29/03/2018

என்னோட கணக்கே வேற!- நடிகை மகிமா

பள்ளியிறுதி வகுப்பில் கதாநாயகியாக அறிமுகமாகி, கல்லூரியில் நுழையும்போது பரபரப்பான கதாநாயகி ஆகிவிடுகிறார்கள் கேரளத்தின் அணங்குகள். நடித்துக்கொண்டே படிப்பிலும் ஒரு கை பார்க்கும் கதாநாயகிகளில் வரிசையில் லட்சுமி மேனனைத் தொடர்ந்து மகிமாவும் இடம்பெற்றிருக்கிறார். ‘சாட்டை’ படத்தில் அறிவழகியாக அறிமுகமாகித் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மகிமாவின் கைவசம் தமிழ், தெலுங்கு என நிறையப் படங்கள். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

ஒரே சமயத்தில் படிப்பையும் நடிப்பையும் தொடர்வது கஷ்டமாக இல்லையா?
 
சின்ன வயசிலேர்ந்து நடிகை யாகணும்னு ஆசை. படிக்கவும் விரும்பினேன். என்னை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டாங்க. ஆனால், என்னோட ஆசையைத் தெரிஞ்கிட்டவுடனே அம்மா, அப்பா தடை போடல. படிப்பை விடவும் மனசில்ல. அதான் கல்லூரி படிப்பையும் தொடர்றேன். இப்போ பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன்.


கைவசம் என்னென்ன படங்கள் இருக்கு?
 
விஜய் சேதுபதியோட ‘மெல்லிசை’ படத்துல நடிச்சு முடிச்சுட்டேன். அப்புறம் ‘புரவி எண் 150சிசி’ன்னு ஒரு படம். தனுஷ்-வெற்றி மாறன் தயாரிப்பில உருவாகும் ‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். அதுல அட்டகத்தி தினேஷ் ஜோடி. இந்தப் படத்துல கிராமத்துப் பெண்ணா நடிக்கிறேன். ரொம்பத் துடுக்குத்தனமாக, வாயடிக்கிற, சாவு வீட்டுல பேண்டு வாசிக்கிற கேரக்டர். ரவுடித்தனம் பண்ற பாத்திரம்னு வைச்சிக்குங்களேன். அடுத்தபடியா சமுத்திரக்கனி இயக்குற ‘கிட்ணா’ படத்தில் நடிக்கப்போறேன்.
இத்தன தமிழ் படங்களோட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரின்னு ஐந்து மொழிகள்ல தயாராகிட்டு இருக்கிற ஒரு படத்துலயும் பிஸியா நடிச்சிட்டு இருக்கேன். இயக்குநர் பூரிஜெகன்நாத்தோட தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ. வினோத் விஜயன் இயக்குறார். ராஜீவ் ரவின்னு டோலிவுட்ல பெரிய கேமராமேன். அவர் ஒளிப்பதிவு பண்ற படம். அதுலயும் நான் பிஸி.

குடும்பப் பெண்ணா நடிச்சிட்டு ரவுடி வேடத்துக்கு மாறிட்டீங்களே?
 
உண்மைதான். தொடர்ந்து எனக்கு வந்த கதாபாத்திரம் எல்லாம் ஹோம்லியாவே வந்துச்சி. வர கதாபாத்திரங்களை என்னால விடவும் முடியலை. ஒரே மாதிரி கேரக்டர் வரக் கூடாதேன்னு பயமாவும் இருந்துச்சு. அப்போதான் ‘அண்ணனுக்கு ஜே’ கதை என்னை எடக்கு மடக்கான கேரக்டரா காட்டும்ன்னு தெரிஞ்சதும் உடனே சரின்னு சொல்லிட்டேன்.

சமுத்திரக்கனி இயக்குற கிட்ணா படத்தில் நீங்க டபுள் ரோல் செய்யப்போறீங்களாமே?
 
ஆமாம், டபுள் ரோல்தான். படப்பிடிப்பு இன்னும் தொடங்கல. இந்தப் படத்துல சமுத்திரக்கனியும் நடிக்கிறாரு. இது ஹீரோ-ஹீரோயின் சப்ஜெக்ட் இல்லை. அப்பாவுக்கும் பொண்ணுங்களுக்கும் இடையில நடக்குற கதை. இந்தப் படத்துல முக்கியமாக நாலு பாத்திரங்கள் இருக்கு. சமுத்திரக்கனியோட மனைவியா தன்ஷிகா, அப்புறம் நான். இதுக்கு மேலே கதையைப் பத்தி வேற எதுவும் கேட்காதீங்க. யாருக்கிட்டயும் கதையப் பத்தி மூச்சு விடக் கூடாதுன்னு இயக்குநர் சொல்லியிருக்கார்.

சமுத்திரக்கனி படத்துல உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குதே, எப்படி?
 
‘சாட்டை’ படத்தில் அவர்கூட சேர்ந்து நடிச்சேன். அந்தப் படம் பண்ணிக்கிட்டு இருக்குறப்பவே, ‘என்னோட அடுத்த படத்துல நீதான் கதாநாயகியா நடிக்கிறே’ன்னு சொன்னாரு. அவரு ஏதோ சும்மா சம்பிரதாயத்துக்குச் சொல்றாருன்னுதான் நினைச்சேன். ‘கிட்ணா’ ஆரம்பிக்க அவரு முடிவு பண்ணவுடனே எனக்கு போன் பண்ணி தயாரா இருன்னு சொன்னாரு. சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டார். ரொம்ப ஹேப்பியா இருக்கேன். ஏன்னா அந்த மாதிரி ஒரு கதை.

