![]() |
மைசூரு அரண்மனை |
மைசூருவையும் தசராவையும் பிரித்துப் பார்க்கவோ பேசவோ முடியாது. தசரா கொண்டாட்டத்துக்குப் பெயர்போன நகரங்களில் ஒன்று, மைசூரு. விஜயதசமி தினத்தன்று ‘ஜம்போ சவாரி’ எனும் யானைகள் அணிவகுப்பும் இங்கே புகழ்பெற்றது.
எங்கே திரும்பினாலும் விளக்கொளி வைபோகம், வாணவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் என மைசூரு நகரமே தசரா கொண்டாட்டத்தின்போது விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா திருவிழாவுக்கு அடுத்த நாள் மைசூருவுக்குச் சுற்றுலா செல்வதைப் போல சிறந்த வாய்ப்பு வேறொன்றில்லை.
புராண நம்பிக்கைகளின்படி தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷனை சம்ஹாரம் செய்த இடம் மைசூரு. மகிஷனை நினைவுகூரும் வகையில் மகிஷபுரம், மகிஷா மண்டலம், மகிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு, இன்று மைசூரு என்ற பெயரே நிலைப்பெற்றுவிட்டது.
கன்னட தாஜ்மகால்
மைசூருவை அடையும்போதே, அது இயற்கை ஆட்சி செய்யும் பகுதி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பழமை மாறாமல், இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் அந்த நகரை அமைத்திருக்கிறார்கள். பெரிய பெரிய மரங்களும் பசுமைப் போர்வைபோல் போர்த்திய பகுதிகளும் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கின்றன.
மைசூரு என்றவுடனே ‘அம்பா விலாஸ்’ அரண்மனை என்றழைக்கப்படும் ‘மைசூரு அரண்மனை’தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். இந்தியாவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாகச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பது இந்த அரண்மனைதான். வெளியிலிருந்து பார்ப்பதற்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் அரண்மனைக்குள் செய்யப்பட்டிருக்கும் உள் அலங்கார வேலைப்பாடும் ‘ஆஹா அற்புதம்!’ ரகம். தஞ்சாவூர், மைசூர் பாணி ஓவியங்கள் அரண்மனையின் உள் அலங்காரத்துக்குத் தனி அழகு சேர்க்கின்றன.
இந்தோ சாரசெனிக் கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் வகையிலும் ஹொய்சாள, கிரேக்கக் கட்டிட வடிவமைப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை இது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனையைப் பெருமளவில் கிரானைட் கற்களைக் கொண்டே கட்டியிருக்கிறார்கள். கோபுரத்தின் மீது தங்கத் தகடுகள் ஜொலிக்கின்றன. 145 அடி உயரம் கொண்ட இந்த அரண்மனையில் திறந்தவெளி அரங்குகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் போன்றவை முதன்மையான அம்சங்கள். ஆயுத அறை, நூலகம், வேட்டை அறை, மன்னர் குடும்பத்தின் பிரத்யேக அறைகள், பீரங்கிகள் எனப் பிரம்மாண்டமாக இருக்கிறது அரண்மனை.
இங்கு மரத்தாலான யானை ஒன்றின் சிலையை 81 கிலோ தங்கத்தால் அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். காலங்காலமாக கர்நாடகப் பண்பாட்டில் யானைக்கு உள்ள முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பு இது. ‘கோம்பே தொட்டி’ வாயிலின் முன்புறத்தில் ஏழு பீரங்கிகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். தசரா திருவிழா தொடங்கும்போதும் முடியும்போதும் இந்தப் பீரங்கிகள் முழங்கி விழாவைக் கவுரப்படுத்தும் என்று வழிகாட்டி கூறினார். அதேபோல் தசரா திருவிழாவின்போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதும் வழக்கம். அதைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
இந்த அரண்மனையில் அரச குடும்ப உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச குடும்பத்தின் ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்தத் தடையும் இல்லாமல் அருகில் பார்த்து மகிழலாம்.
