30/04/2018

மகாராஷ்டிரத்திலிருந்து சீறிய முதல் தோட்டா

பெரும்பாலான விளையாட்டுகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும்போதும் துப்பாக்கி சுடுதல் விளையாட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 2000-க்கு முன்புவரை ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த விளையாட்டாக அது இருந்தது. இந்த நிலையை மாற்றியவர் அஞ்சலி பாகவத். சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்; உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்; உலகத் துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் இந்தியாவின் முகமாக நீண்ட காலம் கோலோச்சியவர் எனப் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

துப்பாக்கி மீது காதல்

பள்ளிப் பருவத்தில் மும்பையில் வசித்த அஞ்சலி பாகவத்துக்குத் துப்பாக்கி சுடும் விளையாட்டு, தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மூலமே அறிமுகமானது. என்.சி.சி. பயிற்சியின்போது துப்பாக்கி பிடிக்கக் கற்றுக்கொண்டதுமே இந்த விளையாட்டின் மீது அவருக்குக் காதல் மலர்ந்தது. பள்ளிப் பருவத்தில் மட்டுமல்ல; கல்லூரியில் காலடி எடுத்த வைத்தபோதும் என்.சி.சி. அமைப்பு இருக்கும் கல்லூரியாகத் தேடிச் சேர்ந்தார்.
முறைப்படி துப்பாக்கி சுடக் கற்றுக்கொள்ள விரும்பியபோது அவர் கல்லூரிப் படிப்பையே முடித்திருந்தார். 21 வயதில்தான் மகாராஷ்டிர ரைபிள் சங்கத்தில் சேர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுக்கத் தொடங்கினார். ஒரே வாரத்துக்குள் துப்பாக்கியைப் பிடிக்க மட்டுமல்ல; குறி பார்த்துச் சுடவும் கற்றுக்கொண்டார்.

1990-களின் தொடக்கத்தில் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி தன் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். 1995-ல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று, சர்வதேச அளவிலான பதக்க வேட்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டார். 1999-ல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியும் அஞ்சலிக்கு மறக்க முடியாத தொடர்தான். இந்தத் தொடரில் மட்டும் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று முத்திரை பதித்தார்.

விஸ்வரூப வளர்ச்சி

விளையாட்டைப் பொறுத்தவரை வீரர், வீராங்கனைகள் எல்லாருக்குமே 30 வயது என்பது வேகத் தடையைப் போன்றது. குறிப்பாக, இளம் போட்டியாளர்களுடன் போட்டி போட்டு விளையாடும் திறன் குறையத் தொடங்கிவிடும். ஆனால், அஞ்சலி பாகவத் தலைகீழாக இருந்தார். இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகு அஞ்சலி பாகவத் விஸ்வரூபமெடுத்தார். அப்போது 31 வயதை எட்டியிருந்த அஞ்சலி, அதன் பிறகு சர்வதேச அளவில் பதக்கங்களைக் குவித்தார்.

முதன்முறையாக 2000-ல் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்கஅஞ்சலி பாகவத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் எதுவும் கிடைக்கவில்லையென்றாலும், குறிப்பிடத்தக்க சாதனையைப் படைக்க அவர் தவறவில்லை. துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். இந்தியப் பெண் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது அதுதான் முதல்முறை.

2002-ல் அஞ்சலியின் விளையாட்டு வாழ்க்கையின் வசந்த காலம். அந்த ஆண்டு மான்செஸ்டரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தத் தொடரில் மட்டும் 10 மீட்டர் ஏர் ரைபிள், 3 விதமான 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுகளில் பங்கேற்ற அஞ்சலி பாகவத், நான்கு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கத்தைத் தனதாக்கி, உலக சாதனை படைத்தார். இதேபோல 2003-ல் இந்தோ - ஆப்ரிக்கத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இரு பிரிவுகளில் பங்கேற்றுத் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களை வென்றார். இந்தத் தொடரிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனைக்கு அஞ்சலி சொந்தக்காரர் ஆனார். இந்தக் காலகட்டத்தில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுத் தரவரிசைப் பட்டியலில் அஞ்சலி பாகவத் முதலிடத்துக்கு முன்னேறி புதிய உச்சத்தைத் தொட்டார்.

பதக்க வேட்டை


2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, 8-வது இடத்தைப் பிடித்தார். ஆனால், இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியவர் என்ற பெருமையோடு அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது. மூன்றாவது முறையாக 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அப்போது அவர் 39 வயதை எட்டியிருந்தாலும், ஆட்டத் திறனில் கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் தோட்டாவைப் போல் சீறினார்.

சுமார் 20 ஆண்டுகள் நீடித்த அஞ்சலியின் விளையாட்டுப் பயணத்தில், அவர் குவித்த பதக்கங்கள் ஏராளம். சர்வதேச அளவிலான போட்டிகளில் மட்டும் 28 தங்கம், 22 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இதில் காமன்வெல்த் போட்டிகளில் மட்டும் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். தேசிய அளவில் 54 தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை அஞ்சலி மட்டுமே.

குறி பார்த்து பதக்கத்தைச் சுடுவதில் தேர்ந்தவராக இருந்ததால்தான் அவரை ‘இந்தியாவின் அர்ஜூனா’, ‘இந்தியாவின் ஷூட்டிங் ராணி’ எனப் பெருமையோடு அழைக்கிறார்கள். அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது உள்பட 14 விருதுகளை அவர் வாங்கிக் குவித்திருக்கிறார்.

2010-க்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற அஞ்சலி, தொடர்ந்து விளையாட்டுத் துறை சார்ந்த பணிகளிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். இந்தியப் துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களின் எண்ணிக்கை இன்று கணிசமாகக் கூடியிருப்பதில் அஞ்சலி பாகவத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆண்கள் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு விளையாட்டில், தனி ஒருவராக ராஜ்ஜியத்தை நிறுவியவர் அஞ்சலி. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவர் போட்ட விதை இன்று ஆலமரமாகக் கிளை பரப்பி நிற்கிறது.

(வருவார்கள், வெல்வார்கள்)

- தி இந்து, 29/04/2018

23/04/2018

தேசத்தின் கனவை உயர்த்திப் பிடித்தவர்


  அந்தப் பெண்ணுக்கு அப்போது 25 வயது. ‘புத்தாயிரத்தின் முதல் ஒலிம்பிக்’ என்ற சிறப்புப் பெற்ற 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளுக்காக 65 போட்டியாளர்களை இந்திய ஒலிம்பிக் கமிட்டி தயாரிப்புப் பயிற்சி அளித்திருந்தது. அதில் அந்தப் பெண்ணுக்கும் இடம் கிடைத்தது. அதற்கு முன்புவரை ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் பெண்கள் யாரும் பதக்கம் வென்றதில்லை.
கனவை நனவாக்கியவர்

அந்த ஒலிம்பிக்கில் ஏழு பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்பதும் வெளியேறுவதுமாக இருந்தனர். பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று பலரும் முடிவுகட்டிவிட்டார்கள். ஒலிம்பிக் போட்டி நிறைவடைய இரண்டு நாட்களே இருந்தன. இந்தியாவுக்கெனப் பெரிதாகப் போட்டிகளும் இல்லை.
தேசமே விரக்தியில் இருந்த தருணத்தில் அந்தச் செய்தி வந்தது. ஊரே அவரைப் பற்றிப் பேசியது. நாடே அவரை நினைத்துப் பெருமைப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் பிறந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அன்று தன் பக்கம் திருப்பியவர், கர்ணம் மல்லேஸ்வரி. சிட்னி ஒலிம்பிக்கில் 69 கிலோ பளு தூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண். ஒலிம்பிக்கில் ஒரு தேசத்தின் ஒட்டுமொத்தக் கனவையும் தனி நபராக நனவாக்கியர்.
கர்ணம் மல்லேஸ்வரியின் இந்த வெற்றி, ஒரே நாளில் கிடைத்ததல்ல. அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் விதையிட்டு வளர்தததால் கிடைத்த வெற்றி அது. ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக இருந்த அவருடைய தந்தையும் பளு தூக்கும் வீரர். அம்மாவும் பளுதூக்கும் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். இந்த நால்வரையுமே சிறு வயது முதலே பளு தூக்கும் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார் அவர்களுடைய அம்மா. ஊர் என்ன நினைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் விளையாட்டுதான் வாழ்க்கை என்று சொல்லித் தந்தார். பளு தூக்கும் விளையாட்டில் நால்வரும் இருந்ததால், அவர்களுடைய தந்தை வாங்கும் சம்பளத்தின் பெரும் பகுதியை பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கவே செலவு செய்தார்.