பல புதுமுகங்கள் வந்த வேகத்துல காணாமல் போயிடுறாங்க. நீங்க தாக்குப்பிடிக்கிற ரகசியம் என்ன?
 
கிடைக்கிற கேரக்டரை நச்சுன்னு பண்ணிடணும். நமக்காக ரீஷூட்டெல்லாம் செய்ய மாட்டாங்க. அதனால் நடிப்புல உஷாரா இருக்கணும். அப்படிப் பண்ணினாத்தான் மகிமா இந்த கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பா, ஒழுங்கா நடிப்பான்னு என்னைக் கூப்பிடுவாங்க. என்னோட கேரக்டருக்கு ஃபேவரா நடிக்கிறேன்.
முடிஞ்சவரைக்கும் கேரக்ட்டரா தெரிய முயற்சி பண்றேன். அதுக்கு மேலே இதுல ஒரு ரகசியமும் இல்லை. எத்தனை படம் நடிச்சோம்ன்னு கணக்குப் பார்க்கிறதைவிட எத்தனை நல்ல படத்துல நடிச்சோம்ன்னு ஒவ்வொரு வருஷ முடிவுலயும் எண்ணிப்பார்க்கணும். அந்தக் கணக்கு உதைக்கக் கூடாது. சிம்பிள்.

அட்டகத்தி தினேஷ், விஜய் வசந்த், சமுத்திரக்கனி, விஜய் சேதுபதின்னு முன்னேறி வந்துட்டீங்க? அடுத்து ரஜினிதானா?
 
என்ன இப்படி சொல்லிட்டீங்க. ரஜினி என்னோட கனவு ஹீரோ. அவரோட படத்துல ஒரு சின்ன ரோல் கிடைச்சாலும் போதும். அதுதான் என்னோட ஒரே பெரிய ஆசை. ரஜினிக்கு அப்புறம் ‘தல’ பிடிக்கும். அவரோட ஸ்டைலு தனிதான். விஜய்யோட ஆக்‌ஷன் சூப்பரா இருக்கும். தனுஷோட டான்ஸ்ன்னா உசிரு. சூர்யா ரொமான்ஸ் காட்சிகள்ல பட்டையைக் கிளப்பிடுவாரு, இப்படி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்காகப் பிடிக்கும். இவங்க எல்லார்கூடேயும் நடிக்கணும்னு ஆசை இருக்கு.

உங்களைப் பத்தி இதுவரைக்கும் எந்தக் கிசுகிசுவும் வரலியே?
 
கிசுகிசு வந்தாத்தான் நம்ம கிராஃப் மேல ஏறுதுன்னு அர்த்தமா என்ன? இதுவரைக்கும் கிசுகிசு எதுவும் வரல. அப்படியே வந்தாலும் பரவாயில்ல. சமாளிச்சிக்கிடலாம். அப்படி ஏதாவது வந்துச்சுன்னா எனக்கொரு மெசேஜ் போடுங்க.

- தி இந்து

23/03/2018

ஒரு சிக்ஸருக்கு 14 ஆண்டுகள்!

தமிழ் சினிமாவில் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றவர் நடிகர் விக்ரம். அண்மைக் காலத்தில் கிரிக்கெட்டில் அப்படி ஒருவரைக் கைகாட்ட வேண்டுமென்றால், தினேஷ் கார்த்திக்தான் அதற்குச் சரியானவர். 2004-ம் ஆண்டில் தொடங்கி அணியில் போவதும் வருவதுமாக இருந்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட்டில் தனக்கெனத் தனிப்பட்ட அங்கீகாரத்தைப் பெற 14 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கொண்டது.

டோனிக்கு மாற்று

நயன் மோங்கியா விக்கெட் கீப்பராக இந்திய அணியில் சுமார் பத்து ஆண்டுகள் நீடித்த வேளையில் 2000-களின் தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் அணியில் இடம்பிடிக்கத் தொடங்கினார். ஓரிரு ஆண்டுகள்தான் சென்றிருக்கும். அடுத்ததாக, தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டு அணியில் விக்கெட் கீப்பராக இடம்பிடித்தார். அதன்பின் இருவரும் மாறிமாறி அணியில் இடம்பெற்றுவந்தார்கள். 2004-05-ம் ஆண்டில் மகேந்திர சிங் டோனி அணியில் இடம்பிடித்த பிறகு இவை எல்லாமே மாறின. அதிரடி ஆட்டப் பாணியைக் கடைப்பிடித்தார் டோனி.

இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர்கள் யாரும் டோனி அளவுக்கு அதிரடியாக விளையாடியதில்லை. அந்தப் பாணி அணியில் அவருக்கான இடத்தை நிரந்தரமாக்கியது. அதிரடி ஆட்டத் தன்மைக்குப் பொருந்தாத பார்த்திவ் பட்டேலும் தினேஷ் கார்த்திக்கும் ஓரங்கட்டப்பட்டார்கள். அதன்பின் இவர்கள் டோனிக்கு மாற்று வீரர்களானார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.
அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. ஆனால், 2007 அவருக்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்தது. அந்த ஆண்டில் மட்டும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். டோனி விக்கெட் கீப்பராக விளையாட, தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி தினேஷ் கார்த்திக் கவனம் ஈர்த்தார். அந்த ஆண்டில் 1 டெஸ்ட் சதம், 6 அரை சதங்கள் விளாசினார்.

அதன்பின் தொடர்ந்து அணியில் இருந்திருக்க வேண்டியவர். ஆனால், டெஸ்ட் அணியில் அவருக்குத் தொடர்ந்து இடம் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம்தான். ஒரு நாள் அணியிலும்கூட 2010-ம் ஆண்டில் மட்டுமே 15 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்தது. பல சந்தர்ப்பங்களில் 15 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். ஆனால், 11 பேர் கொண்ட அணியில் இருக்க மாட்டார். பெவிலியனில் உட்கார்ந்துகொண்டிருப்பார்.

2015-ம் ஆண்டில் டோனி டெஸ்ட் போட்டிக்கு குட்பை சொன்னவுடன், அந்த இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனென்றால், உள்நாட்டுத் தொடர்களிலும் ஐபிஎல் போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே விளையாடிவந்த நேரம் அது. அதனால், அந்த வாய்ப்பு அவருக்கே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், டோனிக்குப் பிறகு அந்த வாய்ப்பு விருத்திமான் சகாவுக்குச் சென்றது. வெவ்வேறு ஆண்டுகளில் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த சகாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்க மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் லாபியே காரணம்.

கிடைத்த வாய்ப்பு

விளைவு, ஒரு நாள் போட்டிகளில் டோனிக்கு மாற்றாகவோ, கோலி, தவான், ரோஹித் போன்ற வீரர்களின் ஓய்வு காரணமாகவோ மாற்று வீரராகத்தான் அணியில் இடம் பிடித்துவருகிறார் தினேஷ் கார்த்திக். ஆனால், அப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சில சந்தர்ப்பங்களில் அவர் பயன்படுத்தியும் இருக்கிறார்; வீணடித்தும் இருக்கிறார். அண்மையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில்கூட ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் பெவிலியனில் இருந்தபடி போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக முழுமையாகப் பங்கேற்றது, அண்மையில் நடந்து முடிந்த இலங்கை சுதந்திர தினக் கோப்பைத் தொடரில்தான். இந்தத் தொடரில் சீராக விளையாடிவர், இறுதிப் போட்டியில் தன்னுடைய ருத்ரதாண்டவ ஆட்டத்தால் முத்திரை பதித்திருக்கிறார்.

14 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற ஏமாற்றம், அவமானம், ஏளனம், ஆற்றாமை, விரக்தி, சோகம் என அனைத்தையும் ஒற்றைப் போட்டியில் தினேஷ் கார்த்திக் துடைத்தெறிந்திருக்கிறார். ஒரே ஒரு பந்தை எதிர்கொள்ள மட்டுமே வாய்ப்பு என்றால், அந்தப் பந்தை சிக்ஸராக மாற்று என்பதே அதிரடி கிரிக்கெட்டின் அடிப்படை. அப்படி ஒரு சிக்ஸரை விளாச தினேஷ் கார்த்திக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
ஒரு போட்டியின் மூலம் தேசம் கொண்டாடும் ஹீரோவான தினேஷ் கார்த்திக்கு, இனிவரும் காலங்களிலாவது தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்குமா என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 33 வயதை எட்டிவிட்ட அவருக்கு, தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தால், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஓரளவாவது முழுமைபெறும்.

அன்று 18 பந்தில் பூஜ்ஜியம்!

கடந்த டிசம்பரில் தர்மசாலாவில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் இரண்டாவது ஆட்டக்காரராகக் களமிறங்கினார். 18 பந்துகளை எதிர்கொண்டார். ஒரு ரன்கூட எடுக்காமல் ஏமாற்றமடைந்தார். அதிக பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆன இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் என்ற சோகமான சாதனைக்குச் சொந்தக்காரரானார். ஆனால், கடந்த ஞாயிறன்று பங்களாதேஷுக்கு எதிராக வெறும் 8 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களைக் குவித்து இலங்கை சுதந்திர தினக் கோப்பையை இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்து, ஹீரோவாக மாறியிருக்கிறார். கிரிக்கெட்டில் அன்றைய நாள் யாருடையதாக இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

- தி இந்து, 23/03/2018
 http://tamil.thehindu.com/society/lifestyle/article23323288.ece

