25/08/2018

மீண்டும் தர்மயுத்தமா?

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்காகப் பணி செய்யவும் தயார் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியின் வெளிப்பாடா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, “துணை முதலமைச்சர் பதவியைவிட கட்சிதான் முக்கியம். கட்சி பலமாக இருந்தால் எப்போது வேண்டுமானால் ஆட்சிக்கு வரலாம். கட்சிப் பணிக்காக துணை முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்யவும் நான் தயார்” என்று பேசினார். அவரது பேச்சை முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் உறுதிசெய்திருந்தார்.

செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு, ‘கட்சிக்காக துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறீர்களா?’ என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,  “நீங்களாகவே எதுவும் ஊகம் செய்துகொள்ளாதீர்கள்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு சென்றார். ஆனால், இந்தப் பேச்சின் பின்னணியில் அவருடைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கட்சியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிகாரம் என்ற அடிப்படையில்தான் பிரிந்து கிடந்த அதிமுக அணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிணைந்தன. ஆனால், இரு அணிகளும் சேர்ந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்குக் கிடைக்கும் முக்கியத்தும் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொஞ்சமும் கிடைக்கவில்லை. கட்சியில் பெயரளவுக்குக்கூட பன்னீசெல்வத்துக்கு அதிகாரம் இருப்பதுபோலத் தெரியவில்லை. தன்னுடைய ஆதரவாளார்கள் பதவியைக்கூட தர முடியாத நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் இருக்கிறார்.

இதை அடிக்கடி சுட்டிக்காட்டி ஓ.பன்னீசெல்வத்தின் ஆதரவாளர்கள் ஆதங்கப்படுவது சங்கடப்படுவதும் வாடிக்கையான நிகழ்வுகளாகிவிட்டன.
அதேசமயம் ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வத்தைவிட ஒரு படி மேலேயே இருக்கிறார். ஆட்சியில் மட்டுமல்லாமல், கட்சியிலும் தனது பிடியை இறுக்கிவருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சி நிர்வாகிகளும்கூட எடப்பாடி பழனிச்சாமிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு எந்த ஒரு விஷயத்தையும் சுயமாகச் செய்ய முடியாத நிலையிலேயே பன்னீர்செல்வம் இருக்கிறார். மோடி கேட்டுகொண்டதாலேயே அணிகளை இணைக்க ஒத்துக்கொண்டேன் என்று ஒருமுறை பேட்டியில் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

அந்த அடிப்படையில்தான் அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்று தனது மனக்குறைகளைக் கொட்ட பன்னீர்செல்வம் விரும்பினர். ஆனால், மோடியை மட்டுமல்ல, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் சந்திக்க முடியாமல் திரும்பினார் பன்னீர்செல்வம்.
என்னதான் எடப்பாடி பழனிச்சாமியோடு ஒத்துபோவதைப்போல பன்னீர்செல்வம் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் புகைச்சல் இல்லாமல் இல்லை. இதை வெளிப்படுத்தும் விதமாகவே செயற்குழுவில் பன்னீர்செல்வம் பேசியிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று பன்னீர்செல்வம் பேசியிருப்பதன் மூலம் அதிகாரம் இல்லாத  பதவி தேவையில்லை; அதிகாரத்துடன்கூடிய கட்சி பதவி மட்டும் இருந்தால் போதும் என்று எடப்பாடி தரப்புக்கு உணர்த்தியிருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு பொதுச் செயலாளர் பதவியை ஒழித்துவிட்டார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்று கட்சியின் அதிகாரம் மாறிவிட்டது. கட்சியை வழி நடத்த ‘வழிகாட்டுக் குழு’ அமைக்கப்படும் என்று சொல்லி ஓராண்டு முடிந்துவிட்டது. அப்படி ஒரு குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த வழிகாட்டுக் குழுவை அமைக்கச் சொல்லி பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

இதற்கிடையே கட்சியைவிட்டு நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யான கே.சி.
பழனிச்சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். பொதுச் செயலாளர் பதவியை ஒழிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அந்தப் பதவியின் மூலம் பொதுச்செயளாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வழக்கில் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு வேளை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால், அதிகாரமிக்க அந்தப் பதவியைக் கைப்பற்ற பன்னீர்செலவம் இப்போதே முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பன்னீர்செல்வத்தின் செயற்குழு பேச்சைத் தொடர்ந்து ட்விட்டரில் கே.சி. பழனிச்சாமி ஒரு கருத்தைப் பதிவிட்டார்.  ‘பன்னீர்செல்வம் பொதுச்செயாளர் பதவியை எதிர்பார்க்கிறார். அதனால்தான் கட்சி பதவியே போதும் என்று பன்னீர்செல்வம் நினைக்கிறார். அதனால்தான் அப்படி பேசியிருக்கிறார்’ என்று  கேசி பழனிச்சாமி சொல்லியிருந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்  தேர்தல் வெற்றியை இணைத்துக்கொண்டு பேசியிருப்பதன் மூலம், கட்சிக்காகத்தான் இப்படி பேசியதைப்போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் பன்னீர்செல்வம். அவர் பொடி வைத்து பேசிய பேச்சுக்கு நிச்சயம் காரணம் இல்லாமல் இல்லை என்பது மட்டுமே தற்போது  நிதர்சனம். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தர்மயுத்தம் பகுதி இரண்டை பன்னீர்செலவம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இந்தப் பேச்சு என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு உலாவுகிறது.

No comments:

Post a Comment