், அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது என்று பேசும் அளவுக்கு இதில் தளர்வு காட்டிவிடக் கூடாது என்பதையும் மறக்கக் கூடாது. இதேபோல விமர்சனங்களுக்கு முதல்வர் மதிப்பளிப்பதையும் கவனிக்க முடிகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதை இந்த ஓராண்டில் தமிழ்நாடு கண்டிருக்கிறது. பலதரப்பட்ட வல்லுநர்களோடு ஓர் அரசு இயந்திரம் இணைந்து செயல்படுவதும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதும், அதன்படி அரசை நகர்த்த திட்டமிடுவதும் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். குழுக்களில் திமுக ஆதரவாளர்களுக்கு இடம் அளிக்கப்படுவதாக எழும் விமர்சனங்களை அரசு நினைத்தால் தவிர்க்கலாம்.

கருணாநிதி காலத்தில் திமுக சீனியர் அமைச்சர்கள் மட்டும் சுதந்திரமாகச் செயல்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில், முதன்முறையாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற பி.கே.சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் போன்றோர் தனித்துச் செயல்பட முதல்வர் அனுமதித்திருப்பதையும் காண முடிகிறது. அவரவர் பொறுப்புகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிப்பது முதலமைச்சருக்கும் - அமைச்சர்களுக்கும் இடையே நல்ல புரிதலை உண்டாக்கும். அமைச்சரவையே கூட்டுப் பொறுப்புதான் எனும் கருத்துக்கும் இது நம்பிக்கையை ஏற்படுத்தும். அதேவேளையில், இதுவரை திமுக ஆட்சியில் இல்லாத வகையில், முதல் ஆண்டுக்குள்ளாகவே ஓர் அமைச்சரின் துறை மாற்றம் நடந்திருப்பதும், சர்ச்சைகளால் அது நடந்திருப்பதும் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு நிகழ்வு.

தேர்தல் வாக்குறுதிகளை ஒரு புதிய அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதில்தான் மக்களின் நல்மதிப்பெண்கள் கிடைக்கும். எத்தனை வாக்குறுதிகள் அளித்திருந்தாலும், அவற்றை நிறைவேற்றியிருந்தாலும் ‘கதாநாயகன்’ போல தனித்துத் தெரியும் வாக்குறுதிகளில்தான் மக்களின் கவனம் குவிந்திருக்கும். அந்த வகையில் மகளிருக்கான உரிமைத்தொகை, நீட் தேர்வு விலக்கு, டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம், காஸ் மானியம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் போன்றவை பேசுபொருளாகவே இருக்கின்றன.

டீசல் விலை குறைப்பு, காஸ் மானியம், பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் போயிருப்பது திமுக அரசுக்கு எதிர்மறையான மதிப்பெண்களையே கொடுக்கும். பல திட்டங்களைச் செயல்படுத்துவதில் வருவாய்ப் பற்றாக்குறை இடம் அளிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தமிழகத்தின் நிதி நிலைமையும் வருவாய்ப் பற்றாக்குறையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தேர்தலுக்கு முன்பாக மார்ச் மாதத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது இதை உணராமல் போனதுதான் இப்போது விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

விருப்பக் குறிகளைப் பெறுவதுதான் இப்போது அரசியல் என்ற நிலை உருவாகியிருக்கும் சூழலில், சமூக வலைதளங்களில் டிரெண்டிங் விஷயங்களுக்கு ஆட்சியாளர்கள் முன்னுரிமை கொடுப்பதும் தெரிகிறது. சமூக வலைதளங்களில் எழும் கோரிக்கைகளுக்கு முதல்வர் செவிமடுப்பதும், சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகவோ அல்லது அழைத்தோ பேசுவது பாராட்டத்தக்க விஷயமே. ஆனால், இது அதீதமாகிவிடக் கூடாது. இது மக்களையும் தவறான மனோபாவத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். இந்த ஓராண்டில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் பல அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சி என்ற விமர்சனத்தைத் தவிர்க்க அரசு சிந்திக்க வேண்டும். மக்கள் மத்தியில் முகச்சுளிப்புகளை ஏற்படுத்தும் சட்டமன்றப் புகழுரைகளுக்கு முடிவுகட்டுவதும் அவசியம்.

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் வழக்குப்பதிவு, ரெய்டுகளோடு நிற்பதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதும், வழக்குகள் அடுத்த கட்டத்துக்கு நகராமல் தொய்வு ஏற்பட்டிருப்பதும் பல ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. ஊழல் செய்தவர்களுக்குத் தண்டனை எப்படி முக்கியமோ, அதுபோல ஊழல் நடைபெறாமல் இருக்கவும் வேண்டும். இதற்கு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல லோக் ஆயுக்தாவை வலுப்படுத்துவது முக்கியம். லாக்அப் மரணங்கள் எந்த ஆட்சிக்கும் நல்ல விஷயம் கிடையாது. காவல் துறையில் மேல் மட்டத்தில், அதிகாரிகள் மத்தியில் இருக்கும் ஒருங்கிணைப்பு, நல்ல அணுகுமுறை கடைநிலை காவலர் வரை இல்லை என்பதைத்தான் லாக்அப் மரணங்கள் உணர்த்துகின்றன. இது அரசுக்கு எதிரான மனநிலையைத்தான் மக்களிடத்தில் பிரதிபலிக்கும்.

திராவிட மாடல், சமூகநீதி, மாநில சுயாட்சி, ஒன்றிய அரசு போன்ற கோஷங்கள் இந்த ஓராண்டில் அதிகம் ஒலித்திருக்கின்றன. மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்கள், ஆளுநரோடு மோதல் போக்கு என்று இந்தியாவில் பாஜக அல்லாத அரசுக்கு உள்ள நெருக்கடிகளை உணர்ந்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின். ஓர் ஆட்சியின் ஓராண்டு செயல்பாடு என்பது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அச்சாரம். அதில் எதை எடுத்துக்கொள்வது, தவிர்த்துக்கொள்வது என்பதில்தான் ஆட்சியின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வெற்றி அடங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment