27/10/2019

கைதி விமர்சனம்


பத்தாண்டு கழித்து சிறையில் இருந்துவரும் டில்லி (கார்த்தி) தன் குழந்தையைப் பார்ப்பதற்காக ஓர் இரவில் காத்திருக்கிறார். அதே இரவில் இன்ஸ்பெக்டர் பிஜோ (நரேன்) கைப்பற்றிய கோடிக்கணக்கான போதைப் பொருளை காவல் ஆணையர் அலுவலத்தில் மறைத்து வைக்கிறார். போதை பொருளை கைப்பற்றிய போலீஸாரை கொலை செய்து போதைப் பொருளை மீட்க இரவோடு இரவாகக் குதிக்கிறது தாதா கூட்டம். அந்த இரவில் நடக்கும் பயணத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் நரேனுடன் பயணிக்க வேண்டிய நெருக்கடி கார்த்திக்கு ஏற்படுகிறது. போலீஸ் உயரதிகாரிகளுக்கே தெரியாமல் நடக்கும் இந்த சடுகுடு ஆட்டத்தில் போலீஸ்களை கார்த்தி காப்பாற்றினாரா? போதை பொருட்கள் என்ன ஆனது, கார்த்தி தன் குழந்தையைப் பார்த்தாரா என பயணக் கதையைப் போல பயணிக்க வைத்திருக்கிறது ‘கைதி’ படம்.

ஓர் இரவில் நடக்கும் கதைகள் தமிழ் சினிமாவுக்கு புதிதில்லை. ஆனால், போலீஸூக்கே தெரியாமல் போலீஸைக் காப்பாற்ற ஓர் இரவில் முன்னாள் கைதி நடத்தும் ரோலர் கோஸ்டர் ஆட்டத்தை வேகமான திரைக்கதையால் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். படம் தொடங்கியது முதலே பரபரப்பு பார்வையாளர்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. அதை கடைசி வரை அப்படியே கடத்தியதில் இயக்குநரின் கைவண்ணம் தெரிகிறது.  ஆக்‌ஷனுடன் கூடிய படங்களிலும் எட்டிப் பார்த்துவிடும் காதல், காதலி, பாடல்கள் என அரத பழசான கமர்ஷியல் மசாலாக்களுக்குள் நுழையாமல் கதையையும் திரைக்கதையையும் மட்டும் நம்பி படம் எடுத்த இயக்குநருக்கு சலாம் போடலாம்.

துரத்தலும் பயணமுமாக அமையும் கதையை லாரிக்குள்ளேயே வைத்து வேகத்தடை இல்லாமல் நேர்த்தியான திரைக்கதையால் நகர்த்தியிருக்கும் விதமும் அருமை. கார்த்தி ஏன் போலீஸுக்கு உதவ வேண்டும் என்று கேள்வி எழமால் இருக்க குழந்தை சென்டிமென்டை இயக்குநர் கையில் எடுத்திருக்கிறார். கதையோட்டத்துடன் பயணிக்குபோது அந்தக் காரணமும் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது.  சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் காவல் துறை உயரதிகாரி போர்வையில் கருப்பு ஆடு எப்படி வேலை செய்கிறது என்பதை ஒரு பக்கத்திலும், இன்னொரு பக்கம் உயிரையும் துச்சமாக மதிக்கும் போலீஸ் காவலரையும் கதையோட்டத்தில் தராசு போல காட்டியிருப்பது படத்தை தூக்கி நிறுத்துகிறது.

போலீஸுக்கே தெரியாமல் போலீஸாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கதை
கொஞ்சம் சவாலானதுதான். அதற்காகக் கூறப்படும் லாஜிக்கையும்  ஏற்கும் வகையிலேயே இயக்குநர் அமைத்திருக்கிறார். கார்த்தியின் ஃபிளாஸ்பேக் எனக் கதையை நகர்த்தாமல், அவருடைய பின்னணியையும் கதையோட்டத்துடன் பயணிக்க வைத்திருப்பதும் ரசிக்க வைக்கிறது. காவல் நிலையத்தை ஒற்றை ஆளாக காக்கும் காட்சிகளில் புதுமை இல்லை என்றாலும், அந்தக் காட்சிகளும் விறுவிறுப்பை கூட்ட  தவறவில்லை.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அதீத ஆக்‌ஷன் காட்சிகள் படத்துக்கு ஓவர் டோஸ். ஒவ்வொரு முறையும் கும்பல் கும்பலாக ஆயுதங்களுடன் வரும் அடியாட்களை நாயகன் அடித்து துவைப்பது ஒரு கட்டத்தில் அலுப்படைய வைத்துவிடுகிறது. குறிப்பாக அத்தனை முறை கத்தியால் குத்துப்பட்டும் தலையில் கல்லால் அடிபட்டும் நாயகன் மீண்டும் எழுந்துவந்து வில்லன் கும்பலை துவம்சம் செய்வது படத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சற்று ஆட்டம் காண செய்துவிடுகிறது. காவல் நிலையத்தைத் தாக்க வரும் தாதா கும்பலை குடிபோதையில் வண்டி ஓட்டி பிடிப்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்து தடுக்கும் காட்சிகள் இயக்குநரின் மிதமிஞ்சிய கற்பனை.

