26/01/2020

சைக்கோ விமர்சனம்


கோவையில் வசிக்கும் பார்வையற்ற செல்வந்தரான கெளதம் (உதயநிதி), வானொலி அறிவிப்பாளர் தாஹினியை (அதிதீ ராவ்) ஒருதலையாகக் காதலிக்கிறார். தாஹினியின் கவனத்தைப் பெற அவரைச் சுற்றிச் சுற்றிவருகிறார். அதேநேரம், நகரில் அடுத்தடுத்து இளம் பெண்களைக் கடத்திக் கொடூரமான விதத்தில் கொல்லும் சைக்கோ கொலைகாரனை (ராஜ்குமார்  ) பற்றி எந்தத் துப்பும் கிடைக்காமல் அல்லாடுகிறது காவல்துறை. அப்படிப்பட்ட கொலைகாரனிடம் சிக்கிக்கொள்கிறார் தாஹினி. காவல்துறையால் கண்டுபிடிக்கமுடியாத அவனைக் கண்டுபிடித்து தனது காதலியைக் காப்பாற்றத் துடிக்கிறார் கௌதம். அதற்காக அவர் யாருடைய உதவியை நாடினார், அந்த சைக்கோ கொலைகாரன் யார், அவனது மனப்பிறழ்வுக்கு என்ன காரணம், பார்வையற்ற நாயகனால், நாயகியைக் காப்பற்ற முடிந்ததா, இல்லையா என்பதுதான் ‘சைக்கோ’வின் கதை.

அடுத்தடுத்து நடக்கும் இளம் பெண்களின் சீரியல் கொலைகள், தலையை மட்டும் துண்டிக்கும் சைக்கோ, அவரைப் பிடிக்க துப்பு இல்லாமல் அல்லாடும் போலீஸ் என முதல் பாகம் எந்தக் குறையும் இல்லாமல் த்ரில்லிங் படத்துக்குரிய இலக்கணத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மிஸ்கின். பார்வையற்ற நாயகன் மூலம் துப்பறியும் கதைக் களம் கொஞ்சம் சவாலானதுதான். வாசனையை வைத்து நாயகன் துப்பறியும் விதமும் படத்தின் கதையோட்டத்தைத் தாங்கி செல்கிறது.

சைக்கோ கொலையாளி யார் என்பதைப் படத் தொடக்கத்திலேயெ காட்டி, பார்வையற்ற நாயனுடன் சைக்கோ ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தையும் ரசனையாகவே படமாக்கியிருக்கிறார் மிஸ்கின். மாற்றுத்திறனாளிகளை வைத்து புலனாய்வு செய்யும் காட்சிகள் நம்பிக்கையூட்டும் வகையில் இயக்குநர் படமாக்கியிருப்பதைப் பாராட்டலாம்.

ஆனால், உளவியல் கலந்த த்ரில்லர் படம் என்பதால், அதற்கேற்ப ஸ்பீடு பிரேக் இல்லாத திரைக்கதைதான் படத்துக்கு பலம் சேர்க்கும். அந்த வகையில் உளவியல், த்ரில்லர் என இரண்டும் இருந்தும் இப்படம் சறுக்கிவிடுகிறது. த்ரில்லர் படங்களுக்கே உரிய ட்விஸ்டுகள் இல்லாமல் படம் பயணிப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. சைக்கோ கொலையாளி இளம் பெண்களை ஏன் கொலை செய்கிறான் என்பதுதான் படம் தொடங்கி எழும் பிரதான கேள்வி. ஆர்வமான அந்தக் கேள்விக்கு உப்பு சப்பில்லாத காரணத்தைச் சொல்லி, படத்தின் மீதான மொத்த நம்பகத்தன்மையையும் குலைத்துவிடுகிறார் இயக்குநர்.

சைக்கோவை கவித்துவமானவனாக காட்டும் குறியீடு காட்சிகளும்
திரைக்கதை ஓட்டத்தை கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. 10 கொலைகள் நடந்த பிறகும் துப்பு கிடைக்காமல் போலீஸார் வருவதும் போவதுமாக இருப்பதைப் பார்க்கும்போது கண்கள் குளமாகிவிடுகின்றன. ஆனால், பார்வையற்ற நாயகன் துப்பறிந்து முன்னேறி செல்வதும், ஒரு கட்டத்தில் போலீஸே நாயகனை ஃபாலோவ் செய்வது எனப் படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் ராம் பாடும் காட்சிகள் அவருடைய மன இறுக்கத்தைக் குறைத்து, நம் இறுக்கத்தை கூட்டிவிடுகிறது.

