14/04/2017

ஆல் இன் ஆல் அழகு ராஜாவும் கோமுட்டித் தலையனும்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கென எப்போதுமே தனி இடம் உண்டு. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் தங்களுடைய தனித் திறமையால் தமிழ் சினிமாவில் கோலோச்சினார்கள்; கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,  தமிழ்ப் பட நகைச்சுவைக் காட்சிகளில் இரட்டையர்களாகத் தோன்றி தமிழ் ரசிர்களைக் கலகலப்பூட்டி, வயிறைக் குலுங்க வைத்து ரசிகர்களின் மனதில் பசை போட்டு உட்கார்ந்தவர்கள் அந்த இரட்டையர்கள். அவர்கள், கவுண்டமணி- செந்தில்!
உலக அளவில் இரட்டை காமெடியர்களாக காலங்கள் கடந்தும் ஆராதிக்கப்படுபவர்கள் அமெரிக்காவின் லாரல் - ஹார்டி. இவர்களில் லாரல் குண்டாகவும் கொஞ்சம் அப்பாவியாகவும், ஹார்டி ஒல்லியான குறும்புக்காரராகவும் இருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து வயிறு குலுங்க செய்த சேட்டைகளால் உலகப் புகழ் பெற்றவர்கள். இந்த இரட்டையர்களே போலவே தமிழ் ரசிகர்களின் விலா எலும்பை நோக வைத்தவர்கள் கவுண்டமணி - செந்தில் ஜோடி.


பெரும்பாலான படங்களில் கவுண்டமணிக்கு விஷயம் தெரிந்தவர் என்ற அடையாளம்.. செந்திலுக்கு அப்பாவித் தோற்றம். ‘அண்ணே... அண்ணே’ என வளைய வரும் செந்திலை, ‘டேய் கோமுட்டித்தலையா, பேரிக்காய் தலையா, பரங்கிக்காய் மண்டையா’ என திட்டியும், அடிப்பதே கவுண்டமணியின் பாணியாக இருந்தது. விதவிதமான வார்த்தைகளில் ஒருவர் திட்டி அடிப்பதையும் இன்னொருவர் அதை ஏற்பதும் தமிழ் காமெடி உலகில் புதிதாய் இருக்கவே கவுண்டமணி – செந்தில் ஜோடி தமிழ் சினிமா உலகில் கொடிக் கட்டிப் பறக்க ஆரம்பித்தது. கவுண்டமணியும் செந்திலும்  இணைந்து நடித்தால் அந்தப் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்று நிலையை குறுகிய காலத்திலேயே இருவரும் ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள்  ஒன்றாக இணைந்து நடிப்பது தமிழ்ப் படங்களில் புதிது அல்ல. ஆனாலும், தங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல் நடிக்கவே செய்தார்கள். ஆனால், ஒருவர் திட்டி அடிக்கவும், இன்னொருவர் அதை வாங்கிக் கொள்வதையும் எந்த ஈகோவும் இல்லாமல் செய்து ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்தவர்கள் கவுண்டமணியும் செந்தில் மட்டுமே. இந்த இணை எப்படி உருவானது? யார் உருவாக்கியது?

1970-களின்  தொடக்கத்தில் அறிமுகமாகி பாரதிராஜா கைவண்ணத்தில் உருவான ‘பதினாறு வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமானார் கவுண்டமணி . அதே 1970-களின் இறுதியில் அறிமுகமாகி ‘மலையூர் மம்பட்டியான்’ படம் மூலம் பிரபலமானவர் செந்தில். 1980-களில் கவுண்டமணியும், செந்திலும் தனித்தனி காமெடியர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாகவும், சில நேரங்களில் காமெடி கலந்த வில்லன் வேடங்களிலும் தங்களுக்குரிய ஸ்டைலில் நடித்து வந்தனர்.  தனித்தனி நாயனம் வாசித்து வந்த இருவரையும் செட் தோசை போல ஒன்றாக்கியவர் காமெடிக்கென தனி ட்ராக் வசனங்களை எழுதி புகழ்பெற்ற ஏ. வீரப்பன் (கரகாட்டக்காரன் உள்பட பல படங்களுக்குத் தனி காமெடி ட்ராக் எழுதியவர்) என்பவர்தான்.

கவுண்டமணி - செந்தில் ஜோடி பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு இவர் எழுதிய காமெடி டிராக் வசங்களும் ஒரு காரணம்.  இருவருடைய நகைச்சுவை நடிப்பையும் கண்காணித்து,  இருவருடைய தமாஷான உடல்மொழிகளை உள்வாங்கி வீரப்பன் எழுதிய காமெடி டிராக் மிகப் பெரிய ஹிட் ஆனது. ‘ நான் பாடும் பாடல்’, ‘உதயகீதம்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ படங்களைத் தொடர்ந்து கவுண்டமணி- செந்திலை வைத்து வீரப்பன்  எழுதிய காமெடி டிராக் பெரிய ஹிட் ஆயின.

முதன் முதலில் கவுண்டமணி - செந்தில் ஜோடி இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் படங்களில்தான் ஒன்றாகச் சேர்ந்து தலைக்காட்ட ஆரம்பித்தது. ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் அதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர்களின் காமெடிக்குக் கிடைத்த அங்கீகாரமும் வரவேற்பும் இந்த ஜோடியை காமெடி ராஜாக்களாக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் கவுண்டமணி ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாகவும் செந்தில் ‘கோமுட்டித் தலையன்’ ஆகவும் நடித்து புகழ்பெற்றனர். இதன்பிறகு 90-களின் இறுதிவரை இந்த ஜோடி அடித்த காமெடி லூட்டி தமிழ் ரசிகர்கள் காலத்தால் மறக்க முடியாதவை.

கவுண்டமணி செந்தில் ஜோடியின் மிகப் பெரிய வெற்றிக்கு செந்திலின் அப்பாவித்தனமும் எடக்குமடக்கான கேள்வியும், கவுண்டமணியை வம்பில் மாட்டிவிட்டு அப்பாவியாக வேடிக்கைப் பார்ப்பது போன்றவை காரணம் என்றால்,  செந்திலை கவுண்டமணி குசும்பும் நக்கலும் கலந்த வார்த்தைகளால் திட்டுவது, விரட்டி விரட்டி உதைப்பதுடன், அவருக்கெ உரிய உடல்மொழியும், வசனங்களை உச்சஸ்தாயில் கேலியாகவும் கிண்டலாகவும் வெளிப்படுத்தும் தோரணையும் முக்கிய காரணமாக இருந்தது உண்மை. இவை இந்த ஜோடியின் தனித்த அடையாளமாக மாறவும் செய்தது.

கவுண்டமணியும் செந்திலும் சக்கைப்போடு போட்ட காலத்தில் செந்திலை அடிப்பதும், உடல் உருவத்தின் அடிப்படையில் கிண்டல் செய்வதும் காமெடியா என்ற விமர்சனம்கூட எழுந்தது. ஆனாலும், கவுண்டமணி-செந்தில் இணைக்கு வரவேற்பும் குறையவில்லை; ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. கவுண்டமணி செந்திலை திட்டி, அடித்தும்கூட இந்த ஜோடி தொடர்ந்து சினிமாவில் ஜொலிக்க கவுண்டமணி மற்றும் செந்திலின் ஜோடிக்கு இருந்த மவுசும் அவர்களைத் திரையில் பார்த்தாலே தங்களை மறந்து ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை பாணியே முக்கிய காரணமாக அமைந்தது. சினிமாவைத் தாண்டி கவுண்டமணி-செந்தில் இடையே இருந்த அண்ணன் - தம்பி என்ற பாசப் பிணைப்பும் இதுபோன்ற விமர்சனங்களை இருவரும்  புறந்தள்ள  ஒரு காரணமாக இருந்தது.