டில்லி என்ற கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார் நடிகர் கார்த்தி.  படம் முழுவதும் ஒரே வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டையுடன் கச்சிதமாக நடித்திருக்கிறார் கார்த்தி.  நரேன் உதவி கேட்கும்போது மறுப்பது, மயக்கமடைந்துகிடக்கும் போலீஸைக் காப்பாற்ற நரேன் துடிக்கும்போது ஆசுவாசமாக பிரியாணி சாப்பிடுவது, குழந்தைக்காக ஆற்றாமையால் உருகுவது, ஆக்‌ஷனில் பின்னி எடுப்பது என படம் முழுவதும் கார்த்தி வியாபித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நீண்ட நாள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் நரேன். கதைக்கு ஏற்ற அவருடைய படபடப்பும் துடிப்பும் கச்சிதம். கார்த்தியுடன் லாரியில் சேர்ந்து பயணிக்கும் இளைஞனாக தீனா கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். ஒற்றை ஆளாக காவல் நிலையதைக் காக்கப் போராடும் ஜார்ஜ் மரியன் மனதில் நிற்கிறார். போதை கும்பலில் ஒருவராக ரமணா வந்துபோகிறார்.

சாமின் பின்னணி இசை படத்துக்கு பலம். இயக்குநருக்கு இணையாக பாராட்டப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன். சவால் மிகுந்த சேஸிங் இரவுக் காட்சிகளை அழகாக கேமராவுக்குள் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பிலோமின் ராஜின் படத் தொகுப்பும் பக்கப் பலம். சில குறைகள் படத்தில் இருந்தாலும், சவால்கள் நிறைந்த பயணக் கதையும் அதை முறியடிக்கும் ‘கைதி’யின் ஆக்‌ஷன் காட்சிகளும்   நல்லதொரு பொழுதுபோக்கு அனுபவத்தைத் தருகின்றன.

மதிப்பெண்: 3.5 / 5

18/10/2019

நடிகர் அழகுவின் அழகான நாட்கள்!

சினிமாவில் முரட்டு அடியாளாக அறிமுகமாகும் எல்லோருக்குமே  நிலையான இடம் கிடைத்துவிடுவதில்லை. வெகுசிலரே ரசிகர்களின் மனத்திலும் சினிமாவிலும் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அவர்களில், நடிகர் அழகுவும் ஒருவர். அடியாளாகவும் வில்லனாகவும் திரை வாழ்க்கையைத் தொடங்கிய அழகு, இன்று குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் மிளிர்ந்துவருகிறார். அண்மையில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘தொரட்டி’யில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்துகாட்டியிருந்தார் அழகு.
புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள கொளத்துப்பட்டிதான் அழகுவின் சொந்த ஊர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், தேவக்கோட்டையில் இருந்த தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் 1969-ம் ஆண்டிலேயே சென்னைக்கு ரயிலேறிவிட்டார். சென்னை வட பழனியில் வேலை பார்த்த அழகுக்கு, கராத்தே கற்றுக்கொள்ள விருப்பம். களரி, கராத்தே மாஸ்டராக இருந்த கோபாலன் குருக்களிடம் சேர்ந்து தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொண்டார். அந்த வகையில் கோபாலன் குருக்கள்தான் என்னுடைய குரு என்கிறார் அழகு.

சினிமாவில் அழகு வாய்ப்பு பெற்றது தற்செயல்தான். அப்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தற்காப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அழகு. விளைவு, இரு நாட்கள் கழித்து சினிமா சண்டை இயக்குநரான மாதவன் மாஸ்டர் ஆட்கள் அழகுவின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமா வாய்ப்பு கிடைத்ததை நம்ப முடியாத அழகு, தயக்கத்துடன் கோபாலன் குருக்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ‘வாய்ப்பை விடாதே’ என்று குரு காட்டிய வழியில் பயணிக்க முடிவு செய்தார் அழகு.