இந்த சிசிடிவி யுகத்தில் அதைப் பற்றிய பேச்சே இல்லாமல் விசாரணை காட்சிகள் நகர்கின்றன. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கதை நடப்பது போலாவது காட்டி பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கலாம். முதல் கொலையின் பறவைக் காட்சி கோணமே படத்தின் மீதான மொத்த பயத்தையும் துடைத்தெறிந்துவிடுகிறது.

படத்தின் நாயகன் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வருகிறார். கதைகேற்ப நடிப்பை வழங்கியிருக்கிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் உடல்மொழியையும் நன்றாகவே உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக வரும் அதிதீ ராவ் ஒரே மாதிரியான முக பாவனைகளுடன் நடித்திருப்பது சலிப்பூட்டுகிறது. மாற்றுத்திறனாளியாக வரும் நித்யாமேனன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். அவருடைய டப்பிங் வாய்ஸ் படத்தில் துருத்தி நிற்கிறது. சைக்கோவாக வரும் ராஜ்குமாரின் நடிப்பும் உடல்மொழியும் செயற்கையாகவே இருக்கிறது.

உதயநிதியின் நண்பராக வரும் சிங்கம்புலி இயல்பாக நடித்து கவர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குநர் ராம், அந்த வேடத்தில் ஏன் நடித்தார் என்றே தெரியவில்லை. போலீஸ் உயரதிகாரியாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் வருவதும் போவதுமாக இருக்கிறார். படத்துக்கு இசை இளையராஜா. படத்தின் ஒரே ஆசுவாசம் இளையராஜாவின் இசை மட்டுமே. ‘உன்னை நினைச்சு நினைச்சு...’ பாடலில் உருக வைத்துவிடுகிறார் மனிதர். த்ரில்லர் படத்துக்குரிய தேர்ந்த பின்னணி இசையையும் இளையராஜா வழங்கியிருக்கிறார். இரவுக் காட்சிகளை பி.சி. ஸ்ரீராமின் கேமரா கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது. அருண்குமாரின் படத்தொகுப்பில் குறையில்லை.

சவாலான கதைக் களத்துக்கு இலுவையான திரைக்கதை 'சைக்கோ'வை விழி பிதுங்க வைக்கிறது.

மதிப்பெண்: 2 / 5

20/01/2020

ரஜினி ஒரு புதுக்கவிதை!

ஆக்‌ஷன், டான், அதிரடி எனக் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல போய் கொண்டிருந்த ரஜினிக்கு  ‘தேவதாஸ்’ அரிதாரத்தையும் பூச வைத்தது ஒரு படம். அதுதான், ‘புதுக்கவிதை’.

 கவிதாலயா தயாரிப்பில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1982-ம் ஆண்டில் வெளி வந்த படம் இது. பணக்கார வீட்டுப் பெண் ஜோதியுடனான பைக் ரேஸர் ரஜினியின் அறிமுகமே மோதலில் தொடங்கும்.  ரஜினியை இன்னொரு கதாபாத்திரம் திட்டுவதைகூட ஏற்றுகொள்ள ரசிகர்கள் மறுத்த காலம் உண்டு. ஆனால், புதுக்கவிதைப் படத்தில்   ‘கருப்பன்.. கருப்பன்..’ என்று நாயகி திட்டும் காட்சிகள் பல இடங்களில் வரும். இருவரும் காதலில் விழுந்த பிறகு காதலைப் பிரிக்க ஜோதியின் அம்மா சுகுமாரி வில்லியாக மாறுவார்.

ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மையில் ஒரு பெண்ணும் ஆணும் காதலித்தால், வீட்டில் எப்படி எதிர்ப்பு கிளம்பும் என்ற அடிப்படையை மட்டும் உள்வாங்கி இதில் ரஜினி நடித்திருப்பார். காதலியைப் பிரியும் தருணத்திலும், பிரிந்த பின் ஏங்கி தவிக்கும் தருணத்திலும் ரஜினியின் ஹீரோயிசம் எங்கே என்று தேட வைக்கும்.

காதலை மறக்க முடியாமல் அதன் ஆற்றாமையாக தாடியுடன் ரஜினி வரும் காட்சியும், சோகத்தையும் இயலாமையையும்
மறைக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளும் படத்தின் பின்பாதியை ஆக்கிரமித்திருக்கும். மீண்டும் காதலியைச் சந்திக்கும் நிமிடத்திலும்,  காதலின் வலியை இயல்பாக ரஜினி வெளிப்படுத்தியிருப்பார்.

 பல ஆண்டுகள் கழித்து பழைய காதலியை ரஜினி சந்தித்து பேசிய பிறகு, “நான் போட்டுமா” என்று ஜோதி கேட்பார். அதற்கு ரஜினி,  “அதான் போய்ட்டியே” என்று ஒரே வார்த்தையில் காதலின் ஏமாற்றத்தையும் வேதனையையும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

 எப்போதுமே ரஜினி படத்தில் காதல் என்பது ஒரு சிறுபகுதிதான். அதுவும் டூயட் பாடுவதற்கான ஒரு பகுதி மட்டுமே. ஆனால், முழுக்க முழுக்க காதலையே மையமாக வைத்து ரஜினி நடித்த முதலும் கடைசியுமான காதல் படம்  ‘புதுக்கவிதை’ மட்டுமே.

தி இந்து, 13-02-2015

17/01/2020

குடியேறிகள் மனிதர்கள் இல்லையா?

இந்தியாவில் குடியுரிமைத் திருத்த சட்டம் சரியா, தவறா என்ற பட்டிமன்றம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதுதொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து பார்த்துவந்த வேளையில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஹோலி பூம்’ என்ற கிரேக்கப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட இந்தப் படம், சட்ட விரோத குடியேற்றத்தால் பாதிக்கப்படும் ஓர் இளம் பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் மனிதத்துடன் கிரேக்க மூதாட்டி அணுகும் திரைக்கதைப் பிரதானமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் ஒரு குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில் தனி ஆளாக வசிக்கிறார் மூதாட்டி தாலியா. தரைத்தளத்தில் அல்பேனியாவிலிருந்து குடிபெயர்ந்த ஆடியா, தன் குழந்தையுடன் வசிக்கிறார். மூதாட்டியின் வீட்டுக்கு எதிரே நைஜீரிய இளைஞன் மனுவும் அவளுடைய கிரேக்கக் காதலி லெனாவும் வசிக்கிறார்கள். தனித்தனியாக இருக்கும் இவர்களை பிலிப்பைன்ஸிலிருந்து வந்து அப்பா, அம்மாவுடன் வசிக்கும் ஐஜ் என்ற விடலைப்பருவத்து வாலிபனின் செயல், ஒரு புள்ளியில் இணைக்கிறது.

ஐஜ் குறும்புத்தனமாக தபால் பெட்டியை வெடி வைத்து தகர்க்கிறான். இதில் அல்பேனியாவிலிருந்து ஆடியாவுக்கு வந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் எரிந்துவிடுகிறது. அதே தபால் பெட்டியில் நைஜீரிய இளைஞன் மனுவுக்கு வந்த போதைப் பொருள் பார்சல் நாசமாகிறது. சிறு வயதில் தொலைந்துபோன மூதாட்டி தாலியாவுக்கு பிள்ளையிடமிருந்து வந்த கடிதம் எரிந்துவிடுகிறது. இதனால், ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் ‘ஹோலி பூம்’ கதை.

 நான்கு கிளைக் கதைகள் படத்தில் இருந்தாலும், அல்பேனியாவிலிருந்து கிரேக்கத்தில் குடியேறுபவர்களின் நிலையையும் கிரேக்க மக்களின் பார்வையையும் படம் அழுத்தமாகப் பேசுகிறது. அகதிகளாகவோ, பிழைக்கவோ வருவோர் வாங்கிய கடனைத் திரும்பி தராததால் பாஸ்போர்ட்டைப் பறித்துகொள்வது, உதவி என்ற பெயரில் பாலியல் நோக்கோடு ஆதரவற்ற பெண்களிடம் அணுகுவது என ஆதரவற்றவர்களைச் சுரண்டும் போக்கை இயக்குநர் மரியா லாஃபி தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இயக்குநர் மரியா லாஃபி, புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அவர்களுடைய வலிகளை அப்படியே இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

