30/12/2018

வட சென்னையின் கேரம் இளவரசி!

கேரம் வடசென்னையின் விளையாட்டு என அழைக்கப்படுவதுண்டு. இன்றும்கூட வடசென்னைப் பகுதியில் உலாவந்தால், வீதியோரங்களில் நின்றுகொண்டு கேரம் விளையாடு பவர்களைப் பார்க்கலாம். வடசென்னை ஆண்களின் விளையாட்டு எனப் பேசப்பட்ட கேரம் விளையாட்டை உலக அளவில் பேசவைத்தார், அதே பகுதியிலிருந்து வந்த ஒரு பெண். மூன்று முறை கேரம் உலக சாம்பிய னாக வெற்றிக்கொடி கட்டிய இளவழகிதான் அவர்.

சென்னையைப் பூர்வீகமாகக்கொண்ட இளவழகி, பிறந்து வளர்ந்தது வியாசர்பாடியில்தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை இருதயராஜ் பிராட்வேயில் தள்ளுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்திய ஏழை கூலித் தொழிலாளி. வடசென்னைக்கே உரிய கேரம் விளையாட்டு மீதான ஆர்வம் அவருக்கும் இருந்தது. வடசென்னையில் எங்கே கேரம் போட்டி நடந்தாலும், அங்கே இருதயராஜ் ஆஜராகிவிடுவார்.

தந்தையிடமிருந்துதான் கேரம் விளையாட்டு மீது இளவழகிக்கும் ஆர்வம் பிறந்தது. ஆனால், சொந்தமாக ஒரு சிறிய கேரம் போர்டு வாங்கி விளையாடும் அளவுக்கு அவருடைய வீட்டில் பொருளாதாரம் ஒத்துழைக்கவில்லை; வீடும் பெரியதில்லை. குடிசைமாற்று வாரிய வீட்டில்தான் சகோதரிகளுடன் வசித்துவந்தார்.

திருப்புமுனைப் பரிசு

ஆனால், கேரம் விளையாட்டு மீது இளவழகிக்குத் தணியாத தாகம். ஆறு வயது முதலே அக்கம் பக்கத்தில் கேரம் விளையாடத் தொடங்கிவிட்டார். அந்தப் பகுதியில் இருந்த ஒரு கிளப்பில் தன் தந்தையின் நண்பர் உதவியுடன் கேரம் பயிற்சியை இளவழகி மேற்கொண்டுவந்தார். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பயிற்சிக்குச் சென்றுவிடுவார். கேரம் காய்களைக் குறிபார்த்து ‘பாக்கெட்’ செய்யும் வித்தையைக் கற்றுக்கொண்ட இளவழகி, அந்த விளையாட்டின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.

அந்த நேரத்தில் பள்ளிகள் அளவிலான கேரம் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இளவழகி வெற்றிபெற்றார். இளவழகியின் வெற்றிக்காக அவருக்குப் பரிசாக கிடைத்தது, ஒரு கேரம் போர்டு. அந்தப் பரிசு அவருக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நினைத்த நேரத்தில் கேரம் விளையாடவும் பயிற்சி மேற்கொள்ளவும் அது உதவியது.

கேரம் விளையாட்டில் முன்னேறிவந்த இளவழகி, பத்து வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார். முதன்முதலாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றபோது, இரண்டாவது இடத்தைத்தான் பெறமுடிந்தது. ஆனால், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேரம் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கினார். மாநில அளவிலான போட்டிகளைத் தாண்டி, தேசிய அளவிலும் முத்திரை பதிக்கத் தொடங்கினார்.

உலக சாம்பியன்

தேசிய அளவில் முன்னேற்றம்கண்ட இளவழகி, 13 வயதில் தேசிய சாம்பியனாக உருவெடுத்தார். இதனால், மாலத்தீவில் நடந்த கேரம் ஆசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்க இளவழகிக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் போட்டியில் இளவழகியின் பக்கம் வெற்றிக்காற்று வீசியது. கேரம் ஆசிய சாம்பியன் என்ற பெருமையோடு தமிழகம் திரும்பினார். கேரம் விளையாட்டில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்னேறிவந்த இளவழகிக்கு, 2006 மிகப் பெரிய வெற்றி ஆண்டாக அமைந்தது.
தேசியப் போட்டிகளில் முன்னேறி தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகித்துவந்ததால், 2006-ல் டெல்லியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி 2-வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இளவழகிக்குக் கிடைத்தது. இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆயிஷா முகமதை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் ஆனார் இளவழகி. தொடர்ந்து 2008-ல் பிரான்சில் நடைபெற்ற 5-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டம் வென்று அசத்தினார். இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

கஷ்டத்துக்கு மத்தியில்...


தொடர்ந்து கேரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இளவழகி, 2010-ல் அமெரிக்காவின்  ரிச்மாண்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இரட்டையர் பிரிவில் சக நாட்டு வீராங்கனை ராஷ்மி குமாரியுடன் இணைந்து வெற்றிவாகை சூடினார். ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2012-ல் பிரான்சில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் வெற்றியைத் தட்டிவந்தார். மொத்தமாக மூன்று முறை கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்துக்குப் பெருமைசேர்த்தார் இளவழகி.
இளவழகி கேரம் விளையாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருக்கிறார். அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, இலங்கை, மாலத்தீவு எனப் பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குக் கிடைத்ததுபோல் ஸ்பான்ஸர் யாரும் இளவழகிக்குக் கிடைக்கவில்லை.

இதனால், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பல நேரம் செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். நல்ல உள்ளங்களின் உதவியால்தான் அவரால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடிந்தது. அப்படிக் கிடைத்த உதவியாலும் கேரம் விளையாட்டில் அவருக்கு இருந்த தணியாத தாகத்தாலும் அந்த விளையாட்டில் இந்தியாவில் கோலோச்சும் பெண்ணாக மாறினார் இளவழகி.


கிடைக்காத அங்கீகாரம்



இதுவரை தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 260 பதக்கங்களை இளவழகி வென்றிருக்கிறார். இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும். இதேபோல் சர்வதேச அளவில் 125 பதக்கங்களை வென்றிருக்கிறார். தங்கப் பதக்கங்கள் மட்டும் 111.  இந்த அளவுக்கு கேரம் விளையாட்டில் சாதித்த இளவழகிக்குப் பெரிய அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை. கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றபோது அவருக்கு ஒரு முறை தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு அளித்தது. அப்படிக் கிடைத்த பணத்தில் தள்ளுவண்டியால் தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மோட்டார் வண்டியை வாங்கிக் கொடுத்தார் இளவழகி.

இந்தியாவில் கேரம் விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை வடசென்னையைச் சேர்ந்த மரிய இருதயத்துக்கு உண்டு. ஆனால், பெண்கள் பிரிவில் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த இளவழகிக்கு அந்த விருதுகூடக் கிடைக்காமல்போனது. நல்லவேளையாக கேரம் விளையாட்டில் சாதித்ததற்காக ஓ.என்.ஜி.சி.யில் வேலை கிடைத்தது மட்டுமே அவருக்கான அங்கீகாரம்.

தேசிய முன்னாள் கேரம் சாம்பியனான சக்திவேலைத் திருமணம் செய்துகொண்ட இளவழகி, தற்போது மாதவரத்தில் வசித்துவருகிறார்.  தான் கற்றதைப் பிறருக்குக் கற்றுத்தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  ‘உலக கேரம் சாம்பியன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, ஏராளமான சிறுவர், சிறுமிகளுக்கு கேரம் விளையாட்டைக் கற்றுக்கொடுத்துவருகிறார்.

கேரம் என்பது செஸ் விளையாட்டைப் போலவே அறிவுப்பூர்வமான விளையாட்டு. வறுமை, புறக்கணிப்பு போன்றவற்றைத் தாண்டி தன்னிடம் இருந்த கேரம் திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்கு இளவழகியின் மன உறுதியே காரணம்.




- இந்து தமிழ், 30/12/2018

23/12/2018

மாரி 2 விமர்சனம்

சென்னையில் ரவுடி ராஜ்ஜியம் நடத்திவருகிறார்கள் தனுஷும் அவருடைய நண்பர் கிருஷ்ணாவும். போதைப் பொருள் மட்டும் கடத்தக் கூடாது என்று தனுஷுக்கு உயர்ந்த நோக்கம்! தனுஷை  எதிர்க்கும் கூட்டம் போதைப் பொருள் கடத்தும் தொழிலை செய்ய துடிக்கிறது. இன்னொருபுறம் தனுஷை எப்படியும் கொல்வது என்ற பழைய பகையுடன் சிறையிலிருந்து தப்பிவருகிறார் டொவினோ தாமஸ். போதை பொருள் கடத்த துடிக்கும் கூட்டத்தோடு சேர்ந்து, அந்தத் தொழிலை செய்ய திட்டம் போடுகிறார் டொவினோ தாமஸ். இதற்கு கிருஷ்ணாவின் தம்பி உதவுகிறார்.

போதை பொருளைக் கடத்த தனுஷை ஒருதலையாகக் காதலிக்கும் ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவியைப் பயன்படுத்தும் டொவினோ தாமஸ், தனுஷையும் கிருஷ்ணாவையும் பிரிக்கவும் காய்  நகர்த்துகிறார். அந்த முயற்சியில் நண்பர்கள் தனுஷும் கிருஷ்ணாவும் பிரிகிறார்கள். அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி தனுஷைத் தீர்த்துக்கட்ட டொவினோ தாமஸ் முயற்சிக்கிறார். கொலை முயற்சியில் சாய் பல்லவி சிக்குகிறார். இதன்பிறகு தலைமறைவாகும் தனுஷ் என்ன ஆனார்? அரசியல்வாதியாக உயரும் டொவினோ தாமஸை தனுஷ் என்ன செய்தார்? பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மாரி 2.

‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் இது. சில கதாபாத்திரங்களையும் தனுஷின் தோற்றத்தையும் தவிர முந்தைய படத்தின் சாயல் துளியும் இல்லாமல் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். ரவுடி கோஸ்டி கதைக்கான  கரு இருந்தும், திரைக்கதையைப் பற்றி கவலை இல்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர். விளைவு, கடிவாளம் இல்லாத குதிரையாக ஓடுகிறது திரைக்கதை. ரவுடித்தன கதைகளுக்கே உரிய விறுவிறுப்பு படத்தில் இல்லை. பழிவாங்கல் கதையில் இருக்கும் சடுகுடு ஆட்டங்களும் இல்லை. இந்தக் குறையைப் போக்க நகைச்சுவைக் காட்சிகளை தூக்கலாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிலும் ஈர்ப்பு இல்லை.  இந்தக் கதையை துணிந்து இயக்கிய பாலாஜி மோகனையும் நம்பி நடித்த தனுஷையும் நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

முதல் பாகத்தில் ரவுடியில் நல்ல ரவுடி என்ற பாத்திர வார்ப்பாக வருகிறார் தனுஷ். இரண்டாம் பாகத்தில் மாரியப்பனாக சாதுவாக  மாறிவிடுகிறார். கிளைமேக்ஸில் மீண்டும் ரவுடி மாரியாக மாறி வில்லனை வதம் செய்கிறார். ‘பாட்ஷா’ பாதிப்பிலிருந்து எப்போதுதான் தமிழ் சினிமா மீளும் என்றே தெரியவில்லை. டொவினோ தாமஸ் வில்லனாக அவதாரம் எடுக்கச் சொல்லப்படும் காரணங்களில் கொஞ்சமும் வலுவில்லை. தலைமறைவாகிவிடும் தனுஷை, எட்டு ஆண்டுகள் கழித்தும் விட்ட இடத்திலிருந்து இயக்குநர் காட்ட முனைந்திருப்பது அயற்சியை ஏற்படுத்திவிடுகிறது. கொலைகளை சர்வ சாதாரணமாகச் செய்கிறார் தனுஷ். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத ஐ.ஏ.எஸ். அதிகாரி வரலட்சுமியும் போலீசும், தனுஷை வைத்து டொமினோ தாமஸை கொலை வழக்கி சிக்க வைக்க செய்யும் உத்தி பெரிய நகைமுரண்.

திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க தனுஷ்தான் இந்தப்
படத்தில் பெரிய பலம். ரவுடியாக வெடிப்பது, சாதுவாக உருகுவது, கோபத்தில் கொப்பளிப்பது, ஒருதலையாகக் காதலிக்கும் சாய் பல்லவியைக் கலாய்ப்பது என தனுஷ் படம் முழுவதும் தன் ஆதிக்கத்தை நிறுவியிருக்கிறார். ‘அராத்து ஆனந்தி’யாக ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவி, அமர்க்களப்படுத்தியிருக்கிறார். துரத்திக் காதலிப்பதிலும், செண்டிமென்ட் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். சென்னை ஆட்டோ ஓட்டுநர்களுக்கே உரிய அவரது உடல்மொழியும் கச்சிதம்.

தனுஷின் நண்பராக வரும் கிருஷ்ணாவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வரும் வரலட்சுமியும், போலீஸாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  வில்லனாக அறிமுகமாகியிருக்கும் டொவினோ தாமஸ் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். ஆனால், ரவுடிக்குரிய உடல்மொழி அவரிடம் மிஸ்ஸிங்.  தனுஷூக்கு வலது, இடதுவாக பகடிப் பேர்வழிகளாக வருகிறார்கள் ரோபோ சங்கரும் வினோத்தும். படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா. பின்னணி இசையை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

'மாரி’ படமே பராவாயில்லை என்று சொல்ல வைத்ததுதான் ‘மாரி 2’வின் வெற்றி.

மதிப்பெண்: 1.5 / 5

09/12/2018

கிரிக்கெட் புயல்!

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை; ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக ஏழு அரை சதங்களை விளாசிய வீராங்கனை; ஒரு நாள் போட்டியில் அதிக அரை சதங்களை விளாசிய வீராங்கனை; ஒட்டுமொத்தமாகச் சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களை ஓரங்கட்டி அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை என இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் யார்? ‘இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின்’ என அழைக்கப்படும் மித்தாலி ராஜ்தான் அவர். இந்திய மகளிர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா கேப்டன்.

17 வயதில் இடம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்தான் மித்தாலி ராஜ் பிறந்துவளர்ந்தார். ஆனால், அடிப்படையில் அவர் ஒரு தமிழர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மித்தாலி ராஜின் தந்தை துரைராஜ் விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். இன்று மகளிர் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்கும் மித்தாலி, சிறுமியாக இருந்தபோது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லாதவர். மித்தாலியை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவரது பெற்றோர் கிரிக்கெட் பக்கம் அவரை தள்ளிவிட்டனர்.  மித்தாலி கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடியபோது 10 வயது. ஆனால், 17 வயதிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு தன்னை மெருக்கேற்றிக் கொண்டார்.

அறிமுகப் போட்டியில் சதம்

1999-ம் ஆண்டில் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிதான் அவரது முதல் சர்வதேச ஆட்டம். முதல் போட்டியிலேயே 114 ரன்கள் விளாசி மகளிர் கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். முதல் போட்டியே அவருக்கு நிச்சயம் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் மித்தாலியும் மற்றொரு அறிமுக வீராங்கனையான ரேஸ்மா காந்தியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இந்தப் போட்டியில் இருவருமே சதம் அடித்தார்கள். மித்தாலி ராஜ்க்கு முன்பாக ரேஷ்மா காந்தி சதம் அடித்ததால், அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்புதான் மித்தாலிக்குக் கிடைத்தது. இந்தப் போட்டிதான்  சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மித்தாலிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அபாயகரமான வீராங்கனை

இதேபோல 2002-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால், மூன்றாவது போட்டியில்  214 ரன்களைக் குவித்து கவனத்தை ஈர்த்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இதுவரை இதுதான் இரண்டாவது அதிகபட்ச ரன். சச்சின் டெண்டுல்கரைப்போல சூழ்நிலைக்கு தகுந்தார்போல விளையாடும் அற்புதமான வீராங்கனை மித்தாலி ராஜ். பார்ப்பதற்கு அவர் நிதானமாக விளையாடுவதைப்போல தெரிந்தாலும், ரன் குவிப்பதில் வல்லவர். மித்தாலி எந்த நிலையில் களமிறங்கினாலும் எதிரணியினருக்கு அச்சம் தரும் வீராங்கனையாகவே விளங்கினார். அதன் காரணமாகவே ‘அபாயகரமான கிரிக்கெட் வீராங்கனை’ என்ற சிறப்பையும் பெற்றார் மித்தாலி ராஜ்.