1980-களில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய ‘நான் பாடும் பாடல்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்றவற்றில் கவுண்டமணி மற்றும் செந்திலின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. ‘வைதேகி காத்திருந்தாள்’  படத்தில், “கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்... என்னண்ணே உடைச்சிட்டீங்க!” என்று செந்தில் அப்பாவியாகப் பேசும் வசனத்துக்கு கவுண்டமணி பதில் வசனம் எதுவும் பேசாமல் ஓரக்கண்ணாலேயே செந்திலை முறைக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்பது நிதர்சனம். கவுண்டமணி வசனம் பேசாமலேயேகூட உடல்மொழியில் மட்டுமே நடித்து அதகளப்படுத்தினார் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.

இருவரும் ஒன்றாக நடித்த படங்களில் இருவருடைய டைமிங்கிற்கும் முக பாவங்களுக்கும் இணையாக
வேறெந்த காமெடியர்களும் செய்திருப்பார்கள் என்று நிச்சயம் சொல்லிவிட முடியாது. காமெடிக் காட்சிகளில் கவுண்டமணியிடம் செந்தில் எப்போதும் அடிவாங்கினாலும், செந்தில் அடிவாங்குவதற்கு முன்னர் செய்திருக்கும் சேட்டைகளும் அடிவாங்கிய பிறகு காட்டும் ரியாக்சனும் கவுண்டமணி மேல் கோபமே ஆத்திரம் வராமல் அந்த காட்சிகள் கையாளப்பட்டிருக்கும்.  பெரும்பாலும் கவுண்டமணி செந்திலைப் போட்டுத்தாக்கினாலும் கவுண்டரைவிட செந்திலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு கவுண்டமணி ஒருபோதும் தயங்கியதில்லை என்றும் கூறலாம். இதற்கு ‘ராஜகுமாரன்’ உள்பட ஏராளமான படங்களை உதாரணமாக கூறலாம்.

கவுண்டமணி-செந்தில் ஜோடி சுமார் 400 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 1980 மற்றும் 90-களில் இவர்களின் காமெடியை நம்பி படங்களில் நடித்த நாயகர்கள் பலர் உண்டு. 1950-60களில் நாயகர்களோடு இணைந்தே பெரும்பாலும் காமெடி காட்சிகள் நகரும்.  ஆனால், கவுண்டமணி-செந்தில் ஜோடி பல படங்களில் நாயகர்களோடு பெரிய அளவில் தொடர்பில்லாமல் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் வயிறைப் புண்ணாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாயகர்களுக்கு இணையாக இருவரும் ஜொலித்திருக்கிறார்கள். கவுண்டமணி-செந்தில் இருவரின் ஒருசேர கால்சீட்டுக்காக பல நாயகர்கள் காத்திருந்த காலங்கள் கூட உண்டு.

அந்தக் காலட்டங்களில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்த காட்சிகளிலும் கவுண்டமணி தனக்குரிய ஆளுமையை விட்டுக்கொடுக்காமல் நடித்திருக்கிறார். ‘மன்னன்’,  ‘உழைப்பாளி’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தைச் சர்வ சாதாரணமாக முந்திச் சென்றிருப்பார் கவுண்டமணி. ‘சிங்காரவேலன்’ படத்தில் கமலையும் கலாய்த்து சிரிக்க வைத்திருப்பார்.  ரஜினி, கமலைக் கிண்டல் செய்ய வேறு நகைச்சுவை நடிகர்களால் முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. இதேபோல ‘வீரா’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ போன்ற ரஜினியின் படங்களின் சில காட்சிகளில் ரஜினியை ஓவர் டேக் செய்திருப்பார் செந்தில். அது கவுண்டமணி மற்றும் செந்திலுக்கே உரிய நகைச்சுவை ஆளுமையின் அடையாளம்.

பொதுவாக சக நடிகர்கள் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு இயல்பான எதிர் வசனங்கள் பேசுவதில் கவுண்டமணி மன்னாதிமன்னர். சில சமயங்களில் அது மிகவும் சாதாரணமான வசனமாககூட இருக்கும். ஆனால், சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும். செந்திலோடு இணைந்து நடித்தபோது அப்பாடியான ஏராளமான வசனங்களை கவுண்டமணி வெளிப்படுத்தியிருப்பார்.  ‘உதய கீதம்’ படத்தில் செந்தில், “அண்ணே, நீங்க அறிவுக் கொழுந்துண்ணே” என்பார். பதிலுக்குக் கவுண்டமணி “கிள்ளி வாயில போட்டுக்கோடா” என மிகச் சாதாரணமாகப் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

ஏராளமான படங்களில் கவுண்டமணி - செந்தில் நடித்திருந்தாலும் அவர்களின் சில காமெடிகள் மட்டும் இன்றும் தலைமுறை தலைமுறையாக ஆராதிக்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாகக் ‘கரகாட்டக்காரன்’  படத்தில் இவர்கள் சேர்ந்து அதகளப்படுத்திய வாழைப்பழ காமெடியை  யாராவது மறக்க முடியுமா?  “நான் என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்” என கவுண்டமணி பல மாடுலேஷ்ன்களில் செந்திலிடம் கேட்கும் காட்சிகளும், செந்தில் ஒரே முக பாவத்தில் அப்பாவித்தனமாக ‘அந்த இன்னொன்னுத்தாண்ணே இது’ என்று பேசும் காட்சியும் காமெடி உள்ள வரை இந்தக் காட்சிகள் நிலைத்திருக்கும்.

கவுண்டமணியும் செந்திலும் சேர்ந்து நடித்த பல படங்களின் வசனங்களை நினைத்தால் கூட அந்தக் காட்சிகள் கண் முன்னே தோன்றி இன்றும் வயிறைப் புண்ணாக்கும்.  ‘வைதேகி காத்திருந்தால்’ படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ படத்தில் ‘இந்த டகால்டிதானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா, இது ஞாயமாடா’, ‘சின்னக்கவுண்டர்’படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகளை நினைத்தாலே உதட்டில் சிரிப்பு எட்டிப் பார்க்கும். ‘ராஜகுமாரன்’ படத்தில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலின் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்காக, ‘ நான் ஒரு முடிச்சவிக்கிம்மா’,  ‘நான் ஒரு மொள்ளமாரிம்மா’ என்று மாறிமாறி பேசும் காட்சிகளும் இருவரின் காமெடி கலாட்டக்களுக்கு மட்டுமின்றி, இருவரும் உச்சத்தில் இருந்தபோது ஈகோ பார்க்காமல் நடித்ததற்கு ஓர் உதாரணம்.

நடிகர்களுக்காக, பாட்டுக்காக, வசனத்துக்காக, கிளாமருக்காகப் பல  திரைப்படங்கள் வெற்றிகரமாக 1980-90களில் ஓடியதுண்டு. அதைப்போலவே காமெடிக்காக மட்டும், படங்கள் ஓடியது கவுண்டமணி- செந்திலுக்காக மட்டுமே. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் வரை கோலோச்சிய இந்த இரட்டையர்கள், 1990-களின் இறுதியில் சேர்ந்து நடிப்பது குறைய ஆரம்பித்தது.  புதுப்புது காமெடி வரவுகளும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.

எப்படி இருந்தாலும் இப்போது காமெடி தொலைக்காட்சிகள் வழியாக கவுண்டமணியும் செந்திலும் தினந்தோறும் நம் வீட்டு வரவேற்பையை நகைச்சுவையால் நிறைத்துக்கொண்டுதான் உள்ளார்கள்.  இந்த ஜோடிகளால் உச்சரிக்கப்பட்ட காமெடி வசனங்கள் இல்லாத சமூக ஊடங்கள் மற்றும் மீம்ஸ்களால் இளையதலைமுறையினரின் உள்ளங்களில் ஊடுருவியிருக்கிறார்கள். சினிமாவில் இப்போது இவர்களை ஒன்றாகப் பார்க்க முடியாவிட்டாலும் இந்த இரட்டையர்கள் இல்லாமல் தமிழ்  நகைச்சுவை வரலாற்றை யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