குறிப்பாக தன் பிரச்னையிலிருந்து விடுபட குழந்தையை இரவில்
தூங்க வைத்துவிட்டு வேலைக்கு செல்கிறார் ஆடியா. கண் விழித்ததும் தன் அம்மா வரும்வரை அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தையின் அழுக்குரல் கல் நெஞ்சையும் கரைய வைத்துவிடுகிறது. இந்தக் காட்சி குடியேறிகள் சந்திக்கும் பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்தப் படத்தில் வரும் மூதாட்டி தாலியாவின் பாத்திர வார்ப்பு இரு துருவமாக வார்க்கப்பட்டிருக்கிறது. நைஜீரிய இளைஞனைக் கண்டதும், அவருடைய பார்வையிலேயே நிற வெறியைக் காட்டிவிடுகிறார். ஆடியாவின் குழந்தையின் அழு குரல் கேட்கும்போதெல்லாம் திட்டித் தீர்க்கிறார். ‘சட்ட விரோதமா வந்துடுறாங்க. இவங்களோட இதே வேலையே போச்சு’ என்று கொதிக்கிறார். ஆனால், நைஜீரிய இளைஞன் பிரச்சினையில் சிக்கும்போது ஆதரவளித்து வீட்டில் அடைக்கலம் தருகிறார் மூதாட்டி தாலியா. ஆவணமின்றி தங்கியிருப்பதாக ஆடியாவை போலீஸ் பிடித்து சென்றுவிட, இரவில் அழுகும் குழந்தையின் சத்தம் கேட்டு மனம் கேட்காமல், நைஜீரிய இளைஞனின் உதவியுடன் வீட்டுக்குக் கொண்டு வந்து குழந்தையைப் பராமரிக்கிறார்.

இங்கேதான் இப்படம் மனிதத்தை உரக்கப் பேசுகிறது. நாடு, இனம், மொழி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் தாண்டி பிரச்சினையில் உள்ள மனிதர்களை மனிதநேயத்தோடு அணுகும் பார்வையை முன் வைக்கிறது படம். காகிதமாக இருக்கும் ஆவணங்கள்  மனித வாழ்க்கையில் விளையாடும் விளையாட்டையும் இப்படம் பேசத் தவறவில்லை.

பல நாட்டு எல்லைகள் சூழ்ந்த நாடுகளில் புலம் பெயர்தல், சட்ட விரோத குடியேற்றங்கள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இப்பிரச்சினையை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதத்தில் அணுகலாம். சட்ட விரோதக் குடியேறிகளை வெறுமனே பிரச்சினையாகக் கருதாமல், அவர்களுடையை பிரச்சினையப் பேசுவதுதான் காலத்தின் தேவை. அந்த வகையில் புலம்பெயர்வோர், சட்ட விரோத குடியேறிகளின் பிரச்சினைகளை  மனிதநேயத்தோடு பேசியிருக்கிறது ‘ஹோலி பூம்’.

இந்து தமிழ், 10-01-2020

10/01/2020

தர்பார் விமர்சனம்


மும்பையில் போதைப் பொருள் கடத்தும் தாதாக்களைக் களையெடுக்க டெல்லி தலைமை ரஜினிக்குக் கட்டளையிடுகிறது. முக்கியமான மூன்று நிபந்தனைகளுடன் மும்பைபோலீஸ்  கமிஷனராகப் பணியில் சேருகிறார் ரஜினி. போதைப் பொருள் கடத்தல், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் விடும் மாபியா தலைவன் அஜய் மல்ஹோத்ராவைக் கைது செய்கிறார் ரஜினி. மகனை ஜாமீனில் விடுவிக்க தொழிலதிபர் வினோத் மல்ஹோத்ரா முயல்கிறார். அஜய் மல்ஹோத்ராவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. சிறையில் இருக்கும் அஜய் மல்ஹோத்ராவை வேறு ஒரு விசாரணைக்காகப் பார்க்க வருகிறார் ரஜினி. ஆனால், அஜய் மல்ஹோத்ரா பெயரில் வேறு ஒரு இளைஞர் இருக்கிறார்.
அஜய் மல்ஜோத்ராவின் பின்னணி என்ன, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய அஜய் மல்ஹோத்ராவைக் கண்டுபிடிக்க முடிந்ததா, ரஜினியால் மும்பையைச் சுத்தப்படுத்த முடிந்ததா, இல்லையா என்பதுதான் ‘தர்பார்’ படத்தின் திரைக்கதை.

‘துப்பாக்கி’ படத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை கதைக் களத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். மும்பையில் நடக்கும் சட்ட விரோத காரியங்களைக் கதைகளமாக்கி, அவற்றை துடைத்தெறியும் வீரதீர போலீஸை கதாநாயகனாக்கி ரஜினி ரசிகர்களைத் திருப்திபடுத்த இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். தன்னுடைய இயக்க பாணியிலிருந்து விலகி, முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் விரும்பும் ஒரு படமாகவே ‘தர்பா’ரை இயக்கியிருக்கிறார்  முருகதாஸ். ரஜினியை எப்படி காட்டினால், அவருடைய ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதையெல்லாம் யோசித்து காட்டியிருக்கிறார்.