அம்பா விலாஸ் அரண்மனையின் வயது 104தான். 1897-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் காலத்தால் பிந்தைய அரண்மனைகளில் ஒன்று இது. அதற்கு முன்பு இந்த இடத்தில் இருந்த அரண்மனை தீ விபத்தில் அழிந்துவிட்டதால், இந்த அரண்மனையைக் கட்டியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனையைக் கட்ட, அப்போது ஆன செலவு 41 லட்சம் ரூபாய். தினமும் ஆயிரக்கணக்கானோர் அரண்மனையைப் பார்க்க வந்தாலும், தசரா திருவிழாவின்போது கட்டுக்கடங்காமல் கூட்டம் அதிகரித்துவிடும். அதை நிரூபிக்கும் வகையில் அரண்மனைக்குள் கூட்டம் முண்டியடித்துச் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
அடுத்து நாங்கள் சென்றதும் இன்னொரு அரண்மனைதான். அது ஜெகன்மோகன் அரண்மனை. மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனையைப் பார்க்காமல் திரும்புவதில்லை என்று வழிகாட்டி சொன்னதால், நாங்களும் அங்கே சென்றோம். மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்களால் 1861-ல் கட்டப்பட்டது இந்த அரண்மனை. பழைய அரண்மனை தீ விபத்தில் அழிந்த பின்னர், புதிய அரண்மனையைக் கட்டி முடிக்கும்வரையிலான இடைப்பட்ட காலத்தில் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள் அரச குடும்பத்தினர். இங்கு விஷ்ணுவின் தசாவதாரக் காட்சியும் சிற்ப வடிவமாகச் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக் கதவுகளும் மைசூர் மகாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்கள்.
இரண்டு அரண்மனைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு, வேறு ஏதாவது புதிய இடத்துக்குச் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால், மூன்றாவதாகச் சென்றதும் ஓர் அரண்மனைக்குத்தான். அதன் பெயர் லலித மகால். இது சாமுண்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1921-ம் ஆண்டு அப்போதைய இந்திய வைஸ்ராய்க்காக நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் மேனர் வீடுகள் பாணியையும் இத்தாலியன் பலாஸோ கட்டிட முறையையும் கலந்து இதைக் கட்டியிருக்கிறார்கள். இந்த அரண்மனையில்தான் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ படம் எடுக்கப்பட்டதாக வழிகாட்டி சொன்னார். தற்போது அரசு சுற்றுலாத் துறையின் கீழ் ஐந்து நட்சத்திர ஹோட்டலாக இந்த அரண்மனை மாற்றப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லாவிட்டாலும், வெளியே இருந்து பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருக்கிறது. முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மனையின் சிறப்பு. மைசூரு நகரத்தை 'அரண்மனைகளின் நகரம்' என்று போற்றும் அளவுக்குச் சிறியதும் பெரியதுமாக ஏழு அரண்மனைகள் இங்கே இருக்கின்றன. நாங்கள் பார்த்த அரண்மனைகள் போக சித்தரஞ்சன் அரண்மனை, ஜெயலட்சுமி மகால் அரண்மனை, ராஜேந்திர விலாஸ் அரண்மனை, செலுவண்பா அரண்மனை போன்றவையும் மைசூருவில் உள்ளன.
சாமுண்டி மலை
அரண்மனை தரிசனங்களுக்குப் பிறகு மாலையில் சாமுண்டி மலையில்
உள்ள சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்கப் புறப்பட்டோம். மைசூரு நகரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாமுண்டீஸ்வரி மலை. “1339-ல் உடையார்கள் மைசூருவை ஆட்சி செய்த காலத்தில் சாமுண்டி மலையில் சிறிய அளவில் கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். 1537-ம் ஆண்டில் நான்காம் சாம்ராஜ உடையார் மைசூருவை ஆண்டபோது ஒரு சம்பவம் நடந்ததாம். சாமுண்டீஸ்வரி தாயைத் தரிசித்துவிட்டுத் திரும்பும்போது இடி மழையில் சிக்கிக்கொண்டார்கள். அப்போது மன்னரையும் பாதுகாவலர்களையும் காப்பாற்றிய தாய் சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்க, மைசூருவின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி கோயிலை அவர் விரிவுபடுத்திக் கட்டினார்” என்று அந்த மலையை நோக்கிப் பயணிக்கும்போதே வழிகாட்டி தகவலைப் பகிர்ந்துகொண்டார். மலையை அடைந்ததுமே அது உண்மை என்று புரிந்தது. 3,489 அடி உயரத்திலிருக்கும் மலையிலிருந்து எந்தத் திசையில் பார்த்தாலும் மைசூரு நகரம் அழகாகத் தெரிகிறது. ஆனால், இப்போதுள்ள கோயில் வடிவம் 1827-ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரால் விரிவாக்கப்பட்ட ஒன்று.
