27/12/2020

ரஜினிக்குக் காத்திருக்கும் சவால்கள் என்ன?

கால் நூற்றாண்டு காலமாக இதோ வருவார்; அதோ வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஒரு வழியாக அரசியல் போருக்குத்  தயாராகிவிட்டார். 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று, ‘போருக்குத் தயாராக இருங்கள்’ என தன்னுடைய ரசிகர்களுக்கு கட்டளையிட்டார் ரஜினி. சரியாக 3 ஆண்டுகள் கழித்தே அதே டிசம்பர் 31 அன்று போருக்கு ஆயத்தமாகும் தேதியை உறுதியாக அறிவிக்க உள்ளார். ரஜினி எனும் தேர் அரசியல் எனும் களத்துக்குள் வந்துவிட்டது. தேர்தல் களத்தில் ரஜினிக்குக் காத்திருக்கும் சவால்கள் என்ன?


ரஜினி டிசம்பர் 2 அன்று வெளியிட்ட ட்விட்டர் செய்தி, தமிழகமெங்கும் தலைப்புச் செய்தியானது. “இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை.. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்” என்ற ஹாஷ்டேக்குடன் தொடங்கிய பதிவில், “வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும்!!!" என்று பதிவிட்டார் ரஜினி. ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரை இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் அவரால் திராவிட கட்சிகளுக்கு சிக்கல் எழும் என நினைக்கும் கட்சிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

முதல் சவால்

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அந்தக் கட்சிகளை ரஜினியால் அசைத்துப் பார்க்க முடியுமா என்பதுதான் ரஜினி முன் நிற்கும் முதல் சவால். கடந்த மார்ச் மாதம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஜினியே இதை வெளிப்படுத்தியிருந்தார். “திமுக, அதிமுக என்ற இரண்டு பெரும் ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அசுர பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில், சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு நான் ஜெயிக்க முடியுமா, தேர்தல் என்பது சாதாரண விஷயமா?” என்று இயல்பாகவே கேள்வி எழுப்பினார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழக தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே 50 முதல் 60 சதவீத வாக்குகளைப் பெறும் அளவுக்கு கட்டமைப்பு உள்ள கட்சிகள். வாக்காளார்களை விலைக்கு வாங்கும் வித்தைகளையும் கற்ற கட்சிகள். இந்த இரு கட்சிகளின் வாக்குகளையும் செல்வாக்கையும் தாண்டி ரஜினி நினைத்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்பது இமாலயப் பணி. 

ஆனால், அதேவேளையில் ‘தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் அதிக ஓட்டுகளைப் பெற அக்கட்சிகளின் தலைவர்களாக இருந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் காரணம். ஆட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டாலும் மக்கள் மாறி மாறி இத்தலைவர்களுக்காக மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், அந்த இரு ஆளுமைமிக்க தலைவர்களும் இன்று இல்லை. அதனால், இயல்பாகவே அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்தத் தலைவர்கள் இல்லாமல் முதல் தேர்தலை தமிழகம் சந்திக்கும் நிலையில், எல்லோருக்குமே இது புதிய தேர்தல்தான். அவர்களின் இடத்தில் ரஜினியை வைத்து தமிழக மக்கள் பார்ப்பார்கள்’ என்பது ரஜினி ரசிகர்கள் சொல்லும் நம்பிக்கை. 

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி தேவை என்ற கருத்துகொண்டிருப்போர் அதிகம் உள்ளனர். தமிழக தேர்தல் நிலவரத்தை உற்று நோக்கினால், ஒரு விஷயம் நமக்கு புலப்படும். கடந்த 21 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக களமிறங்கிய கட்சிகள் 10 முதல் 19 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆனால், கால ஓட்டத்தில் அந்தக் கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தங்களைத் தொலைத்துகொண்டுவிட்ட போக்கையும் பார்க்க முடிகிறது. இந்த இடத்தில் ரஜினியின் அரசியல் வருகை மக்களைத் திரும்பி பார்க்க வைக்கும் என்று சொல்வதற்கு சாத்தியக்கூறுகளும் உள்ளன. மேலும் ரஜினி மீதுள்ள நல்லவர் என்ற இமேஜூம் எளிமையானவர் என்ற பிம்பமும் மிகப் பெரிய மாஸ் ஸ்டார் என்ற சினிமா புகழும் ரஜினிக்கு உதவக்கூடும்.