18/03/2018

இடைத்தேர்தல்களில் காலியாகும் பாஜக தொகுதிகள்


உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி இந்த வாரத்தின் லைம் லைட்டானது.
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர், பிஹாரில் அராரியா தொகுதிகளில் பாஜக அடைந்த தோல்வி தேசிய அரசியலில் கவனத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்துக்கான முன்னோட்டத் தேர்தலாகவே பலராலும் பார்க்கப்படுகின்றன. இந்த இடைத்தேர்தலில் பீஹாரில் அராரியா தொகுதியை ராஷ்ட்ரிய ஜனதாதளம் தக்க வைத்திருக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தொகுதிகளாக இருந்த கோரக்பூர், புல்பூர் ஆகிய தொகுதிகளை தக்கவைக்க முடியவில்லை. எதிர்க்கட்சியிடம் இழந்து நிற்கிறது பாஜக.
இதில் குறிப்பிடும்படியான விஷயம், இந்த ஆண்டில் மட்டும் ஆல்வார், ஆஜ்மீர் (ராஜஸ்தான்), கோரக்பூர், புல்பூர் (உத்தரப் பிரதேசம்) ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் அத்தொகுதிகளை பாஜக இழந்திருக்கிறது. கடந்த ஆண்டில் குருதாஷ்பூர் (பஞ்சாப்), 2015-ல் ஸ்ரீநகர் (காஷ்மீர்) ஆகிய தொகுதிகளை பாஜக ஏற்கெனவே இழந்திருக்கிறது. இதில் ஸ்ரீநகர் தொகுதி பாஜகவின் கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வசம் இருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ரட்லம் (மத்தியப் பிரதேசம்) தொகுதியை காங்கிரஸிடம் இழந்தது பாஜக. 2014 முதல் அண்மையில் முடிந்த இடைத்தேர்தல் வரை 2018 வரை ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் இழந்திருக்கிறது பாஜக.
இந்த நான்கு ஆண்டுகளில் 3 இடைத்தேர்தல்களில் மட்டுமே பாஜக தொகுதியைத் தக்கவைத்திருக்கிறது. பீட் (மகாராஷ்டிரா), வதோதரா (குஜராத்), ஷாதோல் (மத்தியப் பிரதேசம்) என மூன்று தொகுதிகள் மட்டுமே இடைத்தேர்தல்களில் பாஜக தக்க வைத்துக்கொண்ட தொகுதிகளாகும். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 283 தொகுதிகளை பாஜக தனித்துப் பெற்றது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சியின் பலம் 273 (272 + சபாநாயகர்) ஆகக் குறைந்துவிட்டது. 6 தொகுதிகளை பாஜக இழந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
இவை தவிர பாஜக வெற்றிபெற்ற கைரானா (உ.பி.), பால்கர், பாந்த்ரா கொண்டியா (மகாராஷ்டிரா) ஆகிய தொகுதிகள் காலியாக இருப்பதால் இடைத்தேர்தலுக்கு இந்தத் தொகுதிகள் காத்திருக்கின்றன. பிஹாரில் உள்ள தர்பங்கா தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற கீர்த்தி ஆசாத், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், எக்கட்சியையும் சாராத உறுப்பினராக உள்ளார். இந்த வகையில் 10 உறுப்பினர்கள் எண்ணிக்கை பாஜகவுக்குக் குறைந்திருக்கிறது.
ஆனால், இவற்றில் 6 தொகுதிகளை பாஜக தக்கவைக்க முடியாமல் போனதுதான் குறிப்பிடும்படியான விஷயமாகி இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் நான்கு தொகுதிகளை பாஜக இழந்திருப்பதால், அந்தக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதற்கு வாய்ப்பாகி இருக்கிறது. பாஜக தன் தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் தாரைவார்த்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் அதிகத்திருக்கிறது. 2014-ல் 44 தொகுதிகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ், இன்று தன் எண்ணிக்கையை 48 ஆக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக வென்ற ரட்லம், குருதாஷ்பூர், ஆல்வார், ஆஜ்மீர் ஆகிய நான்கு தொகுதிகளை இடைத்தேர்தல் மூலம் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.
இடைத்தேர்தல்களில் பாஜக தொகுதிகளை தொடர்ந்து இழந்துவரும் நிலையில் பிற கட்சிகள் தங்கள் தொகுதியை இடைத்தேர்தல் மூலம் தக்கவைக்கத் தவறவில்லை. திரிணமூல் காங்கிரஸ் (பங்கான், குச்பெஹர், உலுபெரியா தொகுதிகள்), தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (மேடக், வாரங்கல் தொகுதிகள்), பிஜூ ஜனதாதளம் (காந்தமால்), சமாஜ்வாடி (மெயின்பூரி), ராஷ்டிரிய ஜனதா தளம் (அராரியா) ஆகிய கட்சிகள் இடைத்தேர்தல்களில் தொகுதிகளை இழக்காமல் தக்கவைத்திருக்கின்றன.
இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பாஜக மட்டும்தான். பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகள் இடைத்தேர்தலுக்குக் காத்திருக்கின்றன என்பதால், இடைத்தேர்தல் அறிவிப்புக்காக எதிர்க்கட்சிகள் ஆர்வமாக எதிர்நோக்குகின்றன.
- தி இந்து, 17/03/18
http://tamil.thehindu.com/india/article23280150.ece?homepage=true

15/03/2018

சோனியாவின் டின்னர் பார்ட்டியால் மாற்றம் ஏற்படுமா?

  நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டு இருக்கிறது. அதற்குள் தேர்தல் முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக எம்பிகளோடு ஆலோசனை செய்கிறார்; தேர்தலுக்குத் தயாரகுமாறு அறைகூவல் விடுக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியாக மாநில கட்சிகளின் தலைமையை அழைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விருந்துவைக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தன்னுடைய பலத்தைப் பெருக்கிவரும் நிலையில், சோனியா காந்தியின் இந்த முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?

