18/01/2021

Udayanidhi overtake M.K.Stalin : மு.க. ஸ்டாலினை ஓவர்டேக் செய்கிறார் உதயநிதி?


 

திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் நேரடியாகவே இளைஞரணி செயலாளராக ஆன உதயநிதி ஸ்டாலினின் ஆதிக்க கிராஃப் கட்சியில் கிடுகிடுவென மேலே உயர்ந்துகொண்டிருக்கிறது. கட்சித் தலைவரைத் தாண்டி முக்கியத்துவம் கொடுப்பது, கட்சி நடவடிக்கையில் தலையிடுவது, சர்ச்சையாகப் பேசுவது எனச் சென்றுக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கைகள் இன்று கட்சித் தலைவருக்கே உத்தரவிடும் அளவுக்கு மாறியிருக்கிறது.

நாடறிந்த நடிகர் என்ற பிம்பத்தோடு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பிரசாரத்துக்குக் களமிறக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். அதற்கு முன்புவரை கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யின் நிர்வாக இயக்குநர் என்ற அளவில்தான் உதயநிதிக்கும் கட்சிக்கும் தொடர்பு இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் உதயநிதியின் பிரசாரத்தையும் இடைச்செருகலாக செருகினார்கள். 

விளைவு, பல ஆண்டுகளாக இன்னொரு அதிகார மையமாகப் பார்க்கப்பட்ட இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு தாரை வார்க்கப்பட்டது. 35 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே திமுக இளைஞரணியின் உறுப்பினராக முடியும் என்ற விதியை வைத்துக்கொண்டு, 40 வயதைத் தாண்டிய உதயநிதிக்கு மகுடம் சூட்டப்பட்டது. ஆனால், மு.க. ஸ்டாலினே 60 வயதைத் தாண்டிய பிறகும் அந்தப் பொறுப்பில் இருந்தவர்தானே என்ற எதிர்க்கேள்வியோடு, உதயநிதிக்கு கட்சியில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளரானது முதலே காட்சி மாறியது. கருணாநிதி - மு.க. ஸ்டாலின் காலம் போல மு.க. ஸ்டாலின் - உதயநிதி என்றானது. 

கருணாநிதி தலைவராக இருந்தபோது மு.க. ஸ்டாலினை எப்படி அணுகினார்களோ, அதுபோல உதயநிதியை கட்சி சீனியர்கள் அணுகும் சூழ்நிலை ஏற்பட்டது. மு.க. ஸ்டாலினாவது படிப்படியாக கட்சியில் வளர்ந்து பொறுப்புகளில் வந்தவர் என்ற அடிப்படையில், மு.க. ஸ்டாலினுக்கு எதிரான பிரசாரங்கள் எளிதில் முறியடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல், மு.க. ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது விமர்சனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருப்பதை தவிர்க்க முடியவில்லை.

69 வயதான கே.என். நேரு போன்ற சீனியர்கள், வயதில் இளையவரான உதயநிதியிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றது சமூக ஊடங்களில் கேலி, கிண்டாலுக்கு உள்ளானதைப் பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு திமுகவில் உதயநிதிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு கட்சி தலைமையை முறைத்துக்கொண்டு பாஜகவுக்கு சென்ற கட்சி துணை பொதுச்செயலாளரான வி.பி.துரைசாமி, ராஜ்ஜிய சபா எம்.பி. பதவியைப் பெறுவதற்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதி ஸ்டாலினிடம் கெஞ்சினேன் என்று கூறியதையும் இப்போது நினைப்படுத்திக்கொள்வது சாலப்பொருந்தும். 

கருணாநிதி ஆக்டிவாக இருந்தவரை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை தன் விருப்பப்படியே நிரப்புவார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும் மாவட்டச் செயலாளர் நியமனத்தில் உதயநிதியின் நேரடி தலையீடு இருப்பதாக சீனியர்களே குற்றம் சாட்டும் அளவுக்கு பவர் சென்டராக மாறியுள்ளார் உதயநிதி. 

உதாரணத்துக்கு சென்னை மேற்கு மாவட்டத்துக்கு சீனியர்கள் பலர் இருக்க, தனக்கு நெருக்கமான சிற்றரசு என்ற இளைஞரணியைச் சேர்ந்தவரை மாவட்டச் செயலாளர் ஆக்கினார் உதயநிதி.இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலக நேரிட்டது. இதேபோல நாமக்கல் மாவட்ட பொறுப்பாளராக ராஜேஷ் நியமிக்கப்பட்டதிலும் திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டதிலும் தன்னுடைய நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழி திருச்சி மாவட்ட பொறுப்பாளராக்கப்பட்டதிலும் உதயநிதியின் தலையீடு இல்லாமல் இல்லை. இதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே மாவட்டச் செயலாளர்கள் நியமனம், தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பு போன்றவற்றில் உதயநிதியின் ஆதிக்கம் இருந்து வருவதாக அக்கட்சியினரே சொல்கிறார்கள். 

உச்சகட்டமாக எம்எல்ஏவாக இல்லாத உதயநிதியை தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் புகழ்ந்து பேசும் அளவுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றவராக மாறியிருக்கிறார். இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்றதன் ஓராண்டையொட்டி கத்தார் திமுக பிரிவு சார்பாக உதயநிதியைப் பாராட்டி பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. அதுதொடர்பான செய்தி உடனடியாக ‘முரசொலி’யிலும் வெளியானது. கட்சி நிறுவனரான சி.என்.அண்ணாதுரைக்குக் கூட இதுபோன்ற புகழ் பாடல்கள் இயற்றப்பட்டதில்லை என்கிறார்கள் திமுகவினர். 

கட்சி போஸ்டர்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, கட்சித் தலைவர் படங்களே மட்டுமே இடம் பெற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டும் கட்சிக்குள் அதை யாரும் கண்டுகொள்ளாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்படி திமுகவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள உதயநிதி, பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லும்போதெல்லாம் நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று கிண்டலான உடல்மொழியில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கலாய்ப்பது அக்கட்சிக்கே தீங்காகும் என்பதை நினைக்காமல் பேசிவருகிறார். 

அண்மையில் அப்படி கிண்டலாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, “எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படித்தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு” என்று பேசி சலசலப்புக்கு வித்திட்டார் உதயநிதி. பெண்ணை அவதூறாகப் பேசியதாக எதிர்க்கட்சிகளைத் தாண்டி கூட்டணி கட்சியினரே கண்டிக்கும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு இருந்ததை மறுக்க முடியாது. இதுவரை கட்சிக்குள் மட்டுமே தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த உதயநிதி, 

தற்போது கட்சி கூட்டணி பங்கீடு, தொகுதி பங்கீடு வரை தன்னுடைய ஆதிக்கத்தை மெல்ல பரவவிட்டு, கூட்டணி கட்சிகளையும் சீண்டத் தொடங்கியிருக்கிறார். கருணாநிதி இருந்தபோது மு.க. ஸ்டாலின் என்னத்தான் அதிகாரம் பெற்ற, அனுபவம் பெற்ற கட்சி நிர்வாகியாக இருந்தாலும்கூட, கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில்தான் முதன் முறையாக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட ஆரம்பித்தார். அதுவும் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக தடுமாறிய காரணத்தால். 

அதற்கு முன்பாக 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆலோசனைகள் மட்டுமே மு.க. ஸ்டாலின் வழங்கினார். ஆனால், 2011 சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பும் சரி, திமுகவுக்காக பிரச்சாரம் செய்யும் வேலையை மட்டுமே ஸ்டாலின் பார்த்தார். வேட்பாளர் தேர்வில்கூட மு.க.ஸ்டாலின் தலையிட்டதில்லை. அதிகபட்சமாக தனது ஆதரவாளர்களை வேட்பாளராக அறிவிக்க பரிந்துரை செய்வதோடு நிறுத்திக்கொள்வார் ஸ்டாலின். தேர்தல் வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றையெல்லாம் கருணாநிதிதான் இறுதி செய்வார். ஆனால், தற்போது அந்தக் காட்சியும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. 

இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்று முழுமையாக 2 ஆண்டுகள்கூட நிறைவடையாத உதயநிதி, திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும், எந்த கட்சிகள் இருக்க கூடாது, யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தெல்லாம் வெளிப்படையாகவே பேசும் அளவுக்கு தற்போது செயல்பாடுகள் மாறியுள்ளன. தனது தந்தைதான் திமுக தலைவர் என்பதையே மறந்துவிட்டு தலைவரான ஸ்டாலின் பேச வேண்டியதை எல்லாம் பேசி வருகிறார் உதயநிதி.

“மயிலாப்பூர், தியாகராய நகர் தொகுதி இந்த முறை கண்டிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கப்படாது. இந்த தொகுதியில் கண்டிப்பாக திமுக வேட்பாளர்கள்தான் போட்டியிடுவார்கள். திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க கூடாது, திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என்று உதயநிதி பொதுவெளியில் பேசியிருப்பது மு.க.ஸ்டாலினை அவர் ஓவர்டேக் செய்ய முயல்கிறாரா என்கிற கேள்விக்கு வித்திட்டுள்ளது. 

கூட்டணி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கட்டளையிடுகிறாரா என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது மு.க.ஸ்டாலின் தனக்கு கொடுத்த வேலைகளை மட்டுமே செய்வார். தேர்தல் தொடர்பாக பொதுவெளியில் பேசுவதை முற்றிலும அவர் தவிர்த்துவிடுவார். ஆனால், தற்போதைய இளைஞர் அணிச் செயலாளர், தலைவரை விஞ்சிய சூப்பர் பவர் சென்டராக உருவெடுக்கும் அளவுக்கு மாறியுள்ளார். உதயநிதியின் இந்த பேச்சு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை நிச்சயம் யோசிக்க வைக்கும்.

ஏற்கெனவே திமுக த லைமை திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைக்கும் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் தான்தான் தொகுதிகளை ஒதுக்க உள்ளது போல் உதயநிதி பேசியிருப்பது அரசியல் கள நிலவரத்தை முழுமையாக அறிந்து கொள்ளாததன் வெளிப்பாடு என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். இதுபோன்ற உதயநிதியின் பேச்சுகள் கூட்டணி கட்சிகளை உள்ளடி வேலை பார்க்கவோ, அல்லது கடைசி நேரத்தில் கழுத்தை அறுக்கவோ காரணமாகிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். . உதயநிதியின் இந்தஎல்லையில்லா அதீத ஆதிக்கத்துக்கு ‘கிச்சன் கேபினெ’ட்டையும் அக்கட்சிக்குள் காரணமாகக் கூறுகிறார்கள். 

கருணாநிதி இருந்தவரை மு.க. ஸ்டாலினால் தலையெடுக்க முடியாமல் போனது. அதுபோன்றதொரு நிலை தன்னுடைய மகனுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே விரைவாக கட்சிக்குள் வளர்த்துவிடப்பட வேண்டும் என்று ‘கிச்சன் கேபினெட்’டின் அழுத்தத்தை கட்சி தலைமையால் மீற முடியவில்லை என்கிறார்கள். பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இல்லாமல் இருக்கும் திமுக, வாழ்வா, சாவா என்ற தேர்தலில் வெற்றி பெறுவதை இதுபோன்ற அழுத்தங்கள், குறுக்கீடுகள் தடுத்துவிடும் என்பதை அக்கட்சி உணரவில்லையோ என்ற இயல்பான கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.