31/01/2023

சீரழிவுக்கு வித்திடும் கிரிக்கெட் விதிமுறைகள்

சர்வதேச கிரிக்கெட்டில், ஒரு நாள் (50 ஓவர்) போட்டிகள் பிரபலமாகத் தொடங்கிய 1980-90களில் மட்டையாளர் ஒருவர், ஒரு போட்டியில் 150 ரன்களைக் கடப்பதே அரிதான நிகழ்வாக இருந்தது. ஏனென்றால், அன்று கிரிக்கெட் விதிகளும் ஆடுகளங்களும் மட்டையாளர் - பந்து வீச்சாளர் என இரு தரப்பினருக்கும் சமமான சவாலை உருவாக்கும் வகையில் இருந்தன.

ஆனால், மட்டையாளர் ஒருவர் 200 ரன்களைக் கடப்பது இன்று எளிதாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இஷான் கிஷான் (210), சுப்மன் கில் (208) ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். 2010இல் குவாலியரில் நடந்த போட்டியில், முதன் முறையாக 200 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு, கடந்த 12 ஆண்டுகளில் 10 பேர் இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள்; இதில் 7 சதங்கள் இந்தியர்களிடமிருந்து வந்தவை.

அயல்நாட்டு மட்டையாளர்களில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (237*), மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (215), பாகிஸ்தானின் ஃபாஹர் சமான் (210*) ஆகியோர் மட்டுமே இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள். இதில் மார்ட்டின் கப்திலும் கிறிஸ் கெயிலும் ஆஸ்திரேலியாவிலும் ஃபாஹர் ஜிம்பாப்வேயிலும் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்கள்.

ஆனால், இந்திய வீரர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்தான் இரட்டைச் சதம் அடித்துள்ளனர். அதிலும் இஷான் கிஷானைத் தவிர, மற்ற எல்லோரும் தாய்மண்ணில்தான் ரன் வேட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள். பொதுவாக, இந்தியத் துணைக் கண்டத்தில் எளிதாக ரன்களைக் குவிக்கும் இந்திய மட்டையாளர்களால், வெளியே அதை நிகழ்த்த முடிவதில்லை.

அது மட்டுமல்லாமல், மட்டையாளர்கள் எளிதாக ரன்களைக் குவிக்கும் வகையில், ஒரு நாள் கிரிக்கெட்டின் விதிமுறைகள் இன்று மாற்றப்பட்டுவிட்டன. 1990களின் மத்தியில் முதல் 15 ஓவர்களில் உள் வட்டத்துக்கு வெளியே 2 ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்தும் தடுப்பாட்டக் கட்டுப்பாடு அறிமுகமானது.

அதுவே பல ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்த பிறகு, 50 ஓவர் கிரிக்கெட்டிலும் விதிமுறைகள் மாறும் நிலை ஏற்பட்டது. 2005க்குப் பிறகு தடுப்பாட்டக் கட்டுப்பாடு 3 விதங்களாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக அறிமுகமான ‘பவர் பிளே’ விதிமுறையும் மட்டையாளர்களுக்குச் சாதகமானதுதான்.

2010க்குப் பிறகு, ஒரே இன்னிங்ஸுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால், பந்து நீண்ட நேரம் பளபளப்பை இழக்காமல் இருக்கிறது; இது மட்டையாளர்களுக்கே சாதகமாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், வக்கார் யூனிஸ் போன்ற முன்னாள் வீரர்கள் இந்த விதிமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர்.

‘நோ பால்’க்கு ‘ஃபிரீ ஹிட்’. ‘ஃபிரீ ஹிட்’டில் அவுட் கிடையாது என்பன போன்ற புதிய விதிமுறைகளும் மட்டையாளர்களுக்கு வரமாகவும் பந்து வீச்சாளர்களுக்குத் தண்டனையாகவும் மாறிவிட்டன. இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் ஆடுகளங்கள், பிட்ச் ஆகியவை மிகப் பெரிய ரன் குவிப்புச் சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.