இரண்டாம் சவால்

ரஜினிக்கு உள்ள அடுத்த சவால், கால நேரமின்மை. கரோனா தொற்று பரவல் அவருடைய அரசியல் பிரவேசதுக்கு ஸ்பீடு பிரேக்காக அமைந்தது. எம்.ஜி.ஆர். போல ரஜினி ஜெயிப்பார் என்று ரஜினியின் ஆதரவாளர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கும் முன்பே திமுகவில் பல ஆண்டுகாலம் டிராவல் செய்தவர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய ஆண்டு 1972. தேர்தலை சந்தித்த ஆண்டு 1977. இடைப்பட்ட ஐந்து ஆண்டு காலம், அவர் தன்னுடைய கட்சியை வளர்க்கவும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் மிதமிஞ்சிய காலம் இருந்தது. ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31 அன்றுதான் அறிவிக்கப்போகிறார். அதன்பிறகு ரஜினிக்கு இருக்கப்போவது வெறும் 4 மாதங்கள்தான்.

ஆந்திராவில் குறுகிய காலத்தில் கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடித்த என்.டி. ராமராவையும் உதாரணமாக ரஜினி ரசிகர்களும் அவருடைய ஆதரவாளர்களும் கூறுகிறார்கள். என்.டி. ராமாராவுக்கும் கட்சி தொடங்கியதற்கும் ஆட்சியைப் பிடித்ததற்கும் இடையே 9 மாத காலம் அவகாசம் இருந்தது. அந்த அவகாசத்தில் ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து எளிதில் வெற்றி பெற்றவர் என்.டி.ராமாராவ். கரோனா பரவல் இன்னும் முற்றுப்பெறாத நிலையிலும் ரஜினியின் உடல்நலனில் உள்ள சிக்கல்களும், அவர் மக்களை எந்த அளவில் அணுகி பிரசாரம் மேற்கொள்ள முடியும் என்பது நிச்சயமாகவே பெரும் சவால்தான். ஆனால், தன்னுடைய உயிரே போனாலும் அதற்காக கவலைப்பட மாட்டேன் என்று ரஜினி அறிவித்துள்ளது, அவர் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது.

ஒரு வகையில் பார்த்தால், அந்தக் காலம் என்பது மக்களை நேரிடையாகச் சென்று சந்தித்து கட்சி வளர்க்கும் காலமாகவே இருந்தது. மக்களைத் தொடர்புகொள்ள நேரிடையாக சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டம் மக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை தொழில்நுட்பங்கள் குறைத்துவிட்டன. குறிப்பாக, சமூக ஊடகங்கள் மக்களுடனான நெருக்கத்தை அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதீதமாகவே வழங்கியுள்ளன.

வரும் தேர்தலில் சமூக ஊடகங்கள் குறிப்பிடத்தக்கப் பங்காற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அது ரஜினிக்கு மிகப் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரஜினி சமூக ஊடகத்தில் ஒரு கருத்திட்டால், அது கடைக்கோடி வாக்காளரையும் எளிதில் சென்றடைந்துவிடுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். 1996-ம் ஆண்டில் ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று டி.வி.யில் தோன்றி ரஜினி பேசியது, ஹிட் அடித்ததையும் இந்நேரத்தில் நினைவில் கொள்ளலாம். 

