16/06/2018

ஓர் உலகக் கோப்பையின் பயணம்!



உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இன்னும் இன்னும் ஒரு நாள்தான் இடையே உள்ளது. உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பற்றி எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்தத் தருணத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாறை அறிவோமா?

1863-ம் ஆண்டு கால்பந்து சங்கம் தொடங்கியதிலிருந்துதான் சர்வதேச கால்பந்து விளையாட்டு போட்டிகளின் வரலாறும் தொடங்குகிறது. இந்தச் சங்கமே கால்பந்து விளையாட்டுக்கான விதிகளை உருவாக்கியது. இந்த அமைப்பு தோன்றிய பிறகு 9 ஆண்டுகள் கழித்துதான் முதல் சர்வதேச கால்பந்து போட்டி 1872-ம் ஆண்டில் நடைபெற்றது. கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் மோதின. தொடக்கக் காலத்தில் இங்கிலாந்து உள்பட பிற ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அமைப்புகள் மூலம் தொடர்ந்து கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றுவந்தன.  1900, 1904 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்கூட பதக்கம் வழங்கப்படாத பிரிவுகளில் கால்பந்து விளையாட்டும் இடம்பெற்றிருந்தது.

இன்று உலகக் கோப்பையை முன்னின்று நடத்தும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு( ஃபிபா) அமைப்பு 1904-ம் ஆண்டில்தான் முறைப்படி உருவானது. அந்தக் காலகட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்காத கால்பந்து அமைப்புகளுக்காகக் கால்பந்து தொடரை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு 1914-ம் ஆண்டில் அப்படியான ஒரு தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரை ‘உலகக் கால்பந்து’ போட்டி என ஃபிபா அங்கீகரித்தது. இதனைதொடர்ந்து ஒலிம்பிக் போட்டியைத் தாண்டி சர்வதேச கால்பந்து தொடரை நடத்த அன்றைய ஃபிபா தலைவர் ஜூல்ஸ் ரிமெட் முயற்சி செய்தார். பல கட்ட ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு, அன்று சாம்பியன் அணியாக விளங்கிய உருகுவேயில் முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த ஃபிபா முடிவு செய்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு உலக விளையாட்டு ரசிகர்களை ஓரிடத்தில் கட்டிப் போடும் போட்டியாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி உருவெடுத்திருக்கிறது.

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் 13 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இறுதியாட்டத்தில் உருகுவேவும் அர்ஜெண்டினாவும் மோதின. 4-2 என்ற கோல் கணக்கில் வென்று முதல் உலகக் கோப்பையை வசப்படுத்தியது உருகுவே. 1934-ல் இத்தாலியிலும், 1938-ல் பிரான்சிலும் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்றன. அதன்பின்னர் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், 12 ஆண்டுகள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படவேயில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் 1950-ம் ஆண்டில் பிரேசிலில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. பல நாட்டு அணிகள் பங்கேற்பது பற்றிய விதிமுறை அப்போதுதான் அமல்படுத்தப்பட்டது.
1950 உலகக் கோப்பை

இதுவரை நடைபெற்ற 20 உலகக் கோப்பைகளில் அதிகபட்சமாக கோப்பையை வென்ற நாடு பிரேசில்தான். 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருக்கிறது பிரேசில் அணி. உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய மற்ற இரு அணிகள் இத்தாலி மற்றும் ஜெர்மனி. இதில் இத்தாலி அணி 1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றது. ஜெர்மனி அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. அர்ஜெண்டினா (1978, 1986), உருகுவே (1930, 1950) ஆகிய நாடுகள் இருமுறை கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து (1966), பிரான்ஸ் (1998), ஸ்பெயின் (2010) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றிருக்கின்றன. இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதற்காக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்!

உலகக் கோப்பைத் துளிகள்

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அதிக முறை தகுதி பெற்ற அணி  ஜெர்மனி. இந்த அணி 8 முறை முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 4 முறை கோப்பையை வென்றிருக்கிறது.

அடுத்ததாக பிரேசில் அணி 7 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இத்தாலி 6 முறை, அர்ஜெண்டினா 5 முறை, நெதர்லாந்து 3 முறை, உருகுவே, பிரான்ஸ், செக்கோஸ்லோவேகியா, ஹங்கேரி தலா 2 முறை, ஸ்வீடன், ஸ்பெயின் தலா 1 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.

நெதர்லாந்து, செக்கோஸ்லேவேகியா, ஹங்கேரி, ஸ்வீடன் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிவரை முன்னேறி கோப்பையை வெல்லாமல் வெறுங்கையுடன் திரும்பிய அணிகள்.

உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), ஜெர்மனி (1974), அர்ஜெண்டினா (1978) ஆகிய அணிகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றுள்ளன.

அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களுக்கு தங்கக் காலணி வழங்கும் முறை 1930-ம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்படுகிறது.

நாகரிகமாக விளையாடும் அணிகளுக்கு வழங்கப்படும் சிறந்த அணிக்கான விருது 1978-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டனியோ கார்பஜல், ஜெர்மனியைச் சேர்ந்த லூதர் மாத்யூஸ் ஆகியோர் தலா 5 முறை உலகக் கோப்பையில் விளையாடியிருக்கின்றனர்.

உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் (Miroslav Klose). இவர் 4 உலகக் கோப்பையில் 24 ஆட்டங்களில் பங்கேற்று 16 கோல்களை அடித்திருக்கிறார்.


தங்கக் கோப்பை

ஜூல்ஸ் ரிமெட் கோப்பை
உலகக் கோப்பையை மூன்று முறை கோப்பையை வெல்லும் நாட்டுக்கு நிரந்தரமாக கோப்பை வழங்குதை அப்போது வழக்கமாக வைத்திருந்தார்கள். இதன்படி 1970-ல் மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற பிரேசில் அணிக்கு ‘ஜூல்ஸ் ரிமெட் கோப்பை’ வழங்கப்பட்டுவிட்டது. இதன்பின் 1974-ல் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக இத்தாலி கலைஞர் சில்வியோ கஸ்ஸானிகா வடிவமைத்த கோப்பைதான் இப்போதைய கோப்பையின் தோற்றம். முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட இக்கோப்பை, 36 செ.மீ. உயரமும் 4.9 கிலோ எடையும் கொண்டது. 2038-ம் ஆண்டுவரை நடைபெறும் உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களை கோப்பையில் பொறிக்க முடியும். இக்கோப்பை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடமே இருக்கும். வெற்றி பெறும் அணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட பிரதிதான் வழங்கப்படுகிறது.

தொடரும் சோகம்

இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானா  நாடுகள் கோப்பையை வென்றதே இல்லை. 2002-ம் ஆண்டில் தென் கொரியா மற்றும் ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் கொரியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதேபோல ஐரோப்பா முதல் ஆசியா வரை நீண்டிருக்கும் ரஷ்யா 1966-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ரஷ்யா அரையிறுதி வரை முன்னேறியது. இந்த இரு நாடுகள் தவிர்த்து வேறு எந்த நாடும் அரையிறுதிவரைகூட முன்னேறியதில்லை. ஆப்பிரிக்கா, ஓசியானா நாடுகளுக்கும் இதே கதிதான். இந்த முறையாவது சாதிப்பார்களா?

 - தி இந்து ,12/06/2018







03/06/2018

தாண்டிப் பாயும் புலி!

நீளம் தாண்டுதலில் சாதிக்கும் அளவுக்கு இந்தியாவில் திறமை வாய்ந்த வீராங்கனைகள் யாருமில்லை என்ற காலம் ஒன்று இருந்தது. அந்த இருண்ட பக்கங்களுக்கு ஒளிகொடுத்தவர் கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ். உலக சாம்பியன்ஷிப், உலகத் தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். இதன் மூலம் இந்திய நீளம் தாண்டுதல் விளையாட்டை உலக அளவில் கவனம் பெறச் செய்தவரும் இவர்தான்.

உயரமே வரம்

படிப்பைத் தாண்டி வேறு எதையும் யோசிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர் மத்தியில் அஞ்சுவின் தந்தை கே.டி. மார்க்கோஸ் சற்று வித்தியாசமானவர். ‘விளையாட்டுதான் வாழ்க்கை’ என்று அஞ்சுவுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் விளையாட ஊக்குவித்தார். தொடக்கத்தில் ஏழு விளையாட்டுகளின் கலவையான ‘ஹெப்டத்லா’னில்தான் அஞ்சு ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நீளம் தாண்டுதல், தடை தாண்டும் விளையாட்டுகள் மீது அஞ்சுவுக்குக் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது உயரமும் ஒரு காரணம். உயரமாக இருப்பவர்கள் நீளம் தாண்டுதலில் சுலபமாகச் சாதிக்க முடியும். 185 செ.மீ. உயரம் இருந்த அஞ்சுவுக்கும் அந்த உயரம் சாதகமானது.

தொடர்ந்து நீளம் தாண்டுதலில் மாநில அளவில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருந்த அஞ்சு 1996-ல்தான் முதன்முதலாகத் தேசிய அளவிலான போட்டிகளில் காலடி வைத்தார். அப்போது டெல்லியில் ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதன்முறையாகப் பங்கேற்ற அஞ்சு, நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றார். அதுதான் அஞ்சுவின் பதக்க வேட்டைக்குப் பிள்ளையார்சுழி போட்டது. இதன் பிறகு மாநில அளவிலும் தேசிய அளவிலும் தொடர்ந்து சாதித்துவந்தவர், சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையை வசமாக்கினார்.