இது போன்ற காரணங்களால், மட்டைவீச்சில் ரன் விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. அது அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரிலும் எதிரொலிக்கிறது. இந்தியா கடைசியாக விளையாடிய 7 ஒரு நாள் போட்டிகளில், 5 போட்டிகளில் 349 ரன்களுக்கு மேல் குவித்தது ஓர் உதாரணம்.

20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு கிரிக்கெட் முழுமையாக வணிகமயமாகிவிட்டது; கடந்த 15 ஆண்டுகளாக இது கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றிவிட்டிருக்கிறது. கிரிக்கெட்டின் பாரம்பரிய நியதிகளுக்குப் பொருந்தாத டி20 போட்டிகளுக்கான விதிமுறைகளை மட்டும் மாற்றுவதுடன் நிறுத்திக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், 50 ஆண்டு வரலாறு கொண்ட 50 ஓவர் போட்டிகளிலும் அதைப் புகுத்துவதும் மட்டையாளர்களுக்குச் சாதகமான போக்கை உருவாக்குவதும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. சுவாரசியத்துக்காகவும் அதிரடிக்காகவும் விதிகளையும் மைதான பிட்சுகளையும் மாற்றுவது கிரிக்கெட்டின் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

09/01/2023

சென்னைப் பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட்: மறக்கடிக்கப்பட்ட வரலாறு!



தமிழ் நாட்டின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு, சேவல்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுகளும் மனதுக்குள் குதூகலத்தை ஏற்படுத்தும். அதுபோலவே ஒரு காலத்தில் பொங்கல் பண்டிகை வந்தாலே, கூடவே சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து காத்திருக்கும். ஆம், பொங்கலின்போது  ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகளும் சென்னையில் பண்டிகையின் ஓர் அங்கமாகவே இருந்து வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகள் மீண்டும் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகி வருகிறது.

உலகில் பல நாடுகளிலும் பண்டிகைக் காலத்தோடு விளையாட்டுப் போட்டிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதில் கிரிக்கெட்டும் இடம் பிடித்தது ஆச்சரியமான நிகழ்வுதான். அந்த வகையில் இப்போதும்கூட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் புத்தாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்
 நடைபெறும் ‘பாக்சிங் டே டெஸ்ட்’ கிரிக்கெட் போட்டி பிரபலமான கிரிக்கெட் போட்டியாகக் கருதப்படுகிறது. காமன்வெல்த் நாடுகளில்தான் ‘பாக்சிங் டே’ போட்டி மிகப் பிரபலம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் போட்டிகளைத்தான் ‘பாக்சிங் டே’ போட்டி என  அழைக்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் ‘பாக்சிங் டே’ போட்டிகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன.
பாக்சிங் டே பெயர்
அந்தக் காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘பாக்ஸ்’களில் வரும் பரிசு பொருட்களை, அடுத்த நாளான டிசம்பர் 26 அன்று வீட்டு உரிமையாளர்கள் பிரித்து பார்ப்பார்களாம். அப்படி சேரும் பொருட்களை எல்லாம் வீடு, தோட்டங்களில் வேலை செய்வோர், ஏழை எளிய மக்களுக்குப் பிரித்து கொடுத்து மகிழ்ச்சியடைவது அவர்களுடைய வழக்கம். அந்த வகையில்தான் டிசம்பர் 26ஆம் தேதியை ‘பாக்சிங் டே’ என அழைக்கிறார்கள். அதேபோல அன்றைய தினத்தில் பிடித்த இடங்களுக்கும் செல்வதும் வெளிநாடுகளில் வழக்கம். விளையாட்டு ரசிகர்கள் பிடித்த விளையாட்டுகளைப் பார்க்க சென்றுவிடுவார்கள். அதற்காகவே அன்றைய தினத்தில் ஸ்பெஷல் விளையாட்டுப் போட்டிகளை அந்தக் காலத்தில் நடத்தியிருக்கிறார்கள்.
கிரிக்கெட்டும் அப்படித்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இன்றும்கூட ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியைக் காண பல்லாயிரம் பேர் கூடுவதை ஆஸ்திரேலியர்கள் வழக்கமாகவே கடைபிடித்து வருகிறார்கள். ஆனால், இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி 1950இல் தொடங்கி 1975 வரை ஒரு சில முறை மட்டுமே நடைபெற்றிருக்கிறது. 1980-ஆம் ஆண்டு முதலே ஒவ்வோர் ஆண்டும்  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. இப்போது தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்திலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


