10/10/2018

ராட்சசன் விமர்சனம்

 
சைக்கோ த்ரில்லர் படத்தை இயக்கும் ஆசையில் உலகெங்கும் நடக்கும் கொலைகள் பற்றிய செய்திகளைச் சேகரித்துவிட்டு படக் கம்பெனிக்கு அலைகிறார் நாயகன் விஷ்ணு விஷால். ஆனால், குடும்பக் கஷ்டத்தின் காரணமாக அப்பா பார்த்த போலீஸ் வேலைக்கு விஷ்ணு செல்ல நேரிடுகிறது. அந்த நேரத்தில் நகரில் 15, 16 வயதில் உள்ள பள்ளி மாணவிகளின் உறுப்புகளைச் சிதைத்து, கொடூரமான கொலைகள் தொடர்ச்சியாக நடந்தேறுகின்றன. சைக்கோ கொலைகளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துவைத்திருக்கும் விஷ்ணு, அந்த வழக்குகளில் ஈடுபாடு காட்டுகிறார். ஒரு கட்டத்தில் அவருடைய அக்கா மகளும் அதே பாணியில் கொலைக்கு ஆளாகிறார். அந்த சைக்கோ கொலையாளி யார்? எதற்காகப் பள்ளி மாணவிகளைக் கொல்கிறான் என சங்கிலிப் பிணைப்புபோல நிறைந்துகிடக்கும் மர்ம முடிச்சுகளை நாயகன் அவிழ்ப்பதுதான் படத்தின் கதை.

சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் நீளம் கொண்ட படத்தை தொடக்கம் முதல் கடைசிவரை த்ரில்லிங் குறையாமல் பார்த்துகொண்டதில் இயக்குநர் ராம்குமார் ஜெயித்துவிடுகிறார். உளவியல் கலந்த த்ரில்லர் படம் என்பதால், அதற்கேற்ப ஸ்பீடு பிரேக் இல்லாத திரைக்கதையை அமைத்தற்காக இயக்குநரைப் பாராட்டலாம். த்ரில்லர் படங்களுக்கே உரிய ட்விஸ்டுகளை இயக்குநர் ஏராளமாக படத்தில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு ட்விஸ்டும் கதையோட்டத்துடன் பயணிப்பதில் இயக்குநரின் கைவண்ணம் தெரிகிறது.


நான்கு மாணவிகளை கொலையாளி கொல்லும்விதத்தை ரத்தச் சகதியாகக் காட்டாமல், திகிலூட்டும்  தகவல்களாகப் பகிர்ந்துகொள்வதுபோல காட்டியிருப்பது புதுமை.  பொம்மை, காது கேளா கருவி, பியானோ இசை, மேஜிக் என விடை தெரியாமல் கிடைக்கும் தடயங்களை வைத்துகொண்டு கொலையாளியை நாயகன் அடையாளம் காணும் காட்சிகள் திரைக்கதைக்குப் பலம் சேர்க்கின்றன. சமநிலையைத் தொடர்புப்படுத்தி சைக்கோ கொலையாளியை நாயகன் வீழ்த்தும் காட்சியும் நல்ல உத்தி.


படத்தில் லாஜிக் ஓட்டைகள் இல்லாமல் இல்லை. குறிப்பிட்ட மாணவிகளை வைத்து மேஜிக் செய்யும் கொலையாளி, அந்த மாணவிகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார் என்பதற்கு படத்தில் விடை இல்லை. கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டதைப் போல அடிக்கடி காட்டிவிட்டு மீண்டும் படம் பயணிப்பது அலுப்பூட்டிவிடுகிறது. துப்பாக்கி முனையில் கொலையாளியைப் பிடித்த பிறகும் அவரை காளி வெங்கட் தப்பவிட்டு, அவரே கொலையாவது அபத்தம். பக்கத்திலேயே காரை வைத்துகொண்டு அதில் ஏறி  தப்பிக்காமல் கொலையாளியிடம் நிழல்கள் ரவி மாட்டிக்கொள்வது அபத்தம்.


இந்த டிஜிட்டல் காலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மீட்கும் கொலை செய்யப்பட்ட சடலங்களைச் செய்தியில் வராமல் மறைப்பதெல்லம் சாத்தியமா என்பதை இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.  மதிப்பெண் குறைவாக எடுக்கும் 16 வயதுள்ள மாணவிகள் பள்ளி அறையில் ஆசிரியர் எதை செய்ய சொன்னாலும் செய்வதாகக் காட்டும் காட்சிகள் மிகையான கற்பனை. கடுமையான மனபிறழ்வால் பாதிக்கப்படும் சைக்கோ கொலையாளியைப் பெரியவனாகக் காட்டும் காட்சிகளில் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.



வேண்டா வெறுப்பாகப் போலீஸானாலும் மர்மத்தை உடைக்கும்போது கைதேர்ந்த துப்பறிவாளனாக மாறிவிடுகிறார்   நாயகன் விஷ்ணு விஷால். இயக்குநராக நடையாய் அலைவது, அமலா பாலிடம் பள்ளியில் சேட்டை செய்வது, அக்கா மகள் காணாமல் போகும்போதும் கொலையாகும்போதும் துடிப்பது, கொலையாளியை நெருங்குவதில் வேகம் காட்டுவது எனப் படத்தில் விஷ்ணு விஷால் விளையாடியிருக்கிறார். பள்ளி ஆசிரியராக வருகிறார் அமலா பால். அவருக்குக் காட்சிகள் குறைவுதான் என்றாலும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.


உணர்ச்சிமிகு அப்பாவாக முனீஸ்காந்த் நடித்திருக்கிறார். விஷ்ணுவுக்கு உதவும் சக போலீஸாக காளி வெங்கட், மருத்துவராக வரும் நிழல்கள் ரவி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் ராதாரவி, ஈகோ போலீஸாக வந்து விஷ்ணுவுக்குக் குடைச்சல் தரும் சூசன் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். த்ரில்லிங் படத்துக்கு ஏற்ற தேர்ந்த இசையை ஜிப்ரான் படரவிட்டிருக்கிறார். பி.வி. ஷங்கரின் ஒளிப்பதிவும், சான் லோகேஷின் படத் தொகுப்பும் படத்துக்குப் பக்கபலம்.


 ஒரு சில குறைகள் படத்தில் இருந்தாலும், மன பிறழ் சைக்கோவின் மோசமான முகத்தைக் காட்டி, படம் முழுவதும் த்ரில்லிங்கைத் தந்த வகையில் இந்த ‘ராட்சச’னை  ஆராதிக்கலாம்.


மதிப்பெண்: 3.5 / 5

No comments:

Post a Comment