அப்படி அழகு வாய்ப்பு பெற்ற படம்தான் 1975-ல் வெளியான ‘துணிவே துணை’. ஜெய்சங்கரின் ஹிட்பட வரிசையில் ஒன்றான இப்படத்தில் அவருடன் ஷோலோ சண்டைக் காட்சியில் அறிமுகமானார் அழகு. அதனையடுத்து சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’பாக நடித்ததைப் பெருமையாகச் சொல்கிறார் அழகு. “அந்தக் காலகட்டத்தில் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக இருந்தால்தான் நடிக்க முடியும். முதல் படத்தில் நடிக்கவே எனக்கு சிறப்பு சலுகை வழங்கினார்கள். 1978-ல்தான் முறைபடி சங்கத்தில் சேர்ந்தேன். அதன்பிறகு ‘நான் பிறந்த மண்’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு ‘டூப்’ போட அழைத்தார்கள். அவ்வளவு பெரிய நடிகருக்கு ‘டூப்’ போட்டது வாழ்க்கையில் மறக்கவே முடியாது” என்கிறார் அழகு.

இந்தப் படத்துக்கு பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், அமிதாப், பிரேம்நசீர், என்.டி.ஆர். சிரஞ்சீவி என தொடர்ச்சியாக சினிமாவில் சண்டைக் கலைஞராக பலருடன் சண்டைப் போட்டிருக்கிறார் அழகு.  சுமார் 13 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக மட்டுமே திரையில் வந்துகொண்டிருந்த அழகுக்கு, 1988-ல் வெளியான ‘செந்தூரப்பூவே’ படம்தான் அவருடைய திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

“சினிமாவில் யாரிடமாவது வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே
எனக்குக் கூச்சமாக இருக்கும். ரொம்ப யோசிப்பேன். 1986-ல் ஆபாவாணன் இயக்கத்தில் ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்திருந்தேன். சினிமாவில் இளைஞர்கள் வந்த காலம் அது. அப்போதுதான் இயக்குநர் ஆபாவாணனிடம் எனக்கேற்ற கதாபாத்திரம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்று வாய்ப்பு கேட்டேன். ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் இரவு 11 மணிக்கு ஆபவாணனின் மேனேஜர் வீட்டுக்கு வந்தார். கையோடு ‘செந்தூரப்பூவே’ சூட்டிங்கிற்கு அழைத்து சென்றார். பரமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் விஜயலலிதாவோடு சேர்ந்து வில்லத்தனம் செய்து நடித்தேன். அந்தப் படம் எனக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது. அதற்கு முன்புவரை அடிவாங்குற ஆள் என்று என்னைச் சொன்னவர்கள்கூட ‘செந்தூரப்பூவே’ படத்தில் நடித்தவர் என்று சொல்வதைக் கேட்ட தருணத்தை இப்போதும் மறக்க முடியாது. என் சினிமா டிராக்கை மாற்றியவர் ஆபாவாணன்தான்” என்று உருகுகிறார் அழகு.

‘செந்தூரப்பூவே’ படத்துக்கு பிறகு சண்டைக் கலைஞராக நடிப்பதை நிறுத்திக்கொண்ட அழகு, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். “சண்டைக் காட்சிகளில் பலமுறை அடிபட்டு அறுவை சிகிச்சை நடந்ததாலும், ‘செந்தூரப்பூவே’யில் டிராக் மாறிய பிறகு மீண்டும் ‘யெஸ் பாஸ்’ என்று சொல்லும் கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆர்வம் குறைந்தது” என்கிறார் அழகு.  தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா என 6 மொழிப் படங்களில் அழகு நடித்திருக்கிறார். ‘தியாகம்’, ’ராஜா சின்ன ரோஜா’, ’கிழக்கு வாசல்’ ‘குடும்பம்’,‘ஆடாம ஜெயிச்சவங்க’, ‘பொண்ணுக்கேத்த புருஷன்’, ‘ஐ’, ‘மாரி’ என 400-க்கும் மெற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அழகு, சண்டைக் கலைஞர்கள் பற்றிய பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார்.

 “பொதுவாக சண்டைக் கலைஞர்கள் என்றாலே, அவர்களுக்கும் நடிப்புக்கும் சம்பந்தம் கிடையாது என்றே நினைக்கிறார்கள். ஆனால், சண்டைக் கலைஞருக்கும் நடிப்பு முக்கியம். சண்டைக் காட்சியில் அடிக்கும்போது கோபத்தை ரியாக்‌ஷனாக காட்ட வேண்டும். அடி வாங்கும்போது வலியை வெளிப்படுத்த வேண்டும். சண்டைக்குள்ளும் நடிப்பு இருக்கு. வசனம் எதுவும் இல்லையென்றாலும் முக பாவனையில் சண்டைக் கலைஞர்கள் நடித்துதான் ஆக வேண்டும். இன்று நான் நடிக்கிறேன் என்றால், அதற்கு அடிப்படைக் காரணமே சண்டைக் காட்சிகள்தான்” என்கிறார் அழகு.