பொதுவாக காங்கிரஸ் தலைமையில் செயல்படும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என இரண்டு கூட்டணிகளிலுமே மாநில கட்சிகள் அங்கம் வகித்துவருகின்றன. பெரும்பாலும் மாநிலத்தில் பலமாக உள்ள பிராந்தியக் கட்சிகள் இந்த இரண்டு கூட்டணியில் ஒன்றில் இடம்பெற்று தேர்தலைச் சந்திக்கின்றன. சில பிராந்திய கட்சிகள் இந்த இரண்டு கூட்டணியிலுமே இடம் பெறாமல் தேர்தலைச் சந்திப்பதும் உண்டு. கடந்த 20 ஆண்டு காலமாக   நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் இந்தப் பாணியில்தான் போட்டியிட்டுவருகின்றன.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி உருவாக்கம் பற்றிய பேச்சு எழுவது வாடிக்கை. வழக்கமாக இந்தக் குரல் இடதுசாரிகளிடமிருந்து வெளிப்படும். ஆனால், இந்த முறை திரினாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரிடமிருந்து அண்மையில் வெளிப்பட்டது. இந்தக் கருத்தை வெளிப்படுத்தியதோடு அல்லாமல் ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம், தமிழகத்தில் திமுக, மகாராஷ்டிராவில் சிவசேனா உள்ளிட்ட கட்சி தலைமைகளுடன் மம்தா பானர்ஜி பேசினார்ர். மூன்றாவது அணி தொடக்கம் குறித்த இந்தப் பேச்சுவார்த்தை தேசிய அரசியலில் ஹாட் டாபிக் ஆனது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவும் 3-வது அணி உருவாக்க ஏற்கெனவே குரல் கொடுத்துவருகிறார். 

மம்தா பானர்ஜியின் 3-வது அணி முயற்சி காங்கிரஸ் கட்சியை அசைத்து பார்த்திருக்கிறது. மம்தா, சந்திரசேகர ராவ் போன்றோரின் 3-வது அணி குரலையடுத்து, காங்கிரஸ் கட்சி விழித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பல மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, பலம் குன்றியே காணப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலும் அந்தக் கட்சிக்கு அக்னீப் பரீட்சையாக இருக்கக்கூடும். எனவே மாநிலக் கட்சிகளோடும், பிற தேசிய கட்சிகளோடும் கூட்டணி சேரும் நிர்பந்தம் அந்தக் கட்சிக்கு இருக்கிறது.

இந்தச் சூழலில் மம்தா, சந்திரசேகர ராவ் ஆகியோரின் மூன்றாவது அணி முயற்சி, பாஜகவுக்கு லாபமாக முடியும் சூழல் உண்டாகலாம். அந்த முயற்சியை உடனடியாகக் கிள்ளியெறிய வேண்டிய அவசியம் காரணமாகவே திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்பட 20 கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் விருந்து வைத்து, புதிய கூட்டணி உறவை உருவாக்க முயற்சித்திருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 3-வது அணிக்குக் குரல் கொடுத்த மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் இந்த விருந்தில் பங்கேற்றது பலரது புருவத்தையும் உயர செய்தது. அதேநேரம் 3-வது அனிக்குக் குரல் கொடுத்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை காங்கிரஸ் அழைக்கவில்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியுடன் சந்திரசேகர ராவ் மோதல் போக்கை கடைபிடிப்பதால், அவரை அழைக்கவில்லை.
காங்கிரஸைப் பொறுத்தவரை பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்தால்தான் வெற்றி அருகே செல்ல முடியும். இதை காங்கிரஸ் கட்சியும் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணிதான் காரணம். 2009-ல் ஆட்சியைத் தக்க வைக்கவும் கூட்டணிதான் காரணம். 2004-ம் ஆண்டிலும் இதேபோல கட்சிகளை அழைத்து சோனியா காந்தி மதிய விருந்து ஒன்றை வைத்தார் சோனியா. அப்போதாவது தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் விருந்துவைத்தார். ஆனால், இந்த முறை ஓராண்டுக்கு முன்பே சோனியா விருந்து வைத்திருப்பது, மூன்றாவது அணிக்கான முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியத்தான்.

2004, 2009-ம் ஆண்டு  ஃபார்மூலாபடிதான் 2019 தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகிறது காங்கிரஸ். உத்தரப்பிரதேசத்தில் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இதுவரை இடம்பெற்றதில்லை. ஆனால், மறைமுகமாக சில சந்தர்ப்பங்களில் காங்கிரஸுடன் கைகோர்த்திருக்கின்றன. திரினாமூல் காங்கிரஸ் கட்சி 2004-ல் பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால், 2009-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாறியது. இந்த மூன்று கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதுதான் காங்கிரஸின் பெரும் பணியாக இனி இருக்கக்கூடும். அதற்கு முன்னோட்டமாகவே விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னெடுத்திருக்கிறது.

2019-ம் ஆண்டு தேர்தலுக்காக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த விருந்து அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே இந்த விருந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி என்று மம்தா பானர்ஜி கூறிய பிறகு, அந்தக் கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி பங்கேற்ற 1998-ம் ஆண்டு டீ பார்ட்டி, 2004-ல் காங்கிரஸ் கட்சி வைத்த லஞ்ச் பார்ட்டி போன்றவை அன்று ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவை எதிர்க்கட்சியாக்கியது. இன்று காங்கிரஸ் கட்சி வைத்திருக்கும் டின்னர் பார்ட்டியால், மாற்றம் ஏற்படுமா? தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


- காமதேனு, 14/03/18

http://www.kamadenu.in/news/politics/752-sonia-gandhi-party.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

கமல், ரஜினி: அரசியலில் யார் முதல்வன்?

