30/01/2012

46 தலைமுறை கண்ட ஓட்டல்

ஓட்டல்கள் இல்லாத நாடுகளே இல்லை. தெருவுக்குத் தெரு வகை வகையான ஓட்டல்கள் புற்றீசல் போல் பெருகியிருக்கு, பல நூற்றாண்டுகளாக ஒரே ஒரு ஓட்டல் இன்னும் அதே புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் நம் நாட்டில் இல்லை. ஜப்பான் நாட்டில் உள்ளது.

அந்நாட்டு ஹோன்ஷு தீவில் இஷிகாவா என்ற இடத்தில் உள்ளது பல தலைமுறைகள் கண்ட இந்த ஓட்டல். ஹோஷி என்பவரால் இந்த ஓட்டல் தொடங்கப்பட்டது. இதற்கு ‘ரயோகன்’ என்று பெயரிடப்பட்டது. இந்த ஓட்டல் கட்டி எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்ப மாட்டீர்கள்! சுமார் 1294 ஆண்டுகள் (தற்போது 1300 ஆண்டுகள்) ஆகிவிட்டன. கி.பி. 718ல் இந்த ஓட்டல் கட்டப்பட்டது. ஹோஷிக்குப் பின் அவரது வாரிசுகள் வாழையடி வாழையாக ஓட்டலை நிர்வகித்து வருகின்றனர். தற்போது ஓட்டலை நிர்வகித்து வருவது 46வது தலைமுறை!

100 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் 450 பேர் தங்க முடியும். காலத்துக்கு ஏற்ப பல நவீன வசதிகளும் ஓட்டலில் புகுத்தப்பட்டுள்ளன. இப்படி பல சிறப்புகளைப் பெற்றுள்ள ரயோகன் ஓட்டல், மிகப் பழமையான ஓட்டல் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இந்த ஓட்டலின் சிறப்பம்சமே ஜப்பான் நாட்டு உணவு வகைகளை கொஞ்சமும் பழமை மாறாமல் அதே பாரம்பரியத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான். ஓட்டல் கட்டிய புதிதில் ஜப்பான் நாட்டு பருவநிலைக்கு ஏற்ப அந்தந்த பருவத்தின் பெயர்களை ஓட்டல் அறைகளுக்கு பெயராகச் சூட்டினார் ஹோஷி. இது இன்றும் அப்படியே தொடர்கிறது!

- முத்தாரம், 30/01/12

பாழடைந்த கோயிலை புனரமைக்கும் ராகவா லாரன்ஸ்!

   



டான்ஸர், மாஸ்டர், நடிகர், இயக்குனர், சமூக சேவகர் என பல முகங்களுக்குச் சொந்தக்காரர் ராகவா லாரன்ஸ். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான இவரை இப்போது முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார் சிவன். சென்னை பூந்தமல்லியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மேவளூர் குப்பத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த பாழடைந்த சிவன் கோயிலுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் மனிதர்!

ஷூட்டிங், வீடு, டிரஸ்ட் என எல்லாவற்றையும் துறந்து 12 நாட்களாக இங்கேயே தங்கி சிவபுராணம் பாடி வரும் ராகவா லாரன்ஸை சந்தித்தோம்...

‘‘நான் பொறந்து வளர்ந்தது சென்னை ராயபுரம்தான். அப்பாவுக்குச் சொந்த ஊரு மேவளூர் குப்பம். சொந்த ஊர்ல டிரஸ்ட் சார்பா ஏதாவது செய்யணும்னு ஒரு இடத்தை வாங்கி குடிசை போட்டு பசங்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தோம். குடிசையில இருந்து பார்த்தா பாழடைந்த இந்த சிவன் கோயில் நல்லாத் தெரியும். வள்ளீஸ்வரன் ஆலயம். ‘காஞ்சனா’ படத்துல ஒரு பெரிய மரத்தடி முன்னால நடனக் காட்சி வரும். அப்போ எனக்கு இந்தக் கோயில் மரத்தடி ஞாபகத்துக்கு வந்துச்சு. உடனே வந்து பார்த்தேன். ஆனா, ஷூட்டிங்குக்கு சரி வரல.

பொங்கலுக்கு முன்னால இங்கே வந்தப்ப கோயிலைப் பத்தி விசாரிச்சேன். ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்னால கட்டின பழமையான கோயில்னு சொன்னாங்க. பிரமிப்பா இருந்துச்சு. கோயில திறந்து பார்க்கலாம்னு சொன்னேன். எல்லோரும் மறுத்தாங்க. கிராமத்துக்காரங்கள கூப்பிட்டா, ‘ஐயோ... பாம்பு இருக்கும்’னு சொல்லி தலைதெறிக்க ஓடினாங்க. நண்பர்களை வச்சு கோயில திறந்தேன். எல்லா இடமும் சிதிலமடைஞ்சு கிடந்துச்சு. மூலவரா சிவனும், இன்னொரு பக்கம் பெருமாளும் இருந்தாங்க.

சிவனும் பெருமாளும் ஒரே இடத்துல இருக்குறது ரொம்ப அபூர்வம். பாத்த உடனேயே புல்லரிச்சுப் போய் உட்கார்ந்துட்டேன். அப்பதான் இந்தக் கோயில சுத்தமாக்கணும்னு தோணுச்சு’’ என்ற ராகவா லாரன்ஸ் தொடர்கிறார்...

‘‘எனக்கு ஆறு மாதங்களாகவே பூமியிலிருந்து லிங்கம் எடுக்குற மாதிரி கனவு வந்துக் கிட்டே இருந்துச்சு. ராக வேந்திரா கோயில் கட்டினதுக்குப் பிறகு, வேற ஏதாவது செய்யணும்னு மனசுல மணி அடிச்சுக் கிட்டே இருந்துச்சு. திருவண்ணாமலையில் கோயில் கட்டணும்னு நினைச்சேன்.

 இந்த நேரத்துலதான் இந்தக் கோயில் கண்ணுல பட்டிருக்கு. சொந்த ஊர் கோயில்னா எப்படி விட முடியும்? அதான் தெலுங்கு பட ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு, களத்துல இறங்கிட்டேன்.

இந்தக் கோயிலுக்கு வந்தபிறகு அதிசயங்களா நடக்குது. முதல் நாள் கோயில் பக்கத்துல இருந்த மடப்பள்ளி, புற்றுக்கோயிலை இடிச்சிடலாம்னு முடிவு பண்ணி வேலைல இறங்கினோம். திடீர்னு மடப்பள்ளியில இருந்து ஒரு பாம்பு வந்து, புத்துக்கோயில் மேல சுத்திக்கிட்டு நின்னுச்சு. ‘நாம தப்பு செய்ய இருந்தோம். அதான் பாம்பு வடிவுல கடவுள் தடுக்குறார்’னு அந்தப் பணியை நிறுத்திட்டோம். மடப்பள்ளி பக்கத்துல ஒரு பெரிய மரம் இருக்கு. அது என்ன மரம்னு மண்டையைப் போட்டு குடைஞ்சுக்கிட்டு இருந்தேன். தற்செயலா ஒரு பத்திரிகை வாங்கிப் பார்த்தா, எனக்கு பதில் தர்ற மாதிரி வாகை மரம் பத்தி போட்டிருந்துச்சு. இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அற்புதம்’’ என்கிற ராகவா லாரன்ஸ், இந்தக் கோயிலில் பூஜை செய்வதற்காக அர்ச்சகர் ஒருவரையும் நியமித்திருக்கிறார்.

‘‘இப்படி மிராக்கிள் நடந்த பிறகுதான் வீட்டுக்கு போன் போட்டு, ‘12 நாள் வரமாட்டேன்’னு சொன்னேன். ‘பொங்கல் நேரத்துல நீ வீட்டுல இல்லாம இருந்தா எப்படி’ன்னு எல்லாரும் வருத்தப்பட்டாங்க. வீட்ல எல்லாரையும் இங்க வரவழைச்சேன். டிரஸ்ட்டுல இருக்கற 100 குழந்தைகள் வந்தாங்க. இங்கேயே பொங்கல் வச்சு படைச்சு சாப்பிட்டோம்.

