
மூன்று அடுக்குகளைக் கொண் டது பூமி. இதன் உட்புறக்கருவிலும், அதை ஒட்டிய நடுப்பகுதியிலும்
5000 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பநிலையில் கொதிக்கும் குழம்பு போன்று இருக்கிறது.
இதன் மேற்புறம் இருக்கும் தட்டில்தான் நாம் இருக்கிறோம். இந்த தட்டு கடலின் ஆழப்பகுதியில்
4 முதல் 10 கிலோமீட்டர் தடிமனும், நிலப்பகுதியில் 32 முதல் 71 கி.மீ. தடிமனும் கொண்டது.
இந்த தட்டு ஒன்றாக இல்லை. கால்பந்தின் மேலே இருக்கும் கட்டங்கள் போல 12 தனித்தனி தட்டுகளாகவே
உள்ளன. இந்த 12 தட்டுகளின் மேல்தான் எல்லா கண்டங்களும், கடல்களும் இருக்கின்றன.
பூமிப்பந்தின் உட்புறக் குழம்பில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளால் இந்த 12 தட்டுகளும்
மெல்ல நகர்கின்றன. இந்த நகர்வு கிட்டத்தட்ட நமக்கு நகம் வளர்கிற அதே வேகத்தில்தான்
நிகழ்கிறது. இவ்வளவு மெதுவாக நகர்ந்தாலும் அதன் விளைவுகள் மிக பயங்கரமானவை. இந்த தட்டுகள்
ஒன்றோடொன்று மோதுகிற நேரத்தில் பூகம்பம் ஏற்படுகிறது. ஓராண்டில் உலகம் முழுக்க நடக்கிற
பூகம்பங்களின் மொத்த சக்தி, ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டுகளைப் போல ஒரு லட்சம் அணுகுண்டுகளுக்கு
ஈடானது!
கடலுக்கடியில் ஒரு பூகம்பமோ, எரிமலைச்சீற்றமோ ஏற்படும்போது அதன் வீரியத்தைப் பொறுத்தே
சுனாமி ஏற்படுகிறது. கடலில் ஏற்படும் இந்த திடீர் மாற்றத்தால் உருவாகும் பெரிய, வேகமாகச்
செல்லக்கூடிய அலைகள்தான் சுனாமி. இவை சாதாரண கடலலைகள் போல வரிசையாக அடுத்தடுத்து வராது.
ஒரு அலைக்கும் அடுத்த அலைக்கும் இடையே சமயத்தில் நூறு கி.மீ. இடைவெளி கூட இருக்கும்.
ஒரு சுனாமி கரையைத் தாக்கிய பிறகு ஒருமணி நேரம் கழித்துக்கூட அடுத்த சுனாமி தாக்கும்.
சுனாமி வருவது கடலின் மேல்மட்டத்திலிருந்து பார்த்தால் தெரியவே தெரியாது. அது கடலின்
ஆழமான பகுதியிலேயே மிகவேகமாகப் பயணிக்கும். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். சமயங்களில்
800 கி.மீ. வேகத்தில்கூட அது கரையை நோக்கி வரும். லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சுனாமி ஏற்படுகிறது
என்றால் அந்த நொடியே நீங்கள் ஒரு ஜெட் விமானத்தில் சீறிப்பறந்தால்கூட நீங்கள் டோக்கியோ
போய்ச் சேருவதற்குள் அது சேர்ந்து தாக்கிவிடும். அவ்வளவு வேகம்!
ஆழ்கடலில் வேகமாக வரும் அது, கரையை நெருங்கும்போது கடலின் ஆழம் குறைவதால் வேகம்
குறையும். அப்படி வேகம் குறையும்போது அது தனது உயரத்தை நீட்டிக்கொள்ளும். சமயங்களில்
30 மீட்டர் உயரம் வரைகூட எழும்பும். ஜப்பானில் 33 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் எழுந்ததை
இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு உயரத்தில் அலைகள் எழுந்து வந்தால், அது கடற்கரை
நகரங்களை மூழ்கடித்து விடும்தானே? எல்லாவற்றையும் அபகரித்து விடும்தானே? அதுதான் ஜப்
பானில் நடந்தேறியிருக்கிறது.
புயல் போன்ற சீற்றங்களின்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். கரையைத் தாண்டி கடல்
யாரையும் எதுவும் செய்யாது. கடலுக்குப் போன மீனவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். சுனாமி
அப்படியே உல்டா... கடலுக்குள் இருக்கும் சின்ன கட்டுமரத்தைக்கூட இது ஒன்றுமே செய்யாது.
அதுமட்டுமல்ல, அதில் இருப்பவர்களால் ‘தங்களைத் தாண்டி படுபயங்கரமான
சுனாமி ஒன்று போகிறது’ என்பதைக்கூட உணரமுடியாது.
கடலுக்கடியில் பூகம்பம் ஏற்படும்போது அங்கிருக்கும் தண்ணீர் பெருமளவு இடம்பெயர்கிறது.
புவிஈர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் தனது இடத்துக்கே வர ஆசைப்படுகிறது. இப்படி
அது ததும்பும்போது பேரலையாக உருவெடுக்கிறது. அந்த அலையின் கனமும் வேகமும் பூகம்பத்தால்
எந்த அளவுக்கு பூமிக்கடியில் உருமாற்றங்கள் ஏற்படுகிறதோ அதைப் பொறுத்தது. ஒரு சுனாமி
தாக்குதலுக்குப் பிறகு அடுத்தடுத்து 10 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேர இடைவெளிவரை
அடுத்தடுத்த அலைகள் தாக்கும். இந்தத் தாக்குதலின் வீரியம் கரையைப் பொறுத்து மாறுபடும்.
குறுகிய வளைகுடா போன்ற பகுதிகளில் இது நுழையும்போது பெரியஅலை குறுக்கப்படுவதால் சீற்றம்
கொடுமையாக இருக்கும். கரைப்பகுதியில் மாங்குரோவ் காடுகள், பவழப்பாறைகள் இருந்தால் அவை
அலையைத் தடுப்பதால் சேதம் குறைவாக இருக்கும்.
பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிய முடியாது. அது எந்த அபாய அறிகுறிகளையும்
கொடுத்துவிட்டு வருவதில்லை. ஆனால், அதன் விளைவாக வரும் சுனாமியைக் கண்டுபிடிப்பது சாத்தியமே.
இப்படி ஒரு கண்டுபிடிப்பு சிஸ்டத்தை அமெரிக்கா உருவாக்கி இருக்கிறது. 1946 ஏப்ரல் முதல்
தேதி அன்று அலாஸ்கா அருகே ஒரு பூகம்பம் தாக்கி ஹவாய் தீவில் சுனாமி உருவாகி, 159 பேரை
சுருட்டிக் கொண்டுபோனது.
அமெரிக்கவை பதைபதைக்க வைத்த இந்தக் கொடூரத்துக்குப் பிறகு ‘பசிபிக் சுனாமி எச்சரிக்கை
அமைப்பு’ என்ற அலுவலகம் உருவாக்கப்பட்டது. சுனாமி பாதிப்புக்கு ஆளாகும் பல நாடுகள்
இதில் உறுப்பினர்கள் ஆயின. ரிக்டர் அளவில் 7.5-க்கு மேல் ஏற்படும் பூகம்பங்கள் சுனாமியை
ஏற்படுத்தக்கூடும் என்பது பொதுவான கருத்து. இப்படி ஒரு பூகம்பம் ஏற்பட்டதும் அந்தக்
கடலுக்கு அருகே சுனாமி தாக்கக்கூடிய இடத்தில் இருக்கும் கரையோர மக்களுக்கு ஒரு அபாய
எச்சரிக்கை விடுக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர்கள் மூட்டைமுடிச்சுக்களைக் கட்டிக்
கொண்டு தயாராகிவிடுவார்கள். இப்படி சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் இருந்தும், ஜப்பானை அள்ளிக் கொண்டு போயிருக்கிறது
சுனாமி.
இயற்கையை யாரால் வெல்ல முடியும்?
- முத்தாரம், 21-3-2011