26/09/2014

மக்களுக்கு என்றுமே ‘அட்டகத்தி’தான்!

ஐந்து படங்களைத் தாண்டிவிட்டாலும் மக்களுக்கு இன்னும் ‘அட்டகத்தி’ தினேஷ்தான். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் அழுத்தமாகப் பொருந்தி, யதார்த்த மான நடிப்பைத் தந்தவர் தினேஷ்.
‘குக்கூ’வில் பார்வையற்ற இளைஞராகக் கலங்கவைத்த இவர், தற்போது நடித்து முடித்திருக்கும் படம் ‘திருடன் போலீஸ்’. நண்பர்களுடன் ஜாலி அரட்டையில் ஈடுபட்டிருந்தவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்…


தனுஷின் நட்பு வட்டம் எப்படிச் சாத்தியமாச்சு?

சக திறமையாளர்களைச் சட்டுன்னு அங்கீகரிக்கிற மனுஷன் அவர். சிவகார்த்திகேயனை வைச்சு எதிர்நீச்சல் பண்ணாரு. இப்போ விஜய் சேதுபதி - நயன்தாராவை வைச்சு பண்றாரு. என்னை வைச்சு விசாரணை பண்றார். எல்லாரையும் புரோமோட் பண்ற மனசு ரொம்ப சவாலான குணம், அது தனுஷ்கிட்ட இருக்கு.

திருடன் போலீஸ் என்ன கதை?

இது ரொம்ப எமோஷனல் கதை. இந்தப் படம் அப்பாக்களுக்கான படமாக இருக்கும். இருக்குறப்ப தொல்லையா நினைக்கிற உறவுகளை இறந்த பிறகு தெய்வம்னு பேசுறோம். அதான் படமே. சிரிச்சு சிரிச்சு வயிறு வெடிக்கப் பெரிய ஏரியா இருக்கு. அதனால் இதைத் துள்ளல் படம்னு சொல்லனும்.

ஹீரோவா நடித்துக்கொண்டே நட்புக்காகவும் பல படங்கள்ல தலை காட்டுறீங்களே, உங்கள் இமேஜைப் பாதிக்காதா?

கண்டிப்பா பாதிக்காது. எதிர்நீச்சல் படத்தில் ‘அட்டகத்தி’ படத்தோட ஃபாலோ மாதிரிக் கடைசியில் ஒரு சீன் வைச்சாங்க. நான் எதிர்பார்க்காத அளவுக்கு அந்தக் காட்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சது. இதுக்கு இயக்குநரின் புத்திசாலித்தனம்தான் காரணம். விஜய் சேதுபதிக்காகப் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிச்சேன்.
இப்போ என்னோட ‘திருடன் போலீஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு பாட்டு பண்ணியிருக்கிறார். ஜீவா, ஆர்யா மாறிமாறி மத்தவங்க படங்களில் நடிச்சாங்க. இப்போ பீல்டில் பிஸ்னஸ்தான் முக்கியம். இது மார்க்கெட்டிங் உத்தின்னு நீங்க எடுத்துக்கிட்டாலும் அதுவும் சரிதான்.

ரெண்டு படம் ஹிட் கொடுத்தாச்சு... அடுத்து ஆக்‌ஷன் அவதார்தானே வழக்கமா இருக்கும்?

குக்கூ ரொம்ப கனமான படம். அதனால ரெண்டு படம் தள்ளி ஆக்‌ஷனைக் கையில எடுக்கிறதுன்னு முடிவு. நினைச்ச மாதிரியே ‘உள்குத்து’ வந்து சிக்கிடுச்சு. அது அதிரடி ஆக்‌ஷன் படம்தான். திருடன் போலீஸ் படத்துலயும் ஆக்‌ஷன் இருக்கு. ஆனா அது கதையோட சேர்ந்த ஆக்‌ஷன். எனக்குத் தகுந்த மாதிரி ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்‌ஷன் வச்சுருக்காரு.

அறிமுகப் படம் ஹிட்டடிச்சா உடனே ரசிகர் மன்றங்கள் வந்துடும். உங்களுக்கு வந்தாச்சா?

அய்யோ, மாட்டிவிடாதீங்க. ரசிகர் மன்றங்களை என்னால மேனேஜ் பண்ண முடியாது. கடலூரில் சில பேர் பேனர் வைச்சு, மாலை போட்டு, அதை போட்டோ எடுத்து அனுப்பினாங்க. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. என்னைப் பொறுத்தவரை என் படங்களை ரசிகர்கள் வந்து பார்த்தாலே போதும். அவங்களோட அன்பு போதும். ஒரு கூட்டத்தைத் தோளில் சுமக்குறது என்னால முடியாது. ஷூட்டிங் முடிஞ்சா எப்போ வீட்டுக்குப் போகலாம்னு நினைக்கிற ஆளு நான்.