பிரகாசித்த நட்சத்திரம்

சிறு வயது முதலே பளு தூக்கும் விளையாட்டில் சிறந்து விளங்கிய கர்ணம் மல்லேஸ்வரி, 13 வயதிலேயே மாநில அளவிலான போட்டிகளில் களம் காணத் தொடங்கினார். 15 வயதிலேயே தேசிய ஜூனியர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு பரிசு வென்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார்.

1990-ல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் பட்டம், தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 54 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் எனப் பதின் பருவம் முடிவதற்குள்ளாகவே ஜெட் வேகத்தில் முன்னேறினார். 1994-95-ம் ஆண்டுகளில் தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளிவந்து அசத்தினார். ஒரு புறம் அவருடைய அக்கா கிருஷ்ண குமாரி தேசிய அளவில் பிரபலமாக இருந்தார் என்றால் கர்ணம் மல்லேஸ்வரியோ சர்வதேச அளவில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக மாறினார்.
தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகளிலும் தனது முத்திரையைப் பதித்துக்கொண்டிருந்த கர்ணம் மல்லேஸ்வரியைத் தேடி அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவை வந்தன.

கை நழுவிய தங்கம்

சிட்னி ஒலிம்பிக் போட்டி பற்றிப் பேசும்போதேல்லாம் கர்ணம் மல்லேஸ்வரி அங்கலாய்ப்பது வாடிக்கை. தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பிருந்ததைத் தாரை வார்த்ததால் இந்த அங்கலாய்ப்பு. பளு தூக்கும் போட்டியில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு எடை அளவு கூட்டப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். கர்ணம் மல்லேஸ்வரி கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தும்போது தவறுதலாக இரண்டரை கிலோ குறைவாகத் தூக்கினார். அவருடைய பயிற்சியாளர் போட்ட தவறான கணக்கால், குறைந்த எடையைத் தூக்கி, தங்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
எப்படியும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு கடுமையாக உழைத்தார். 2002-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கான முன்னோட்டமாகக் கருதினார். ஆனால், போட்டிக்குச் செல்ல சில தினங்கள் இருந்த நிலையில் அவருடைய தந்தை இறந்துவிட்டார். இதனால் மிகுந்த தடுமாற்றத்துக்குள்ளான அவர், அந்தப் போட்டியிலிருந்து விலகினார். அதுமட்டுமல்ல, 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வதற்குத் தேவையான புள்ளிகளைப் பெறவும் தவறினார். அத்துடன் பளு தூக்கும் போட்டிக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பளு தூக்குதலில் 10 ஆண்டு காலம் நீடித்த இவரது சாதனைப் பயணத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது உட்பட 11 தங்கப் பதக்கங்கள் 3 வெள்ளிப் பதக்கங்களைச் சர்வதேச அளவில் வென்றிருக்கிறார். மல்லேஸ்வரி ஒலிம்பிக் பதக்கம் பெற்றதன்மூலம் இந்தியா விளையாட்டுத் துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஏராளமான இளம் பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இந்திய விளையாட்டுத் துறையின் மீது இளம் பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஒலிம்பிக் கனவோடு பல பெண்களும் விளையாட்டில் காலடி எடுத்து வைத்தனர். தற்போது இந்திய விளையாட்டுத் துறையில் பெண்கள் நிறைந்திருப்பதற்கு அன்று கர்ணம் மல்லேஸ்வரி போட்ட ஒலிம்பிக் விதையும் ஒரு காரணம்.
தற்போது 42 வயதாகும் கர்ணம் மல்லேஸ்வரி, மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். இவருடைய கணவர் ராஜேஷ் தியாகியும் பளு தூக்கும் வீரர்தான். ‘ஆந்திராவின் இரும்புப் பெண்’ என்றழைக்கப்படும் மல்லேஸ்வரி, பளு தூக்கும் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி, ஏராளமானோருக்குப் பயிற்சியளித்துவருகிறார்.
- தி இந்து, 22/04/2018

15/04/2018

இந்திய பெண்களின் ஆடும் களம்

மேரி டிசோசா
பெ
ண்கள் எப்போது விளையாட்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார்கள்? உலகின் விளையாட்டுத் திருவிழா என்றழைக்கப்படும் ‘ஒலிம்பிக்’ போட்டிகளில் இருந்துதான் பெண்களின் விளையாட்டு வரலாறும் தொடங்குகிறது.
பண்டைக் காலத்திலேயே ஒலிம்பிக் விளையாடப்பட்டாலும், 19-ம் நூற்றாண்டில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள்தான் நவீனகாலத்தில் பெண்கழைத்துவந்தன. ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸில் 1896-ல் முதல் ஒலிம்பிக் போட்டி நடந்த மைதானம் ஆண்களால் மட்டுமே நிரம்பியிருந்து. வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஒலிம்பிக் போட்டி, பெண்களின் பங்கேற்பு இல்லாமல்தான் தொடங்கியது.
ளை மைதானத்துக்கு அ
1900-ல் பாரிஸில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில்தான் பெண்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால், 1,066 பேர் பங்கேற்ற அந்த ஒலிம்பிக்கில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் இருந்தனர் - வெறும் 12 பேர் மட்டுமே. கோல்ஃப், வில்வித்தை ஆகிய இரு பிரிவுகள் மட்டுமே பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவுகளும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு மாறாக கூடுவதும் குறைவதுமாகவே இருந்தன.

தடை பல கடந்து

அந்தக் காலத்தில் பெண்களின் பங்கேற்பு விளையாட்டுகளில் குறைவாக இருந்ததற்குப் பழமைவாதத்தில் ஊறியிருந்ததும் ஒரு காரணம். இன்றும்கூட அடிப்படைவாதம் கோலோச்சும் நாடுகளில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரத்தடை உள்ள நிலையில், அந்தக் காலத்தில் இருந்த தடைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆனால், இதுபோன்ற தடைகளை உடைத்துதான் விளையாட்டில் பெண்கள் களம் கண்டார்கள்.
அந்த வகையில் ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் முன்முயற்சி முக்கியமானது. ஒலிம்பிக்கைத் தாண்டி தொடர்ச்சியாக மகளிர் விளையாட்டுகளில் பங்கேற்பதை இந்த நாடுகள் ஊக்குவித்தன. மேலை நாடுகளில் சர்வதேச பெண்கள் விளையாட்டு தொடர்பான மாநாடுகள் நடந்தேறின. இது பெண்கள் அதிக அளவில் விளையாட்டில் ஈடுபட உதவியது. 1960-க்குப் பிறகு பெண்கள் பங்கேற்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமல்லாமல் பொதுவாகவே விளையாட்டுகள் இருபாலருக்கும் சொந்தமாயின.

118 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிம்பிக்கில் தொடங்கிய இந்த வரலாறு, இன்று பெண்கள் பிரிவுகளும் அணிகளும் இல்லாத விளையாட்டுகளே இல்லை எனும் அளவுக்கு ஆலமரம்போல் கிளைபரப்பி நிற்கிறது. 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் வீராங்கனைகளின் பங்கேற்பு ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருந்ததே இதற்கு சாட்சி. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த வீரர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு 45 சதவீதமாக இருந்தது. அதேபோல பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவுகளும் ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருந்தன.

இந்தியாவின் வெற்றி முகங்கள்

சர்வதேச அளவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு தொடங்கியது என்றால், இந்தியாவில் அது தலைகீழாக உள்ளது. 1950-களுக்குப் பிறகுதான் ஆடுகளங்களில் பெண்களைப் பார்க்க முடிந்தது. 1952-ல் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடந்த ஒலிம்பிக்கில்தான் இந்தியா சார்பில் ஒரு பெண் களம் கண்டார். அவர், மேரி டிசோசா. தடகளப் பிரிவில் பங்கேற்ற அவர், ஹாக்கி வீராங்கனையும்கூட.
பிவி சிந்து
அன்று ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பெண் என்ற அளவில் தொடங்கிய இந்திய வீராங்கனைகளின் பயணம் இன்று வேகமெடுத்திருக்கிறது. 2016 ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பிடிக்குமா என நாடே எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில், பி.வி. சிந்து, சாக்‌ஷி மாலிக் இருவரும் அந்தக் கனவை நிறைவேற்றிக் காட்டினார்கள். அவர்களால்தான் இந்தியா பதக்கப் பட்டியலில் இடமே பிடித்தது.
புத்தாயிரம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவில் பி.டி. உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் என சில பெண்ளே விளையாட்டின் முகங்களாக இருந்தனர். இன்றோ தனிநபர் விளையாட்டுகள், குழு விளையாட்டுகள் என இரு பிரிவுகளிலும் முத்திரை பதிக்கும் வீராங்கனைகள் ஏராளம். இந்தியாவுக்காக அவர்கள் வெற்றிகளைக் குவித்தவண்ணம் இருக்கிறார்கள். இளம் பெண்கள் தொடர்ச்சியாக விளையாட்டில் அணிவகுத்துவர அவர்கள் தூண்டுகோலாகவும் இருக்கிறார்கள்.
விளையாட்டு மைதானத்திலும் பெண்கள் தங்கள் திறமையைப் பறைசாற்றிவரும் இந்த வேளையில் முத்திரை பதித்த வீராங்கனைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம். அப்படித் தடம் பதித்தவர்களின் வெற்றி வரலாற்றைச் சொல்வதே ‘ஆடும் களம்’ பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றிப் பாய்ச்சலைப் பார்ப்போம்.
(வருவார்கள் வெல்வார்கள்)
- தி இந்து, 15/04/2018

10/04/2018

காமன்வெல்த் விளையாட்டின் கதை

2018 கோல்ட் கோஸ்ட் தொடக்க விழா
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என்று ஒலிம்பிக்கைச் சொல்வதுண்டு. அதேபோல காமன்வெல்த் விளையாட்டும் பெரிய விளையாட்டுத் திருவிழாதான். ஒலிம்பிக்போலவே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுக்கு நீண்ட வரலாறு உள்ளது.

நல்லெண்ணத்துக்கான போட்டி
   
பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அனைத்துக் கண்டங்களிலுமே காலனி நாடுகள் இருந்தன. இந்த நாடுகளுக்கு இடையே
விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணம் பிரிட்டிஷ் பேரரசுக்கு உதயமானது. இதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் ஆஸ்லே கூப்பர்.
1891-ல் பிரிட்டிஷ் பத்திரிகையில் இது பற்றி அவர் எழுதினார். “பிரிட்டிஷ் பேரரசைப் பற்றி நல்ல புரிதலையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும் விதமாக பிரிட்டிஷ் பேரரசு நாடுகளுக்கு இடையே போட்டிகளை நடத்தி, அதை விழாவாகக் கொண்டாட வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த எண்ணத்துக்கு 20 ஆண்டுகள் கழித்துத்தான் செயல்வடிவம் கிடைத்தது. 1911-ல் பிரிட்டிஷ் பேரரசின் அரசராக ஐந்தாம் ஜார்ஜ் பொறுப்பேற்றார். அவருடைய முடிசூட்டு விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பிரிட்டிஷ் தவிர்த்து கனடா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
நான்கு பிரிவுகளில் மட்டுமே இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் கனடா வெற்றிப் பெற்றது. இந்த விளையாட்டுதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிள்ளையார்சுழி போட்டது.

இந்த விளையாட்டுத் தொடர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் பேரரசு நாடுகளிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நன்கு முன்னேற்றம் அடைந்திருந்தன. இதைத் தொடர்ந்து மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் யோசனைகள் தீவிரமடைந்தன.
இறுதியாக 1930-ல் பிரிட்டிஷ் அரசு தன் காலனி நாடுகளுடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கியது. இதற்கு ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய’ விளையாட்டு என்று பெயர் சூட்டினர். இந்தப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதன்பிறகு 4 ஆண்டுகள் இடைவெளியில் போட்டிகள் தொடர்ந்தன. ஆனால், 1940-க்குப் பிறகு பல காலனி நாடுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிடியிலிருந்து விடுதலைப் பெற்றன.

அரசியலால் பெயர் மாற்றம்

ஆனாலும், விளையாட்டுப் போட்டிக்கும் பங்கம் வராமல், 1950-ம் ஆண்டுவரை ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்’ என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்தன. 1949-ல் பிரிட்டிஷ் பேரரசின் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக காமன்வெல்த் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1954-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு ‘பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு’ என்ற பெயர் மாறியது. ஆனால், அதன் பிறகு 1966 முதல் 1974 வரை இந்த விளையாட்டுப் போட்டிகள் ‘பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டு’ என்று பெயர் மாற்றம் பெற்றது. உலக அரசியலில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த மாற்றம் காரணமாக, ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் என்ற பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘காமன்வெல்த்’ என்ற பெயர் மட்டுமே நிலைபெற்றது.
அதன் வெளிப்பாடாக 1978 முதல் ‘காமன்வெல்த்’ என்ற பெயரிலேயே விளையாட்டுப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றன.
2010 டெல்லி காமன்வெல்த் போட்டி தொடக்க விழா

இந்தப் போட்டிகள் காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடைபெறுவது வழக்கம். எந்த நாட்டில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், பிரிட்டிஷ் மகாராணிதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஜோதியை ஏற்றி வழி அனுப்பிவைப்பார். அந்த ஜோதி காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகளுக்குச் சென்று கடைசியாக விளையாட்டு நடைபெறும் நாட்டுக்கு வரும்.
 
காமன்வெல்த் அமைப்பில் தற்போது 53 நாடுகள் உறுப்பினராக உள்ளன. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 71 நாடுகள் பங்கேற்றுள்ளன. காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளைத் தவிர பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. எனவே, பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையும் தற்போது கூடியிருக்கிறது. 

மனதில் நிற்கும் தருணங்கள்
# காமன்வெல்த் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் அதிக முறை முதலிடம் பிடித்த நாடு ஆஸ்திரேலியா. 10 முறை பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து 8 முறையும், கனடா, இந்தியா தலா ஒரு முறையும் முதலிடம் பிடித்துள்ளன.

# டெல்லியில் 2010-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தது. இதைத் தவிர 2002, 2006-ல் 4-வது இடத்தையும், 1990, 2014-ல் 5-வது இடத்தையும் பிடித்தது. இந்தியாவின் மிகச் சிறப்பான வெற்றிகள் இவை.

# காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் ரஷித் அன்வர். ஆண்டு 1934. மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

# 1930 முதல் 1994வரை தனி நபர்கள் பங்கேற்கும்படியான போட்டிகளே நடைபெற்றன. இதன் பிறகுதான் ஹாக்கி, ரக்பி போன்ற குழு விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.

காமன்வெல்த் ஜோதி
# அதிகாரபூர்வமாக 1930-ல் நடைபெற்ற போட்டியில் 11 நாடுகளே பங்கேற்றன. 6 பிரிவுகளில் மட்டுமே விளையாட்டுகள் நடைபெற்றன. 400 பேர் மட்டுமே பங்கேற்றார்கள். தற்போது நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 19 பிரிவுகளில் 275 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
 
# 1986-ம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் (பிரதமர் தாட்சர்) அரசு, தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருந்தது. இதனால், ஆப்பிரிக்கா, ஆசியா, கரீபியன் தீவுகளைச் சேர்ந்த 26 நாடுகள் காமன்வெல்த் போட்டியைப் புறக்கணித்தன. அப்போது இந்தியாவும் புறக்கணித்தது. 1962-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா பங்கேற்கவில்லை.

# இதுவரை 21 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், ஆசியாவில் இரண்டு முறைதான் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆசியாவில் முதன்முதலில் போட்டி நடைபெற்றது மலேசியாவில்தான். 1998-ல் நடைபெற்றது. இரண்டாவதாக டெல்லியில் 2010-ல் போட்டிகள் நடைபெற்றன.

# அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பெர்மிங்ஹாம் நகரில் 2022-ல் நடைபெற உள்ளது.

- தி இந்து,  10/04/2018

02/04/2018

காஞ்சிபுரம் ஆச்சரியங்கள்: பாதாள கிணறும் வற்றாத குளமும்

அய்யங்கார்குளம்
கோயில் நகரம் என்ற பெயர் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. புகழ்பெற்ற கோயில்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றி ஏராளம். அவற்றில் புகழ்பெற்ற பழமையான ஒரு கோயில் அய்யங்கார்குளத்தில் உள்ளது. அதுதான் சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில். இந்தக் கோயிலைப் பற்றியும், கோயிலின் பின்புறம் உள்ள அய்யங்கார்குளம், நடவாவிக் கிணறு ஆகியவற்றைப் பற்றி சுவாரசியமான கதைகள் உலா வருகின்றன. கோடையில்கூட வற்றாத அய்யங்கார்குளமும், எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் நடவாவிக் கிணறும், கிணற்றின் அழகான கட்டுமானமும் வியப்பின் குறியீடுகளாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன.

பிரம்மாண்ட கோயில்

காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்குச் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அய்யங்கார்குளம். பாலாற்றின் கரைக்கே அருகே இயற்கை எழிலுடன் காட்சி தருகிறது இந்த ஊர். அய்யங்கார்குளத்தை அடைந்தவுடனே முதலில் கண்ணில் தென்படுவது சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில்தான். இந்தக் கோயிலை ‘கற்றளிக் கோயில்’ என்கிறார்கள். அதாவது, கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்ட கோயில். கோயிலின் முன்புறம் நெடிதுயர்ந்த தூண்கள் பிரம்மாண்டமாகக் காணப்படுகின்றன.  கோபுரம், மூலவர் விமானம், மூன்று சுற்று பிராகாரங்கள், உள் பிராகாரத்தில் கல்யாண மண்டபங்கள், வெளி பிராகாரத்தில் நான்கு திசைகளிலும் அலங்கார மண்டபங்கள், வடக்கு வாயிலில் கோபுரம் என நேர்த்தியாகவும் கலை அம்சத்துடனும் உள்ளது இக்கோயில்.

மூன்று சுற்று பிராகாரங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் உள்ளே சென்றவுடன் 50 தூண்களுடன் கூடிய மகாமண்டபம், 25 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபமும் அழகாக உள்ளன. பார்ப்பதற்கு பழமையாகவும் பாழடைந்தது போலவும் காணப்படும் இந்தக் கோயில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில்  கட்டப்பட்ட கோயில். ஆஞ்சநேயர் கோயில் அய்யங்கார்குளத்தில் வந்ததற்கு ஒரு சுவாரசியமான கதையைச் சொல்கிறார் இக்கோயிலில் பூசாரியாக இருக்கும் தங்கவேல். 

சஞ்சீவராயர் கோயில் முகப்பு
மூலிகை மகிமை
 “இந்தக் கோயிலில் உள்ள சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் இருகரம் கூப்பிய நிலையில் அயோத்தி இருக்கும் வடக்குத் திசையைப் பார்த்தபடிதான் இருப்பார். ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தபோது இந்திரஜித் செலுத்திய கொடிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகிவிட்டார். லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தபோது, அதன் ஒரு பகுதி இங்கே விழுந்துவிட்டது. அதிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்தான்  சஞ்சீவிராய ஆஞ்சநேயர்.  தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோயில் இதுதான். இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு  இருப்பதும் இங்கும் மட்டும்தான். இந்தக் கிராமத்தில் சஞ்சீவி மூலிகை பரவிக் கிடக்கிறது. எனவே, இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இதுவரை பாம்பு, தேள் என எந்த விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட்டதில்லை. இந்தப் பகுதியில் எங்குமே விஷ ஜந்துகளைப் பார்க்கவே முடியாது. எல்லாமே சஞ்சீவராயரின் மகிமை” என்று கோயில் புராணத்தைச் சொல்கிறார் தங்கவேலு.

கோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது தவழ்ந்துதான் வரவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்குக் குறுகலாக அமைத்திருக்கிறார்கள். கருவறையைச் சுற்றியுள்ள இடம்  குளிர்ச்சியாகவே இருக்கிறது. கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் கருவறை இருக்கும்படி நுணுக்கமாக கோயில் கருவறையை அமைத்திருக்கிறார்கள் என்று பெருமையாக சொல்லும் தங்கவேலு, இன்னொரு விஷயத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“இந்தக் கோயிலிலிருந்து முன்பு ஆஞ்சநேயர் விக்ரஹத்தை சிலர் திருடி சென்றுவிட்டார்கள். ஆனால், திருடியவர்களால் நீண்ட தூரம் சிலையைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை. அதிகப் பாரம் காரணமாக ஓரிடத்தில் சிலையைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு சிலையை மீட்டு மீண்டும் கோயில் கருவறையில் நிறுவினார்கள். இது ஆஞ்சநேயரின் மகிமையால் நிகழ்ந்த நிகழ்வு” என்கிறார் தங்கவேலு.

பிரம்மாண்ட குளம்

இக்கோயிலின் பின்புறத்தில் படித்துறையுடன் கூடிய பிரம்மாண்டமான குளம் உள்ளது. பார்ப்பதற்கு ஏரி போல காணப்படும் இந்தக் குளம் 133 ஏக்கர் பரப்பளவில் விரிந்துகிடக்கிறது. அய்யங்கார்குளம் என இந்த ஊருக்குப் பெயர் வருவதற்கு இந்தக் குளம்தான் காரணம். இந்தப் பிரம்மாண்ட குளமும் இந்தக் கிராமத்துக்குப் பெருமை சேர்க்கிறது. கிருஷ்ணதேவராயர் ஆட்சியின்போது அவரது உதவியுடன் லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் என்பவர் இந்தக் குளத்தை வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் பெயர் தாங்கியபடி இந்தக் கிராமத்துக்கு ‘அய்யங்கார்குளம்’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் குளத்துக்கு ‘ஸ்ரீதாத சமுத்திரம்’ என்று  இன்னொரு பெயரும் இருக்கிறது.