முதல் சர்வதேசப் பதக்கம்

2003-ல் பாரிஸில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவில் அஞ்சுவும் இடம் பெற்றிருந்தார். அதற்கு முன்புவரை உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் பெண்கள் யாரும் சாதித்ததில்லை. இந்த முறையும்கூட அப்படியொரு வாய்ப்பு இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. தகுதிச் சுற்றில் அஞ்சு களத்தில் இருந்தபோது ஆசியர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த வீராங்கனைகளே நிறைந்திருந்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய அஞ்சு, 6.59 மீட்டர் தாண்டி, பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். தகுதிச் சுற்றில் 6.59 மீட்டர் நீளம் தாண்டியிருந்த நிலையில், இறுதிச் சுற்றில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ரஷ்யாவின் கால்கினாவுக்கும் அஞ்சுவுக்கும் 0.04 மீட்டர்தான் வித்தியாசம். என்றாலும் அஞ்சு வெண்கலப் பதக்கம் வென்று அன்று சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமைத் தேடிந்தந்தார். உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

சாதனை மேல் சாதனை

2004-ல் ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. உலக சாம்பியன்ஷிப்பில் அஞ்சு சாதித்திருந்ததால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தகுதிச் சுற்றைத் தாண்டி இறுதிச் சுற்றுக்குள் அஞ்சு நுழைந்ததே அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. எப்படியும் அஞ்சு சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவரால் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும் 6.83 மீட்டர் நீளத்தைத் தாண்டியது, அவரது தனிப்பட்ட சாதனையாகப் பதிவானது. அவர் நீளம் தாண்டுதல் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும்வரை அதுவே அவரது அதிகபட்ச தனிநபர் சாதனையாகத் தொடர்ந்தது.

அடுத்த ஆண்டே இன்னொரு களத்துக்குத் தயாரானார் அஞ்சு. 2005-ல் மொனாகோவில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஒலிம்பிக்கில் விட்ட பதக்கத்தை எப்படியும் பெறுவது என்ற முடிவோடு உழைத்தார். தங்கப் பதக்கத்துக்குக் குறிவைத்திருந்தார். போட்டியில் 6.75 மீட்டர் நீளத்தைத் தாண்டினார். ஆனால், அந்தப் போட்டியில் அவரால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. வெள்ளிப் பதக்கத்துடன் அஞ்சு திருப்தியடைய வேண்டியிருந்தது. ஆனால், தங்கம் அவரைவிட்டுச் செல்லவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.

அந்தப் போட்டியில் முதலிடம் பிடித்த ரஷ்ய வீராங்கனை கொடோவா, ஊக்க மருந்து பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் 9 ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டது. மிகவும் தாமதமாக கொடாவோ பெற்ற தங்கப் பதக்கம் 2014-ல் பறிக்கப்பட்டது. அந்தப் பதக்கம் இரண்டாம் இடம் பிடித்த அஞ்சுவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அஞ்சு பெற்றார்.

கணவரே பயிற்சியாளர்

இந்தப் பதக்கங்கள் மட்டுமல்ல, 2002-ல் மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2002-ல் (பூசன்) தங்கம், 2006-ல் (தோகா) வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றையும் அஞ்சு அள்ளினார். மேலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2005-ல் (இஞ்ச்சேன்) தங்கம், 2007-ல் (அம்மான்) வெள்ளிப் பதக்கங்களையும் தன்வசமாக்கினார்.

2000-ல் ராபர்ட் பாபி ஜார்ஜை அஞ்சு திருமணம் செய்துகொண்டார். இவரும் விளையாட்டு வீரர்தான். தேசிய டிரிப்பிள் ஜம்ப் சாம்பியன். திருமணம் செய்தபிறகு தான் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டு அஞ்சுவின் பயிற்சியாளராக மாறினார் பாபி ஜார்ஜ். அஞ்சு சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்றதெல்லாம் இவரது பயிற்சியின் கீழ்தான். ஒரு வகையில் சிறுவயதில் அஞ்சுவின் தந்தை அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். திருமணத்துக்குப் பிறகு அவருடைய கணவர் வழிகாட்டியானார்.

2002-ல் அஞ்சுவுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2004-ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளிலும் பங்கேற்ற அஞ்சு, அதன் பிறகு நீளம் தாண்டுதலிலிருந்து விடைபெற்றார். தற்போது 41 வயதாகும் அஞ்சு பாபி ஜார்ஜ், ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்’ என்றழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு உதவும் திட்டத்தின் செயல் உறுப்பினராக இருந்துவருகிறார். மத்திய அரசு அதிகாரியாகவும் பணியாற்றிவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)

தி இந்து, 03/06/2018