22/09/2024

லப்பர் பந்து விமர்சனம்


வியரான பூமாலை என்கிற கெத்து ('அட்டக்கத்தி' தினேஷ்), உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி சேவாக் என்று பெயரெடுத்தவர். தலைமுடி நரைத்தாலும் எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் ஆஜராகிவிடுவார். ஆனால், அவருடைய காதல் மனைவிக்கு கணவர் பேட்டைத் தொடுவது பிடிக்காது. அதே ஊரில் பந்துவீச்சில் பும்ரா போல பந்துவீசி தினேஷையே திணறடிக்கிறார் அன்பு (ஹரீஸ் கல்யாண்). இதனால், இவர்களுக்குள் கிரிக்கெட்டில் ஈகோ வளர்கிறது. இதற்கிடையே தினேஷின் மகள் துர்காவுக்கும் (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) ஹரீஸ் கல்யாணுக்கும் காதல் மலர்கிறது. இரு ஆண்களின் கிரிக்கெட் ஈகோவால் வளர்ந்த பகைக்கும் காதலுக்கும் இடையே என்னென்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.


ரப்பர் பந்து ரூ.15 விற்கும்போது தொடங்கும் படத்தின் கதை ரூ.55 விற்கும்போது முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உணர்ச்சிமிகு சம்பவங்களின் அழகான ‘மாண்டேஜ்’தான் படத்தின் கதை. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன அலப்பறைகள் நடைபெறும் என்பதை அழகாகக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார், அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. குடும்பத்தைவிட கிரிக்கெட்டை வெறித்தனமான நேசிக்கும் எளியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் மனதைக் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டிய இயக்குநர் பாராட்டுக்குரியவர்.


கிராமத்து கிரிக்கெட் போட்டிகளில் நிலவும் சாதிய பாகுபாட்டை போகிறபோக்கில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் யார்க்கர் ரகம். ‘தம்பி மாதிரி’ நினைப்பதுதான் பிரச்சினை என்று இடம்பெற்றுள்ள வசனமும் சிந்திக்க வைக்கிறது. இரு கிரிக்கெட்டர்களுக்கு இடையேயான ஈகோதான் கதை என்றாலும் ஆண்களால் பெண் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் கதை பேசியிருப்பது பவுன்சர் ரகம். ஆண்களோடு சேர்ந்து ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்த்தும் வகையில், ‘அது சாதி திமிர்னா, இது ஆம்பள திமிரு’ என்று இடம்பெற்றுள்ள வசனம் சுளீர். விஜயகாந்த் பட பாடல்களைப் பயன்படுத்தியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கிறது. ஒட்டுமொத்தமாக கிரிக்கெட், காதல், சாதிய பாகுபாடு, ஆணாதிக்கம், குடும்பப் பிரச்சினைகள் என இரண்டரை மணி நேரத்தில் வெரைட்டியான சிக்ஸர்களை இயக்குநர் விளாசியிருக்கிறார்.


40 வயதிலும் வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடுவது, ஒரு பார்வையிலேயே காதல் மலர்வது எனச் சரடுகளும் கதையில் உள்ளன. அரசின் புற்றுநோய் விளம்பரத்தை காமெடி ஆக்கியதைத் தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்டை ஊகிக்க முடிந்தாலும், அழகான திரைக்கதையால் அது மறந்துவிடுகிறது. 


நீண்ட நாள் கழித்து ‘அட்டக்கத்தி’ தினேஷூக்கு ஓர் அழகான கதாபாத்திரம். அதைச் சரியாகப் பயன்படுத்தி சதம் அடித்திருக்கிறார். கர்சீப்பை சுற்றிவிட்டு கிரிக்கெட்டில் அமர்க்களப்படுத்துவது, மனைவிக்கு அஞ்சி பம்முவது, மகளின் ஆசைக்கு முன்பாக அல்லாடுவது, ஈகோவால் கோபத்தின் எல்லைக்குச் செல்வது என நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். இன்னோரு கதாநாயகன் கதாபாத்திரத்துக்கு ஹரீஸ் கல்யாண் கச்சிதம். பார்வையாலே ஈகோவை வெளிப்படுத்துவது, காதலுக்காக உருகுவது என தன் தேர்வுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.  தினேஷின் மனைவியாக வரும் சுவஸிகா அழகான தேர்வு. ஓர் எளிய குடும்பத்து மனைவியாக மனதில் நிற்கிறார். தினேஷின் மகளாக வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு பாலசரவணனும், ஜென்சன் திவாகரும்  உதவியிருக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி, டி.எஸ்.கே., கீதா ஆகியோரும் தேர்ந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.


ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் இனிமை. கதைக்குத் தேவையான பின்னணி இசையையும் வழங்கியிருக்கிறார். கிரிக்கெட் காட்சிகளை தினேஷ் புருஷோத்தமனின் கேமரா அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. வீரமணி கணேஷின் கலையாக்கமும் மதன் கணேஷின் படத்தொகுப்பும் படத்துக்குப் பக்கப்பலம். எளிய மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் கிரிக்கெட் பின்னணியில் நேர்த்தியாகச் சொல்லியதில் ‘லப்பர் பந்து’ பறக்கிறது.


மதிப்பெண்: 3.5 / 5

19/09/2024

அதிகாரத்தில் பங்கு: தமிழ்நாட்டில் சாத்தியமில்லையா?




 தமிழ்நாட்டில் நீண்ட காலம் கழித்து, ‘அதிகாரத்தில் பங்கு’ என்கிற விவாதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்திருக்கிறார். அதிகாரத்தில் பங்கு என்பதன் மூலம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்கிற முழக்கத்தைத்தான் முன்வைக்க விசிக முற்படுகிறது. இதுபோன்ற முழக்கங்கள் தமிழ்நாட்டில் புதிதல்ல. ஆனால், இதுவரை தமிழ்நாட்டில் அது சாத்தியமானதில்லை என்பது வரலாறு. குறிப்பாக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி அமரும் திராவிடக் கட்சிகள் அந்த முழக்கங்களைப் பொருட்படுத்தியதில்லை அல்லது அதற்கான வாய்ப்புகளும் உருவானதில்லை.


இணையாகப் போட்டி


தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியமைக்கும் திறன் உள்ள கட்சிகளாக திமுக, அதிமுகவே இருக்கின்றன. இந்தக் கட்சிகளின் தலைமையில் தேர்தல் கூட்டணிகள் அமைந்தாலும், வெற்றிக்குப் பிறகு தோழமைக் கட்சிகளுடன் அதிகாரத்தை அவை பங்கிட்டுக் கொண்டதில்லை. தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு இக்கட்சிகள் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிடுவது ஒரு காரணம். தேர்தலுக்கு முன்பாகவே அதிகாரத்தில் பங்கு என்று தோழமைக் கட்சிகள் வலியுறுத்த முடியாத இடத்தில் இருப்பது இன்னொரு காரணம்.


