14/09/2018

கிரிக்கெட்: வெளிநாட்டில் எலிகள்!

2015-ம் ஆண்டில் தொடங்கி 2017-ம் ஆண்டு இறுதிவரை இந்திய கிரிக்கெட் அணி தேனிலவு காலத்தில் இருந்தது. தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள், பலமில்லாத இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடனான வெளிநாட்டுத் தொடர்கள் என இந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணி எதிரணிகளைத் துவம்சம் செய்துகொண்டிருந்தது. ஆனால், 2018-ம் ஆண்டில் தொடங்கிய சோதனைக் காலத்தில் சிக்கி இந்திய கிரிக்கெட் அணி தற்போது திணறிக்கொண்டிருக்கிறது.


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிதான் உலகின் நம்பர் ஒன் அணி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பெருமையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பெருமைக்கு ஏற்ப இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை.  2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தது. தோல்வியை நோக்கி டெஸ்ட் தொடர் நகர்ந்ததைக் கண்டு வேகவேகமாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டிகளிலிருந்தே விலகினார் டோனி. இதில் காரணம் இல்லாமல் இல்லை. 2011-ம் ஆண்டில் இங்கிலாந்தில் 4-0, 2011-12-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 4-0, 2014-ம் ஆண்டில் இங்கிலாந்தில் 1-3 என மூன்று வெளிநாட்டு தொடர்களில் மண்ணைக் கவ்வியதே டோனி பதவி விலகக் காரணமாக இருந்தது.


இப்போது டோனியின் கேப்டன் கதை ஏன் என்று நினைக்கலாம். இருக்கிறது, டோனி விட்ட இடத்திலிருந்துதான் கோலியின் கதையும் தொடங்குகிறது. 2015-ம் ஆண்டில் டோனி அவசரம் அவசரமாகப் பதவி விலகிய பிறகு எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலிதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக இருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு டிரா செய்தார். தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. விராட் கோலி கேப்டனாகப் பதவியேற்பதற்கு முன்பு இந்தியா கண்ட தோல்வி இந்தத் தொடர் மட்டும்தான்.
இந்த டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணி விஸ்வரூபம் எடுத்தது. 



அதாவது, 9 டெஸ்ட் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்றது. இதில் 6 டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்றவை. வெறும் மூன்று தொடர்கள் மட்டுமே வெளிநாட்டுத் தொடர்கள். இலங்கையில் இரண்டு டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸில் ஒரு டெஸ்ட் தொடர் என பலவீனமான டெஸ்ட் அணிகளுடன் மட்டுமே இந்தியா விளையாடியது. உள்நாட்டில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பலமான அணிகளை எளிதாக நசுக்கியது இந்தியா. 

2015-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை தொடர் டெஸ்ட் வெற்றிகளால் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அங்கீகாரமும் இந்தியாவுக்குக் கிடைத்தது. இதெல்லாம் கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்தது. 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு முதல் சோதனை காத்திருந்தது. தென்னாப்பிரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்தியா. ஜோகன்னர்ஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட்டில் மட்டும் வெற்றியடைந்து இந்தியா ஆறுதல் தேடிக்கொண்டது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து அடுத்த வெளிநாட்டுத் தொடராக இங்கிலாந்து தொடர் வந்தது.


உண்மையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்தை இந்தியா எளிதாக வெற்றிக்கொள்ளும் என்றே முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உள்பட பலரும் சொல்லிவந்தார்கள். ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக இந்திய அணி டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தியதால், இந்த எதிர்பார்ப்பு இருந்தது. தவிர, இங்கிலாந்து அணியும் அத்தனை பலமான அணியாகவும் விளங்கவில்லை. ஆனால், அந்த எதிர்பார்ப்பை ஒட்டுமொத்தமாகச் சிதைத்த இந்திய அணி, 1-4 என்ற டெஸ்ட் கணக்கில் தொடரை இழந்துவந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றிக்க வேண்டும். 


எட்ஸ்பாஸ்டன், சவுதாம்டன் டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி சுலபமாக வெற்றிக்கொள்ள வாய்ப்புகள் இருந்தன. எட்ஸ்பாஸ்டனில் 194 ரன்களைகூடத் துரத்தி விரட்டிப் பிடிக்க முடியாமல் தோல்வியைச் சந்தித்த இந்தியா, சவுதாம்டன் டெஸ்டை 60 ரன்களில் கோட்டைவிட்டது. மிக எளிதான இலக்கைக் கூட எட்ட முடியாமல், துரத்தலில் அடைந்த தோல்வியால் இந்தியா சரண்டர் ஆனது. விளைவு, இந்தத் தொடரை படுமோசமாக இழந்திருக்கிறது.