![]() |
மகிஷாசுரன் சிலை |
கோயில் சன்னிதியில் உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலாகக் காட்சித் தருகிறார். கோயிலின் முற்றத்தில் கையில் பாம்புடன் கூடிய மகிஷாசுரன் சிலை சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. மைசூருவின் அடையாளங்களுள் ஒன்றான இந்தச் சிலைக்கு முன்னால் நின்று ஒளிப்படங்களும் செல்ஃபியும் எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.
இந்த மலையில் உள்ள பிரம்மாண்ட நந்தியும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய நந்தி இது. முதல் பெரிய நந்தி ஆந்திராவின் லேபாக்ஷியிலும், மூன்றாவது பெரிய நந்தி தஞ்சைப் பெரிய கோயிலிலும் உள்ளன. பொதுவாக மைசூருவைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் முதலில் சாமுண்டீஸ்வரி தேவியைத் தரிசித்த பின்புதான் மற்ற சுற்றுலாத் தலங்களுக்கே செல்வார்கள். ஆனால், தசராவுக்கு அடுத்த நாள் சென்றதால், மலையிலேயே ஏற முடியாத அளவுக்குப் போக்குவரத்து நெரிசல். அதனால், அரண்மனைகளைப் பார்த்த பிறகு மாலையில்தான் சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்க முடிந்தது.
![]() |
இசை நீரூற்று |
நந்தகுமாரன் இல்லாத பிருந்தாவனம்
மயக்கும் மாலையை மேலும் அழகாக்க பிருந்தாவன் பூங்காவில் மையம் கொண்டோம். கிருஷ்ணராஜ சாகர் சாலை வழியாகச் செல்லும்போதே தொலைவிலேயே அணை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. காவிரிப் பிரச்சினை எழும்போதெல்லாம் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர் என்பதால், அந்தப் பகுதியை அடையும்போதே எங்கள் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் காவிரியை மையமிட்ட அரசியலைப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
உண்மையில் பிருந்தாவன் பூங்கா கொள்ளை அழகு! கிருஷ்ணராஜ சாகர் அணையின் இடதுபுறம் அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவில் திரும்பிய பக்கமெல்லாம் அழகழகான நீருற்றுகள், பசுமையான புல்வெளி, மரங்கள் என எங்கே திரும்பினாலும் ரம்மியமான சூழல். இரவில் அணை வெவ்வேறு வண்ணங்களில் ஜொலிக்கும்படி விளக்கொளி வீச ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இசைக்கு ஏற்றபடி வண்ண விளக்குகள் ஒளியைப் பொழிந்து நடனமாடும், நீரூற்றுகளின் நடனக் காட்சிகளை மெய்மறந்து ரசித்தோம்.
அடுத்த நாள் காலை செல்லும் வழியில் ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்துக்குச் சென்றோம். எங்கே பார்த்தாலும் பறவைகள். ஆயிரக்கணக்கான
பறவைகளின் விதவிதமான ஒலி காதை நிறைத்தது. பறவை சரணாலயத்திலிருந்து
புறப்பட்ட பிறகும் பறவைகளின் அழைப்பொலி காதுகளில் நீண்ட நேரம்
ஒலித்துக்கொண்டேயிருந்தது.
ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை
ரங்கன்திட்டிலிருந்து அடுத்த 20 நிமிடங்களில் ஸ்ரீரங்கப்பட்டணத்தைச் சென்றடைந்தோம். திப்பு சுல்தானின் கோட்டை உள்ள இடம். அங்கே சென்றவுடனேயே, ‘ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கியவர் திப்பு. புலிகளை மிகவும் நேசித்தவர். தன் கொடியில்கூடப் புலிச் சின்னத்தைப் பொறித்தவர்’ என்று அவரைப் பற்றிப் படித்த சங்கதிகள் மனதுக்குள் ஓடின. ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குள் நுழையும்போதே பெரிய மதில் சுவர் வரவேற்கிறது. அகழியைத் தாண்டினால் திப்புவின் கோட்டை மதில் சுவர் இருக்கிறது. ஆனால், சிதிலமடைந்து காணப்படுகிறது. அதைத் தாண்டி நுழையும் பாதையை ‘மைசூர் கேட்’ என்று அழைக்கிறார்கள். அந்த வாயிலைத் தாண்டி சென்றால் ரங்கநாதர் கோயில் கோபுரம் வரவேற்கிறது.