அண்மையில் வெளியான ‘தொரட்டி’ படம் அழகுவை மிகவும் கவனிக்க வைத்தது. கீதாரிகளின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவந்திருந்தவர், பாசக்கார அப்பாவாகவும் ஜொலித்திருந்தார். “’தொரட்டி’ படம் எனக்கு பெரிய திருப்புமுனை. அந்தப் படத்தில் நடிக்கணும்னு இயக்குநர் மாரிமுத்துவும் தயாரிப்பாளரும் நடிகருமான ஷமன் கேட்டபோது ஆச்சரியமா இருந்துச்சு. நான் சிறுவனாக இருந்தபோது கீதாரிகளைப் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகள் கழித்து  நான் பார்த்து பழகிய அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிக்க நேர்ந்தது மறக்க முடியாத அனுபவம். அந்தப் படத்தில் மேக்கப் கிடையாது. காலில் செருப்புக்கூட கிடையாது. படத்தில் ரிகர்ஸல் செய்துதான் எடுத்தார்கள். நானும் இரு நாட்கள் ரிகர்ஸலில் கலந்துகொண்டேன்.  நிறைய அனுபவம் கொடுத்த படம் இது” என்கிறார் அழகு.

70 வயதாகிவிட்ட அழகு, தற்போதும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். சினிமாவில் கெட்டவனாக நடித்திருந்தாலும் அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. சினிமாவில் புகழ் வெளிச்சத்துக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான சண்டைக் கலைஞர்களுக்கு அழகு ஓர் உதாரணம்!


பிடித்த வில்லன்?

ரகுவரன். கதாநாயகனாக அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன். வில்லனாக அவருக்காகச் சண்டை போட்டிருக்கிறேன்.

சாதித்தது?


1975-லிருந்து சினிமாவில் இருப்பதே சாதனைதான்.

விருப்பம்?

நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசை.

பாராட்டு?

‘தொரட்டி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் இமயம் பாராட்டியது.

அடுத்தப் படம்?

தனுஷின் ‘பட்டாசு’.


இந்து தமிழ், 30/08/2019

06/10/2019

அசுரன் விமர்சனம்

கோவில்பட்டி அருகே வடக்கூர், தெற்கூர் என இரண்டாகப் பிரிந்துகிடக்கிறது ஊர். இரண்டு மகன்கள், ஒரு மகள் எனப் பாசமான குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார் சிவசாமி (தனுஷ்). வடக்கூரைச் சேர்ந்த நில பண்ணையார் வடக்கூரான் (ஆடுகளம் நரேன்) தெற்கூரில் உள்ள நிலங்களை ஏமாற்றி வாங்கி வைத்திருக்கிறார். சாதுவான தனுஷ் குடும்பம் மட்டும் நிலத்தை தர மறுத்து உரிமை போராட்டம் நடத்துகிறது. இதனால் இரு குடும்பத்துக்கும் பகை, உரசல். இந்த மோதலில் இரு குடும்பத்திலும் கொலை விழுகிறது. இதனால் தனுஷ் குடும்பத்தை அழிக்க வில்லன் கூட்டம் அலைகிறது. போலீஸும் துரத்துகிறது. இந்தப் போராட்டத்தில் தனுஷ்  அவருடைய குடும்பத்தைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் ‘அசுரன்’ படத்தின் கதை.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ வரிசையில் நான்காவது முறையாக ‘அசுர’னில் இறங்கி அடித்திருக்கிறது வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி. ‘வெக்கை’ நாவலின் கதையை சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதையாக்கி, கமர்ஷியலைக் கொஞ்சம் தூவி அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். 80-களில் தொடங்கும் கதை, 60-களில் பயணித்து மீண்டும் 80-க்குள் வந்து படத்தை நிறைவு செய்திருக்கும்விதமும், ஒரு படத்துக்குள் இரண்டு பீரியட் கதைகளைச் சொன்னவிதமும் அட போட வைக்கின்றன.

அந்தக் காலகட்டத்தில் நிலவிய நிலப் பண்ணையார்களின் நிலத் தகராறு, பஞ்சமி நிலப் பறிப்பு, சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதையையும் இயக்குநர் வெளிச்சம் போட்டுகாட்டியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், அவர்களிடம் மண்டிக் கிடக்கும் சாதிய வன்மத்தையும் படம் உரக்கப் பேசியிருக்கிறது. கிளைமாக்ஸில், ‘நம்மிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாத ஒரே விஷயம் படிப்பு மட்டும்தான்’ என்று பொட்டில் அடித்தாற்போல் தனுஷ் பேசும் காட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமிகுந்த துயரத்தை வெளிப்படுத்துகிறது. நிலத் தகராறு, சாதிய பாகுபாடு எனப் பெரும் பகுதிகளை சாதிய குறியீடு இல்லாமல் வெற்றி மாறன் படமாக்கியவிதமும் அருமை.

வழக்கமான பழிக்குப் பழி வாங்கும் கதையில் முதலில் நாயகனை சாதுவாகவும், ஃபிளாஸ்பாக்கில் அதிரடி காட்டும் வீரனாகவும் காட்டும் உத்திக்கு வெற்றி மாறனும் தப்பவில்லை. அதற்கான காரணங்களை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு இயக்குநர்  நகர்ந்துவிடுகிறார். தனுஷுக்கு
திருமணம் செய்து வைக்கும் வயதில் மகன் இருக்கிறான் என்ற கதாபாத்திரத்துக்கு தனுஷின் ஒப்பனைகளும் உடல்மொழியும் தொடக்கத்தில் ஒட்ட மறுக்கின்றன. அந்த மகன் சீக்கிரம் இறந்துவிடுவான் என்ற ஊகிக்க முடிவது மைனஸ். படம் முழுவதும் வெட்டு, குத்து, ரத்த சகதி எனக் காட்டப்படுகிறது. இளைஞன் தலையில்லாமல் கிடக்கும் காட்சி, துண்டிக்கப்பட்டு கிடக்கும் கை, படத்தில் அவ்வப்போது விழும் வட்டார கெட்ட வார்த்தைகளை தணிக்கைக் குழு எப்படி அனுமதித்தது எனத் தெரியவில்லை.

ஈட்டியில் ஒரே குத்தில் வில்லன் சாகிறான். நாயகனுக்கு நெஞ்சில் ஈட்டி பாயந்தாலும் எழுந்து நிற்கிறான். இதுபோன்றவழக்கமான டெம்ப்ளேட் கிளிஷேக்கள் படத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. பல கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாக இருப்பது, குறைந்த தண்டனையுடன் சிறையிலிருந்து வருவதாக சொல்வது போன்ற வலுவில்லாதக் காட்சிகளும் படத்தில் வந்துசெல்கின்றன. பீரியட் படங்கள் எனக் காட்டுவதற்கு பழைய போன், படபோஸ்டர் என வழக்கமான உத்திகளையே இயக்குநர் காட்டுவதும் அலுப்பூட்டிவிடுகிறது.

சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் படத்தை முழுவதும் தாங்கிப் பிடித்திருக்கிறார் தனுஷ். பிள்ளைகளுக்கு பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலைவன், பிளாஸ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளைஞன் என ஒவ்வொரு காட்சிகளிலும் தனுஷ் மிளிர்ந்திருக்கிறார்.  நாயகியாக வரும் மஞ்சு வாரியார் எளிய குடும்பத் தலைவியாகவும் பாசமான அம்மாவாகவும் அழகான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் வழக்கறிஞராக பிரகாஷ் ராஜ் வழக்கமாக கலக்கியிருக்கிறார். உரிமை முழுக்கத்தில் வெடித்து கிளம்பும் தனுஷின் மூத்த மகனாக டிஜே அருணாச்சலம், தனுஷை கையாலாகத அப்பாவாக நினைக்கும் இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஷும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

தனுஷின் மச்சானாக பசுபதியும், நிலப் பண்ணையாராக ‘ஆடுகளம்’ நரேன், சாதிய துவேஷங்களைக் கட்டவிழ்த்துவிடும் பண்ணையாராக ஏ. வெங்கடேஷ், போலீஸ் அதிகாரியாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், தனுஷின் காதலியாக அம்மு அபிராமி என படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறைவாக செய்திருக்கின்றன. படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ். பாடல்களைத் தாண்டி பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவு வேல்ராஜ். கோவில்பட்டி தேரிக்காட்டை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

சாதிய வன்மங்கங்களில் பழிக்குப் பழி வாங்கும் குரூர மனித உணர்வுகளை சொல்லிய விதத்தில் சில குறைகள் இருந்தாலும் ‘அசுரன்’ மிடுக்காக இருக்கிறான்.

மதிப்பெண்: 3.5 / 5