‘உள்நாட்டில் புலி; வெளிநாட்டில் எலி’ என்று இந்திய டெஸ்ட் அணியைக் காலங்காலமாக கிண்டலடிப்பது வாடிக்கை. அன்று முதலே இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பெரிதாக முத்திரை பதித்ததில்லைதான். ஆனால், ‘கடந்த 15, 20 ஆண்டுகளில் இப்போதிருக்கும் இந்திய அணிதான் சிறந்தது’ என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகிறார் என்றால், அதை செயலில் காட்டியிருக்க வேண்டாமா?


கடந்த 2006-07-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதற்கு முன்பாக 2002-ல் கங்குலி தலைமையிலான அணி 1-1 என்ற தொடரை சமன் செய்தது. அதற்கும் முன்பாக 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்தில் வென்றது.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுவதைப்போல இப்போதிருக்கும் அணி முந்தைய அணியுடன் நெருங்கி வரும் அளவுக்குக்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்று இந்தியா தோல்வியுடன் திரும்பியது. இப்போது இங்கிலாந்திலும் அதே கதிதான். 


அடுத்து இந்த நவம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
ஆஸ்திரேலியாவையாவது இந்தியா வெற்றிக்கொள்ளுமா என்று ஊகிப்பதெல்லாம் மிகவும் கடினம்தான். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என இரண்டு தொடர்களிலுமே இந்திய பந்துவீச்சாளர்கள் அந்த நாட்டு பந்துவீச்சாளர்களின் தரத்துக்கு பந்துவீசி திணறடித்தார்கள். ஆனால், பேட்ஸ்மேன்களில் விராட் கோலியைத் தவிர பிற ஆட்டக்காரர்கள் தங்கள் தரத்தை ஒரு படிகூட மேலே உயர்த்திக்கொள்ளவில்லை. அதுதொடரும்வரை, வெளிநாட்டில் சாதிப்பதையெல்லாம் கொஞ்சம் எதிர்பார்க்க முடியாது.

இந்தியா உள்நாட்டில் புலியாக இருப்பதுபோல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அவர்கள் ஊரில் புலியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்த அணிகள் இந்தியாவில் நிச்சயம் ஒரு டெஸ்ட் தொடரையாவது வென்றுக்காட்டியிருக்கிறார்கள். இந்தியாவுக்குக் குறிப்பிட அப்படி எந்த வெற்றியும் இங்கே இல்லை!

06/09/2018

துணிவே துணை!

அன்று 1984 மே 23. தனது கனவும் லட்சியமும் நிறைவேறும் தருணத்தை நினைத்து அந்தப் பெண் மலையில் முன்னேறிக்கொண்டிருந்தார். காத்திருந்த அந்தத் தருணம் கைகூடியதும் கையோடு கொண்டுவந்திருந்த தேசியக் கொடியை உயரே பறக்கவிட்ட பெருமிதத்தோடு உற்சாகக் குரல் எழுப்பினார். அவர், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலில் ஏறிச் சாதனை படைத்த இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பால்.

சிறு வயது ஆசை 

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப சிறு வயதிலேயே மலையேற்றம் மீது பச்சேந்திரி பாலுக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு அவர் பிறந்த உத்தரகாண்ட் மாநிலம்  நகுரி என்ற கிராமும் ஒரு காரணம். இமயமலை அருகே அந்தக் கிராமம் இருந்ததால் மலை மீது ஏறி இறங்குவது அவரது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே இருந்தது. சிறு வயதிலிருந்தே பச்சேந்திரி பால் வித்தியாசமானவர். எப்போதும் எதையாவது செய்தபடி துறுதுறுவென இருப்பார்.

மலையேற்றம் மீது காதல்

பச்சேந்திரிக்கு 12 வயதாக இருந்தபோது பள்ளியில் மலையேற்றம் சென்றார்கள். அந்தக் குழுவில் அவரும் இடம்பிடித்தார். 4 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட மலையை ஏறிவர முயன்றார் பச்சேந்திரி. அப்போதுதான் மலையேற்றம் என்ற சாகச விளையாட்டு குறித்த புரிதல் அவருக்கு ஏற்பட்டது. மலையேற்றம் மீதான ஆர்வம் அவருக்கு அதிகம் ஏற்பட்டாலும், அதையெல்லாம் படிப்புக்காக மூட்டைகட்டி வைத்தார்.

கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பிறகு நகுரி கிராமத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் பச்சேந்திரி பாலுக்குக் கிடைத்தது. அவரை ஆசிரியராக்கி அழகு பார்க்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால், பச்சேந்திரி பாலுக்கோ படிப்புக்காக இத்தனை நாட்களாக ஒதுக்கிவைத்திருந்த மலையேற்ற சாகச விளையாட்டின் மீதுதான் தீவிரக் காதல் இருந்தது.

முதல் மலையேற்றம்

மலையேற்றத்தை முறைப்படி கற்க விரும்பினார். இதற்காக  மலையேறும் கலையைக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்ந்தார். மலையேற்றத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்ற பிறகு மலையேற்ற சாகசத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1982-ல் கங்கோத்திரி மலையில் 6,675 மீட்டர் உயரத்தையும் ருத்ரகரியா மலையில் 5,818 மீட்டர் உயரத்தையும் மலையேற்றம் மூலம் எட்டினார்.

வெற்றிகரமாகச் செய்துகாட்டிய இந்த மலையேற்றம் மூலம் பச்சேந்திரி பாலுக்கு  நேஷனல் அட்வென்ச்சர் ஃபவுண்டேஷனில் வேலை தேடிவந்தது. இங்கே அவருக்குக் கிடைத்தது பயிற்றுநர் வேலை. மலையேற்றம் செய்ய விரும்பும் பெண்களுக்கு அதன் நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார்.

எவரெஸ்ட்டுக்குப் பயணம்

இந்தப் பணிக்கு இடையே சிறு சிறு மலையேற்றங்களிலும் அவர் ஈடுபட்டார். சிறு சிறு மலைகளை ஏறித் தன்னுடைய தன்னம்பிக்கையை வளர்ந்துவந்தார். தொடர்ந்து மலையேற்ற சாகசத்தில் நிபுணத்துவம் பெற்றதால், 1984 மார்ச்சில் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மகளிர் குழுவில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. 6 பெண்கள், 11 ஆண்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களில் பச்சேந்திரியும் ஒருவர். இது மிகப் பெரிய, சவால் மிக்க பணி என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கினார் பச்சேந்திரி பால்.

அவர்கள் சென்ற குழுவில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. நோய் தாக்குதல் போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் பச்சேந்திரி பாலுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் மன உறுதியோடு பயணத்தைத் தொடர்ந்தார். மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரைத் தாங்கிக்கொண்டு முன்னேறினார். பல இடங்களில் கடுமையான பனிமலை முகடுகளைத் தாண்ட வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் தாண்டி எவரெஸ்ட்டை நெருங்கினார்.

சிகரத்தில் பிறந்த நாள்

தொடக்கம் முதலே மன உறுதி குலையாமல் முன்னேறிய பச்சேந்திரி பால்,  1984 மே 23 மதியம் 1:07 மணி அளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். கையோடு கொண்டுவந்திருந்த தேசியக் கொடியை உயரே பறக்கவிட்டார். தடைகளையும் வலிகளையும் தாண்டி அவர் பதித்த அந்தத் தடத்தின் மூலம், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் என்ற அழியாப் புகழைத் தேடிகொண்டார். மே மாதம் 24-ம் தேதி அவரது 31-வது பிறந்த நாளுக்கு முன்பாக இந்தச் சாதனையை அவர் செய்தது இன்னொரு முத்தான அம்சம். தனது பிறந்த நாளையும் எவரெஸ்ட் சிகரத்திலேயே கொண்டாடினார் பச்சேந்திரி பால்.

நிற்காத பயணம்


இந்த மலையேற்றத்தோடு அவர் நின்றுவிடவில்லை. 1985-ல் மற்றொரு குழுவுடன் தனது மலையேற்றதைத் தொடங்கினார். பெண்கள் மட்டுமே பங்கேற்ற மலையேற்றக் குழுவுக்குத் தலைமைதாங்கி சியாச்சின் மலைப் பகுதி வழியாக சுமார் 4,500 மீட்டர் உயரம் இமயமலைப் பகுதியில் சாகச மலையேற்றப் பயணம் செய்தார்.  1993-ல் இந்திய - நேபாளப் பெண்களைக் கொண்ட குழுவுடன் எவரெஸ்ட்டில் மீண்டும் ஏறினார். இதில் அவரோடு சேர்ந்து 7 பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார்கள்.

 நீர் சாகசம்

1994-ல் வேறொரு சாகசத்தில் பச்சேந்திரி பால், 18 பெண்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமையேற்று நீர் சாகசப் பயணம் மேற்கொண்டார். கங்கை நதியிலிருந்து புறப்பட்டு ஹரித்வார், கொல்கத்தா நகரங்களை உள்ளடக்கிய நீர் மிதவைப் பயணத்தை வெற்றிகரமாகச் செய்துமுடித்தார். 39 நாட்களில் 2,155 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வழியாகக் கடந்து சென்றார் பச்சேந்திரி பால்.

இதேபோல 1997-ல் எட்டுப் பேர் கொண்ட பெண்கள் குழுவுடன் மலையேற்றப் பயணத்தை இமயமலையில் தொடங்கினார். அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து தொடங்கிய இந்த மலையேற்றப் பயணத்தை சியாச்சினில் உள்ள இந்திரா முகடு என்ற இடத்தில் நிறைவு செய்தார். இதன் பிறகும்கூட பச்சேந்திரி பாலின் மலையேற்ற சாகசப் பயணம் முடிவுறாமல் நீண்டுகொண்டே சென்றது.

விருதுகள்

மலையேற்றத்தில் பச்சேந்திரி பால் செய்த சாதனைகளுக்காக அவர் பெறாத விருதுகளே இல்லை.  அவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் 1984-ல் பத்ம விருது வழங்கப்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து மலையேற்றத்தில் சாதனையை நிகழ்த்தியதால், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது 1986-ல் வழங்கப்பட்டது.
1990-ல் எவரெஸ்ட்டை அடைந்த முதல் இந்தியப் பெண் என்று உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தார்.  பல்வேறு மாநில அரசுகளின் வீரதீர சாகச விருதுகளையும் பச்சேந்திரி பால் பெற்றிருக்கிறார்.

மலையேற்றத்தை ஆண்களுக்கான சாகச விளையாட்டாக நினைத்த காலம் ஒன்று இருந்தது. அதை மாற்றிக்காட்டியவர் பச்சேந்திரி பால். அவர் வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பிறகு ஏராளமான பெண்கள் மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டார்கள். இன்றும் ஏராளமான பெண்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பச்சேந்திரி பால்தான் வழிகாட்டி.

தற்போது 64 வயதாகும் பச்சேந்திரி பால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கும் பணியை விடாமல் செய்துவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
12/8/2018, இந்து தமிழ்

03/09/2018

அண்ணனுக்கு ஜே விமர்சனம்

கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழும் நாயகன், சூது நிறைந்த அரசியல்வாதிகளால் அரசியல் அவதாரம் எடுப்பதை  நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘அண்ணனுக்கு ஜே’.
 

முல்லை நகர் என்ற கிராமத்தில் மயில்சாமி கள் இறக்கி வேலை செய்யும் பணிக்கு உதவியாக இருக்கிறார் அவரது மகனான தினேஷ். அதே ஊரில் அடாவடி அரசியல்வாதியாக இருக்கிறார் தினா. ஒரே கட்சியாக இருந்தாலும் அவருக்கும் மாவட்ட செயலாளர் ராதாரவிக்கும் ஆகாது. தினா அந்த ஊரில் மதுபான கடை ஒன்றை ஏலத்துக்கு எடுக்கிறார். அதற்கு மயில்சாமியின் கள் இறக்கும் தொழில் இடைஞ்சலாக இருக்கிறது. போலீஸ் மூலம் மயில்சாமிக்கு தொந்தரவுக் கொடுக்கிறார் தினா.
 

தன் தந்தைக்கும் அரசியல் செல்வாக்கு இருந்தால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தன் தந்தையை அரசியல்வாதியாக்க ராதாரவியின் உதவியை நாடுகிறார் தினேஷ். மயில்சாமியை அரசியல்வாதியாக்க உதவுவதாகக் கூறி, தினாவை கொலை செய்ய தினேஷை கொம்பு சீவி விடுகிறார் ராதாரவி. பயந்த சுபாவம் உள்ள தினேஷ், தினாவை கொலை செய்ய ஒத்திகைப் பார்க்கிறார். அன்றைய இரவில் தினேஷ் கொல்வதற்கு முன்பே சாலையில் குற்றுயிரும் கொலையுருமாகக் கிடக்கிறார் தினா. தினேஷ்தான் தீனாவை கொல்ல முயற்சித்தார் என்று ஊரே பேசுகிறது. போலீஸில் மாட்டிக்கொள்ளும்  தினேஷைக் காப்பாற்றமால் அரசியல்வாதி ராதாரவியும் நழுவிவிடுகிறார். ஜாமினில் வெளியேவரும் தினேஷ் என்ன செய்தார், அவர் எப்படி அரசியல் அவதாரம் எடுத்தார் என அடுத்த நகர்வுகளின் தொகுப்புதான் படத்தின் மீதிக் கதை.
 

இயக்குநர் வெற்றி மாறனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், உள்ளூர் அரசியலிலும் அரசியல்வாதிகளிடமும் நிறைந்திருக்கும் சூது, வாதுகளைப் பேசுகிறது. ஊரில் நடக்கும் சாவில் தொடங்கி, போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதுவரை எல்லாவற்றிலும் உள்ளூர் அரசியல்வாதிகள் செய்யும் அரசியலையும் அவர்களிடம் நிறைந்திருக்கும் ஈகோவையும் அதிகம் மிகைப்படுத்தாமல் அறிமுக இயக்குநர் ராஜ்குமார் வெளிபடுத்தியிருப்பதைப் பாராட்டலாம். உள்ளூர் சாதி அரசியல் என்ற அஸ்திரத்தை கையில் எடுக்காமல், அரசியலில் நீக்கமற நிறைந்திருக்கும்  ரவுடியிசத்தை முன்வைத்து அதில் நகைச்சுவையையும் கலந்து திரைக்கதை அமைத்திருப்பது படத்துக்கு பலம்.
 

 படத்தின் ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது. முதல் பாகம் முழுவதும் குடியும் நண்பர்களுமாகத் திரியும் தினேஷ், இரண்டாம் பாகத்தில்தான் அரசியல் அவதாரம் எடுக்கிறார். ஆனால், அவர் அரசியல்வாதி அவதாரம் எடுக்கச் சொல்லப்படும் காரணங்கள் வழக்கமான அரைத்த மாவு. முதலில் யார் சவுண்டு விடுகிறானோ அவனே வீரன் என்று சிறையில் கற்கும் பாடத்தை வைத்து, ஒரு சண்டைக் காட்சியில் சவுண்டு விட்டபடியே ரவுடிகளை தினேஷ் விரட்டுவது ரசிக்க வைக்கிறது.
 

ஆனால், ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்ய முயற்சித்துவிட்டு சிறைக்கு சென்றுவந்தவுடனே, இன்னொரு அரசியல் கட்சியில் தினேஷூக்குப் பதவி கிடைப்பதாகக் காட்டுவது கற்பனைக்கு எட்டாதக் காட்சிதான். பொதுக்கூட்டத்தில் தாங்களாகவே கரண்ட்டை நிறுத்திவிட்டு  எதிர்கட்சியைத் திட்டி விமர்சிப்பது, பணத்தை அதிகம் செலவு செய்பவருக்கே தலைவரின் கடைக்கண் பார்வை கிடைக்கும் வரையிலான அனைத்து காட்சிகளிலும் சமகால அரசியலை இயக்குநர் நையாண்டி செய்திருக்கிறார். தினா ஏன் குற்றுயிராகக் கிடந்தார் என்று சொல்லப்படும் காரணம் அபத்தம்.
 

மட்ட சேகர் பாத்திரத்தில் தினேஷ் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நாயகி மகிமாவை சீண்டுவது, தந்தைக்காக உருகுவது, அரசியல்வாதியால் ஏமாறும்போது உடைவது எனக் காட்சிகளில் கைத்தட்டல்களை அள்ளுகிறார். டியூட்டோரியலில் படிப்பவராக வருகிறார் நாயகி மகிமா. தினேஷை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். பேண்டு வாத்தியக் குழுவில் அவர் வேலை செய்வது படத்துக்கு எந்த வகையிலும் பொருந்தவில்லை.
 

வெள்ளையும் சுளையுமாக வரும் ராதாரவி அலட்டல் இல்லாத அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். பல காட்சிகள் அவரது முந்தைய படங்களின் சாயல்களைக் கொண்டிருக்கின்றன. காமெடியிலிருந்து விலகி குணச்சித்திரப் பாத்திரத்துக்குத் தாவியிருக்கிறார் மயில்சாமி.  மகனுக்காக உருகுவது, மகன் அரசியல்வாதியாகும்போது பயப்படுவது என மயில்சாமி தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். தினாவின் அடாவடி அரசியலுக்கு அவரது உடல்மொழி கச்சிதம்.
 

அர்ரோல் கொரெல்லின் பின்னணி இசை படத்துக்கு பலம். ஆனால், பாடல்கள் ஒட்டவில்லை. விறுவிறுப்பான படத்தின் காட்சிகளுக்கு விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பும் உதவுகிறது.
 

உள்ளூர் அரசியல்வாதிகளை பல விதங்களில் தோலுரித்துக் காட்டிய விதத்தில் இந்த ‘அண்ணனுக்கு’ தாராளமாக ‘ஜே’ போடலாம்.

மதிப்பெண்: 2.5 / 5