![]() |
ரங்கநாதர் கோயில் |
வியப்பான ஒற்றுமை
“ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஒரு தீவு என்றே சொல்லலாம். நான்கு புறங்களிலும் காவிரி சூழ்ந்த பகுதி இது. மேற்கிலிருந்து ஓடி வரும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு முன் இரண்டாகப் பிரிகிறது. ஒரு புறம் காவிரியாகவும் மறுபுறம் வாகினி நதியாகவும் ஓடுகிறது. பிறகு மீண்டும் ஒன்றாகிக் காவிரியாகப் பாய்கிறது” என்று
புவியியல் பாடம் எடுத்தார் வழிகாட்டி. திருச்சிக்காரனான எனக்கு திருச்சி
ஸ்ரீரங்கம் நினைவில் ஆடியது. ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் போலவே ஸ்ரீரங்கமும்
தீவுதான். ஸ்ரீரங்கத்துக்கு முன்பாகக் காவிரி இரண்டாகப் பிரிந்து ஒருபுறம் காவிரியாகவும் மற்றொருபுறம் கொள்ளிடமாகவும் சென்று கல்லணையில் ஒன்றாகிக் கலந்துவிடுவது நினைவுக்கு வந்தது. ஒரே பெயரைக் கொண்ட இந்த இரண்டு பகுதிகளுக்கும் எப்படி இப்படி ஒரு ஒற்றுமை என்று மனதில் வியப்பு விரிந்தது.
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க மன்னரால் கட்டப்பட்டது. பின்னர், ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோலவே இங்கேயும் பாற்கடலில் நாகத்தின் மேல் ரங்கநாதர் பள்ளிகொள்ளும் காட்சியைக் காணலாம்.
திப்பு அரண்மனை
ரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது திப்பு சுல்தானின் கோட்டை. இது மைசூரில் பார்த்ததைப் போன்று பிரம்மாண்டமானது அல்ல. வெறும் தரையும் ஆங்காங்கே தலைகாட்டும் குட்டிச் சுவர்களும்தான் திப்புவின் கோட்டையாக எஞ்சியிருக்கின்றன. நான்காம் ஆங்கிலோ - மைசூர் போரின்போதே ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு திப்புவின் கோட்டை இரையாகிவிட்டது. அத்துடன் இது மைசூர் அரண்மனைகளைவிட ஒரு நூற்றாண்டு பழமையானதும்கூட. வீரமும் வரலாறும் சேர்ந்த அந்தப் பகுதியைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். சற்றுத் தள்ளி ஒரு மேட்டுப் பகுதி. இங்கே கர்னல் பெய்லிஸ் டன்ஜன் என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை தென்பட்டது.
![]() |
திப்பு சிறை |
நுட்பமான சிறை
மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே தெரிகிறது சிறைக்கூடம். தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவரையொட்டி காவிரி ஓடுகிறது. தரை மட்டத்துக்குக் கீழே சிறைச்சாலை என நுட்பமாகக் கட்டப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்கினால், பூமிக்கு 30 அடி ஆழத்தில்தான் சிறைக் கூடம் தெரிகிறது.
உள்ளே நுழைந்தால் இன்னும் ஆச்சரியம். சிறை இரண்டு வரிசையாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய பெரிய தூண்கள் உள்ளன. தூண்களுக்கும் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவரில் வரிசையாய்ச் சிறுசிறு கற்கள். ஓர் அடி நீளத்துக்கு ஒரே அளவாகச் சம இடைவெளியில் இந்தச் சிறுகற்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையே நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்துக்கு நீட்டச் செய்து இந்தச் சிறு கற்களுடன் கைகளைப் பிணைத்துக் கட்டிவிடுவார்களாம். சுவரில் உள்ள ஒரு துவாரத்தைத் திறந்துவிட்டால், காவிரி நீர் இந்தச் சிறையை மெல்ல நிரப்பிவிடும். மரண பீதியுடன் கைதிகள் ஜலசமாதி ஆகிவிடுவார்களாம்.
அது சரி, இந்தச் சிறைக்கு ஆங்கிலேய அதிகாரியின் பெயர் எப்படி வந்தது? நான்காம் ஆங்கிலோ-மைசூர் போருக்கு முன்பாக திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டார் ஆங்கிலேய அதிகாரியான கர்னல் பெய்லிஸ். அதனால், இந்தச் சிறைக்கு அவர் பெயரே நிலைத்துவிட்டது.