அரசியல் கட்சியை யார் முதலில் தொடங்குவது என்ற கோதாவில் கமலஹாசன் முந்திக்கொண்ட நிலையில், ரஜினி எப்போது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவரோ புதுப்பட அறிவிப்பை வெளியிட்டிருப்பது ரஅவரது ரசிகர்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது.
1996-களில் இருந்தே, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ரஜினியிடம் கேட்டால்,  ‘ஆண்டவன்தான் சொல்லணும்’ என்று மேலே கையைக் காட்டிவிட்டுச் செல்வதே ரஜினியின் பதிலாக இருந்தது. கமலோ, ‘தனக்கும் அரசியலுக்குமான உறவு என்பது தேர்தலில் ஓட்டுப் போடுவதோடு சரி’ என்று தத்துவார்த்தம் பேசிவந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் சுகவீனத்துக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றங்களால் கமலுக்கும் ரஜினிக்கும் திடீர் அரசியல் ஞானதோயம் ஏற்பட்டது.

அதிமுக அமைச்சர்களுடன் ட்விட்டரில் லாவணிப் பாடிக்கொண்டிருந்த கமல், அரசியலில் அடியெடுத்து வைக்கவும் தயாரானார். ஏற்கனவே ‘சிஸ்டம் கெட்டுவிட்டது’ என்று பேசி அரசியல் ஆசையை வேறுவழியாக வெளிப்படுத்திய ரஜினி, டிசம்பர் இறுதியில் ‘அரசியலில் குதிக்கப் போவதாகவும், வரும் சட்டப்பேரவை ஜனநாயகப் போரில் தமது படையும் இருக்கும்’ என்றும் அறிவித்தார். அதோடு அரசியலில் கட்டமைப்பை ஏற்படுத்தும்விதமாக ரஜினி மன்றத்தில்  உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அவ்வப்போது ரஜினி மன்ற நிர்வாகிகளை நியமித்தபடி இருக்கிறார். ரசிகர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடுவது எனவும் போய்க்கொண்டிருக்கிறது ரஜினியின் நடவடிக்கை.

ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிவிட்ட கமலுக்கு அந்த வேலையெல்லாம் கிடையாது. நேரிடையாகவே அரசியல் கட்சியைத் தொடங்கும் வேலையை முன்னெடுத்தார். கேரளா, மேற்கு வங்காளம், டெல்லி மாநில முதல்வர்களுடன் சந்திப்பைத் தொடர்ந்து, கருணாநிதி, நல்லக்கண்ணு, விஜயகாந்த், டிஎன் சேஷன் போன்றவர்களைச் சந்தித்து ஆசிப் பெற்று கட்சி தொடங்க நாள் குறித்தார்.  கடந்த மாதம் பிப்ரவரி 21 அன்று மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தையும் தொடங்கிவிட்டார் கமல். அதோடு மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி, ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சியை அறிவித்து, தன் கட்சியின் உயர்மட்ட குழுவினரையும் அறிமுகப்படுத்திவைத்தார். தனது கட்சி கொடியையும் ஏற்றிவைத்து கமல் உரையாற்றினார். ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’ போன்ற படங்களை முடித்துவிட்ட கமல், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்.

கமல் இப்படி ஜெட் வேகத்தில் செல்லும் வேளையில் ரஜினி எந்தத் திசையில், எப்படிப் பயணிப்பார் என்ற கேள்விகள் எழுந்தன. ஏற்கனவே ‘2.0’, ‘காலா’ போன்ற படங்களை முடித்துவிட்ட ரஜினியின் முழுப் பார்வையும் அரசியல் மீது பதியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், கமலைப் போலவே ரஜினியும் இனி படத்தில் நடிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்பட்டது. கமலின் அரசியல் வேகத்தால்,  ரஜினியும் தன் கட்சிப் பெயரை அறிவிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், உடனடியாக எந்த அறிவிப்பும் ரஜினியிடமிருந்து வெளிப்படவில்லை. தொடர்ந்து ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திவந்த ரஜினி, திடீரென தற்போது புதுப் பட அறிவிப்பை வெளியிட்டு அவரது ரசிகர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

‘ஏற்கனவே என் பாணி வேறு; கமல் பாணி வேறு’ என்று சொல்லிவரும் ரஜினி, அவரைப் போல உடனடியாகக் கட்சி, அரசியல் என இறங்காமல், பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது மூலம் அவர் பாணி வெளிப்பட்டுள்ளது. வழக்கமாக ரஜினியின் புதுப்பட அறிவிப்பு வெளியானால், சமூக ஊடங்களில் அது எதிரொலிக்கும். ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பட அறிவிப்பு வெளியாகியும், சமூக ஊடங்களிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பைக் காணவில்லை. அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்த்த வேளையில், ரஜினியின் இந்தப் பட அறிவிப்பு எட்டிக் காயாகக் கசந்திருக்கும் என்று நம்பலாம்.

ரஜினியின் புதுப்பட அறிவிப்பு மூலம் இந்த ஆண்டு முழுவதும் அவர்  படத்தில் பிஸியாகவே இருக்க வாய்ப்புண்டு. அப்படியானால், ரஜினி என்ன சொல்லவருகிறார் என்பதை நினைத்து, அவரது ரசிகர்கள் குழம்பிவருகின்றனர். ‘சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகக் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவோம்’ என்று ரஜினி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்துவிட்ட ரஜினி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்பதும் அவர் ஏற்கனவே சொன்னதுதான்.