சாதனை மேல் சாதனை

சர்வதேச அரங்கில் டெஸ்ட் போட்டிகளே பெண்களுக்கு நடத்தப்படுவது
நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் முடி சூடா ராணியாகக் கோலோச்சிவருகிறார் மித்தாலி ராஜ். இதுவரை 198 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள 6,550 ரன்களை இதுவரை குவித்திருக்கிறார். இதில் 7 சதங்கள், 51 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 51. உலக அளவில் எந்த வீராங்கனையுமே 6 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை இதுவரை தொட்டதில்லை. 2017-ம் ஆண்டில் அந்தச் சாதனையைப் படைத்த முதல் வீராங்கனையானார் மித்தாலி. அதே ஆண்டில் மித்தாலி ராஜ் கிரிக்கெட் ராணியாக உச்சம் தொட்டார். அவர் தொடர்ச்சியாக அடித்த 7 அரை சதங்கள் இந்தப் பெயரை அவருக்குப் பெற்று தந்தது. ஆண்கள் அணியில்கூட எந்த வீரரும் செய்யாத சாதனை இது. இந்திய அணியின் வெற்றிகரமான சேஷிங்குகளில் மித்தாலியின் பங்கு இல்லாமல் இருந்ததில்லை. சேஷிங்குகளி மட்டும் அவரது சராசரி  109.68 ரன்.

டி20 முத்திரை

ஒரு நாள் போட்டிகளைபோலவே விரைவாக ரன் சேர்க்கக்கூடிய டி20 போட்டியிலும் மித்தாலி ராஜ் தன் ராஜ்ஜியத்தைப் படரவிட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டு முதல் டி20 போட்டியில் விளையாடினார். 35 வயதை எட்டியபோதும் டி20 போட்டியில் இப்போதுவரை அணியின் முக்கிய வீராங்கனையாக மித்தாலி ராஜ் தொடர்கிறார். 85 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மித்தாலி, 2,283 ரன்களைக் குவித்தார். ஒட்டுமொத்தமாக டி20 ரன் குவிப்பில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள்கூட மித்தாலிக்குக் கீழ்தான் இருக்கிறார்கள். டி20 போட்டியில் 18 அரைசதங்களும் இதில் அடங்கும். எவ்வளவோ சந்தர்ப்பங்களில் ஒரு நாள் போட்டியிலும் டி20 போட்டியிலும் தனி ஆளாக நின்று இந்திய அணியை மீட்டிருக்கிறார்.

வெற்றிகரமான கேப்டன்

வீராங்கனையாக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் மித்தாலி ராஜ் வெற்றிகரமானவராகத் திழந்துவருபவர். மகளிர் கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மட்டுமே கோலோச்சிய காலத்தில், இந்திய அணியையும் அந்த அணிகளுக்கு இணையாகப் பேச வைத்தவர் மித்தாலி ராஜ். உச்சகட்டமாக இவரது தலைமையின் கீழ் 2016 முதல் 2017-ம்
ஆண்டுவரை தொடர்ச்சியாக 16 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை ருசித்ததை இதற்கு உதாரணமாக்ச் சொல்லலாம். சுமார் 19 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்துவரும் மித்தாலி ராஜூக்கு மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவரது தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு கடந்த ஆண்டு வந்தும், நூலிழையில் மித்தாலி ராஜ் கோட்டைவிட்டார். ஆனாலும், இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மித்தாலியின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில்  2013-ல் மத்திய அரசு அர்ஜுனா விருதையும் 2015-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது.  இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்; வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு கடவுள் எனப் போற்றப்பட்டபோதும், கிரிக்கெட் வீராங்கனைகள் அதில் ஒரு பங்கு அளவுக்குக்கூடப் போற்றப்பட்டதில்லை. ஆனால், அந்த ஓரவஞ்சனையைக்கூட தனது பேட்டால் விரட்டி, மகளிர் கிரிக்கெட்டுக்கும் விசாலமான பார்வையைக் குவியத் தொடங்கி வைத்ததில் மித்தாலி ராஜூக்கு இந்திய மகளிர் கிரிக்கெட்  என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.

- இந்து தமிழ், 06/12/18