உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இன்னும் இன்னும் ஒரு நாள்தான் இடையே உள்ளது. உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பற்றி எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்தத் தருணத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாறை அறிவோமா?
1863-ம் ஆண்டு கால்பந்து சங்கம் தொடங்கியதிலிருந்துதான் சர்வதேச கால்பந்து விளையாட்டு போட்டிகளின் வரலாறும் தொடங்குகிறது. இந்தச் சங்கமே கால்பந்து விளையாட்டுக்கான விதிகளை உருவாக்கியது. இந்த அமைப்பு தோன்றிய பிறகு 9 ஆண்டுகள் கழித்துதான் முதல் சர்வதேச கால்பந்து போட்டி 1872-ம் ஆண்டில் நடைபெற்றது. கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் மோதின. தொடக்கக் காலத்தில் இங்கிலாந்து உள்பட பிற ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அமைப்புகள் மூலம் தொடர்ந்து கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றுவந்தன. 1900, 1904 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்கூட பதக்கம் வழங்கப்படாத பிரிவுகளில் கால்பந்து விளையாட்டும் இடம்பெற்றிருந்தது.
இன்று உலகக் கோப்பையை முன்னின்று நடத்தும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு( ஃபிபா) அமைப்பு 1904-ம் ஆண்டில்தான் முறைப்படி உருவானது. அந்தக் காலகட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்காத கால்பந்து அமைப்புகளுக்காகக் கால்பந்து தொடரை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு 1914-ம் ஆண்டில் அப்படியான ஒரு தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரை ‘உலகக் கால்பந்து’ போட்டி என ஃபிபா அங்கீகரித்தது. இதனைதொடர்ந்து ஒலிம்பிக் போட்டியைத் தாண்டி சர்வதேச கால்பந்து தொடரை நடத்த அன்றைய ஃபிபா தலைவர் ஜூல்ஸ் ரிமெட் முயற்சி செய்தார். பல கட்ட ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு, அன்று சாம்பியன் அணியாக விளங்கிய உருகுவேயில் முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த ஃபிபா முடிவு செய்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு உலக விளையாட்டு ரசிகர்களை ஓரிடத்தில் கட்டிப் போடும் போட்டியாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி உருவெடுத்திருக்கிறது.
முதல் உலகக் கோப்பைப் போட்டியில் 13 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இறுதியாட்டத்தில் உருகுவேவும் அர்ஜெண்டினாவும் மோதின. 4-2 என்ற கோல் கணக்கில் வென்று முதல் உலகக் கோப்பையை வசப்படுத்தியது உருகுவே. 1934-ல் இத்தாலியிலும், 1938-ல் பிரான்சிலும் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்றன. அதன்பின்னர் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், 12 ஆண்டுகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படவேயில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் 1950-ம் ஆண்டில் பிரேசிலில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. பல நாட்டு அணிகள் பங்கேற்பது பற்றிய விதிமுறை அப்போதுதான் அமல்படுத்தப்பட்டது.
![]() |
1950 உலகக் கோப்பை |
இதுவரை நடைபெற்ற 20 உலகக் கோப்பைகளில் அதிகபட்சமாக கோப்பையை வென்ற நாடு பிரேசில்தான். 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருக்கிறது பிரேசில் அணி. உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய மற்ற இரு அணிகள் இத்தாலி மற்றும் ஜெர்மனி. இதில் இத்தாலி அணி 1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றது. ஜெர்மனி அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. அர்ஜெண்டினா (1978, 1986), உருகுவே (1930, 1950) ஆகிய நாடுகள் இருமுறை கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து (1966), பிரான்ஸ் (1998), ஸ்பெயின் (2010) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றிருக்கின்றன. இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதற்காக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்!
உலகக் கோப்பைத் துளிகள்
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அதிக முறை தகுதி பெற்ற அணி ஜெர்மனி. இந்த அணி 8 முறை முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 4 முறை கோப்பையை வென்றிருக்கிறது.
அடுத்ததாக பிரேசில் அணி 7 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இத்தாலி 6 முறை, அர்ஜெண்டினா 5 முறை, நெதர்லாந்து 3 முறை, உருகுவே, பிரான்ஸ், செக்கோஸ்லோவேகியா, ஹங்கேரி தலா 2 முறை, ஸ்வீடன், ஸ்பெயின் தலா 1 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.
நெதர்லாந்து, செக்கோஸ்லேவேகியா, ஹங்கேரி, ஸ்வீடன் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிவரை முன்னேறி கோப்பையை வெல்லாமல் வெறுங்கையுடன் திரும்பிய அணிகள்.
உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), ஜெர்மனி (1974), அர்ஜெண்டினா (1978) ஆகிய அணிகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றுள்ளன.
அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களுக்கு தங்கக் காலணி வழங்கும் முறை 1930-ம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்படுகிறது.
நாகரிகமாக விளையாடும் அணிகளுக்கு வழங்கப்படும் சிறந்த அணிக்கான விருது 1978-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டனியோ கார்பஜல், ஜெர்மனியைச் சேர்ந்த லூதர் மாத்யூஸ் ஆகியோர் தலா 5 முறை உலகக் கோப்பையில் விளையாடியிருக்கின்றனர்.
உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் (Miroslav Klose). இவர் 4 உலகக் கோப்பையில் 24 ஆட்டங்களில் பங்கேற்று 16 கோல்களை அடித்திருக்கிறார்.
தங்கக் கோப்பை
![]() |
ஜூல்ஸ் ரிமெட் கோப்பை |
தொடரும் சோகம்
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானா நாடுகள் கோப்பையை வென்றதே இல்லை. 2002-ம் ஆண்டில் தென் கொரியா மற்றும் ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் கொரியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதேபோல ஐரோப்பா முதல் ஆசியா வரை நீண்டிருக்கும் ரஷ்யா 1966-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ரஷ்யா அரையிறுதி வரை முன்னேறியது. இந்த இரு நாடுகள் தவிர்த்து வேறு எந்த நாடும் அரையிறுதிவரைகூட முன்னேறியதில்லை. ஆப்பிரிக்கா, ஓசியானா நாடுகளுக்கும் இதே கதிதான். இந்த முறையாவது சாதிப்பார்களா?
- தி இந்து ,12/06/2018
No comments:
Post a Comment