தற்போது புதிதாகப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதன் மூலம் அரசியல் கட்சி அறிவிப்பு இப்போதைக்கு இல்லை என்பதைத் தெளிவாகவே உணர்த்தியிருக்கிறார் ரஜினி. சிரஞ்சீவி, விஜயகாந்த் ஆகியோர் சட்டப்பேரவை  தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலிலும் போட்டியிட்டார்கள். ஆனால், ரஜினி அரசியலில் இறங்கப்போவதாகச் சொல்லிவிட்டு, ‘மன்றங்களைக் கட்டமைக்கிறேன்’ என்று நீண்ட கால அவகாசம் எடுத்துக்கொள்வதைப் பார்த்தால், ரசிர்களைத் திருப்திப்படுத்தவும், அவரது படங்களுக்காக அவர் வழக்கமாக சொல்லும் பழைய பல்லவிதான் என்ற விமர்சனத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும் வாய்ப்பும் உண்டு.

போர் என்பது சொல்லிவிட்டு வராது; அது கொரில்லா போராகக்கூட இருக்கலாம். போர் திடீரென வந்தால், ரஜினி என்ன செய்வார்? கமல் மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், ரஜினி தனது புதுப் படத்தை முடித்துவிட்டு அரசியல் கட்சியைத் தொடங்குவாரா அல்லது மீண்டும் இன்னொரு புதுப் பட அறிவிப்பை வெளியிடுவாரா போன்ற கேள்விகள் அவரது ரசிகர்களிடம் எழாமல் இல்லை!

- 01/03/2018

09/03/2018

19 வயதில் கேப்டன்!

கிரிக்கெட்டில் பதின்ம வயதில் ஒரு வீரர் சர்வதேச அணியின் கேப்டனாவதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால், அதை நிஜமாக்கியிருக்கிறார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். 19 வயதிலேயே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகி, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இளம் கேப்டன்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இளம் கேப்டன்களின் பட்டியலில் கடந்த 14 ஆண்டுகளாக நீடித்துவந்தார் வங்கதேசத்தின் ரஜின் சல்லே. இவர் 2004-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியை வழிநடத்தினார். அப்போது அவரது வயது 20 ஆண்டுகள், 297 நாட்கள். இத்தனைக்கும் இவர் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்தான் வங்கதேச கேப்டனாக இருந்தார். இந்தச் சாதனையைத்தான் ரஷீத் முறியடித்துள்ளார்.

ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் கடந்த 4-ம் தேதி ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடியபோது ரஷீத் கான் அந்தச் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய அன்று அவருடைய வயது 19 ஆண்டுகள், 165 நாட்கள். அதுவும், ரஷீத் கான் மிகவும் முக்கியமான தொடருக்குத் தலைமையேற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப்போட்டித் தொடருக்குதான் ரஷீத் அணியை வழிநடத்துகிறார்.

இந்தத் தொடருக்கு அவர் நேரடியாக கேப்டனாக நியமிக்கப்படவில்லை. அணியின் கேப்டனாக இருக்கும் அஸ்கர் ஸ்டானிக்சாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் துணை கேப்டனாக இருந்த ரஷீத் கானுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இன்று அது சாதனையாகவும் மாறியிருக்கிறது.

புகழின் உச்சியில்...
சர்வதேச கிரிக்கெட்டில் இன்று ஜாம்பவான் அணிகளின் வீரர்களுக்கு இணையாகப் பரபரப்பாகப் பேசப்படும் வீரர்களில் ஒருவர் ரஷீத். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணை உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் ஐ.சி.சி. விருதை ரஷீத் கான் கடந்த ஆண்டு பெற்றார். சிறந்த பவுலர்களுக்கான பிரிவில் இந்த விருது ரஷீத் கானுக்குக் கிடைத்தது. அப்போதும் ஒரு சாதனையை அவர் படைத்தார். அது, இளம் வயதில் ஐசிசி விருது வாங்கிய ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என்பதுதான்.
எதிரணி வீரர்களை மந்திர சுழற்பந்து வீச்சின் மூலம் சிதறடிக்கும் வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். இதுவரை 37 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 86 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார் ரஷீத். சராசரியாக ஒரு போட்டியில் 3.8 விக்கெட்டுகள். கடந்த ஆண்டு மட்டும் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும். பவுலிங்கில் மட்டுமல்ல; பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர்.

ஐபிஎல்-லில் மவுசு
தற்போது சர்வதேச டி-20 பவுலிங் தரவரிசையிலும் முதல் இடத்தில் இருக்கிறார் ரஷீத். இந்த வயதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் டி-20 பவுலிங் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியதும் இதுவே முதன்முறை. இதன் காரணமாகவே, ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்திலும் பல அணிகளின் விருப்பப் பட்டியலில் இவரே இடம் பிடித்திருந்தார். கடந்த ஆண்டு இவரை, ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆப்கன் வீரர் ஒருவர் இவ்வளவு விலைக்குப் போனதைப் பார்த்து அப்போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்திலும் ‘சன் ரைசர்ஸ் ஹைதராபாத்’ அணி, இவரை ஒரு மடங்கு கூடுதலாக 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. பல அணிகளும் இவரைத் தங்கள் அணிக்கு எடுக்க போட்டாபோட்டி போட்டதும் நடந்தது.

கடந்த ஓராண்டில் இப்படிப் பல சாதனைகளைப் படைத்திருக்கும் ரஷீத் கான், தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாகி, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தன் பெயரையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

- தி இந்து, 09/3/18

03/03/2018

27 வயதில் அமைச்சர், 31 வயதில் பிரதமர்!