சுமார் இரண்டே முக்கால் நீளமுள்ள படம் முழுவதுமே நீக்கமற நிறைந்திருக்கிறார் ரஜினி. மும்பை போலீஸ் கமிஷனராக வரும், ரஜினியின் ஸ்டைலும் மேனரிசமும் கவர்கிறது. போலீஸ் கமிஷனராக அதிரடியாக ரவுடிகளை என்கவுன்டர் செய்வது, மகளிடம் பாசத்தில் உருகுவது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்ய முயற்சிப்பது, யோகிபாபுவை கலாய்ப்பது முதல் பாதியில் ரஜினி ஒவ்வொரு ஃபிரேமிலும் கவர்கிறார். போலீஸ் அதிகாரி நீண்ட முடியோடும் தாடியோடும் இருக்கக் கூடாது என்ற நியதிக்கு மாறாகப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்வி வந்துவிடக் கூடாது என்பதற்காக வசனத்தை வைத்து  நியாயம் சேர்க்கிறார் இயக்குநர்.

முதல் பாதி வேகமான திரைக்கதையால் தடதடவென நகர்ந்து செல்கிறது. அதற்கு ரஜினியின் கலகலப்பும் அவரது இயல்பான சுறுசுறுப்பும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. சிறையில் ஆள்மாறாட்டம் செய்து வெளிநாடு செல்லும் வில்லனை ரஜினி ஹாண்டில் செய்யும் காட்சிகளில் இயக்குநர் முருகதாஸ் பளிச்சென தெரிகிறார். ரஜினியை அழகாகக் காட்டுவதில் படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. ரஜினியும் வயது பார்க்காமல்
தன்னுடைய வழக்கமான துரித சாகசத்தைக் காட்டியிருக்கிறார். ‘நம்புறவனுக்கு வயசுங்கறது ஒரு நம்பர்’ என்ற வசனம் அதற்காகவும் ரசிகர்களைத் திருப்திப்படுத்துமே இயக்குநர் வைத்திருக்கிறார்.

ரஜினி படத்தில் யதார்த்துக்கும் லாஜிக்கிற்கும் இடமில்லை என்றாலும், ‘ஒரு நியாயம் வேணாமா’ என்ற கணக்காக காட்சிகள் வந்து நம்மை சோதிக்கின்றன.  மும்பை போலீஸ் கமிஷனராக வரும் ரஜினி, கான்ஸ்டபிள் செய்யும் வேலையிலிருந்து டிஜிபி செய்யும் எல்லா வேலை வரை எல்லாவற்றையும் செய்கிறார். முதல் பாதியின் முடிவில் எழும்  திருப்பம், இரண்டாம் பாதியில் சுவாரசியமாகப் படத்தைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், பின் பாதி திரைக்கதை இழுவையாக மாறி சோதித்துவிடுகிறது. முக்கிய வில்லன் இரண்டாம் பாதியில் அறிமுகமாவதும், அவருக்குக் கொடுக்கும் பில்டப் புஷ் ஆகிப்போவதும் திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.

வயதான ரஜினியைத் திருமணம் செய்ய நயன்தாரா விரும்புகிறார் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இடையே காட்சியை இயக்குநர் வைக்க மறந்துவிடுகிறார். என்றாலும், நயன்தாரா விருப்பத்தை ரஜினியிடம் சொல்லி, அதை சூசகமாக மறுக்கும் ஸ்ரீமன் சம்பந்தப்பட்ட ஒரே யதார்த்த காட்சியை இந்தப் படத்தில் வைத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். கமிஷனரை இடமாற்றம் செய்யும் டெல்லி உள்துறை அதிகாரிக்கே சவால் விடுவது, மனித உரிமை ஆணைய அதிகாரியை மிரட்டுவது, இண்டர்போல் செய்யும் வேலையை மும்பையிலிருந்து ரஜினியே செய்வது என டஜன் கணக்கில் படமெங்கும் பூச்சுற்றல்கள் வருகின்றன.

