30/01/2012

பாழடைந்த கோயிலை புனரமைக்கும் ராகவா லாரன்ஸ்!

   



டான்ஸர், மாஸ்டர், நடிகர், இயக்குனர், சமூக சேவகர் என பல முகங்களுக்குச் சொந்தக்காரர் ராகவா லாரன்ஸ். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான இவரை இப்போது முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார் சிவன். சென்னை பூந்தமல்லியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மேவளூர் குப்பத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த பாழடைந்த சிவன் கோயிலுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் மனிதர்!

ஷூட்டிங், வீடு, டிரஸ்ட் என எல்லாவற்றையும் துறந்து 12 நாட்களாக இங்கேயே தங்கி சிவபுராணம் பாடி வரும் ராகவா லாரன்ஸை சந்தித்தோம்...

‘‘நான் பொறந்து வளர்ந்தது சென்னை ராயபுரம்தான். அப்பாவுக்குச் சொந்த ஊரு மேவளூர் குப்பம். சொந்த ஊர்ல டிரஸ்ட் சார்பா ஏதாவது செய்யணும்னு ஒரு இடத்தை வாங்கி குடிசை போட்டு பசங்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தோம். குடிசையில இருந்து பார்த்தா பாழடைந்த இந்த சிவன் கோயில் நல்லாத் தெரியும். வள்ளீஸ்வரன் ஆலயம். ‘காஞ்சனா’ படத்துல ஒரு பெரிய மரத்தடி முன்னால நடனக் காட்சி வரும். அப்போ எனக்கு இந்தக் கோயில் மரத்தடி ஞாபகத்துக்கு வந்துச்சு. உடனே வந்து பார்த்தேன். ஆனா, ஷூட்டிங்குக்கு சரி வரல.

பொங்கலுக்கு முன்னால இங்கே வந்தப்ப கோயிலைப் பத்தி விசாரிச்சேன். ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்னால கட்டின பழமையான கோயில்னு சொன்னாங்க. பிரமிப்பா இருந்துச்சு. கோயில திறந்து பார்க்கலாம்னு சொன்னேன். எல்லோரும் மறுத்தாங்க. கிராமத்துக்காரங்கள கூப்பிட்டா, ‘ஐயோ... பாம்பு இருக்கும்’னு சொல்லி தலைதெறிக்க ஓடினாங்க. நண்பர்களை வச்சு கோயில திறந்தேன். எல்லா இடமும் சிதிலமடைஞ்சு கிடந்துச்சு. மூலவரா சிவனும், இன்னொரு பக்கம் பெருமாளும் இருந்தாங்க.

சிவனும் பெருமாளும் ஒரே இடத்துல இருக்குறது ரொம்ப அபூர்வம். பாத்த உடனேயே புல்லரிச்சுப் போய் உட்கார்ந்துட்டேன். அப்பதான் இந்தக் கோயில சுத்தமாக்கணும்னு தோணுச்சு’’ என்ற ராகவா லாரன்ஸ் தொடர்கிறார்...

‘‘எனக்கு ஆறு மாதங்களாகவே பூமியிலிருந்து லிங்கம் எடுக்குற மாதிரி கனவு வந்துக் கிட்டே இருந்துச்சு. ராக வேந்திரா கோயில் கட்டினதுக்குப் பிறகு, வேற ஏதாவது செய்யணும்னு மனசுல மணி அடிச்சுக் கிட்டே இருந்துச்சு. திருவண்ணாமலையில் கோயில் கட்டணும்னு நினைச்சேன்.

 இந்த நேரத்துலதான் இந்தக் கோயில் கண்ணுல பட்டிருக்கு. சொந்த ஊர் கோயில்னா எப்படி விட முடியும்? அதான் தெலுங்கு பட ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு, களத்துல இறங்கிட்டேன்.

இந்தக் கோயிலுக்கு வந்தபிறகு அதிசயங்களா நடக்குது. முதல் நாள் கோயில் பக்கத்துல இருந்த மடப்பள்ளி, புற்றுக்கோயிலை இடிச்சிடலாம்னு முடிவு பண்ணி வேலைல இறங்கினோம். திடீர்னு மடப்பள்ளியில இருந்து ஒரு பாம்பு வந்து, புத்துக்கோயில் மேல சுத்திக்கிட்டு நின்னுச்சு. ‘நாம தப்பு செய்ய இருந்தோம். அதான் பாம்பு வடிவுல கடவுள் தடுக்குறார்’னு அந்தப் பணியை நிறுத்திட்டோம். மடப்பள்ளி பக்கத்துல ஒரு பெரிய மரம் இருக்கு. அது என்ன மரம்னு மண்டையைப் போட்டு குடைஞ்சுக்கிட்டு இருந்தேன். தற்செயலா ஒரு பத்திரிகை வாங்கிப் பார்த்தா, எனக்கு பதில் தர்ற மாதிரி வாகை மரம் பத்தி போட்டிருந்துச்சு. இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அற்புதம்’’ என்கிற ராகவா லாரன்ஸ், இந்தக் கோயிலில் பூஜை செய்வதற்காக அர்ச்சகர் ஒருவரையும் நியமித்திருக்கிறார்.

‘‘இப்படி மிராக்கிள் நடந்த பிறகுதான் வீட்டுக்கு போன் போட்டு, ‘12 நாள் வரமாட்டேன்’னு சொன்னேன். ‘பொங்கல் நேரத்துல நீ வீட்டுல இல்லாம இருந்தா எப்படி’ன்னு எல்லாரும் வருத்தப்பட்டாங்க. வீட்ல எல்லாரையும் இங்க வரவழைச்சேன். டிரஸ்ட்டுல இருக்கற 100 குழந்தைகள் வந்தாங்க. இங்கேயே பொங்கல் வச்சு படைச்சு சாப்பிட்டோம்.

வேலைகளை முடிச்சு, ஒரு வருஷத்துல கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தலாம்னு மனசில ஓடிக்கிட்டு இருக்கு. ஆரம்பகட்ட பணிகள மட்டும் சொந்தப் பணத்துல செய்றேன். கும்பாபிஷேகத்தை தனி ஒருத்தரா பண்ணக்கூடாது. அப்போ திருப்பணிக்குழு அமைச்சு செய்யலாம்னு இருக்கேன். அதோட, இங்கேயே வீடு கட்டிக் குடியேறலாம்னு முடிவு செஞ்சிட்டேன். இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வாங்க. நம்ம வீடு இங்க இருக்கும். அதுக்கு அந்த ராகவேந்திராவும், இந்த சிவனும் அருள் புரிவாங்க!’’  பரவசமாகப் பேசுகிறார் லாரன்ஸ்.

குங்குமம்,  30-01-2012


No comments:

Post a Comment