பழுத்த அனுபவசாலிகள்தான் உலகத் தலைவர்களாக வேண்டுமா என்ன? பல சந்தர்ப்பங்களில் திறமையுள்ள இள வயதுக்காரர்கள்கூட உலகத் தலைவர்களாகி ஆச்சரியமூட்டியிருக்கிறார்கள். இந்த வரிசையில் ஆஸ்திரியாவின் செபாஸ்டின் குர்ஷ் 31 வயதில் பிரதமராகி (அந்த ஊரில் வேந்தர் என்கிறார்கள்), உலகின் இளம் தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
அண்மையில் ஆஸ்திரியாவில் நடைபெற்ற தேர்தலில் செபாஸ்டின் குர்ஷினுடைய கன்சர்வேட்டிங் மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் பதவிக்கு அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதரக் கட்சிகளுடன் சேர்ந்து அந்தப் பதவியை கைப்பற்றுவதில் அவர் முனைப்புக் காட்டினார். 27 வயதிலேயே முக்கிய துறையான வெளியுறவுத் துறையைக் கவனித்து வந்தவர் செபாஸ்டின் குர்ஷ். இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளின் இளம் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற அந்தஸ்தை ஏற்கெனவே பெற்றிருந்தார். ஆனால், தற்போது பிரதமராகி, உலகிலேயே இளம் உலகத் தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார்.

வட கொரியாவின் அதிபராக இருக்கும் ஜிம் ஜாங் உன்தான் இதுவரை உலகின் இளம் தலைவராக இருந்துவந்தார். 36 வயதான அவர், அதிபர் பதவியை ஏற்கும்போது 30 வயதுதான் ஆனது. அந்தச் சாதனையை செபாஸ்டின் குர்ஷ் முறியடிக்க முடியாது என்றாலும், தற்போதைய நிலையில் உள்ள உலகத் தலைவர்களில் மிகவும் இள வயதுக்காரர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு ஐரோப்பாவின் குட்டி நாடான சான் மரினோவின் தலைவர்களில் ஒருவரான வெனிஷா அம்ரோஸியோ இந்தப் பெருமையைப் பெற்றிருந்தார். அவர் கடந்த (2017) ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர்வரை சான் மரினோவின் தலைவராக இருந்தபோது அவரது வயது 28தான். கிம் ஜாங் உன்னுக்கு பிறகு உலகின் இளம் தலைவராக வெனிஷா பார்க்கப்பட்டார். ஆனால், அக்டோபர் முதல் தேதியில் அவரது சுழற்சி முறை பதவி முடிவுக்கு வந்ததால், ஆஸ்திரியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற செபாஸ்டினுக்கு உலகின் இளம் தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.

உலகின் இளம் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கிம் ஜாங் உன் சர்ச்சைக்குரிய தலைவ
ராகவே பார்க்கப்படுகிறார். ஐரோப்பாவின் பெரிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் (39 வயது), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45 வயது) போன்ற இளம் தலைவர்கள் மக்கள் செல்வாக்குமிக்கவர்களாக விளங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் செபாஸ்டின் குர்ஷுக்கு இடம் கிடைக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

- தி இந்து, 27/10/17

குறைத்து மதிப்பிட முடியாத குரங்குகள்

அறிவியல் புனைவுக் கதைகளுக்கு ஹாலிவுட்டில் எப்போதுமே வரவேற்பு அதிகம். அதுவும் வித்தியாசமான அறிவியல் புனைவுக் கதை என்றால் கேட்கவே வேண்டாம். 2011, 2014-ம் ஆண்டுகளில் வெளியான ‘தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’, ‘டான் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ஆகிய படங்கள் அந்த ரகம்தான்.

இவை பெற்ற வெற்றி, தற்போது ‘வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்ற மூன்றாவது பாகமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. மனித மூப்பு நோய்களை எதிர்த்துப் போராடும் மருந்தைக் கண்டுபிடிக்க முயலும் நாயகன், மனிதக் குரங்கு ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.
அந்த மருந்து செலுத்தப்பட்ட குட்டிக் குரங்கு வளர வளர மனிதரைப் போல் சிந்திக்கும் ஆற்றல் முதல் பேசும் ஆற்றல்வரை அனைத்தையும் பெற, அது காட்டிலிருக்கும் தனது குரங்கு இனத்தைத் திரட்டி மனித இனத்துடன் மோதத் தொடங்குவதுதான் கதை.

இந்தப் படத்தில் ராணுவத்துடன் மோதிச் சண்டையில் தோற்றுப்போன குரங்குகள் பழிதீர்ப்பதற்காக மீண்டும் போர் புரிய வருகின்றன. குரங்குகள்தானே என்று குறைத்து மதிப்பிட்டுத் துப்பாக்கிகளுடனும் நவீன ஆயுதங்களுடனும் சண்டையிடும் மனிதர்களுடன் நேருக்கு நேராக மோதும் குரங்குகளின் கதி என்னவாகிறது என்பதுதான் இந்தப் புதிய பாகத்தின் கதை.
இந்தப் படத்தின் ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நவீன ஆயுதங்களுடன் வரு
ம் மனிதர்களைப் பழங்கால ஆயுதங்களுடன் குரங்குகள் எதிர்கொள்வது போன்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. இந்தப் படத்தை மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ளார்.

- தி இந்து, 2017 ஜூன்