தண்ணீர் வாயில்
தண்ணீர் வாயில் |
அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தண்ணீர் வாயில் (Water Gate) தென்பட்டது. இதைத் ‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’ என்று அழைப்பதுண்டு என்று வழிகாட்டி சொன்னார். திப்பு சுல்தான் நாள்தோறும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். மூன்றுமுறை ஆங்கிலோ- மைசூர் போர் நடந்தும் வீழ்த்த முடியாத திப்புவை, மீர் சாதிக் எனும் திப்புவின் படைத் தளபதி மூலமே வீழ்த்தியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.
ஒரு நாள் வழக்கம்போல இங்கே நீராட வந்த திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர் படை திடுமென நுழைந்து எதிர்பாராமல் தொடுத்த தாக்குதலை முறியடிக்க முடியாமல் கொல்லப்பட்டார் திப்பு. ஒரு வீரனை வேறெப்படி வீழ்த்த முடியும்?
கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருக்கும். 1799 மே 4 அன்று திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அவருடைய நினைவிடத்தைக் காட்டினார்கள். ஒரு மாவீரரைத் துரோகம் வீழ்த்திய கதையை மனதில் சுமந்தபடி அங்கிருந்து மவுனமாகப் புறப்பட்டோம்.
![]() |
திப்பு இறந்த இடம் |
சற்றுத் தள்ளி திப்பு சுல்தான் கட்டிய ஜும்மா மசூதியைப் பார்த்தோம். இந்த மசூதி இருந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் கோயில் இருந்ததாகவும், திப்பு ஆட்சிக்கு வந்த பிறகே ஆஞ்சநேயர் கோயில் போய், மசூதி வந்ததாகவும் சொன்னார் வழிகாட்டி. கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயர் சில வரலாற்றுப் புத்தகங்களில் திப்புவுக்கு உண்டு. ஆனால், இந்த மசூதிக்கு நேர் எதிரே ரங்கநாதர் கோயிலும் உள்ளது. கோயில்களை இடித்தவர் திப்பு என்றால், ரங்கநாதர் கோயிலை மட்டும் அவர் எப்படி விட்டுவைத்தார் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் மானியமும் வழங்கியவர் திப்பு. இதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது.
கோடை மாளிகை
![]() |
கோடை மாளிகை |
திப்புவின் வரலாறு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிபடியே அங்கிருந்து வெளியே வந்தோம். 15 நிமிட பயணத்துக்குப் பின் திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றோம். தாஜ்மஹால் பாணியில் நீண்ட பாதை. பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்’ என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது. சுவர் முழுவதும் திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. திப்பு காலத்து வாள்கள், துப்பாக்கிகள், அவர் பயன்படுத்திய உடைகள், பதக்கங்கள் எனப் பல அரிய பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பார்த்த பிறகு, அங்கிருந்து சில நிமிடப் பயணத்தில் கும்பஸ் என்ற இடத்தில் திப்பு சுல்தானின் சமாதிக்குச் சென்றோம்.
மறைந்த தன் பெற்றோருக்காக திப்பு சுல்தான் கட்டியது இது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவருடைய சடலத்தை ஆங்கிலேயர்கள் இங்கே அடக்கம் செய்தார்கள். திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாய் பாத்திமா பேகத்தின் சமாதிகளுக்கு அருகிலேயே திப்புவும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்திலும் திப்பு அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வெளியேயும் எங்கே பார்த்தாலும் சமாதிகள்தாம். ஆனால், கண்ணைக் கவரும் நுணுக்கமான கட்டிட வேலைப்பாடுகளும் முகப்பில் உள்ள பெரிய தோட்டமும் இந்த இடத்தை அழகாக்குகின்றன.
![]() |
கும்பஸ் |
உயிரோட்டமான நகரமைப்பும் சிறப்பான வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மைசூரு நகரத்தை கர்நாடகத்தின் ‘பண்பாட்டு தலைநகரம்’ என்றழைப்பது மிகவும் பொருத்தமானது. அதே நேரம் இந்திய விடுதலைப் போரில் வகித்த பங்கு ஸ்ரீரங்கப்பட்டணத்தைத் தனித்துக் காட்டுகிறது. அருகருகே இருந்தாலும் இரண்டு ஊர்களும் வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு நகரங்களையும் அந்த மாநில அரசு சிறப்பாகப் பராமரித்துவருகிறது. மைசூருவையும் ஸ்ரீரங்கப்பட்டணத்தையும் முழுமையாகப் பார்த்து ரசித்தது, மனதை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருந்தது.
- இந்து தமிழ் சித்திரை மலர், 2018
No comments:
Post a Comment