சென்னைப் பொங்கல் டெஸ்ட்
கிரிக்கெட் உலகில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இன்று வரை எப்படி பிரபலமோ, அதுபோலவே ஒரு காலத்தில் இந்தியாவில் சென்னையில் ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டியும் மிகப் பிரபலம். இன்னும் சொல்லப்போனால் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகளுக்கெல்லாம் முன்னோடியாக ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகள் இருந்திருக்கின்றன. பொங்கல் டெஸ்ட் போட்டியின் பாரம்பரியம் 1916ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அப்போது இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதைப் ‘பொங்கல் போட்டிகள்’ என்றே அழைத்திருக்கிறார்கள்.
அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள், தைத் திருநாள், பொங்கல் திருநாள் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இப்பண்டிகைக் காலத்தில்தான் ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு, ரேக்ளாரேஸ், உறியடி, கபடி, சிலம்பம், கோலப் போட்டிகள் எனப் பல பாரம்பரிய விளையாட்டுகளும் தமிழகத்தில் கோலாகலமாக நடைபெறும். இதுபோன்ற விளையாட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாடப்பட்டாலும், சென்னையில் இந்த விளையாட்டுகளுக்கான வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், இந்தக் குறையை ‘பொங்கல்  டெஸ்ட்’ போட்டிகள் தீர்த்து வைத்திருக்கின்றன.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சென்னையில் 1960ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகள் சீராக நடைபெற்று வந்திருக்கின்றன. சென்ட்ரல் ரயில்வே நிலையம் அருகே உள்ள கார்ப்பரேஷன் ஸ்டேடியம் (இன்று நேரு ஸ்டேடியம்) , சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் என இரு இடங்களிலும் ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. 1960  முதல் 1964 கார்ப்பரேஷன் ஸ்டேடியத்திலும்; 1967 முதல் 1988 வரையிலும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திலும் பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.
பொங்கல் டெஸ்ட் ஏன்?
பொங்கல் திருநாள் என்பது ஒரு நாள் பண்டிகை கிடையாது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்களுக்குத் தொடர்ச்சியாக பண்டிகை நீளும். எனவே, தமிழகத்தில் பலருக்கும் 4 - 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும். எனவே, பொங்கல் திருநாளையொட்டி டெஸ்ட் போட்டி நடத்தப்படும்போது குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு மைதானம் முழுமையாக நிரம்பியிருக்கும். பண்டிகை காலத்தில் ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டி நடத்த இதுவே முக்கிய காரணம். மேலும் சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் மழைக் காலம் என்பதால், அந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகள் சென்னையில் பெரும்பாலும் அட்டவணைப்படுத்தப்பட மாட்டாது. மழையும் வெயிலும் இல்லாத குளிர்காலத்தில் சென்னையில் போட்டி நடத்த சூழல் நிலவியதும்கூட, பொங்கல் காலத்தில் இந்த டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுவதற்கு இன்னொரு காரணமாகக் குறிப்பிடலாம்.



மெட்ராஸ் பிரசிடென்சி காலத்திலேயே பொங்கல் போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், முதல் சர்வதேசப் போட்டி 1956ஆம் ஆண்டில் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேதான் நடைபெற்றது. ’பொங்கல் டெஸ்ட்’ என்பதை உணர்த்தும் வகையில், அந்தக் காலகட்டத்தில் ‘டாஸ்’ சுண்டும் போது ஸ்டெம்ப் அருகே கரும்பும் வைக்கப்பட்டிருக்கும் என்ற தகவல்களும் உண்டு. கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் 1960, 1961, 1962, 1964 எனத் தொடர்ச்சியாக பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. பின்னர் 1967இல் முதன் முறையாக சிதம்பரம் ஸ்டேடியத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பொங்கல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 1973, 1975, 1977, 1979, 1980, 1982, 1985, 1988 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம் மைதானத்தில் ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகள் நடைபெற்றுள்ளன.
பொங்கல் டெஸ்ட் சாதனைகள்
ஒட்டுமொத்தமாக கார்ப்பரேஷன் ஸ்டேடியம், சேப்பாக்கம் மைதானம் என இரண்டு இடங்களிலும் சேர்த்து 13 பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 6 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது. 4 போட்டிகள் வெற்றி - தோல்வியின்றி டிராவில் முடிந்திருக்கிறது. கடைசியாக 1988ஆம் ஆண்டில்தான் பொங்கல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 255 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. கடைசியாக நடைபெற்ற இந்தப் பொங்கல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் கேப்டனாக இருந்த ஒரே டெஸ்ட் போட்டியும் இதுதான்.
கடைசி பொங்கல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது மட்டுமல்லாமல், கிரிக்கெட் அரங்கில் புதிய உலக சாத்னையையும் படைத்தார் இந்திய வீரர் நரேந்திர ஹிர்வானி. அறிமுக வீரராக களமிறங்கிய ஹிர்வானியின் மந்திரச் சுழலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியைத் தழுவியது. முதல் இன்னிங்ஸில் 8 / 61, இரண்டாவது இன்னிங்ஸில் 8 / 75 என மொத்தம் 16 விக்கெட்டுகளை ஹிர்வானி அள்ளினார். கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக வீரர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியது இப்போது வரை சாதனையாகவே நீடிக்கிறது, இந்தச் சாதனை
 'பொங்கல் டெஸ்ட்' போட்டியில்தான் நிகழ்ந்தது என்பது இன்னொரு பெருமை.



மீண்டும் வரட்டும் பொங்கல் டெஸ்ட்
பொங்கல் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு தொடங்கிய ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இன்றும் தொய்வில்லாமல் நடைபெற்று வருகின்றன. ஆனால், பாரம்பரியமிக்க ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டிகள் காணாமல் போய்விட்டன. இதேபோல 1934 முதல் 1985 வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் ‘புத்தாண்டு டெஸ்ட்’ போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தப் போட்டிகளும் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. சுழற்சி முறையில் மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளை நடத்தும் முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எடுத்ததன் மூலம் இந்தப் பண்டிகை டெஸ்ட் போட்டிகள் மூடுவிழா கண்டன. மேலும் அன்று இந்தியாவில் 7 - 8 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. அதனால், பண்டிகைக் காலத்தில் கொல்கத்தா, சென்னையில் டெஸ்ட் போட்டிகள் தவறாமல் இடம் பிடித்தன. இன்றோ 16 மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் எதிர்கால சுற்றுப்பயண விவரங்கள் (எஃப்டிபி) ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் வெளியிடப்படுகிறது. இதன் காரணமாகவும் பண்டிகைக் காலத்தில் சென்னை, கொல்கத்தாவில் போட்டிகளை நடத்த முடியாமல் போய்விட்டன.
கிரிக்கெட் போட்டியின் அடிநாதமே டெஸ்ட் போட்டிகள்தான். ஆனால், இன்று டி20 போன்ற விரைவான, அதிரடியான போட்டிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. இந்த டி20 போட்டிகளுக்குப் போட்டியாக 10 ஓவர், 100 பந்துகள் கிரிக்கெட் போட்டிகளும் வரத் தொடங்கிவிட்டன. இந்தப் போக்கு நீடிக்கும்பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளே மறைந்தே போகும் நிலை ஏற்படலாம். ஆனால், இன்றைய தலைமுறையினருக்கும் டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டுமென்றால், மறக்கடிக்கப்பட்ட பாரம்பரிய பண்டிகைப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும். டெஸ்ட் போடிகளையும் ஆராதிக்கும் சென்னையில் இதுபோன்ற போட்டிகள் நடக்கும்போது டெஸ்ட் போட்டிகளின்பால் இளம் தலைமுறையினருக்கு ஈர்ப்பு ஏற்படும். அதற்கு சென்னை பொங்கல் டெஸ்ட், கொல்கத்தா புத்தாண்டு டெஸ்ட் போட்டிகள் இந்திய கிரிக்கெட் அட்டவணையில் தவறாமல் இடம் பெற வேண்டும். செய்வார்களா?