உங்களுக்குக் கிடைச்ச பொக்கிஷப் பாராட்டு?

எதேச்சையாக ஒருமுறை கவுண்டமணியைப் பார்த்தபோ ‘ஏய், அட்ட, என்னப்பா?’ன்னு கேட்டாரு. எனக்கு ரொம்ப வியப்பா போச்சு. குக்கூ படத்துல கண்ணு வலிக்காம எப்படி நடிச்சேன்னு கேட்டாரு. அவரு அப்டேட்டா இருக்குறதைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்.

யார் கூடச் சேர்ந்து நடிக்க ஆசை?

ரஜினியோட நடிக்கணும்னு ஆசை இருக்கு. அவருகூட எந்த ரோல் கிடைச்சாலும் நடிக்க நான் ரெடி. (‘கபாலி’ படத்தில் தினேஷ் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது).

- தி இந்து,  26/9/14

07/09/2014

அமரகாவியம் விமர்சனம்


நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம், ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ என எதிர்பார்ப்புகளுடனும்,  படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர் என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமரகாவியம். இந்த எதிர்பார்ப்பை அமரகாவியம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை தியேட்டரில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸே சொல்லிவிடுகிறது.

 நாம் பார்த்துப் பார்த்து அழுத்துப் போன விடலைப் பருவத்து காதல்தான் கதையின் கரு. கைதியாக போலீஸ் வேனில்தான்  கதையின்  நாயகன் சத்யா அறிமுகமாகிறார். அங்கிருந்து ஃப்ளாஷ்பேக் விரிகிறது. 

 சத்யாவும்,  நாயகி மியா ஜார்ஜும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.  சத்யாவின் நண்பன் மியாவை காதலிக்கிறார். நண்பனின் காதலுக்கு தூது போகிறார் சத்யா. அங்கு சத்யாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சத்யாவைப் பார்த்து மியா சொல்கிறார்.  நண்பனா, காதலியா என குழப்பத்துக்கு இடையே காதலை ஏற்கிறார் சத்யா. காதல் பறவைகளின் பயணத்தில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதன்பிறகு ஏற்படும் குழப்பங்கள், முட்டல்கள், மோதல்கள், பிரச்சினைகள்தான்  மீதிக் கதை.

 முதல்பாதி படம் பார்க்க கொஞ்சம் பொறுமை தேவை. படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரத்தை  இழுஇழுவென இழுத்திருக்கிறார் இயக்குநர்.  விடலைப் பருவத்து காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் இடைச்சொருகல்களாகவே உள்ளன.

நாயகியின் அப்பா  நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு தீ வைத்து விட்டு, அதேவீட்டின் இன்னொரு அறையில்  நாயகனும்  நாயகியும் உருகி மருகுவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இப்படி சில காட்சிகள் யாதார்த்தத்தை மீறியே உள்ளன.

கடிதங்கள் மூலம் காதல் வளர்க்கும் காலமான 1988-89- களில் நடப்பது போல் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடையலங்காரம் படத்தில் மிஸ்ஸிங். படத்தில்  ஹீரோ சத்யா நன்றாக நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் அவர் செய்கிறார். அதற்காக எப்போதும் ஒரே இறுக்கத்துடன் முகத்தைக் காட்டியிருப்பதை தவிர்க்கலாம். ஆர்யாவின் பாதிப்பு சத்யாவின் நடிப்பில் தெரிந்தாலும், இந்தப் படம் அவருக்கு ஒரு ஏற்றத்தைத்தரும் என்று நம்பலாம்.

கதாநாயகி மியா அழகாக மட்டுமில்லை. நன்றாக நடிக்கவும் செய்கிறார். மூக்குத்தியை மறந்துவரும் இந்தக் காலத்து இளம் பெண்களுக்கு மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை காட்சிக்கு காட்சி அவரது முகத்தைக் காட்டும்போதே தெரிகிறது. தமிழ் திரையுலகிற்கு நல்வரவாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.  ‘மைனா’,  ‘கும்கி’ போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமையாவை ஊறுகாய் போல இயக்குநர் பயன்படுத்திருயிருக்கிறார்.

படத்திற்கு இசை ஜிப்ரான். பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. இயக்கத்திலும், இழுவையான திரைக்கதையிலும் குறைகள் இருந்தாலும் ஒளிப்பதிவில் ஜீவா சங்கர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 ‘காவியம்’ என்ற பெயரையும் தாங்கி வந்திருப்பதால், நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக் கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது  ‘அமரகாவியம்’.

மதிப்பெண்: 2 / 5