படத்தின் இரண்டாம் பாகம் எப்படி போகும் என்பதை முதல் பாகத்திலேயே சில காட்சிகளின் மூலம் இயக்குநர் ஊகிக்க வைத்துவிடுவதால், அடுத்தடுத்த காட்சிகளை பார்வையாளர்களே ஊகிக்க முடிவது திரைக்கதையின் பெரும் ஓட்டை.
ரஜினியைத் தாண்டி இந்தப் படத்தில் அவருடைய மகளாக வரும் நிவேதா கவர்கிறார். அப்பாவை விட்டுக்கொடுக்காதது, அப்பாவுக்காக ஒரு துணையைத் தேடுவது, தனக்கு நேர்ந்ததை நினைத்து ஒற்றைக் கண்ணில் கண்ணீர் வழிய நிலைகுலைந்துபோவது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அப்பாவின் மீது பாசமாய்ப் படுத்துக்கொள்வது என கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

 லில்லி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் படத்தில் அவ்வப்போது வந்து செல்கிறார். ஒரு வரி ஜோக்கில் அவ்வப்போது சிக்ஸர் விளாசி யோகிபாபு ரசிக்க வைக்கிறார். சுனில் ஷெட்டியை வில்லனாக பெரிய பில்டப் கொடுத்து கடைசியில் அவரை
காமெடியன் ரேஞ்சிக்கு ஆக்கிவிடுகிறார்கள். அனிருத்தின் இசையில் இரண்டு பாடல்களும் கும்மாளம் போட வைக்கின்றன. அனிருத்தின் பின்னணி இசையில் காது சவ்வுகள் கிழிந்துவிடுகின்றன. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் குறையில்லை.

ரஜினியை மாஸாகவும் அழகாகவும் காட்ட இயக்குநர் மெனக்கெட்டதை  திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் ‘தர்பார்’ இன்னும் ‘ஜோர்’ராக இருந்திருக்கும்.

மதிப்பெண்: 2.5 / 5 

07/01/2020

ஹம்பியின் சதுரங்க வேட்டை!


சதுரங்கம் (செஸ்) என்றாலே இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்த் என்ற ஒற்றைச் சொல்லை, ஒற்றைப் போட்டியில் மாற்றிக் காட்டியிருக்கிறார் கொனேரு ஹம்பி. சதுரங்கம் ‘கிளாசிக்கல்’ மகளிர் பிரிவில் சைலண்டாக முன்னேறி வந்தவர், இன்று உச்சம் தொட்டுள்ளார். ‘ரேபிட்’ பிரிவு சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமைத் தேடிக் கொடுத்திருக்கிறார் ஹம்பி.

 சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்த இந்தியாவில் வீரர், வீராங்கனைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், சதுரங்கம் என்றாலே கடந்த இரு தசாப்தங்களாக நினைவுக்கு வருபவர் விஸ்வநாதன் ஆனந்த்தான். சதுரங்க விளையாட்டில் தன்னுடைய சாம்பிராஜ்ஜியத்தை உலக அளவில் விஸ்தரித்து வைத்திருக்கிறார். அவரைத் தாண்டி பல வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சதுரங்கத்தில் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வயது வித்தியாசமின்றி செஸ் மாஸ்டர்களும் கிராண்ட் மாஸ்டர்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சில போட்டிகளில் வெல்வதன் மூலம் சதுரங்க விளையாட்டின் ராஜா, ராணியாக வலம் வருவோர் குறைவுதான்.

சதுரங்க விளையாட்டில் ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ பிரிவுகளில் வெல்வோருக்கு தனி மரியாதையும் அந்தஸ்தும் கிடைக்கும். இதில் வெற்றி பெறுவோர் சதுரங்க விளையாட்டின் பிதாமகர்ளாகக் கருதப்படுவார்கள். சதுரங்க விளையட்டில் பல உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 2017-ம் ஆண்டில்‘ரேபிட்’ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்குப் பிறகு தற்போது ‘ரேபிட்’ பிரிவில் பட்டம் வென்று காட்டியிருக்கிறார் கொனேரு ஹம்பி. இந்தப் பிரிவில் பட்டம் வெல்லும் முதல்
இந்திய பெண்ணும் ஹம்பிதான்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 122 வீராங்கணைகள் பங்கேற்றார்கள். இதில் இந்தியா சார்பில் கொனேரு ஹம்பி வாய்ப்பு பெற்றார். பல்வேறு சுற்றுப் போட்டிகளைத் தாண்டி வந்த கொனேரு ஹம்பி, இறுதிப் போட்டியில் சீனாவின் லீ டிங்ஜியை எதிர்கொண்டார். இருவருமே புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்தலில் ஈடுபட்டார்கள். இருவருடைய இடைவிடாது முயற்சியால் ஆட்டம் டிரா ஆனது. வெற்றியைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 2-1 என்ற கணக்கில் வென்றுதான் உலக சாம்பியன் பட்டத்தை கொனேரு ஹம்பி தனதாக்கினார்.