மூன்றாவது சவால்

ரஜினிக்கு உள்ள மூன்றாவது சவால், மிக முக்கியமானது. தமிழகத் தேர்தல் களத்தில் யார் முதல்வர் என்று பார்த்து வாக்களிப்போர்தான் இங்கே அதிகம். கடந்த 30 ஆண்டுகளாக கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பார்த்துதான் மக்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள். தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், ரஜினியோ தான் முதல்வராக இருக்கப்போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். ரஜினி முதல்வர் வேட்பாளராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஆலோசனை வழங்கும் குருமூர்த்தி, தமிழருவி மணியன் போன்றவர்களும், அவருடைய ரசிகர்களும் வலியுறுத்திவருகிறார்கள். தமிழகத்தில் சிறு வாக்கு வங்கி உள்ள கட்சிகள்கூட முதல்வர் வேட்பாளராக தங்களை அறிவித்துகொண்டுதான் தேர்தலை எதிர்கொள்கின்றன. எனவே, ரஜினிக்கு இந்த விவகாரம் அழுத்தம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், 2001 சட்டப்பேரவைத் தேர்தல் உதாரணம், அந்தக் குறையை ரஜினிக்கு போக்கும் என்று நம்புவதற்கும் இடமுண்டு. அந்தத் தேர்தலில் ஊழல் வழக்கில்  தண்டனை பெற்றிருந்ததால், ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவால் முதல்வராக முடியாது என்றே திமுகவும் பிரசாரம் செய்தது. வெற்றி பெற்றாலும் முதல்வராக முடியாது என்ற திரிசங்கு நிலையில்தான் தேர்தலை எதிர்கொண்டார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா முதல்வர் ஆக முடியாது என்று தெரிந்தே அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். முதல்வர் வேட்பாளர் இல்லாத நிலையில் அதிமுக அன்று வெற்றி பெற்றது ரஜினிக்கான ஒரு பாசிட்டிவான சமிக்கைதான்.

நான்காம் சவால்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த நாள் முதலே, அவரை பாஜகவின் ஊதுகுழல், ஆர்.எஸ்.எஸின் இறக்குமதி, பாஜகவின் பி டீம் என்றெல்லாம் எதிர்க்கட்சிகளும் ரஜினியை எதிர்ப்போரும் தமிழகத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். அந்த மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ரஜினிக்கு உண்டு. ரஜினியின் ஒவ்வொரு செயலையும் நகர்வையும் ஆரத் தழுவி வரவேற்கும் கட்சி என்றால் அது பாஜகதான். இதுவும் பாஜகவினரின் இயல்பான ஆதரவும், அவர் பாஜக ஆள் என்று நம்புவதற்கும் ஏதுவாகிவிட்டன. ஒரு கட்டத்தில், “என் மீது காவி வண்ணத்தைப் பூசப் பார்க்கிறார்கள். அது முடியாது” என்று ரஜினி வெளிப்படையாக அறிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனாலும், ரஜினி மீதான அந்த விமர்சனத்தை நீர்த்துப் போகாமல் எதிர்க்கட்சிகள் அப்படியே வைத்துள்ளன.

ரஜினி அறிவித்த ஆன்மிக அரசியல் என்பதை தமிழக கட்சிகள்  'மதவாத அரசியல்’ என்றே மாற்றுப் பெயரைச் சூட்டி ரஜினியைச் சீண்டிவருகின்றன. ‘ரஜினியின் அரசியல் செயல்பாடுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் சாதகமாகவே இருக்கும்’ எனவும் கடும் விமர்சனங்களை ரஜினி எதிர்ப்பாளர்கள் முனவைத்து வருகிறார்கள். அவற்றை தன் செயல்பாடுகள் மற்றும் பிரசாரங்கள், கொள்கைகள் வாயிலாக, முறியடிக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளது. அது ரஜினிக்கு ஒரு வகையில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கும்.

தமிழகத் தேர்தல் களத்தில் காத்திருக்கும் இந்த மிகப் பெரிய சவால்களை எல்லாம் ரஜினியும் அவருடைய ரசிகர்களும் (எதிர்கால தொண்டர்கள்) எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில்தான் ரஜினியின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது!