26/11/2018

இறுதிச்சுற்று!


வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் சிலரை ஏணியிலும் ஏற்றி வைக்கும். சிலரை
தலைகீழாகக் குப்புற கவிழ்த்துவிடும். தடகளத்தை உயிர் மூச்சாக நினைத்த அந்தப் பெண்ணுக்கு, ஒரு வெற்றியாளரின் மூலம் குத்துச்சண்டை என்ற விளையாட்டு பெரும் திருப்பமாக அவருக்குள் ஊடுருவியது. அந்த ஊடுருவலும் அந்த விளையாட்டின் மீதான அதீத ஆர்வமும் பின்தங்கிய மாநிலத்தில் பிறந்த அவரை, உலக சூப்பர் ஸ்டாராக மாற்றியது. அவர், ‘மெக்னிஃபிசியன்ட் மேரி’ என்று செல்லமாக அழைக்கப்படும் மேரி கோம்.
மணிப்பூரில் உள்ள கங்காதேய்தான் மேரி கோமின் சொந்த ஊர். பள்ளியில் படித்த காலத்தில் படிப்பின் மீது அவருக்குப் பெரிதாக  ஈடுபாடு இல்லை. படிப்பு, தேர்வு போன்ற வார்த்தைகள் எல்லாம் அவருக்கு பாகற்காய். மாறாக விளையாட்டு என்றால் கல்கண்டு. கஷ்டப்படும் தன் தாய், தந்தையருக்கு உதவியாக விவசாய வேலை பார்ப்பதிலும் அவருக்கு தீவிர ஈடுபாடு இருந்தது. பள்ளியில் விளையாட அழைத்தால் முதல் ஆளாகப் பெயர் கொடுத்துவிடுவார். ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகள்தான் அவருக்கு பிடித்தமானவை.
குத்துச்சண்டையில் ஆர்வம்
இந்த ஆர்வம் எல்லாம் மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் பதக்கம் வெல்லும்வரைதான் இருந்தது. 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிங்கோ சிங் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, அந்த விளையாட்டின் மீது மேரி கோமுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 200-0-ம் ஆண்டில் குத்துச்சண்டை விளையாட்டில் தீவிரமாக ஈடுபட முடிவெடுத்து, அந்த விளையாட்டில் அடியெடுத்து வைத்தார் மேரி கோம். ஆனால், குத்துச்சண்டை விளையாட கையுறை வாங்கக்கூட காசு இல்லாத வறுமையான சூழலில் இருந்தார் மேரிகோம். கையுறை இல்லாமலேயே வெறுங்கைகளால் குத்துச்சண்டையைப் பழக ஆரம்பித்தார். வெறும் 18 நாட்களிலேயே குத்துச்சண்டை நுணுக்கங்களை அக்குவேறு ஆணி வேறாக கற்றுக்கொண்டார்.
வீட்டுக்குத் தெரியாமல்...
குத்துச்சண்டை விளையாடுவதை வீட்டில் யாருக்கும் மேரி கோம் சொல்லவில்லை. சொன்னால், விளையாட விடமாட்டார்கள் என்பதால், யாருக்கும் சொல்லாமலேயே குத்துச்சண்டை கற்றுக்கண்டதோடு போட்டிகளுக்கும் சென்றுவந்தார். மாநில அளவில் விளையாடியபோதும்கூட வீட்டில் யாருக்கும் தெரியாது. ஒரு நாள் மேரி கோமின் தந்தை செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது திடுக்கிட்டுப் போனார். செய்தித்தாளில் சிரித்த முகத்தோடு மேரி கோமின் ஒளிப்படத்தைப் பார்த்ததுதான் இதற்குக் காரணம். இதனால் அவருக்குக் கோபம் தலைக்கேறியது.  “குத்துச்சண்டை விளையாடுறியா, காயம் ஏற்பட்டுச்சுன்னா உன்னை யார் கல்யாணம் பண்ணிக்குவா?” என்று மேரி கோமிடம் சத்தம் போட்டார் அவரது தந்தை.
சர்வதேச வாய்ப்பு
குத்துச்சண்டை விளையாட மேரி கோமின் தந்தை விரும்பாவிட்டாலும், தாயின் ஆதரவு அவருக்குப் பக்கபலமாக இருந்தது. அப்போதே மாநிலம், தேசிய அளவில் தன்னை நிலை நிறுத்திகொண்ட மேரி கோம், சர்வதேச அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார். அவரது திறமையை நிரூபிக்க 2001-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பெரும் வாய்ப்பாக அமைந்தது. 48 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய மேரி கோம், இறுதிச் சுற்றுவரை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தோடு நாடு திரும்பினார். இதுதான் அவர் பெற்ற முதல் சர்வதேச
பதக்கம்.
உலக சாம்பியன்
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த வீராங்கனையும் செய்யாத ஒரு சாதனையை மேரி கோம் செய்துகாட்டினார். 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று புதிய உலக சாதனை படைத்தார் மேரி கோம். இது மட்டுமல்ல, 6 முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஒரே வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். குத்துச்சண்டையில் சிறந்து விளங்கிய பல வெளிநாட்டு வீராங்கனைகளை  வீழ்த்தி, தொடர்ந்து வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டதன் மூலம், மகளிர் குத்துச்சண்டை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார் மேரி கோம்.
உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் எப்படி உச்ச நாயகியாகத் திகழ்ந்தாரோ அதேபோல ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் தனிக் காட்டு ராணியாக இருந்தார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 5 முறை தங்கப் பதக்கத்தையும் ஒரு முறை வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் மேரி கோம். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தலா ஒரு முறை தங்கப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார் மேரி.  
முத்தாய்ப்பான வெற்றி
இவற்றில் 2008-ம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற தங்கப் பதக்கமும் இந்தியாவில்  நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற வெள்ளிப் பதக்கமும் தன்னிகரற்றவை. 2005-ம் ஆண்டில் மேரி கோம் கருங் ஆன்ஹோலர் என்பவரை காதல் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 2007-ம் ஆண்டில் இரட்டைக் குழந்தை பிறந்திருந்தது. குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியிருந்ததால் குத்துச்சண்டை பக்கமே தலைவைக்கவில்லை மேரி கோம். பயிற்சி எடுத்தே மாதக்கணக்காகியிருந்தது. மேரி கோம் பதக்கம் வெல்வார் என யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஒரு மாதம் மட்டுமே பயிற்சி எடுத்து, தன்னை மட்டும் நம்பி களத்தில் இறங்கிய மேரி உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பதக்கங்களை வென்று குத்துச்சண்டை உலகை புருவம் உயரச் செய்தார். மேரி கோமின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது என்று குத்துச்சண்டை உலகம் மேரி கோமை உச்சி முகர்ந்தது.
ஒலிம்பிக்கில் பதக்கம்
உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப்பில் ராணியாக வலம்வந்த மேரி கோம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல தவமாய் காத்திருந்தார். இறுதியில் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சண்டையிடுவதற்கான வாய்ப்பு மேரிக்குக் கிடைத்தது.  51 கிலோ ஃபிளைவெயிட் பிரிவில் களமிறங்கிய மேரி கோம் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தாலும்,  இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார் மேரி கோம். குத்துச்சண்டை யில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
எல்லா பதக்கங்களையும் பார்த்திருந்தாலும், காமன்வெல்த்தில் மட்டும் மேரி பதக்கம் வெல்லவில்லை என்ற குறை இருந்தது. அந்தக் குறையையும் இந்த ஆண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தீர்த்துக்கொண்டார். 48 லைட் ஃபிளை வெயிட் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றதன்மூலம் எல்லாவிதமான தொடர்களிலும் பதக்கம் வென்றவரானார் மேரி கோம்.
அங்கீகாரங்கள்   

குத்துச்சண்டையில் தனக்கென தனிப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதில் தனிக்காட்டு ராணியாகப் பயணித்த மேரி கோம், இந்திய மகளிர் குத்துச்சண்டைக்கு முன்னுரை எழுதிய மகத்தான வீராங்கனை. மற்ற வீரர், வீராங்கனைகளைவிட அவர் பெற்ற விருதுகளே அதற்கு அத்தாட்சி. 2003-ம் ஆண்டில் அர்ஜூனா விருது, 2006-ல் பத்மஸ்ரீ விருது, 2009-ல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, 2013-ல் பத்மபூஷன் விருது என அவரது சாதனையில் மகுடங்களாக விருதுகள் ஜொலிக்கின்றன. இதுமட்டுமல்ல கபில்தேவ், டோனி, அபினவ் பிந்த்ரா என சிலருக்கு மட்டுமே கிடைத்த இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியும் மேரி கோமுக்குக் கிடைத்தது. இந்தக் கவுரவப் பதவியைப் பெற்ற பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் மேரி கோம்தான்.
மேரி கோமால் மகளிர் குத்துச்சண்டை இன்று இந்தியாவில் பீடு நடைபோடுகிறது. அந்த வகையில் இந்தியாவில் மகளிர் குத்துச்சண்டைக்கான கதவுகளைத் திறந்தவர் மேரி கோம். குத்துச்சண்டை விளையாட பணம் இல்லாமல் தவித்த காலத்தை மேரி கோம் இன்னும் மறந்துவிடவில்லை. தன்னைப் போல வேறு யாருக்கு ஏழ்மையால் குத்துச்சண்டை விளையாடமல் இருக்கக் கூடாது என்பதற்காக இம்பாலில் ‘எம்.சி. மேரி கோம் பாக்ஸிங் அகாடமி’யை நிறுவி இளம் வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாகப் பயிற்சி வழங்கிவருகிறார். தனது பரிசுப் பணத்திலிருந்து இந்த உதவியைச் செய்துவருவது அவரது உன்னதமான மனதுக்கு ஓர் உதாரணம்.  
ஒலிம்பிக்கில் எப்படியும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் மேரி கோமின் லட்சியம். 2020-ல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார். அந்த லட்சியத்தை அடைய மேரி கோமை நாமும் வாழ்த்துவோம்.
- இந்து தமிழ், 03/11/2018

23/11/2018

நான் ‘ராட்சசன்’ அல்ல!

தமிழ் சினிமாவில் அறிமுக நாயர்களைவிட வில்லன்கள் பெயரெடுப்பது எப்போதாவதுதான் நிகழும். அண்மையில் வெளியான படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டார்.  சைக்கோ கொலையாளியாக ‘ராட்சசன்’ படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ சரவணன் என்ற இதுவரை அழைக்கப்பட்டு வந்த அவர், இந்தப் படத்துக்குப் பின்  ‘ராட்சசன்’ சரவணனாக மாறியிருக்கிறார். அவரை ஒரு மாலை வேளையில் சந்தித்திலிருந்து...

உங்கள் பின்னணி என்ன?

அரியலூர்தான் எனக்கு சொந்த ஊர். வேலை நிமித்தமாக அப்பா திருச்சிக்கு மாறியதால், அங்கேதான் என்னுடைய படிப்பு, வாழ்க்கை எல்லாம் நகர்ந்தது. கல்லூரியை முடித்த பிறகு 7 ஆண்டுகள் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்தேன். வாழ்க்கையில்  பிடித்ததை செய்ய வேண்டும் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. என்னெ செய்யலாம் என யோசித்தபோது, சினிமாவுக்கு செல்லும் எண்ணம் வந்தது. எனது தந்தை ஒரு நாடகக் கலைஞர். அந்த வகையில் நாடகம், சினிமா மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தோடு 2004-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.

சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?


சென்னைக்கு வந்தபிறகு படியேறாத படக் கம்பெனிகளே இல்லை. நான் வாய்ப்பு தேடிய காலத்தில் ‘பருத்தி வீரன்’, ‘களவாணி’ போன்ற கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களே வந்தன. என் தோற்றத்துக்கேற்ப கதைகளைத் தேடினேன். ஒரு சினிமா பி.ஆர்.ஓ.வின் உதவி கிடைத்தது. சினிமா உலகத்தைப் பற்றி அவர் எனக்கு நிறைய விஷயங்களைச் சொன்னார். அதைப் பின்பற்றியபோது நிறைய படங்களில் ஒரு சில சீன்களில் வருவதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பார்த்தால், 2009-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’தான் என் முதல் படம். ‘நான்’, ‘மவுனகுரு’ போன்ற படங்கள் ஓரளவு முகம் தெரிய வைத்தன.

‘ராட்சசன்’ படத்துக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

 சினிமா தவிர்த்து நிறைய குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை குறும்படத்துக்கு டப்பிங் பேச சென்றபோதுதான், இயக்குநர் ராம்குமார் அறிமுகம் கிடைத்தது. ‘முண்டாசுப்பட்டி’ படத்தை அவர் இயக்கியபோது, அந்தப் படத்தில் என்னுடைய நண்பர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்தார்கள். அந்தப் படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. இருந்தாலும் இயக்குநருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ‘ராட்சசன்’ படத்தை அவர் இயக்கும் முயற்சியில் இருந்தபோது அவரைப் போய் பார்த்தேன். முதலில் போலீஸ் கதாபாத்திரத்துக்குத்தான் கூப்பிட்டார்கள். இப்படித்தான் ‘ராட்சசன்’ படத்துக்குள் நுழைந்தேன்.

 சைக்கோ கொலைக்காரப் பாத்திரத்துக்கு உங்களை எப்படி இயக்குநர் தேர்வு செய்தார்?

அதற்கு என்னுடைய தோற்றம் பொருந்தியதுதான் முதல் காரணம். அது மட்டுல்ல, பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன்போல இருந்ததும் பெர்ணான்டோ கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தது இன்னொரு காரணம். இயக்குநர் எனக்கு நிறைய ‘ஆடிசன்’ வைத்தார். அதில் எல்லாம் தேறினேன். அந்தக் கதாபத்திரத்துக்கு முழுமையாக நான் பொருந்துவேன் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு வந்த பிறகே சைக்கோ கதாபாத்திரத்துக்கு என்னை இயக்குநர்  ‘டிக்’ செய்தார்.

அந்தப் பாத்திரத்துக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்ததோ?

படத்துக்காக எவ்வளவு அளவுக்கு உடல் எடையைக் குறைக்க முடியுமோ, அந்த அளவுக்குக் குறைக்கச் சொன்னார்கள். இந்தப் படத்துக்காக 62 கிலோ எடையிலிருந்து 43 கிலோவுக்கு எடையைக் குறைத்தேன். படத்தில் மேஜிக் காட்சிகளும் பிரதானம் என்பதால், அந்தக் கலையை ஒரு மாதத்துக்கு மேல் கற்றுக்கொண்டேன். தயா என்ற மேஜிக் கலைஞர்தான் எனக்கு அந்தக் கலையை கற்றுக்கொடுத்தார். சைக்கோ கதாபாத்திரத்துக்கும், அம்மா கதாபாத்திரத்துக்கும் தினமும் நான்கரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். அதற்காக சூட்டிங் இருக்கும் காலத்தில் அதிகாலையிலேயே வந்துவிடுவேன். இயக்குநர் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டேன்.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் உங்கள் உண்மையான முகம் ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டதா?

உண்மையில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. படத்தில் வசனம்  இல்லை என்றும் நான் வருந்தவில்லை. ‘ராட்சசன்’ படத்தில் சைக்கோ கதாபாத்திரம்தான் மிக முக்கியமானது என்பதை தெரிந்துகொண்ட பிறகு அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். இந்தப் படம்தான் என்னுடைய வாழ்க்கை என்பதால், இயக்குநர் சொன்னா அனைத்தையும் செய்தேன். ஒரு நல்ல வாய்ப்புக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்தேன். அதைப் பிடித்துதான் முன்னேற வேண்டும் என்ற நிலையில், மற்றதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை.
தவிர, இந்தப் படத்தில் சரவணன் முகம் தேவைப்படவில்லை. ஆங்கிலோ இந்தியன் முகம்தான் தேவை. ஆங்கிலோ இந்தியன் தாய் - மகன்தான் கதையே. உடல்மொழியால் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது என் வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையில் இயக்குநர் சொன்னதை மட்டுமே நான் செய்தேன். படத்தைப் பார்த்து யார் இந்த வில்லன் என்று ரசிகர்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். படம் வெளியான பிறகு நான் நினைத்ததுபோலவே நடந்தது. அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சிதான்.

இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது?

என்னுடைய 14 ஆண்டுகள் கஷ்டம் இந்த ஒரு படம் மூலம் தீர்ந்தது. மிகவும் நேசித்த ஒரு துறையில் ஓரிடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய மதில் சுவரை மட்டுமே இத்தனை ஆண்டுகளாகச் சுற்றிச்சுற்றி வந்தவனுக்கு வாசல் திறந்ததைப் போல உணர்கிறேன்.

 ‘ராட்சசன்’ படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்களில் மறக்க முடியாத பிரபலம் யார்?

ரஜினி, அஜித் ஆகியோர் வாழ்த்தியதை மறக்க முடியாது. யார் அந்த வில்லன், அவரோட உடல்மொழி ரொம்ப ஸ்டைல்லா இருக்கே என்று ரஜினி சொன்னதைப் பெருமையாக நினைக்கிறேன். ஸ்டைலுக்கே உதாரணமாகச்சொல்லக்கூடிய ரஜினி வாயிலிருந்து கிடைத்த பாராட்டு என்பதால் இதை மறக்க முடியாது. அஜித் அவருடைய மேனேஜரிடம் வில்லன் யார், உண்மையிலேயே வெளிநாட்டுக்காரரா, அவருடைய வில்லன் ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு பாரட்டையும் நான் உச்சபச்ச வாழ்த்தாக கருதுகிறேன்.

சரவணன் நிஜத்தில் எப்படி?
சரவணன்


 நிஜத்தில் சரவணன் மிகவும் சாது. இயக்குநர் என்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். மிகவும் இளகிய மனம் படைத்த ஆள் நான். நடிப்பு என்று தெரிந்தே படம் பார்க்கும்போது சென்டிமெண்ட் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன்.

 ‘ராட்சசன்’ வரவேற்புக்கு பின்னர் புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளனவா?


இரண்டு பட வாய்ப்புகள் வந்துள்ளன.  இனி வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இயக்குநர் ராம்குமார் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததுபோல எந்த இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

- இந்து தமிழ், 23/11/2018

17/11/2018

மீண்டும் ஒரு ‘96’ கதை!

தலைப்பைப் படித்ததும் மீண்டும் ஒரு காதல் கதையோ என்று நினைத்துவிடாதீர்கள். இது அரசியல் கூடல் கதை. ஆந்திராவுக்கும் தேசிய அளவிலான அணி உருவாக்கத்துக்கும் தொடர்பைச் சொல்லும் கதை.
பல்வேறு காலகட்டங்களில் தேசிய அளவில் அணிச் சேர்க்கைகளின் தொடக்கப் புள்ளியாக ஆந்திராவே இருந்திருக்கிறது. முப்பது ஆண்டுகள் தேசிய அரசியல் வரலாற்றில் ஆந்திராவை மையப்படுத்தி உருவான கூட்டணிகள் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன.


முதன் முறையாக 1989-ம் ஆண்டில்தான் தேசிய அளவில் ஓர் அணிக்கு அச்சாரமிடப்பட்டது. அன்றைய காலத்தில் அசுர பலத்துடன் இருந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸை எதிர்க்க இந்த அணி உருவானது. ‘தேசிய முன்னணி’ என்ற பெயரில் உருவான இந்தக் கூட்டணியை அன்றைய தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ்தான் முன்னெடுத்தார். போர்ப்ஸ் ஊழல், விபிசிங்கின் எழுச்சி ஆகியவற்றை மையப்படுத்தி அகில இந்திய அளவில் என்.டி. ராமாராவ் இதற்கான விதையை விதைத்தார். இந்த முயற்சிக்கு திமுக, அசாம் கனபரிஷத், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் தோள் கொடுத்தன. 1988-ம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட பேரணியுடன் தேசிய முன்னணி உருவானது. தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக என்.டி.ராமாராவ் இருந்தார்.


1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி பெற்றது. பாஜகவும், இடதுசாரிகளும் வெளியே இருந்து தேசிய முன்னணி அரசை ஆதரித்தன. வி.பி.சிங் தலைமையிலான அரசு, 11 மாதங்கள் மட்டுமே நீடித்தது.  ஆனால், அந்தக் காலகட்டத்தில் கடிவாளமில்லாத குதிரையாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேசிய முன்னணிதான் குடைச்சல் கொடுக்கும் அணியாக இருந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்தபோதும், அகில இந்திய அளவில் தேசிய முன்னணியால் தெலுங்கு தேசக் கட்சி அந்தஸ்தைக் கூட்டிக்கொண்டது.


தேசிய முன்னணியைப் போலவே 1996-ம் ஆண்டிலும் தேசிய அளவிலான

அணிச் சேர்க்கை உருவானது. ஆனால், இது தேசிய முன்னணியைப்போல தேர்தலுக்கு முன்பே உருவான கூட்டணி அல்ல. தேர்தல் முடிவுக்குப் பின்னர் உருவான கூட்டணி. குறிப்பாக பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் உருவான கூட்டணி. இந்தக் கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார் அப்போதைய ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க அவர் தீவிர முயற்சி மேற்கொண்டார்.

ஜனதா தளம், சமாஜ்வாடி, திமுக, தெலுங்கு தேசம், தமாகா, மகாராஷ்டிரா கோமந்தவாடி கட்சி, இடதுசாரிகள் போன்ற கட்சிகளை உள்ளடக்கி இந்தக் கூட்டணி உருவானது. ‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் உருவான இந்தக் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடுதான் அமைப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரிக்க, ஐக்கிய முன்னணியின் ஆட்சி 20 மாதங்கள்வரை நீடித்தது. என்.டி.ராமாராவுக்குப் பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவும் இந்தக் கூட்டணி உருவாக்கத்தின் மூலம் தேசிய அளவில் தனி கவனம் பெற்றார். பிரதமருக்கான ரேஸில் இவரது பெயரும் அந்தக் காலகட்டத்தில் அடிபட்டது.


இந்த இரு பெரும் கூட்டணிகளுக்குப் பிறகு பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி என்றுதான் இந்தியாவின் முகம் மாறியது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிகள்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றன. ஆனால், இடையிடையே தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி போல கூட்டணியை உருவாக்க வேறு பல கட்சிகள் முயன்றாலும், அந்த முயற்சி கைகூடவில்லை. இதற்குக் காரணம். ஒரு காலத்தில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணியில் இடம் பிடித்த கட்சிகள் பலவும் காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இடம் பிடித்ததுதான். தெலுங்கு தேசம் கட்சியும் பெரும்பாலும் பாஜக கூட்டணியில் இடம் பிடித்து வந்தது.


2018-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே மம்தா பானர்ஜி, தெலங்கானாவின் சந்திரசேகர ராவ் ஆகியோர் காங்கிரஸ், பாஜக அல்லாத அணியைக் கட்டமைக்க முயன்றார்கள். அதற்காக பல்வேறு மாநில கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்கள். ஆனால், அந்த முயற்சி மேற்கொண்டு முன்னேற்றம் காணவில்லை.


திடீர் திருப்பமாக பரம எதிரியாக பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி சேர்ந்து, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அணி அமைக்கும் முயற்சியில் இறங்கிய பிறகு, ஆந்திரா மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸுக்கு எதிராக கூட்டணி அமைத்த, கூட்டணியில் இடம் பெற்ற தெலுங்கு தேசம், இந்த முறை காங்கிரஸ் அணியுடன் இணைந்து பிற கட்சிகளையும் அந்தக் கூட்டணியில் சேர்க்க எடுக்கும் முயற்சியின் மூலம் மீண்டும் தேசிய வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.


2004, 2009 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கி வளர்ப்பதில் அக்கறை காட்டியது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளைக் கொண்டுவரும் பொறுப்பை அக்கட்சி எடுக்கவில்லை. மாறாக இப்போது சந்திரபாபு நாயுடு அதற்கான

முயற்சியைத் தொடங்கியிருப்பதன் மூலம் தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் கூடியிருக்கிறது. திமுக, மஜத, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து, தேசிய பார்வை முழுவதும் ஆந்திரா பக்கம் சந்திரபாபு குவியச் செய்திருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்திக்க சந்திரபாபு
உத்தேசித்துள்ளார்.


சந்திரபாபுவின் இந்த முயற்சி 1996-ம் ஆண்டில் நடந்ததைப் போல சுபத்தில் முடியுமா அல்லது சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி ஆகியோர் எடுத்த முயற்சிகளைப் போல பேச்சுவார்த்தையோடு சுருங்கிவிடுமா என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தெரிந்துவிடும்.


09/11/2018

உலகம் பேசிய திரைப் போர்கள்!

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
சமூகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் திரை வழியே கொண்டுவந்துவிடும் திரைத்துறையினர், போர்கள் தொடர்பான கதைகளையும் போரிலும் போரைக் காரணம் காட்டியும் அரங்கேற்றப்படும் மனிதத் தன்மையற்ற நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு போரையும் அதன் அரசியலையும் மையமாக வைத்து பிரம்மாண்டமானப் படங்களை உருவாக்கிய இயக்குநர்கள் ஹாலிவுட்டில் பலர் உண்டு.

மாறாக, போர் காட்சிகளை மையப்படுத்தாமலேயே, போரின் விளைவுகளைச் சொன்ன படங்கள் உலக அரங்கிலேயே குறைவுதான். போரால் மக்கள் படும் துயரங்களையும் போரின் தாக்கங்களையும் போரால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கசிந்துருகும் மனிதத்தையும் குண்டுமழை பொழியும் போர் மேகங்களுக்கு மத்தியில் வாழ்ந்தபடி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் எடுக்கும் முடிவுரை இல்லா முயற்சிகளையும் போர்த் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன.


திரைப்படம் வழியே போரின் ஆக்கிரமிப்பு சுயநலம் எனும் முகமூடியைக் கிழித்துக் காட்டிப் பெரும் வெற்றி பெற்ற படங்களும் உண்டு. பொதுவாக சினிமாவில் போர்க் காட்சிகளைவிட, அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமாக்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியா பெரிய போர்களை எதையும் சந்திக்காததாலோ என்னவோ, சொல்லிக்கொள்ளும்படியான போர்த் திரைப்படங்கள் நம்மிடம் இல்லை.

கார்கில்

பாலிவுட்டில் ‘1971’, ‘கார்கில்’ சமீபத்தில் வெளியான ’காஸி அட்டாக்’ எனச் சில படங்களே போர்களை அடிப்படையாகக் கொண்ட தேசியப்பற்றை நேரடியாகப் பிரச்சாரம் செய்திருக்கின்றன. மிக அருகாமையில் இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்தும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்துவந்தபோதும் அதன் பின்னணியைக் கொண்டு தமிழ் சினிமாவில் எந்தப் படமும் உருவாகவில்லை.
 

16 படங்கள்

போர்ப் படங்களைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என நினைக்கலாம். ஏனென்றால், முதலாம் உலகப் போர் நிறைவுற்ற நூற்றாண்டு இது. 1914-ல் தொடங்கிய இந்தப் போர், 1918 நவம்பர் 11-ம் தேதி அதிகாரபூர்வமாக முடிந்தது.
நாகரிக வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பு நாடு பிடிக்கும் ஆசையிலும் பலத்தைக் காட்டும் கர்வத்தாலும் மனிதர்களுக்குள் இருந்த குரூரங்களின் வெளிப்பாட்டாலும் போர்கள் நடந்தேறின. ஆனால், நாககம் தழைத்தோங்கத் தொடங்கிய பிறகு இனம், நிறம், மொழி, மதம், நாடு, கலாச்சாரம், ஆயுதப் போட்டி, அயல்நாட்டின் வளங்களை சூறையாடுதல் எனப் போர்களின் பின்னுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் காரணங்கள் ஏராளம்.


உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போரைப் பற்றி உலகில் உள்ள எல்லாத் தரப்பு மக்களும் நுணுக்கமாக உணர்ந்துவிட முடியாது. போரும் அதன் தாக்கமும் எப்படியிருக்கும் என்பதைத் திரைப்படங்கள்தான் மக்களுக்குத் திரை வழியே வெளிச்சம் போட்டுகாட்டின. அப்படி உலகை உலுக்கிய சிறந்த திரைப்படங்கள் பலவற்றைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். ‘போர்த்திரை’ என்ற பெயரில் வெளியான இந்த நூல், சர்வதேச அளவில் பேசப்பட்ட 16 போர் தொடர்பான திரைப்படங்களைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளரின் பார்வையில் இந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.


இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர், கொரியப் போர் போன்ற பரிச்சயமான போர்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படங்களை நூலாசிரியர் தேர்ந்துகொண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதில் தொடர்புடைய போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட கதையைச் சொல்லும் ‘ஜட்ஜ்மெண்ட் அட் ந்யூரெம்பர்க்’ (1961); அல்ஜீரிய விடுதலைப் போரின் கதையைத் திரை வழியே சொன்ன ‘தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ்’ (1967); அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் துணை நின்ற ‘மைக்கேல் காலின்ஸ்’ (1996) போன்ற படங்கள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 


இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டமான 1939-ல் வார்சா வானொலி
தி பியானிஸ்ட்
நிலையத்தின் மீது போடப்பட்ட வெடிகுண் டால், நிறுத்தப்பட்ட வானொலி சேவையையும் செய்தி அறிவிப்பாளரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி பியானிஸ்ட்’ (2002), இரண்டாம் உலகப் போரின் மனித உணர்வுகளற்ற கோரத்தை நுணுக்கமாக வெளிச்சம் போட்டு காட்டியது. இந்தப் படமும் நூலில் இடம்பெற்றுள்ளது. அதைவிட நாஜிக்களின் உச்சபட்ச கொடுமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டிய ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படத்துக்கும் நூலாசிரியர் அறிமுகம் தந்திருக்கிறார்.
 

அரிதான முயற்சி

உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்த ஒரு சிறுமியின் அலறல் ஒளிப்படம் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. போர்க்களத்தில் உயிரைத் துச்சமென நினைத்து பகுங்குக் குழிகள் வழியாக போர்க் களத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லும் ஒளிப்படக்காரர்கள் பற்றிய ‘தி பேங் பேங் கிளப்’ (2011) படம் வாசிக்கும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

சமூக ஊடகங்கள் வழியாக எகிப்து தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த ‘தி சோஷியல் நெட்வொர்க்’ (2010) போன்ற அண்மைக்கால படங்களையும் ‘போர்த்திரை’ தொட்டுப் பேசியிருக்கிறது. போர்கள் பற்றிய பல படங்கள் தொகுக்கப்பட்டிருந்தாலும், முதலாம் உலகப் போர் பற்றிய படம் எதுவும் இல்லாதது ஏமாற்றம்தான்.


போர்த் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எழுதாமல், அந்தப் போரின் பின்னணியையும் அதில் ஆழமாகப் பொதிந்துள்ள அரசியலையும் எளிமையான வார்த்தைகளில் கோத்திருப்பது ‘போர்த்திரை’ புத்தகத்தில் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது. தமிழில் திரைத்துறை குறித்த நூல்கள் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில், போர் திரைப்படங்களை மையப்படுத்தி வந்திருக்கும் இந்த நூல் ஒரு அரிதான முயற்சி. திரை ஆர்வலர்கள் நூலகத்தில் இருக்க வேண்டிய ஒன்று.
 

நவம்பர் 11: முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவையொட்டிய கட்டுரை.
 

நூல்: போர்த்திரை
ஆசிரியர்: விஜய் ஆம்ஸ்ட்ராங்
பக்கம்: 120 விலை: ரூ. 100
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு: 044 65157525ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
 

- இந்து தமிழ், 09-11-2018