வற்றாத குளம்
இந்தக் குளத்தை அதிசய குளமாக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பார்க்கிறார்கள். எப்போதும் இந்தக் குளத்தில் தண்ணீர் இருப்பதால், ஊரில் குடிநீர் தட்டுப்பாடு வந்ததில்லை என்கிறார்கள். அது மட்டுமல்ல, வழக்கமாக ஆறுகளில் மட்டுமே சற்று பெரிய படித்துறை இருக்கும். ஆனால், இந்தக் குளத்திலேயே பெரிய படித்துறை இருக்கிறது. சஞ்சீவராயர் கோயிலின் பின்புற வாசல் படித்துறையுடன் முடிகிறது. அந்தப் படித்துறையிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை உள்ள பகுதியில் தண்ணீர் எப்போதுமே இருக்கிறது. கோடைக் காலத்தில்கூட இந்தக் குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் ததும்பும் என்று பெருமையாகச் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

 இந்தக் குளத்தில் எந்தக் காலத்திலும் தண்ணீர் இருக்க என்னக் காரணம் என்று அந்தப் பகுதியில் விசாரித்தபோது, குளத்தில் கிணறு இருப்பதாகவும்,  அந்தக் கிணறிலிருந்து தண்ணீர் எப்போதும் ஊறிக்கொண்டே இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர், மழைக் காலத்தில் சேரும் தண்ணீர்தான் வற்றாமல் எப்போதும் இங்கே இருக்கிறது என்கிறார்கள். எப்போதும் இங்கே தண்ணீர் இருக்க  ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும், கோடை காலத்தில்கூட அய்யங்கார்குளத்தில் தண்ணீர் வற்றி பார்த்ததேயில்லை என்பதை மட்டும் எல்லோருமே உறுதியாகச் சொல்கிறார்கள். 
குளத்தைச் சுற்றி சிற்பங்கள்
அழகிய சிற்பங்களில் ஒன்று...

இந்த அய்யங்கார்குளத்தின் கரையைச் சுற்றி கற்பாறைகளைக் கொண்டு அடுக்கடுக்காகச் சுவர் எழுப்பி இருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே இப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் கற்பாறைகளுக்கு இடையே அழகிய சாமி சிற்பங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதர் பள்ளிக்கொண்டிருப்பதைப் போன்ற சிற்பம் உள்ளிட்ட பல சிற்பங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பாறைகளுக்கு நடுவே கல்லால் ஆன தட்டும் அதனருகில் காய்கறிகள் வைத்துக்கொள்ள சிறு குழியும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் சாமிக்கு இத்தட்டிலேயே உணவுப் படைத்திருக்கிறார்கள் என்றும் யாத்ரீகர்களாக வருபவர்கள், தட்டில் வைத்து சாப்பிடவும், குழியில் காற்கறிகளை வைத்துக்கொள்ளவும் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள் என்றும்

இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. ஆனால், சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துக்கொள்ள ஏதுவாகவே இந்தக் குளத்தைச் சுற்றி இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அய்யங்கார்குளத்தைச் சுற்றியுள்ள இந்த அழகிய வேலைப்பாடுகளும் பார்ப்பவர்களை ஈர்க்கத் தவறவில்லை.

 நடவாவிக் கிணறு

அய்யங்கார்குளத்தில் உள்ள இன்னொரு சிறப்பு நடவாவிக் கிணறு. அய்யங்காகுளத்தின் வடக்குக் கரையின் பின்புறம் உள்ளது இந்தக் கிணறு. பார்ப்பதற்கு அத்தனை கலையம்சத்துடன் காணப்படுகிறது இந்தக் கிணறு. நீளவாக்கில் உள்ள இந்தக் கிணற்றின் நாலாப் புறங்களிலும் உள்ள பக்கவாட்டுக் கற்களில் சப்தகன்னியர் சிலைகள் அழகாகக் காட்சி தருகின்றன. கிணற்றுக்குள் இறங்க வசதியாக படிக்கட்டுகள் காணப்படுகின்றன. முடிவில் பாதாளத்தில் மண்டபம் ஒன்று தெரிகிறது. அந்த மண்டபம் முழுவதும் நீரால் மூழ்கிக் கிடக்கிறது. அதனையொட்டி, கல்லால் ஆன ஏற்றம் பிரம்மாண்டமாக நிற்கிறது. கிணற்றிலிருந்து நீரை இறைக்க ஏற்றத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மண்டபம் மட்டுமல்ல, படிக்கட்டுகள்வரை நீர் நிரம்பிக் கிடக்கிறது. அய்யங்கார்குளத்தைப் போலவே இதுவும் எப்போதும்
 நடவாவிக் கிணறு
வற்றாத கிணறு.

 இந்தக் கிணறு இங்கே அமைந்ததற்கு சுவாரசியமான விஷயம் ஒன்று உள்ளது. “அந்தக் காலத்தில் இந்தக் கோயில் வளாகத்துக்கு உள்ளே ஒரு கிணறு தோண்ட முயன்றிருக்கிறார்கள். அப்போது உள்ளே கோழி கூவியது போல் குரல் கேட்டிருக்கிறது. அதனால் அந்தப் பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு முறை தோண்ட முயன்றபோது, எண்ணெய் விற்பதுபோல் குரல் கேட்டிருக்கிறது. அப்போதும் பணியை நிறுத்துவிட்டார்கள். கோயில் வளாகத்துக்குள் கிணறு வெட்டும்போது இப்படி தடங்கல் வந்ததால், மூன்றாவது முறை வேறு வழியில் கிணறு வெட்டியிருக்கிறார்கள். மூன்றாவது முறை கோயிலுக்கு நேர்எதிரே குளக் கரையின் பின்புறம் கிணறு வெட்டப்பட்டது. அதுதான் இந்த நடவாவிக் குளம். இதைப் பாதாளக் கிணறு என்றும் சொல்லுவோம்” என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த ஹரி.

சித்ரா பவுர்ணமி விழா
நடவாவிக் கிணற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று உற்சாசம் கரைபுரளும். அன்றைய தினம் காஞ்சி வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றிலிருந்து எழுந்தருள்கிறார். இதற்காக  நடவாவிக் கிணற்றில் உள்ள நீரை இறைத்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றிவிடுகிறார்கள். ஆனால், முன்பெல்லாம் ஏற்றம் மூலமே தண்ணீரை வெளியேற்றியிருக்கிறார்கள். தண்ணீர் முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்து கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார். பின்னர் கிணற்றிலிருந்து எழுந்தருளும் வரதராஜப் பெருமாள், மீண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலுக்கு திருப்பி எடுத்துச் செல்லப்படுகிறார்.

இரவில் நடக்கும் இந்த நிகழ்வைக் காண அய்யங்கார்குளத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் இங்கே ஏராளமாக வருகிறார்கள். எதற்காகவும் இந்த நிகழ்வை நிறுத்தாமல் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று நடத்திவருகிறார்கள். சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே நடவாவிக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கப்படுகிறது. பிற நாட்களில் எதற்காகவும் இங்கிருந்து தண்ணீர் இறைக்கப்படுவதில்லை. இந்த நிகழ்வு முடிந்த பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டுதான் உள்ளே செல்ல முடியும். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், வரதராஜப் பெருமாள் கிணற்றிலிருந்து எழுந்தருளிய பிறகு, அடுத்த சில மணி நேரத்தில் நடவாவிக் கிணற்றில் படிக்கட்டு அளவுக்கு தண்ணீர் உயர்ந்துவிடுகிறது. அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் தண்ணீர் வளம் இருக்கிறது.

இந்தப் பகுதியில் ஏராளமான சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. காஞ்சிபுரத்தில் முக்கியமான கோயிலாக இருந்தும், சஞ்சீவ ஆஞ்சநேயர் கோயிலும், அய்யங்கார்குளமும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோயில் சுவர்கள் பெயர்ந்து பாழடைந்துக் காணப்படுகிறது. காஞ்சிபுரத்தில் மிகப் பெரிய சுற்றுலாதளமாக உருவாகும் வாய்ப்பு இந்தப் பகுதிக்கு இருக்கிறது. ஆனால்,  கண்டுகொள்வோர்தான் யாருமில்லை.

எனினும் அய்யங்கார்குளம், சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில், நடவாவிக் கிணறு என மூன்று சிறப்புகளால் இந்தப் பகுதியின் பெருமைக்கு குறைவில்லை!

- தி இந்து, 2018 சித்திரை மலர்

01/04/2018

‘இல்லி நோடு’ மைசூரு!

மைசூரு அரண்மனை

மைசூருவையும் தசராவையும் பிரித்துப் பார்க்கவோ பேசவோ முடியாது. தசரா கொண்டாட்டத்துக்குப் பெயர்போன நகரங்களில் ஒன்று, மைசூரு. விஜயதசமி தினத்தன்றுஜம்போ சவாரிஎனும் யானைகள் அணிவகுப்பும் இங்கே புகழ்பெற்றது.
எங்கே திரும்பினாலும் விளக்கொளி வைபோகம், வாணவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் என மைசூரு நகரமே தசரா கொண்டாட்டத்தின்போது விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா திருவிழாவுக்கு அடுத்த நாள் மைசூருவுக்குச் சுற்றுலா செல்வதைப் போல சிறந்த வாய்ப்பு வேறொன்றில்லை.
புராண நம்பிக்கைகளின்படி தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷனை சம்ஹாரம் செய்த இடம் மைசூரு. மகிஷனை நினைவுகூரும் வகையில் மகிஷபுரம், கிஷா மண்டலம், கிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு, இன்று  மைசூரு என்ற பெயரே நிலைப்பெற்றுவிட்டது.

கன்னட தாஜ்மகால்

மைசூருவை அடையும்போதே, அது இயற்கை ஆட்சி செய்யும் பகுதி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பழமை மாறாமல், இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் அந்த நகரை அமைத்திருக்கிறார்கள். பெரிய பெரிய மரங்களும் பசுமைப் போர்வைபோல் போர்த்திய பகுதிகளும் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கின்ற.
மைசூரு என்றவுடனேஅம்பா விலாஸ்அரண்மனை என்றழைக்கப்படும்மைசூரு அரண்மனைதான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். இந்தியாவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாகச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பது இந்த அரண்மனைதான். வெளியிலிருந்து பார்ப்பதற்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் அரண்மனைக்குள் செய்யப்பட்டிருக்கும் உள் அலங்கார வேலைப்பாடும் ஆஹா அற்புதம்!’ ரகம். தஞ்சாவூர், மைசூர் பாணி ஓவியங்கள் அரண்மனையின் உள் அலங்காரத்துக்குத் தனி அழகு சேர்க்கின்றன.
இந்தோ சாரசெனிக் கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் வகையிலும் ஹொய்சா, கிரேக்கக் கட்டிட வடிவமைப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை இது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனையைப் பெருமளவில் கிரானைட் கற்களைக் கொண்டே கட்டியிருக்கிறார்கள். கோபுரத்தின் மீது தங்கத் தகடுகள் ஜொலிக்கின்றன. 145 அடி உயரம் கொண்ட இந்த அரண்மனையில் திறந்தவெளி அரங்குகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் போன்றவை முதன்மையான அம்சங்கள். ஆயுத அறை, நூலகம், வேட்டை அறை, மன்னர் குடும்பத்தின் பிரத்யேக அறைகள், பீரங்கிகள் எனப் பிரம்மாண்டமாக இருக்கிறது அரண்மனை.

காலத்தால் பிந்தையது
ைசூர் அரண்மை உள் அலங்காரம்

இங்கு மரத்தாலான யானை ஒன்றின் சிலையை 81 கிலோ தங்கத்தால் அலங்கரித்து வைத்திருக்கிறார்கள். காலங்காலமாக கர்நாடகப் பண்பாட்டில் யானைக்கு உள்ள முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பு இது. கோம்பே தொட்டிவாயிலின் முன்புறத்தில் ஏழு பீரங்கிகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். தசரா திருவிழா தொடங்கும்போதும் முடியும்போதும் இந்தப் பீரங்கிகள் முழங்கி விழாவைக் கவுரப்படுத்தும் என்று வழிகாட்டி கூறினார். அதேபோல் தசரா திருவிழாவின்போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதும் வழக்கம். அதைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
இந்த அரண்மனையில் அரச குடும்ப உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச குடும்பத்தின் ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்தத் தடையும் இல்லாமல் அருகில் பார்த்து மகிழலாம்.
அம்பா விலாஸ் அரண்மனையின் வயது 104தான். 1897-ம் ஆண்டு  தொடங்கப்பட்டு, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் காலத்தால் பிந்தைய அரண்மனைகளில் ஒன்று இது. அதற்கு முன்பு இந்த இடத்தில் இருந்த அரண்மனை தீ விபத்தில் அழிந்துவிட்டதால், இந்த அரண்மனையைக் கட்டியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனையைக் கட்ட, அப்போது ஆன செலவு 41 லட்சம் ரூபாய். தினமும் ஆயிரக்கணக்கானோர் அரண்மனையைப் பார்க்க வந்தாலும், தசரா திருவிழாவின்போது கட்டுக்கடங்காமல் கூட்டம் அதிகரித்துவிடும். அதை நிரூபிக்கும் வகையில் அரண்மனைக்குள் கூட்டம் முண்டியடித்துச் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

அரண்மனை நகரம்
லலித மஹால்

அடுத்து நாங்கள் சென்றதும் இன்னொரு அரண்மனைதான். அது ஜெகன்மோகன் அரண்மனை. மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனையைப் பார்க்காமல் திரும்புவதில்லை என்று வழிகாட்டி சொன்னதால், நாங்களும் அங்கே சென்றோம். மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்களால் 1861-ல் கட்டப்பட்டது இந்த அரண்மனை. பழைய அரண்மனை தீ விபத்தில் அழிந்த பின்னர், புதிய அரண்மனையைக் கட்டி முடிக்கும்வரையிலான இடைப்பட்ட காலத்தில் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள் அரச குடும்பத்தினர்இங்கு விஷ்ணுவின் தசாவதாரக் காட்சியும் சிற்ப வடிவமாகச் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக் கதவுகளும் மைசூர் மகாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்கள்.
இரண்டு அரண்மனைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு, வேறு ஏதாவது புதிய இடத்துக்குச் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால், மூன்றாவதாகச் சென்றதும் ஓர் அரண்மனைக்குத்தான். அதன் பெயர் லலித மகால். இது சாமுண்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1921-ம் ஆண்டு அப்போதைய இந்திய வைஸ்ராய்க்காக நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்து. ஆங்கிலேயர்களின் மேனர் வீடுகள் பாணியையும் இத்தாலியன் பலாஸோ கட்டிட முறையையும் கலந்து இதைக் கட்டியிருக்கிறார்கள். இந்த அரண்மனையில்தான் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகைபடம் எடுக்கப்பட்டதாக வழிகாட்டி சொன்னார். தற்போது அரசு சுற்றுலாத் துறையின் கீழ் ஐந்து நட்சத்திர ஹோட்டலாக இந்த அரண்மனை மாற்றப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லாவிட்டாலும், வெளியே இருந்து பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருக்கிறது. முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மனையின் சிறப்பு. மைசூரு நகரத்தை 'அரண்மனைகளின் நகரம்' என்று போற்றும் அளவுக்குச் சிறியதும் பெரியதுமாக ஏழு அரண்மனைகள் இங்கே இருக்கின்றன. நாங்கள் பார்த்த அரண்மனைகள் போக சித்தரஞ்சன் அரண்மனை, ஜெயலட்சுமி மகால் அரண்மனை, ராஜேந்திர விலாஸ் அரண்மனை, செலுவண்பா அரண்மனை போன்றவையும் மைசூருவில் உள்ளன.

சாமுண்டி மலை

அரண்மனை தரிசனங்களுக்குப் பிறகு மாலையில் சாமுண்டி மலையில்
மகிஷாசுரன் சிலை
உள்ள சாமுண்டீஸ்வரியை
த் தரிசிக்கப் புறப்பட்டோம். மைசூரு நகரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாமுண்டீஸ்வரி மலை. “1339-ல் உடையார்கள் மைசூருவை ஆட்சி செய்த காலத்தில் சாமுண்டி மலையில் சிறிய அளவில் கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். 1537-ம்  ஆண்டில் நான்காம் சாம்ராஜ உடையார் மைசூருவை ஆண்டபோது ஒரு சம்பவம் நடந்ததாம். சாமுண்டீஸ்வரி தாயைத் தரிசித்துவிட்டுத் திரும்பும்போது இடி மழையில் சிக்கிக்கொண்டார்கள். அப்போது மன்னரையும் பாதுகாவலர்களையும் காப்பாற்றிய தாய் சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்க, மைசூருவின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி கோயிலை அவர் விரிவுபடுத்திக் கட்டினார்என்று அந்த மலையை நோக்கிப் பயணிக்கும்போதே வழிகாட்டி தகவலைப் பகிர்ந்துகொண்டார். மலையை அடைந்ததுமே அது உண்மை என்று புரிந்தது. 3,489 அடி உயரத்திலிருக்கும் மலையிலிருந்து எந்தத் திசையில் பார்த்தாலும் மைசூரு நகரம் அழகாகத் தெரிகிறது. ஆனால், இப்போதுள்ள கோயில் வடிவம் 1827-ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரால் விரிவாக்கப்பட்ட ஒன்று.
கோயில் சன்னிதியில் உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலாகக் காட்சித் தருகிறார். கோயிலின் முற்றத்தில் கையில் பாம்புடன் கூடிய மகிஷாசுரன் சிலை சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. மைசூருவின் அடையாளங்களுள் ஒன்றான இந்தச் சிலைக்கு முன்னால் நின்று ஒளிப்படங்களும் செல்ஃபியும் எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.
இந்த மலையில் உள்ள பிரம்மாண்ட நந்தியும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய நந்தி இது. முதல் பெரிய நந்தி ஆந்திராவின் லேபாக்ஷியிலும், மூன்றாவது பெரிய நந்தி தஞ்சைப் பெரிய கோயிலிலும் உள்ளன. பொதுவாக மைசூருவைக் காண வரும்  சுற்றுலாப் பயணிகள் முதலில் சாமுண்டீஸ்வரி தேவியைத் தரிசித்த பின்புதான் மற்ற சுற்றுலாத் தலங்களுக்கே செல்வார்கள். ஆனால், தசராவுக்கு அடுத்த நாள் சென்றதால், மலையிலேயே ஏற முடியாத அளவுக்குப் போக்குவரத்து நெரிசல். அதனால், அரண்மனைகளைப் பார்த்த பிறகு மாலையில்தான் சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்க முடிந்தது.

இசை நீரூற்று
நந்தகுமாரன் இல்லாத பிருந்தாவனம்

மயக்கும் மாலையை மேலும் அழகாக்க பிருந்தாவன் பூங்காவில் மையம் கொண்டோம். கிருஷ்ணராஜ சாகர் சாலை வழியாகச் செல்லும்போதே தொலைவிலேயே அணை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. காவிரிப் பிரச்சினை எழும்போதெல்லாம் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர் என்பதால், அந்தப் பகுதியை அடையும்போதே எங்கள் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் காவிரியை மையமிட்ட அரசியலைப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
உண்மையில் பிருந்தாவன் பூங்கா கொள்ளை அழகு! கிருஷ்ணராஜ சாகர் அணையின் இடதுபுறம் அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவில் திரும்பிய பக்கமெல்லாம் அழகழகான நீருற்றுகள், பசுமையான புல்வெளி, மரங்கள் என எங்கே திரும்பினாலும் ரம்மியமான சூழல். இரவில் அணை வெவ்வேறு வண்ணங்களில் ஜொலிக்கும்படி விளக்கொளி வீச ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இசைக்கு ஏற்றபடி வண்ண விளக்குகள் ஒளியைப் பொழிந்து நடனமாடும், நீரூற்றுகளின் நடனக் காட்சிகளை மெய்மறந்து ரசித்தோம்.
அடுத்த நாள் காலை செல்லும் வழியில் ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயத்துக்குச் சென்றோம். எங்கே பார்த்தாலும் பறவைகள். ஆயிரக்கணக்கான பறவைகளின் விதவிதமான ஒலி காதை நிறைத்தது. பறவை சரணாலயத்திலிருந்து புறப்பட்ட பிறகும் பறவைகளின் அழைப்பொலி காதுகளில் நீண்ட நேரம் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை

ரங்கன்திட்டிலிருந்து அடுத்த 20 நிமிடங்களில் ஸ்ரீரங்கப்பட்டணத்தைச் சென்றடைந்தோம். திப்பு சுல்தானின் கோட்டை உள்ள இடம். அங்கே சென்றவுடனேயே,  ‘ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கியவர் திப்பு. புலிகளை மிகவும் நேசித்தவர். தன் கொடியில்கூடப் புலிச் சின்னத்தைப் பொறித்தவர்என்று அவரைப் பற்றிப் படித்த சங்கதிகள் மனதுக்குள் ஓடின. ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குள் நுழையும்போதே பெரிய மதில் சுவர் வரவேற்கிறது. அகழியைத் தாண்டினால் திப்புவின் கோட்டை மதில் சுவர் இருக்கிறது. ஆனால், சிதிலமடைந்து காணப்படுகிறது. அதைத் தாண்டி நுழையும் பாதையைமைசூர் கேட்என்று அழைக்கிறார்கள். அந்த வாயிலைத் தாண்டி சென்றால் ரங்கநாதர் கோயில் கோபுரம் வரவேற்கிறது.
ரங்கநாதர் கோயில்

வியப்பான ஒற்றுமை

ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஒரு தீவு என்றே சொல்லலாம்நான்கு புறங்களிலும் காவிரி சூழ்ந்த பகுதி இது. மேற்கிலிருந்து ஓடி வரும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு முன் இரண்டாகப் பிரிகிறது. ஒரு புறம் காவிரியாகவும் மறுபுறம் வாகினி நதியாகவும் ஓடுகிறது. பிறகு மீண்டும் ஒன்றாகிக் காவிரியாகப்  பாய்கிறதுஎன்று புவியியல் பாடம் எடுத்தார் வழிகாட்டி. திருச்சிக்காரனான எனக்கு திருச்சி ஸ்ரீரங்கம் நினைவில் ஆடியது. ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் போலவே ஸ்ரீரங்கமும் தீவுதான். ஸ்ரீரங்கத்துக்கு முன்பாகக் காவிரி இரண்டாகப் பிரிந்து ஒருபுறம் காவிரியாகவும் மற்றொருபுறம் கொள்ளிடமாகவும் சென்று கல்லணையில் ஒன்றாகிக் கலந்துவிடுவது நினைவுக்கு வந்தது. ஒரே பெயரைக் கொண்ட இந்த இரண்டு பகுதிகளுக்கும் எப்படி இப்படி ஒரு ஒற்றுமை என்று மனதில் வியப்பு விரிந்தது.
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள  ரங்கநாதர் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க மன்னரால் கட்டப்பட்டது. பின்னர், ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோலவே இங்கேயும் பாற்கடலில் நாகத்தின் மேல் ரங்கநாதர் பள்ளிகொள்ளும் காட்சியைக் காணலாம்.

திப்பு அரண்மனை

ரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது திப்பு சுல்தானின் கோட்டை. இது மைசூரில் பார்த்ததைப் போன்று பிரம்மாண்டமானது அல்ல. வெறும் தரையும் ஆங்காங்கே தலைகாட்டும் குட்டிச் சுவர்களும்தான் திப்புவின் கோட்டையாக எஞ்சியிருக்கின்றன. நான்காம் ஆங்கிலோ - மைசூர் போரின்போதே ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு திப்புவின் கோட்டை இரையாகிவிட்டது. அத்துடன் இது மைசூர் அரண்மனைகளைவிட ஒரு நூற்றாண்டு பழமையானதும்கூட. வீரமும் வரலாறும் சேர்ந்த அந்தப் பகுதியைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். சற்றுத் தள்ளி ஒரு மேட்டுப் பகுதி. இங்கே கர்னல் பெய்லிஸ் டன்ஜன் என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை தென்பட்டது.
திப்பு சிறை

நுட்பமாசிறை

மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே தெரிகிறது சிறைக்கூடம். தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவரையொட்டி காவிரி ஓடுகிறது. தரை மட்டத்துக்குக் கீழே சிறைச்சாலை என நுட்பமாகக் கட்டப்பட்டிருந்தது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்கினால், பூமிக்கு 30 அடி ஆழத்தில்தான் சிறைக் கூடம் தெரிகிறது.
உள்ளே நுழைந்தால் இன்னும் ஆச்சரியம். சிறை இரண்டு வரிசையாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய பெரிய தூண்கள் உள்ளன. தூண்களுக்கும் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவரில் வரிசையாய்ச் சிறுசிறு கற்கள். ஓர் அடி நீளத்துக்கு ஒரே அளவாகச் சம இடைவெளியில் இந்தச் சிறுகற்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையே நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்துக்கு நீட்டச் செய்து இந்தச் சிறு கற்களுடன் கைகளைப் பிணைத்துக் கட்டிவிடுவார்களாம். சுவரில் உள்ள ஒரு துவாரத்தைத் திறந்துவிட்டால், காவிரி நீர் இந்தச் சிறையை மெல்ல நிரப்பிவிடும். மரண பீதியுடன் கைதிகள் ஜலசமாதி ஆகிவிடுவார்களாம்.
அது சரி, இந்தச் சிறைக்கு ஆங்கிலேய அதிகாரியின் பெயர் எப்படி வந்தது? நான்காம் ஆங்கிலோ-மைசூர் போருக்கு முன்பாக திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டார் ஆங்கிலேய அதிகாரியான கர்னல் பெய்லிஸ். அதனால், இந்தச் சிறைக்கு அவர் பெயரே நிலைத்துவிட்டது.

தண்ணீர் வாயில்

தண்ணீர் வாயில்
அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தண்ணீர் வாயில் (Water Gate) தென்பட்டது. இதைத்  ‘துரோகத்தின் நினைவுச் சின்னம்என்று அழைப்பதுண்டு என்று வழிகாட்டி சொன்னார். திப்பு சுல்தான் நாள்தோறும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். மூன்றுமுறை ஆங்கிலோ- மைசூர் போர் நடந்தும் வீழ்த்த முடியாத திப்புவை, மீர் சாதிக் எனும் திப்புவின் படைத் தளபதி மூலமே வீழ்த்தியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.
ஒரு நாள் வழக்கம்போல இங்கே நீராட வந்த திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர் படை திடுமென நுழைந்து எதிர்பாராமல் தொடுத்த தாக்குதலை முறியடிக்க முடியாமல் கொல்லப்பட்டார் திப்பு. ஒரு வீரனை வேறெப்படி வீழ்த்த முடியும்?
கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருக்கும். 1799 மே 4 அன்று திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அவருடைய நினைவிடத்தைக் காட்டினார்கள். ஒரு மாவீரரைத் துரோகம் வீழ்த்திய கதையை மனதில் சுமந்தபடி அங்கிருந்து மவுனமாகப் புறப்பட்டோம்.
திப்பு இறந்த இடம்
சற்றுத் தள்ளி திப்பு சுல்தான் கட்டிய ஜும்மா மசூதியைப் பார்த்தோம். இந்த மசூதி இருந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் கோயில் இருந்ததாகவும், திப்பு ஆட்சிக்கு வந்த பிறகே ஆஞ்சநேயர் கோயில் போய், மசூதி வந்ததாகவும் சொன்னார் வழிகாட்டி. கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயர் சில வரலாற்றுப் புத்தகங்களில் திப்புவுக்கு உண்டு. ஆனால், இந்த மசூதிக்கு நேர் எதிரே ரங்கநாதர் கோயிலும் உள்ளது. கோயில்களை இடித்தவர் திப்பு என்றால், ரங்கநாதர் கோயிலை மட்டும் அவர் எப்படி விட்டுவைத்தார் என்ற கேள்வி மனதுக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் மானியமும் வழங்கியவர் திப்பு. இதற்கு வரலாற்று ஆதாரம் உள்ளது.


கோடை மாளிகை

கோடை மாளிகை
திப்புவின் வரலாறு பற்றிய சிந்தனைகளில் மூழ்கிபடியே அங்கிருந்து வெளியே வந்தோம். 15 நிமிட பயணத்துக்குப் பின் திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றோம். தாஜ்மஹால் பாணியில் நீண்ட பாதை. பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது. சுவர் முழுவதும் திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. திப்பு காலத்து வாள்கள், துப்பாக்கிகள், அவர் பயன்படுத்திய உடைகள், பதக்கங்கள் எனப் பல அரிய பொருட்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பார்த்த பிறகு, அங்கிருந்து சில நிமிடப் பயணத்தில் கும்பஸ் என்ற இடத்தில் திப்பு சுல்தானின் சமாதிக்குச் சென்றோம்.
மறைந்த தன் பெற்றோருக்காக திப்பு சுல்தான் கட்டியது இது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவருடைய சடலத்தை ஆங்கிலேயர்கள் இங்கே அடக்கம் செய்தார்கள். திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாய் பாத்திமா பேகத்தின் சமாதிகளுக்கு அருகிலேயே திப்புவும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்திலும் திப்பு அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வெளியேயும் எங்கே பார்த்தாலும் சமாதிகள்தாம். ஆனால், கண்ணைக் கவரும் நுணுக்கமான கட்டிட வேலைப்பாடுகளும் முகப்பில் உள்ள பெரிய தோட்டமும் இந்த இடத்தை அழகாக்குகின்.
கும்பஸ்
உயிரோட்டமான நகரமைப்பும் சிறப்பான வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மைசூரு நகரத்தை கர்நாடகத்தின்பண்பாட்டு தலைநகரம்என்றழைப்பது மிகவும் பொருத்தமானது. அதே நேரம் இந்திய விடுதலைப் போரில் வகித்த பங்கு ஸ்ரீரங்கப்பட்டணத்தைத் தனித்துக் காட்டுகிறது. அருகருகே இருந்தாலும் இரண்டு ஊர்களும் வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு நகரங்களையும் அந்த மாநில அரசு சிறப்பாகப் பராமரித்துவருகிறது. மைசூருவையும் ஸ்ரீரங்கப்பட்டணத்தையும் முழுமையாகப் பார்த்து ரசித்தது, மனதை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருந்தது.

- இந்து தமிழ் சித்திரை மலர், 2018