வேலைகளை முடிச்சு, ஒரு வருஷத்துல கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தலாம்னு மனசில ஓடிக்கிட்டு இருக்கு. ஆரம்பகட்ட பணிகள மட்டும் சொந்தப் பணத்துல செய்றேன். கும்பாபிஷேகத்தை தனி ஒருத்தரா பண்ணக்கூடாது. அப்போ திருப்பணிக்குழு அமைச்சு செய்யலாம்னு இருக்கேன். அதோட, இங்கேயே வீடு கட்டிக் குடியேறலாம்னு முடிவு செஞ்சிட்டேன். இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வாங்க. நம்ம வீடு இங்க இருக்கும். அதுக்கு அந்த ராகவேந்திராவும், இந்த சிவனும் அருள் புரிவாங்க!’’  பரவசமாகப் பேசுகிறார் லாரன்ஸ்.

குங்குமம்,  30-01-2012


16/01/2012

அடுத்த புயலின் பெயர் என்ன?

சமீபத்தில் கடலூரையும், புதுச்சேரியையும் புரட்டிப் போட்டுவிட்டுச் சென்ற ‘தானே’ புயல் பெயர் தானாக வந்ததல்ல. மியான்மர் கொடுத்த பெயர். புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கம் எப்படித் தோன்றியது? இதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது!

கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை தொடங்கியவர்கள் ஆஸ்திரேலியர்களே. சுமார் 70 ஆண்டுகளுக்கு  முன்பே இந்த வழக்கத்தை தொடங்கிவிட்டார்கள. ஏதோ பெருமைக்காக இந்தப் பெயரை அவர்கள் சூட்டவில்லை. பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவின் சின்னமாக உருவகப்படுத்த இப்படி பெயர் வைக்க ஆரம்பித்தனர் ஆஸ்திரேலியர்கள். 1950&களில் இந்த வழக்கத்தை அமெரிக்கா ‘சுட்டு’ தங்கள் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்க ஆரம்பித்தது. இப்படி ஆளாளுக்கு பெயர் சூட்டுவதைத் தடுக்க, சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன் படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகமானது.

இந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவா கும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப் பட்டது. இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்துக் கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொரு புயலுக்கும் சூட்டப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு 2004ம் ஆண்டில் இருந்து பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

 கடந்த சில ஆண்டு களில் 5 முறை புயல்கள் ஏற்பட் டன. அந்த புயல்களுக்கு பட்டிய லில் உள்ள வரிசைப்படி லைலா, பந்த், பெட், கிரி, ஜல் என பெயர் கள் சூட்டப்பட்டன. இதில் ‘லைலா’ பெயரை பாகிஸ்தான், ‘பந்த்’ பெயரை இலங்கை, ‘பெட்’ பெயரை தாய்லாந்து, ‘கிரி’ பெயரை வங்கதேசம், ‘ஜல்’ பெயரை இந்தியா வும் தேர்வு செய்து கொடுத்தன. இதில் லைலா மற்றும் ஜல் புயல்கள் சிறிது பரபரப்பை ஏற்படுத்தின.

2011ம் ஆண்டு சீசனில் அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புய லுக்கு மாலத்தீவு தேர்வு செய்து கொடுத்த ‘கெய்லா’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக சமீபத்தில் ஏற்பட்ட புயலுக்கு ‘தானே’ என்ற பெயர் சூட்பப்பட்டது. இப் பெயரை வழங்கியது மியான்மர். அந்நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரைக் குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டது.

இந்த வரிசையில் வங்கக் கடலில் அடுத்து புயல்கள் ஏற்பட்டால் என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதும் வரிசைப்படி 1 முடிவாகி விட்டன. அந்தப் பெயர்கள் என் னென்ன? முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (பாகிஸ்தான்).

- முத்தாரம், 12-01-2012