தமிழ்நாட்டில் 1967 முதலே தேர்தல் கூட்டணி உருவாகத் தொடங்கி விட்டது. 1980 தொடங்கி 1990-களின் மத்தி வரை தமிழ்நாடு தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தபோதும், காங்கிரஸுடன் இக்கட்சிகள் கூட்டணி அமைத்தபோதும்கூட அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் கோஷங்கள் எழுந்ததில்லை. 1980இல் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தபோது சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் சரிசமாகத் தொகுதிகளில் போட்டியிட்டன. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்கிற கேள்வியும் எழுந்தது. ‘மு. கருணாநிதிதான் முதல்வர்’ என்று அன்றைய பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான இந்திரா காந்தி முற்றுப்புள்ளி வைத்தார். தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறவில்லையென்றாலும், ஒரு திராவிடக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் இணையாகத் தொகுதிகளைத் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கியது வரலாறு.


புதிய சூத்திரம்


அதன்பிறகு அதிமுக – காங்கிரஸ் கூட்டணி வேறுவிதமான சூத்திரத்தைப் பின்பற்றியது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிகத் தொகுதிகளில் போட்டியிடுவது, மக்களவைக்குக் காங்கிரஸ் அதிகத் தொகுதிகளில் தமிழ்நாட்டில் போட்டியிடுவது என்று அதிகார எல்லையை வரையறுத்துக்கொண்டன. அதாவது, தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு, மத்தியில் காங்கிரஸ் அரசு. 1984 சட்டமன்றம் - மக்களவை, 1989 மக்களவை, 1991 சட்டமன்றம் - மக்களவை, 1996 சட்டமன்றம் - மக்களவைத் தேர்தல்களில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி இதைத்தான் பின்பற்றியது. எனவே, அதிமுக – காங்கிரஸ் கூட்டணிக் காலத்தில் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்கிற கோஷங்கள் எழவேயில்லை.


இதே அணுகுமுறையைத்தான் 1996இல் திமுகவும் பின்பற்றியது. அன்று காங்கிரஸிலிருந்து வெளியேறி, புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைக்கு அதிகத் தொகுதிகளையும் சட்டமன்றத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலும் தொகுதிகளையும் திமுக ஒதுக்கியது. எனவே, இயல்பாகவே அதிகாரத்தில் பங்கு அளிக்க முடியாத வகையில், தனித்தே தாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்குத் தோழமைக் கட்சிகளுக்குக் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட வைப்பதை மாறாத அணுகுமுறையாகத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்தன. 2001இல் அதிமுக கூட்டணியில் முக்கியக் கட்சிகளாக இருந்த தமாக, பாமக; 2011இல் தேமுதிக போன்ற கட்சிகளும் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் என்கிற அழுத்தத்தைக் கொடுக்க முனைந்ததில்லை.


சாதிக்க முடியாத காங்கிரஸ்


விதிவிலக்காக 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் பெரும்பான்மை பெற முடியாத நிலையைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றான திமுக எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸின் ஆதரவுடன் ஐந்து ஆண்டுகளையும் திமுக நிறைவு செய்தது. 2006-11 காலத்தில் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் வேண்டும் என்கிற கோரிக்கைகள் அக்கட்சியினர் சார்பில் தமிழ்நாட்டில் அவ்வப்போது எழவே செய்தன. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மத்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதையும், புதுச்சேரியில் காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதையும் கூறி திமுக சமாளித்தது. ஒரு வகையில், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற தங்களுடைய கொள்கையை இந்தக் காலகட்டத்தில் கச்சிதமாகவே பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளையும் திமுக பூர்த்தி செய்தது.


விசிகவின் குரல்


தற்போது ஒரு தசாப்தத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்கிற ஒரு விவாதம் எழ, திமுக கூட்டணியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயனித்துக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாகியிருக்கிறது. அதிகாரத்தில் பங்கு தொடர்பாக திருமாவளவன் பேசிய பழைய காணொளியை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டது, நீக்கியது போன்ற செயல்கள் கூட்டணி ஆட்சி என்கிற விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றன. அடித்தட்டு மக்கள் அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற வகையிலும், தேர்தலில் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிற கூட்டணி, வெற்றி பெறுகிறபோது அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைப்பதில் தவறில்லைதான். ஆனால், அது ஏன் நடைபெறுவதில்லை என்பதுதான் கேள்வி.


அதிகாரத்தில் பங்கு தொடர்பாக எழுந்த விவாதம் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவன், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தொடர்பாக முதல்வரிடம் பேசவில்லை. 1999லிருந்து நாங்கள் வலியுறுத்துகிற கருத்து இது. இதை நாங்கள் எப்போதுமே பேசுவோம்” என்று சொல்லியிருக்கிறார். திருமாவளவனின் கருத்துக்கு திமுக தரப்பிலிருந்து பதில் வரவில்லை. என்றாலும் 2006-11இல் காங்கிரஸ் தயவுடன் ஆட்சியில் இருந்தபோதே அதிகாரத்தில் பங்கு அளிக்காத திமுக, இப்போது மட்டும் எப்படி கொடுக்கும் என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. மாறாக, திருமாவளவனின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘தமிழகத்தில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்கிற கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக, திராவிடக் கட்சிகள் எப்போதும் தனித்த ஆட்சி என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.


செவிமடுக்குமா திராவிடக் கட்சிகள்?


தேர்தல் கூட்டணி என்பது தேர்தலில் வெற்றியைப் பெறுவதற்காக மட்டும் அமைக்கப்படுவதில்லை. ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும்தான். அந்த வகையில் கூட்டணி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திராவிடக் கட்சிகள், தோழமைக் கட்சிகளுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிப்பது என்பது கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு கூட்டணிக்காக வாக்களித்த மக்களுக்கும் அளிக்கும் மரியாதையும்கூட. ஆனால், தமிழ்நாட்டில் அது நிகழாமல் போவதற்கு தோழமைக் கட்சிகளிடம் உள்ள போதாமை ஒரு முக்கியக் காரணம். அது - தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்டு சவால் விடுக்கும் அளவுக்குத் தங்கள் வாக்கு வங்கியை உயர்த்தவோ, இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாமலோ போவதுதான். அதுதான் இங்கு திராவிடக் கட்சிகளுக்கு வசதியாகிவிடுகிறது.


தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் திமுக, அதிமுக அல்லாத கட்சியோ அல்லது கூட்டணியோ குறிப்பிட்ட தேர்தல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனவா? திமுக, அதிமுகவுக்கு மாற்றாகத் தேர்தலில் களமிறங்கிய கட்சிகள் எத்தனை தொகுதிகளில் வெற்றியைப் பெற்றிருக்கின்றன? தேர்தல் வெற்றிக்கு திமுக அல்லது அதிமுகவைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்தான் தோழமைக் கட்சிகள் இருக்க வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. தேர்தலில் குறைந்தபட்ச வெற்றிக்காகத் திராவிடக் கட்சிகளின் எந்த முடிவையும் சமரசம் செய்துகொண்டு ஏற்கும் நிலையில்தான் தோழமைக் கட்சிகள் இருக்கின்றன. எனில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு எப்படி அழுத்தம் கொடுக்க முடியும்? தேர்தலில் தனித்தே போட்டியிட்டாலும், குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறும் அளவுக்கு வளர்ச்சியைக் காட்டி, முக்கியத்துவத்தை உணர்த்தும்போதுதான் அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி போன்ற கோரிக்கைகளுக்கு உயிர் கிடைக்கும்; திராவிடக் கட்சிகளும் செவிமடுக்கும்.


அதே நேரத்தில் அருதி பெரும்பான்மை பெற்றபோதும் 2014, 2019இல் மத்தியில் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு அளித்து பாஜக ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற அண்டை மாநிலமான ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் பெரும்பான்மை பெற்றபோதும் குறைந்த வாக்கு வங்கி உள்ள பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கும் சந்திரபாபு நாயுடு அதிகாரத்தில் பங்கு அளித்திருக்கிறார். எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு நீண்ட நாட்களுக்கு விதிவிலக்காக  இருக்க முடியாது. அதற்கான காலமும் வெகுதூரத்தில் இல்லை. 

30/10/2023

மார்கழி திங்கள் விமர்சனம்



திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் பெற்றோரை சிறு வயதிலேயே இழந்த கவிதா (ரக்‌ஷனா), தாத்தா (பாரதிராஜா) அரவணைப்பில் வளர்கிறார். பள்ளியில் கெட்டிக்காரியாக இருக்கும் கவிதாவுடன் போட்டிப் போட்டுக்கொண்டு படிக்கிறார் விநோத் (ஷ்யாம் செல்வம்). இதில் இருவருக்கும் ஏற்படும் மோதல், பிறகு காதலாக மாறுகிறது. தன் காதலை தாத்தாவிடம் தைரியமாகச் சொல்கிறார் கவிதா. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளிக்கும் தாத்தா, இருவருக்கும் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதனால் காதலர்களுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் ‘மார்கழி திங்க’ளின் மீதிக் கதை.
அடிதடி, வெட்டு, ரத்தம் என தமிழ் சினிமா பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் கிராமத்து கதைக் களத்தை இயக்குநராகப் பரிணமித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா தேர்வு செய்ததற்கு அவருக்கு ஒரு பூங்கொத்து. ஓர் அழுத்தமான கிளைமாக்ஸை முடிவு செய்துவிட்டு, அதற்கேற்ப திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். எனவே, அதற்கேற்ப காட்சி அமைப்புகள் பின்னப்பட்டிருக்கின்றன. மனிதருக்குள் ஒரு நொடிப் பொழுதில் ஏற்படும் சாதிய வன்மமும் அதன் விளைவால் நிகழும் ஆணவக் கொலையும் பதற வைக்கிறது.
உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவரின் நம்பிக்கை துரோகத்தின் விளைவைதான் படம் சொல்ல முயல்கிறது. அதற்கு வலுச் சேர்க்க விடலைப் பருவத்து காதலாகத் தொடங்கும் கதை, சாதி, ஆணவக் கொலை எனச் சுற்றி வருகிறது.  ஆனால், அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் காட்சிகள் படத்தில் இடம் பெறாதது திரைக்கதையின் பலவீனம். நிமிர்ந்து உட்கார வைக்கும் கிளைமாக்ஸைவிட மற்ற காட்சிகள் சுவாரசியமாகவும் படமாக்கவில்லை. மேலோட்டமாக காட்டப்படும் காட்சிகள்  செயற்கைத்தனமாகவும் நாடகத்தனமாகவும் நகர்வதும் பெரிய குறை. 
கதையோட்டத்தில் திடீரென சாதிய வன்மம் எட்டிப் பார்ப்பது படத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடுகிறது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் தொடங்கும் கதைக் களத்தைக் காட்டும் வகையில் பாவாடை - தாவணி, ராங்க் சீட்டு, செல்போன் போன்ற காட்சிகளைக் காட்டுவதில் மெனக்கெட்டிருக்கும் படக்குழு, நேர்த்தியான திரைக்கதையை அமைப்பதில் காட்டியிருந்தால் படத்துக்கு வலு சேர்த்திருக்கும். 
உடலிலும் குரலிலும் தளர்வு தெரிந்தாலும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார் பாராதிராஜா. தாத்தா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பேத்தியுடன் பாசத்தில் உருகுவது, பேத்தி தைரியமாகக் காதலைச் சொல்லும்போது மவுனத்தில் உரைவது, முற்போக்கான தாத்தாவாகப் பேத்தியிடம் காட்டிக்கொண்டு வன்மம் காட்டுவது என நடிப்பிலும் இமயமாக உயர்ந்து நிற்கிறார். ஷ்யாம் செல்வம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். காதல், தவிப்பு, இயலாமை போன்ற காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். பல இடங்களில் ஒரே மாதிரியான உடல்மொழியை வெளிப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். 
நாயகியாக தேர்வு செய்ததற்கு ரக்‌ஷனா நியாயம் சேர்த்திருக்கிறார். தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.  தாத்தாவுடனான பாசம், காதலனுடனான நேசம், நம்பிக்கை துரோகத்தால் ஏற்படும் ரோஷம் என நடிப்பில் வெரைட்டிக் காட்டியிருக்கிறார். விரைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு வில்லனாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அப்புக்குட்டியை படத்தில் முழுமையாக வீணடித்திருக்கிறார்கள். 
படத்துக்கு இளையராஜா பலம் சேர்த்திருக்கிறார். இரண்டு பாடல்களும் தாளம் போட வைக்கின்றன. கிராமத்துப் பின்னணிக்கு பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. வாஞ்சிநாதன் முருகேஷனின் ஒளிப்பதிவும், தியாகுவின் படத்தொகுப்பும் படத்துக்குத் தீனிப் போடவில்லை. 
ஒரு கிராமத்து காதலையும் குரூர மனித உணர்வுகளையும் பேச முனைந்த ‘மார்கழி திங்க’ளில் ஈர்ப்பில்லை.

13/10/2023

சினிமாவுக்குள் கிரேஸி மோகன் வந்தது எப்படி? தம்பி மாது பாலாஜி ஃபிளாஷ்பேக்





 கதை, வசனகர்த்தா, நாடக ஆளுமை, நடிகர், மறைந்த கிரேஸி மோகனும் அவரது ராஜபாட்டையைத் தொடரும் அவருடைய தம்பி மாது பாலாஜியும் இணைந்து தொடங்கிய நாடகக் குழு ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’. அக்குழு 44ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது அண்ணனாக கிரேஸி மோகன் உங்களுக்கு நாடகங்கள் எழுதத் தொடங்கிய நினைவுகளைப் பகிர முடியுமா?

மோகன் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது முதல் முதலில் ‘தி கிரேட் பேங்க் ராபரி’ என்கிற நாடகத்தைப் போட்டார். அதற்கு ஏகப்பட்டப் பாராட்டுகள். அதன்பிறகு அவருக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.

அவர் எனக்காகக் கல்லூரியில் நாடகம் போடத் தொடங்கினார். அவர் எழுதியதை வைத்து, நான் நடித்துச் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுக்கொண்டு வந்துவிடுவேன். அப்போதே நா.பார்த்தசாரதி, சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களிடமிருந்து சிறந்த நடிகர் விருதைப் பெற்று வந்தேன். இவையெல்லாம் சேர்ந்துதான் எங்களுக்கென்று ஒரு நாடகக் குழுவைத் தொடங்கும் உந்துதலைக் கொடுத்தது. அதுதான் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’.

‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ நாடகங்களைக் காண சினிமா பிரபலங்கள் படையெடுத்தார்கள் இல்லையா?

ஆமாம்! 1979இல் கிரேஸி கிரியேஷன்ஸை தொடங்கினோம். ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’ தான் முதல் நாடகம். அதற்கு முன்பே எஸ்.வி.சேகருக்கும் காத்தாடி ராமமூர்த்திக்கும் மூன்று நாடகங்களை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். எங்களின் இரண்டாவது நாடகம் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’.

அந்த நாடகத்தைத்தான் ‘பொய்க்கால் குதிரைகள்’ என்கிற பெயரில் கே. பாலசந்தர் திரைப்படமாக இயக்கினார். கிரேஸி மோகன் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க அந்த நாடகம்தான் முதல் படியாக அமைந்தது. 1988இல் கமல்ஹாசனுடன் இணைந்து தொடர்ச்சியாக சினிமாவில் பயணிக்கத் தொடங்கினார் மோகன். அதே நேரத்தில் நாடகத்திலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம்.

உங்களுடைய குழுவின் புகழ்பெற்ற நாடகங்கள் பற்றி..

எங்கள் நாடகங்களில் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘மாது 2’, ‘மீசையானாலும் மனைவி’, ‘சேட்டிலைட் சாமியார்’, ‘ஜுராஸிக் பேபி’, ‘சாக்லெட் கிருஷ்ணா’ போன்றவை புகழ்பெற்ற நாடகங்கள். இதில் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘மாது 2’, ‘மதில் மேல் மாது’ போன்றவை 200 - 300 காட்சிகளைக் கடந்து இப்போதும் வெற்றிகரமாக மேடையேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த 44 ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 6,500 காட்சிகளை நடத்தி முடித்திருக்கிறோம். அவற்றில் அமெரிக்காவில் மட்டும் 160 காட்சி களை ‘சாக்லேட் கிருஷ்ணா’ கடந்திருக்கிறது.

உங்கள் நாடகக் குழுவில் பயணித்தவர்கள், பயணித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?

அன்றைக்கு அப்பா கேரக்டரில் நடிக்கத் தொடங்கிய ரமேஷ் இன்றைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். சுந்தர்ராஜன், பார்த்திபன், ரவி, சத்தியமூர்த்தி, செகரட்டரி ஜி. சீனிவாசன், இயக்குநர் காந்தன் (மௌலியின் சகோதரர்) ஆகியோர் எங்கள் குழுவில் இன்றும் பயணிக்கின்றனர்.

எங்கள் நாடகங்கள் வெற்றி பெற்றதற்கு கிரேஸி மோகனின் வசனமோ, எங்கள் நடிப்போ மட்டும் காரணம் கிடையாது. 44 ஆண்டுகளாக எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், ஒற்றுமையாக ஒரே குழுவாகப் பயணித்துக் கொண்டிருப்பதுதான் காரணம்.

‘சாக்லெட் கிருஷ்ணா’வுக்கு மட்டும் ஒரு தனி மவுசு உருவானது எப்படி?

குழந்தைகளுக்காகவே ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று 2008இல் கிரேஸி மோகன் எழுதியதுதான் ‘சாக்லெட் கிருஷ்ணா’. கடவுள் கிருஷ்ணர் ஒரு சாமானியனான மாதுவைச் சந்திக்க வருவதுதான் கதை. குழந்தைகளுக்குக் கிருஷ்ணரைப் பிடிக்கும். சாக்லெட்டையும் பிடிக்கும். நகைச்சுவையையும் குழந்தைகள் ரசிப்பார்கள்.

அதனால்தான் நாடகத்துக்கு ‘சாக்லெட் கிருஷ்ணா’ என்று பெயர் வைத்தார். நாங்கள் நினைத்ததுபோலவே குழந்தைகளை அந்த நாடகம் ஈர்த்தது. அமெரிக்காவில் நாடகம் போட்டபோதுகூட அங்கிருக்கும் குழந்தைகள் நாடகத்தைப் பார்க்க வந்திருந்தனர். இதுதான் அந்த நாடகத்தின் பலம். தமிழ் நாடக மேடையில் இதுவரை எந்த நாடகமும் செய்யாத சாதனையாக 1099 காட்சிகளைக் கடந்திருக்கிறது ‘சாக்லெட் கிருஷ்ணா’.

கிருஷ்ணர் வேடத்தில் கிரேஸி மோகன் மீசையுடன் தோன்றியதைப் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டது எப்படி?

கிரேஸி மோகன் எப்போதும் மீசையுடன்தான் இருப்பார். நாடகம் போடும்போது கிரேஸி மோகன் மீசையை எடுத்துவிட்டு வருவார் என்று நினைத்தேன். ஆனால், “மீசையை எடுக்கப் போவதில்லை, மீசையோடு தான் நடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். மேடையில் நான், ‘‘கிருஷ்ணா, நீ மீசை வைத்திருக்கிறாயே, ஷேவ் செய்துவிட்டு வருவாய் என்றல்லவா எதிர்பார்த்தேன். இப்படி ஒரு கிருஷ்ணரை எதிர்பார்க்கவில்லையே?” என்று வசனம் பேசுவேன்.

அதற்கு, கிருஷ்ணர், ‘‘திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்று பார்! அங்கே பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், பாரதியார் மீசையைப் போல் பெரிய மீசையை வைத்துக் கொண்டிருப்பார். நானும் அந்த மாதிரிதான்’’ என்று சொல்வார். இதைப் பார்வையாளர்கள் ரசித்து ஏற்றுக்கொண்டனர். அப்போது பார்வையாளரில் ஒரு பெண், “நீங்கள் கிருஷ்ணராக நடிக்கிறீர்கள் என்றால் பேண்ட் போட்டுக்கொண்டுகூட நடியுங்கள். ஆனால், எங்களுக்கு நல்ல நகைச்சுவை வேண்டும். அவ்வளவுதான்!” என்றார்.

கிரேஸி மோகன் இருந்த இடத்திலிருந்து பணியை மேற்கொள்வது உங்களுக்குச் சுமையா, சுகமா?

அதைப் சுமையென்று சொல்லக் கூடாது, பெரிய சுகம். மோகன் இறந்த பிறகு நாடகம் போடலாமா, வேண்டாமா என்ற விவாதம் எங்களுக்குள் எழுந்தது. அப்போது குழுவிலிருக்கும் எல்லாரும் நாடகம் போட வேண்டும் என்று ஒருமித்தக் கருத்தில் சொன்னார்கள்.

கமல்ஹாசன்கூட போன் செய்து “நீ நாடகத்தை விட்டுவிடக் கூடாது, தொடர்ந்து நடத்து” என்றார். கிரேஸி இறந்துபோன அந்த மாதமே நாடகத்தை நடத்தச் சொன்னார். நான் வந்து பார்ப்பேன் என்றார். கிரேஸி மோகன் இறந்த பிறகு இதுவரை 150 காட்சிகளுக்கும் மேல் நாடகத்தை நடத்திவிட்டோம்.

கிரேஸி மோகன் ஏற்று நடித்த நாடகங்களில் அவருக்குப் பதிலாக இப்போது நடிப்பது யார்?

ரவிஷங்கர். அவரும் எங்கள் குழுவில் தொடக்கத்தி லிருந்தே இருக்கிறார். இப் போது கிருஷ்ணராக அவர்தான் நடிக்கிறார். அவரையும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண் டார்கள். மோகன் பாத்திரத்தில் யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி வசனங்களை எழுதியிருப்பதுதான் கிரேஸியின் சிறப்பு.

அவர் உயிருடன் இருக்கும் போதே ரவிஷங்கரை தயார் செய்தார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு, ரவிஷங்கரை அழைத்து “என்னுடைய கதாபாத்திரங்களை எல்லாம் நீ பார்த்துக்கொள். இது பின்னால் உனக்கு உதவும்” என்று கிரேஸி சொன்னார். மோகன் இருக்கும்போதே அவருடைய வசனங்களை எல்லாம் ரவிஷங்கர் பார்த்துக் கொண்டார். அது அவருக்குக் கஷ்டமாகவும் தெரியவில்லை.

கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகங்களில் காலத்துக்கு ஏற்ப வசனங்களில் திருத்தம் செய்வதுண்டா?

கிரேஸி மோகனின் பலமே 1979இல் இயற்றிய நாடகத்தை இப்போதும் நடத்த முடிவதுதான். அந்த நாடகங்களில் லேட்டஸ்ட் விஷயங்கள் எதையும் அப்டேட் செய்வதில்லை. எல்லா காலத்துக்கும் அந்த வசனங்கள் பொருந்திப் போகின்றன. அதற்கேற்பதான் வசனங்களை கிரேஸி மோகன் எழுதியிருக்கிறார். நாடகங்கள் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்கள் என்பதால் அதில் பெரும்பாலும் வசனங்கள் மாறுவதற்கு வாயப்பில்லை.

கிரேஸி மோகன் நினைவாக நாடகம் ஒன்றை அரங்கேற்றப் போவதாகச் செய்திகள் வெளியானதே?

அந்த நாடகத்தை வரும் ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நாடகத்தின் பெயர் ‘வீட்டோடு மாப்பிள்ளை’. இந்த நாடகத்துக்கான கதை, வசனம் முழுவதையும் கிரேஸி மோகன் அவரது இறப்புக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார்.

சினிமாவில் கிரேஸிமோகனுடன் இணைந்து நீங்கள் பணியாற்றிய அனுபவம் உண்டா?

எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. என்றாலும் இரண்டு படங்களில்தான் நடித்திருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னை நம்பியும் நாடகங்களை நம்பியும் பத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். என் நாடகங்களில் நடித்த ஒருவரும் சினிமாவுக்குச் செல்லவில்லை. நான் சினிமாவுக்குச் செல்ல வேண்டியிருந்தால் நாடகத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அதனால், சினிமாவுக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இந்தப் புகழே எனக்குப் போதுமானது.

மாது என்ற பெயர் உங்களுடன் ஒட்டிக்கொண்டது எப்படி?

இப்போது பாலாஜி என்று என்னை சொன்னால் யாருக்கும் தெரியாது. மாது பாலாஜி என்று சொன்னால்தான் தெரியும். ‘எதிர்நீச்சல்’ படத்தில் நாகேஷ் சாரின் பெயர் ‘மாடிப்படி மாது’. கிரேஸி மோகன் முதன்முதலில் ‘அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும்’ நாடகத்தை எழுதியபோது ‘மாடிப்படி மாது’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார். அப்போது இனி எல்லா நாடகங்களிலும் மாது என்ற கதாபாத்திரத்தை வைத்துவிடுவோம் என்று கிரேஸி மோகன் முடிவெடுத்தார். இப்போது அது ஒரு சாதனையாகவே மாறிவிட்டது. கடந்த 44 ஆண்டுகளாக ஒரே கதாபாத்திரப் பெயரில் நடித்திருப்பது நானாக மட்டும்தான் இருக்க முடியும்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாடகங்களுக்கு வரவேற்பு இருக்கிறதா?

கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடகங்களுக்குக் கொஞ்சம் மவுசு குறைந்துள்ளது உண்மைதான். ஆனால், எங்கள் நாடகங்களுக்கு இன்னமும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களுக்கு டி.வி, சினிமா, கிரிக்கெட், செல்போன் என்று அவர்களை திசைதிருப்ப வெவ்வேறு விஷயங்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் மொபைலிலேயே பார்த்துவிடுகிறார்கள். இப்போதும் எங்கள் நாடகங்களுக்கு அரங்கு நிறைந்த வரவேற்பு இருப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்கலாம். அதற்குக் காரணம் மக்களுக்குப் பிடித்த நாடகங்களை போட்டால் வரவேற்பார்கள். இந்த டிஜிட்டல் யுகத்தில் இளைய தலைமுறையினரும் எங்கள் நாடகங்களைக் காண நேரடியாக வருகிறார்கள். அப்படி வருவதால்தான் எங்களால் நாடகங்களைத் தொடர்ந்து நடத்த முடிகிறது.

கிரேஸி மோகனின் நாடகங்களை டிஜிட்டல் ஆக்கம் செய்யும் யோசனை இருக்கிறதா?

கிரேஸி மோகனின் நாடகங்களை டிஜிட்டல் ஆக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். இரண்டு நாடகங்களை ஓ.டி.டி. தளங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இதுதான் இருக்கப்போகிறது. ஏற்கெனவே கிரேஸி மோகன் பெயரில் யூடியூப் அலைவரிசை இருக்கிறது. அதில் ‘பூம்பூம் வே’ என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம். அவருடைய நாடகங்களையும் அதில் வழங்குகிறோம். 2024இல் ஒரு முழுநீள டிஜிட்டல் நாடகம் நடத்த வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

29/09/2023

அதிமுக - பாஜக கூட்டணி பிளவு இயல்பானதா?

 



தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுக தலைவர்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், கருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அதிமுக. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவின் இந்த விலகல் உறுதியானதா என்னும் விஸ்வரூபக் கேள்வி எழுந்திருப்பதில் வியப்பில்லை.

விசித்திரமான காரணம்: அதிமுக-பாஜக இடையே இவ்வளவு ஆண்டுகள் கூட்டணி நீடித்ததே பெரும் சாதனைதான். ஏனெனில், ஜெயலலிதாவின் காலத்தில், 1998, 2004 ஆகிய ஆண்டுகளில் இக்கட்சிகள் இடையே அமைந்த கூட்டணியின் ஆயுள்சொற்ப காலமே நீடித்தது. 2019இல் அதிமுக-பாஜக கூட்டணி மலர்வதற்கு முன்பாக, 2016இல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலே அதிமுக மீது பாஜகவின் நிழல் படர்ந்தது.

அதற்கேற்ப பாஜக தேசியத் தலைமைக்குத் தம்மை நெருக்கமாகக் காண்பித்துக்கொள்ளும் போட்டி மனப்பான்மையில் அதிமுக தலைவர்கள் மூழ்கிக் கிடந்தனர். அதே நேரம் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே அவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தண்ணீரும் எண்ணெயுமாக இருந்தனர். அதன் நீட்சியாக நீண்ட தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இன்று பாஜக கூட்டணியை உதறித் தள்ளி வெளியேறியிருக்கிறது அதிமுக.

எனினும், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாகச் சொன்னதற்கான காரணம் உண்மையிலேயே சற்று விசித்திரமானது. பாஜகவின் தேசியத் தலைவர்களோடு அதிமுக தலைவர்களுக்கு எந்த மோதலும் இல்லை. தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலைதான் அதிமுகவுக்கு உள்ள ஒரே பிரச்சினை என்று பிரிவை அறிவிக்கும் அதிமுகவின் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட முன்னோடித் தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார், எடப்பாடி பழனிசாமியைச் சிறுமைப்படுத்தினார் என்பன போன்றவையே காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. என்றாலும், இக்கூட்டணி முறிவுக்கு வேறு சில வலுவான காரணங்களும் இருக்கின்றன.

பரஸ்பரப் புரிதலின்மை: கூட்டணி என்பதே பரஸ்பரப் புரிதலோடு இயங்குவதுதான். ஒன்றை விட்டு ஒன்றைப் பெறுவதுதான். ஆனால், அதிமுக தலைவர்களைக் கோபம் கொள்ள வைத்திருப்பது தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அண்ணாமலை முன்வைக்கும் கருத்துகள். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பேசுவதற்கோ, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ அண்ணாமலைக்கு உரிமை உண்டு. ஆனால், அது எல்லாமே தனித்துச் செயல்படும்போது மட்டுமே சாத்தியம்.

முன்பு தேசியக் கட்சியான காங்கிரஸுடன் அதிமுக பல முறை கூட்டணி கண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக உதவுவது; மாநிலத்தில் அதிமுக ஆட்சிக்குக் காங்கிரஸ் உதவுவது என்ற புரிதலோடுதான் கூட்டணியின் செயல்பாடுகள் அமைந்தன. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியும் அதே வகையான புரிதலோடுதான் தொடர்கிறது.

தமிழ்நாட்டில் ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று பேசாத காங்கிரஸ் தலைவர்களே கிடையாது. ஆனால், கூட்டணித் தலைவர்கள் மனம் கோணும் வகையில் அதைப் பூதாகரமாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேசியதில்லை. கட்சி தொடங்கியது முதல் தன்னுடைய ஆட்சி என்று பேசிவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2011இல் அதிமுகவோடு கூட்டணி வைத்தபோது ஜெயலலிதாவைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.

தற்போது அதிமுக-பாஜக கூட்டணியில் இது தலைகீழாக இருப்பதுதான் முரண். மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமராக்க உழைப்போம் என்று அதிமுக தலைவர்கள் பேசும்போது, “எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது. நிச்சயமாக பாஜக 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” என்று அண்ணாமலை அறிவித்தால், அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்க வேண்டிய பரஸ்பரப் புரிதல் அடிபட்டுப் போகாதா? எனில், மாநிலத்தில் ஆட்சிஅமைக்கும் போட்டியில் அதிமுக, பாஜக தனித்தனியாகக் களமிறங்குவதே உசிதம். அதைத்தான் அதிமுக செய்திருப்பதாகக் கருத இடமுண்டு.

தொக்கி நிற்கும் கேள்விகள்: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்துவிட்டாலும், அரசியல் அரங்கிலும் பொதுவெளியிலும் அது சந்தேகக் கண்ணோடுதான் அணுகப்படுகிறது. ஏனெனில், கூட்டணியின் பிரச்சினையாக அண்ணாமலைதான் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஒருவேளை, அண்ணாமலையை பாஜக தேசியத் தலைமை மாற்றிவிட்டால் அல்லது அதிமுகவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகளை அவருக்கு விதித்துவிட்டால், அதிமுகவின் நிலைப்பாடு என்ன? அப்படி நடந்தால் பாஜகவோடு அதிமுக மீண்டும் கூட்டணியை ஏற்படுத்துமா? பிரதமர் மோடியோ உள் துறை அமைச்சர் அமித் ஷாவோ எடப்பாடி பழனிசாமியைச் சமாதானம் செய்தால், அப்போதும் அதிமுக தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்குமா? இதுபோன்ற கேள்விகள் தற்போது அதிமுகவைத் துரத்துகின்றன. அதே நேரம், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகுதான் இந்தக் கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிட முடியாது.

இன்றைக்கும் அதிமுக-பாஜக இடையே கொள்கை மோதல்களோ, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகளோ இல்லை. மத்திய அரசின் முடிவுகள் தமிழ்நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் என்கிற விமர்சனங்கள் எதுவும் அதிமுகவிடம் வெளிப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான், பாஜகவும் அதிமுகவும் பேசி வைத்துக்கொண்டு இந்த அரசியல் விளையாட்டை விளையாடுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

தப்பிக்கும் அதிமுக: அதிமுக தலைவர்கள்-அண்ணாமலை இடையே பல்வேறு சந்தர்ப்பங்களில் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டபோதெல்லாம், இக்கூட்டணி நீடிப்பதற்குக் காரணம், பாஜகவின் டெல்லி நிழலில் அதிமுக இருப்பதே என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. தற்போது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பதன் மூலம், இந்த விமர்சனங்களிலிருந்து அதிமுக விடுபட உதவும். பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் மத்திய அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அதிமுகவும் சேர்த்தே தமிழ்நாட்டில் எதிர்கொண்டுவந்தது. அந்த விமர்சனங்களிலிருந்தும் அதிமுக தப்பிக்கக்கூடும்.

அதிமுகவின் தற்போதைய முடிவு, 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி-தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற போட்டியைப் பாரம்பரியப் போட்டியாக திமுக-அதிமுக போட்டியாக மடைமாற்றும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் காரணமாகவே பாஜக கூட்டணியில் அதிமுக நீடிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் அடிப்பட்டுப்போகும். பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட்டதாகக் கருதும் அதிமுக, அந்த வாக்குகளைப் பெற முனையும்.

காத்திருக்கும் சவால்: பாஜக உறவை உதறித் தள்ளிவிட்டதை - அரசியல் களத்தைத் தாண்டி - பொதுவெளியில் நம்பவைக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அண்ணாமலைக்கு எதிராகப் பேசும் அதிமுக தலைவர்கள், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேர மாட்டார்களா; பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகப் பேசுவார்களா என்கிற சந்தேகம் இப்போதே அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. ஆனால், எந்த ஒரு காரணத்தை முன்வைத்தும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவே மாட்டோம் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் என்பதில் உறுதியாக இருந்து, தனது தலைமையில் எடப்பாடி பழனிசாமி புதியதொரு கூட்டணியை அமைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பாரேயானால், ‘அடிமை அதிமுக’ என்று இனிமேல் எக்காலத்திலும் திமுக-வால் கேலி பேச முடியாது.

இறைவன் விமர்சனம்

 


சென்னை மாநகரில் மிகக் கொடூரமாக இளம் பெண்கள் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகளை நிகழ்த்தும் சீரியல் கில்லரை (ராகுல் போஸ்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல் உதவி ஆணையர்களான அர்ஜூனும் (ஜெயம் ரவி) ஆண்ட்ரூவும் (நரேன்). இதில் ஒரு துர்நிகழ்வு நடைபெற போலீஸ் வேலையை விட்டே ஒதுங்குகிறார் ஜெயம் ரவி. என்றாலும் ஜெயம் ரவியை இலக்கு வைத்து துரத்திக்கொண்டே இருக்கிறான் சைக்கோ கொலையாளி. இதற்கு என்ன காரணம்? யார் அந்த சைக்கோ கொலையாளி? இருவருக்கும் இடையிலான துரத்தலில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன. அவனை ஜெயம் ரவி என்ன செய்கிறார் என்பதுதான் ‘இறைவ’னின் மீதிக் கதை.

சீரியல் கில்லர், சைக்கோ கொலைகள் தொடர்பான படங்கள் என்றால், ஓர் அழகான ஒன்லைன் கதையை வைத்துகொண்டு துரத்தலும் திகிலும் கொண்ட திரைக்கதையை எழுதுவார்கள். ஆனால், ஒரு வறட்சியான த்ரில்லர் கதைக்கு திகில் முலாம் பூச முயன்றிருக்கிறார் இயக்குநர். விளைவு, சீரியல் கில்லர் படங்களுக்கே உரிய பரபரப்பு, படபடப்பு, திருப்பங்கள் எதுவும் இல்லாமல் பயணிப்பது ‘இறைவ’னின் பெரும் பலவீனம். படத்தின் தொடக்கத்திலேயே சைக்கோ கொலையாளியைக் காட்டிவிடுகிறார்கள். எனவே, அவர் யார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்து, அவர் செய்யும் கொடூரமான கொலைகள் எல்லாமே பாவமாக இருக்கிறது.

ஒரு சைக்கோ கொலையாளி என்றால், அவன் சைக்கோவாக ஆனதற்கான பின்னிணியை ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்வது படத்துக்கு வலுசேர்க்கும். அப்படியான எந்தக் காட்சிகளுமே படத்தில் இல்லாதது படத்துக்கு மைனஸ். முதல் பாகத்தின் முடிவில் சொல்லப்படும் ஒரு திருப்பம் கவனம் பெறுகிறது. ஆனால், தெளிவற்ற பின்னணிக் கொண்ட திரைக்கதை இரண்டாம் பாகம் முதல் பாகத்தைவிட அயற்சிக்குள்ளாக்கி விடுகிறது.

சைக்கோ கொலையாளி - நாயகன் இடையே எந்தத் துரத்தலும் இல்லை. சர்வ சாதாரணமாக சைக்கோ கொலையாளியை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். சண்டைப் போடுகிறார், அடிக்கிறார். திரும்பத் திரும்ப நடக்கும் இந்தக் காட்சிகள், ‘இறைவா, எங்களைக் காப்பாற்று’ என்று பார்வையாளர்களைக் கதறவைத்துவிடுகிறது. ஸ்மைலி கில்லர், காபி கேட் கில்லர் என்று விதவிதமாக பெயர்கள் வைத்து அழைத்தாலும், புதுமை இல்லாமல் நகரும் காட்சிகளால் படம் தள்ளாடுகிறது.

சைக்கோவிடமிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு பெண் பற்றி அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வக்கிரமானவை. ஊர் முழுக்க சிசிடிவி, கையில் எல்லோரும் செல்போனுடன் அழையும் காலத்தில் சைக்கோ கொலையாளி சர்வசாதாரணமாக காரில் கடத்துகிறார். இது கேள்விக்குள்ளாகக் கூடாது என்பதற்காக, ‘சிசிடிவி கேமரா இல்லாத இடமாகப் பார்த்து’ என்ற சரடு வசனத்தை விடுகிறார்கள். ‘பிரம்மா’ என்று அழைத்துக்கொண்டு இளம் பெண்களை கொலை செய்யும் ராகுல் போஸ், கொலை செய்வதற்காக சொல்லும் காரணங்களில் தர்க்கமே இல்லை. ஊரையே நடுங்க வைக்கும் அளவுக்கு கொலைகள் செய்து மருத்துவமனை சிறையில் இருக்கும் சைக்கோ கொலையாளி சுலபமாக தப்புவது போலீஸுக்கே அடுக்காது. போலீஸ் வேலையை விட்ட ஜெயம் ரவி, போலீஸாகமலேயே எல்லா போலீஸ் வேலையையும் செய்கிறார். இப்படி படம் முழுக்க நிறைய பூச்சுற்றல்கள்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருப்பதைத் தவிர நேர்மறையான அம்சங்கள் எதுவும் இல்லை. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில், ‘எனக்கு பயம்னா என்னென்னே தெரியாது’ என்று ஜெயம் ரவி பல வெரைட்டிகளில் கோபத்தைக் காட்டுகிறார். அர்ஜூன் கதபாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்துகிறார். நண்பன் நரேனுக்காக உருகுவது, நயன் தாராவிடமிருந்து விலகி நிற்பது, நெருக்கமானவர்கள் கொலையாகும்போது பதறுவது என நடிப்பில் குறை வைக்கவில்லை. நயன்தாரா ஒருதலையாக காதலித்து உருகும் பெண்ணாக வந்துபோகிறார். சைக்கோ கொலையாளியாக வரும் ராகுல் போஸ் தன் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரின் தொடர்ச்சியாக வரும் வினோத் கிஷன் மிகை நடிப்பால் திணறடிக்கிறார். மேலும் படத்தில் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி, சார்லி, அழகம் பெருமாள், பக்ஸ், விஜயலட்சுமி ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் கவனம் பெறாவிட்டாலும், ஒரு த்ரில்லர் படத்துக்குரிய இசையைச் சரியாக வழங்கியிருக்கிறார். இருட்டில் நடக்கும் கொலைகளைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரி கே. வேதாந்தம். இழுவையான காட்சிகளுக்கு கருணையின்றி கத்திரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் ஜே.வி. மணிகண்ட பாலாஜி.



01/06/2023

தமிழ்நாட்டில் ஆவின் வந்த வழி

 


இந்தியாவில் தேசியப் பால்வள வாரியம் அமல்படுத்திய வெண்மைப் புரட்சியின் விளைவாக, பால் உற்பத்தித் திட்டங்கள் மூலம், கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் குஜராத்தின் ‘ஆனந்த்’ மாதிரி (அமுல்) கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. அவை பால், தயிர், பால் சார்ந்த பொருள்களைத் தயாரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன. தமிழ்நாட்டில் ஆவின், கர்நாடகத்தில் நந்தினி, குஜராத்தில் அமுல் போன்றவை அதுபோன்று உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்தான்.

இதன்மூலம் பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கிற பால் வீணாவது தவிர்க்கப்பட்டது. பாலைப் பாதுகாத்து, பதப்படுத்தி நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் பால் தேவையைப் பூர்த்திசெய்ய முடிந்தது. பாலுக்கென நிரந்தரச் சந்தையும் ஏற்பட்டது. ஆக்கபூர்வமான இந்த முன்னெடுப்புகளால், 1997 முதல் பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் வகித்துவருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால் உற்பத்தியின் பங்களிப்பு 4.2% ஆகும்.

நாட்டில் பல மாநிலங்களிலும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகப் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. குஜராத் (275 லட்சம் லிட்டர்), கர்நாடகத்தைத் (73 லட்சம் லிட்டர்) தொடர்ந்து மூன்றாம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில், ஆவின் நிறுவனம் தினமும் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்கிறது; தினமும் 206 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் பால், பால் பொருள்கள் ‘ஆவின்’ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

மூன்று அடுக்குகள்: ஆவின் நிறுவனம் என்று ஒற்றைப் பெயரில் அழைக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மூன்று அடுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதைத்தான் ‘அமுல்’ மாதிரி கூட்டுறவுச் சங்கங்கள் என்கிறார்கள்.

அடுக்கு 1: கிராம அளவில் செயல்படும் தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களே மூன்றடுக்குப் பால் கூட்டுறவு அமைப்புகளின் அடித்தளம். இக்கூட்டுறவு அமைப்புகளே பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. உள்ளூர் தேவை போக, உபரிப் பாலை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு இவை வழங்குகின்றன.

அடுக்கு 2: மாவட்டக் கூட்டுறவுஎல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தொடக்கப் பால்உற்பத்தியாளர்கள், இரண்டாம் அடுக்கில் உள்ள மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் உபரிப் பாலை வாங்கி, பதப்படுத்தி நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள்; அத்துடன் பால் பொருள்களையும் தயாரிப்பார்கள்.

அடுக்கு 3: தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்பது மாநில அளவிலான தலைமைப்பால் கூட்டுறவுச் சங்கம். இதில் மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களே உறுப்பினர்கள். இவர்கள் பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி சென்னைபோன்ற பெருநகரில் பால் விற்பனை செய்கிறார்கள்.

கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு: தமிழ்நாட்டில் 27 மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இதில் உறுப்பினர்களாக 9,673 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதில் அங்கம் வகிக்கும் 3.99 லட்சம் பால் உற்பத்தியாளர்கள்தான் 37 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.

இதில் உள்ளூரில் பால் விற்பனை போக, உபரிப் பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படிப் பெறப்படும் பால் பல்வேறு நிலைகளில் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நுகர்வோருக்குப் பால் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் 1958இல் பால்வளத் துறையை அரசு ஏற்படுத்தியது. பிறகு அனைத்து பால் கூட்டுறவுச் சங்கங்களின் மீதான சட்டபூர்வ, நிர்வாகக் கட்டுப்பாடுகள் 1965இல் பால்வளத் துறைக்கு மாற்றப்பட்டன. 1972இல் இத்துறையின் வணிக நடவடிக்கைகள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டன.

1981இல்தான் ‘அமுல்’ பாணியில்தமிழ்நாட்டில் ஆவின் என்ற மூன்றடுக்குப் பால் சார்ந்தகூட்டுறவு முறை உருவாக்கப்பட்டது. பிற கூட்டுறவு அமைப்புகள்போல இந்த மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்புகளும் 1983 முதல் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.