சதுரங்கம் என்றாலே டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல கட்டைப் போட்டு மெதுவாக ஆடும் விளையாட்டுதான். இதை ‘கிளாசிக்கல்’ பிரிவு என்பார்கள். ஆனால், ‘ரேபிட்’ பிரிவு என்பது விரைவாக ரன் சேர்க்கும் ஒரு நாள் கிரிக்கெட்டைப் போன்றது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நகர்த்தல்கள் மூலம் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதுதான் ‘ரேபிட்’ பிரிவு. இந்தப் பிரிவில் வெற்றி பெற்று ஒற்றை ராஜாவாக விஸ்வநாதன் ஆனந்த் இருந்த ‘கிளப்’பில் ராணியாக சேர்ந்திருக்கிறார் கொனேரு ஹம்பி.

கொனேரு ஹம்பியின் இந்த வெற்றியில் இன்னொரு தனி சிறப்பு உண்டு. 32 வயதான ஹம்பி, மகப்பேறுக்கு பிறகு இரண்டு ஆண்டு காலம் ஓய்வில் இருந்தார். பேறுகால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் சதுரங்க அரங்கில் நுழைந்த கொனேரு ஹம்பி, மீண்டும்  ‘டேக் ஆஃப்’ ஆகியிருக்கிறார். சில மாதங்களுக்கு  ஜார்ஜியாவில் நடந்த ஒலிம்பியாட் செஸ் பந்தயத்தில் காய்களை வேகமாக நகர்த்த முடியாமல் தடுமாறினார். தற்போது ‘ரேபிட்’ சுற்றில் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றது அவருக்குத் தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

மாஸ்கோவில் இதே செஸ் தொடரில் ‘பிளிட்ஸ்’ என்ற அதிவேக சதுரங்க சாம்பியன் போட்டியும் நடைபெற்றது. அதாவது, அதிரடியாக
விளையாடக்கூடிய டி20 கிரிக்கெட்டைப் போன்றது. இதில் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ஹம்பி, இறுதியில் சறுக்கி 12-வது இடத்தை மட்டுமே பிடித்து ஏமாற்றினார். ஆனால், கொனேரு ஹம்பியைப் பொறுத்தவரை இதுவும் அவருடைய ‘கேரிய’ரில் உச்சம்தான். சதுரங்கத்தில் கொனேரு ஹம்பி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் வீரரைப் போன்றவர். அதாவது ‘கிளாசிக்கல்’ வீராங்கனை. ஆனால், தற்போது ‘ரேபிட்’ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதோடு, ‘பிளிட்ஸ்’ பிரிவிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

கடந்த 1997-ம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது சதுரங்கப் பயணத்தைத் தொடங்கினார் கொனேரு ஹம்பி. கடந்த 22 ஆண்டுகளில் மேடு பள்ளங்களைக் கடந்து, இந்தியாவின் சதுரங்க நாயகியாக உருவெடுத்திருக்கிறார் கொனேரு ஹம்பி.  வாழ்த்துகள் ஹம்பி!

இந்து தமிழ், 07/01/2020

01/01/2020

வி1 மர்டர் கேஸ் விமர்சனம்

போலீஸ் அதிகாரியானன நாயகன் அக்னி (ராம் அருண் காஸ்ட்ரோ) இருட்டைக் கண்டாலே அதீதமாகப் பயப்படும் நோய் உள்ளவர். இதனாலேயே தடயவியல் துறைக்கு மாறிவிடுகிறார். ‘லிவிங் டூ கெத’ரில் வாழும் இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள். அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் லூனா (விஷ்ணு பிரியா) தன் நண்பரான ராம் அருணின் உதவியை நாடுகிறார். அந்தப் பெண் யார், ஏன் கொலைசெய்யப்பட்டார், யார் கொலை செய்தது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘வி1 மர்டர் கேஸ்’.

க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதையைச் சுவாரசியமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநராக அறிமுகமாகியுள்ள பாவல் நவகீதன். படம் தொடங்கியவுடனே எங்கெங்கோ சுற்றாமல் நேராக கதைக்குள் அழைத்து சென்றுவிடுகிறார். சினிமாவில் காட்சியாக மட்டுமே வந்துசெல்லும் தடயவியல் துறை, குற்றங்களைக் கண்டுபிடிக்க எந்த அளவுக்கு உதவுகிறது என்று படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கொலைக்கான ஒவ்வொரு முடிச்சு அவிழ்வதும் அதை போலீஸ் நெருங்குவதும் என மர்ம முடிச்சுகள் அவிழ்வதில் புதுமை இல்லை என்றாலும் படத்தின் ஓட்டத்துக்கு துணை நிற்கின்றன. படத்தின் நாயகியை நாயகனின்  தோழியாகக் காட்டியிருப்பதும் புதுமையான உத்தி.

ஆனால், க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உரிய வேகமும் விறுவிறுப்பும் இல்லாமல் திரைக்கதை பயணிப்பது திகில் அனுபவத்தைக் கொடுக்க தவறிவிடுகிறது. டெம்பிளேட்டுகளாக நடைபெறும் விசாரணைக் காட்சிகள் டிராமாக்கள் போல் நகர்ந்துசெல்கின்றன. நாயகனை தடவியல் துறை அதிகாரியாக காட்டுவதா, போலீஸ் அதிகாரியாகக் காட்டுவதா என இயக்குநருக்கு ஏகக் குழப்பம். இரண்டையும் அவரே செய்கிறார். குற்றங்களைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு உதவும் துறைதான் தடயவியல் என்ற லாஜிக்கையே உடைத்துவிடுகிறார் இயக்குநர்.

உயரதிகாரி சொல்லும் பணியை நாயகன் செய்யாமல் இருப்பது,
அவரையே எதிர்த்து கேள்வி கேட்பது எனக் காவல்/தடயவியல் துறையின்  நிஜ வாழ்க்கைக்கு மாறான காட்சிகளும் வந்து செல்கின்றன. நாயகன் ஏன் இருட்டைக் கண்டு பயப்படுகிறார் என்ற பின்னணிக் காட்சிகள் நம்பும்படியாகப் படமாக்கப்படவில்லை. காவல் துறை விசாரணைக்கு வருபவர், மேசையில் தாளம் போட்டுக் கொண்டும் போலீஸை கிண்டல் அடித்துக்கொண்டும் பேசுவதாகக் காட்டுவது இயக்குநரின் மிகையான கற்பனை. அந்தக் காட்சிகளும் அந்தக் கதாபாத்திரமும் எரிச்சலூட்டிவிடுகிறது.

 படத்தின் கிளைமாக்ஸில் ட்விஸ்ட் ஒன்றை இயக்குநர் வைத்திருக்கிறார். அது ஊகிக்க முடியாத ட்விஸ்ட் என்றாலும், ஊதி பெருக்கப்பட்ட பலூனை ஊசியைக் கொண்டு குத்திவிடுவது போன்ற தோற்றத்தை படம் ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக, நாயகன் பேசும் கிளைமாக்ஸ் வசனங்கள் க்ரைம் படத்துக்கு தேவையில்லாத ஆனி.

நாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருக்கிறார். இரவைக் கண்டால் பயப்படும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். விசாரணையை கேஷுவலாக மேற்கொள்வதிலும் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். ஆனால், அவருடைய உடல்மொழி ஒத்துழைக்க மறுப்பது மைனஸ். நாயகியாக வரும் விஷ்ணு பிரியாவும் நிறைவாகச் செய்திருக்கிறார். போலீஸ் உடையில் வராமல், கலர்ஃபுல்லாகவே வருகிறார். மலையாளம் கலந்து அவருடைய பின்னணிக் குரல், மனதோடு ஒன்றிபோகாமல் துருத்தி நிற்கிறது. கொலையாகும் 'பேரழகி' காயத்திரி, விசாரணையில் அலம்பல் செய்யும் லிங்கேஷ், ஒரு நிமிடம் வந்துபோகும் மைம் கோபி, ‘லிவிங் டூ கெதர்’ காதலர் லிஜேஷ் எனப் பலரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், க்ரைம் படத்துக்கே உரிய பின்னணி இசையும் எடுபடவில்லை. அதில் இசையமைப்பாளர் ரோனி ரபெல் கவனம் செலுத்தியிருக்கலாம். க்ரைம் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவை கிருஷ்ண சேகர் வழங்கியிருக்கிறார்.

விறுவிறுப்பில்லாத திரைக்கதையால் ‘வி1 மர்டர் கேஸ்’ தள்ளாடுகிறது.

மதிப்பெண் -  2 / 5