- தி இந்து 2017 தமிழ்ப் புத்தாண்டு மலர்

02/04/2017

கவண் விமர்சனம்

ஊடக அறத்தையும் உண்மையும் உரக்கச் சொல்லும் ஓர் இளைஞனுக்கும் அரசியல் சித்து விளையாட்டுகளால் ஊடக நிறுவனத்தை வளர்க்க விரும்பும் ஒரு முதலாளிக்கும் நடக்கும் சடுகுடு விளையாட்டுத்தான் ‘கவண்’.
தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேரும் திலக் (விஜய் சேதுபதி) ஊடக அறத்தைக் கடைப்பிடித்து செய்திகளை வழங்குகிறார். ஆனால், அந்தச் செய்தி எப்படி வர வேண்டும் என்று ஊடக முதலாளி கல்யாண் (அக்ஸ்தீப் சைகால்) முடிவு செய்கிறார். மோசமான அரசியல்வாதியான தீரண் மணியரசுடன் (போஸ் வெங்கட்) கூட்டு சேர்ந்துக் கொண்டு, தொலைக்காட்சி மூலம் அவரை உயர்த்திப் பிடிக்கிறார் ஊடக முதலாளி. அதை விஜய் சேதுபதி எதிர்க்கிறார். வேலையிலிருந்து வெளியேறும் விஜய் சேதுபதியும் அவரது நண்பர்களும் ஊடக முதலாளியின் முகத்திரையைக் கிழிக்க என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

காட்சி ஊடகத்தின் பின்னே இருக்கும் கார்ப்பரேட் மற்றும் அரசியல் கூட்டு சதியை உரக்க சொன்ன விதத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் கவர்கிறார். ரியாலிட்டி ஷோக்களில் நடைபெறும்  டிராமாக்களையும்,  ஒரு குழுவை வெளியேற்றும்போது பரிதாப உணர்வைத் தூண்ட அடித்து அழ வைப்பது, வம்பிழுப்பது என நடக்கும் கூத்துகளை அச்சு பிசகாமல் காட்டியதில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர்.

பிரேக்கிங் நியூஸ், பரபரப்பு பசி, முந்தித் தரும் பிரத்யேக செய்திகளில் தொலைக்காட்சிகள் அணுகும் விதத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை தோலுரித்து காட்ட இயக்குநர் முனைந்திருக்கிறார். ஆனால், அதற்கான திரைக்கதை அமைப்பில் அதீத கற்பனையைக் கலந்து, சொல்ல வந்த விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார். பரபரப்பான செய்திகளை முந்தி தருவதற்கான டி.ஆர்.பி. போட்டியில், ஊடக அறத்தை எப்படி மறக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்குப் பதிலாக, ஊடகத்தில் இருப்பவர்களே அரசியல்வாதியுடன் சேர்ந்துகொண்டு வெடிகுண்டு வைத்து செய்திகளை உருவாக்கிறார்கள் என்று காட்டுவதெலாம் சுத்த அபத்தம்.

சுற்றுச்சூழல் போராட்டம், தீவிரவாதியாக சித்தரிக்க முயலும் ஒரு சமுதாயத்தின் இளைஞன் படும் கஷ்டங்கங்கள் என சமகால விஷயங்கள் ஊறுகாய் போல தொட்டு கொள்ள காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  காட்டில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை காட்சிகளைத் தூரத்திலிருந்து படம் பிடிப்பது, ஒரு பெரிய ஊடக நிறுவனத்தில் ஓரிருவர் உட்கார்ந்துகொண்டு தங்கள் இஷ்டத்துக்கு செய்திகளை மாற்றிக் காட்டுவது போன்ற லாஜிக் இல்லாத காட்சிகளும் மிகவும் இழுவையாக காட்டும் கிளைமாக்ஸ் காட்சிகளும் சலிப்பை வரவழைக்கின்றன. முதல் பாகத்தில் இருக்கும் பரபரப்பு, வேகமான காட்சிகளுக்கு இரண்டாம் பாகம் மொத்தமாக ஸ்பீடு பிரேக் போட்டு  சோர்வடைய செய்கிறது. 

செய்தியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஊடக அறத்தை கொடிப் பிடித்து காட்டுகிறார் விஜய் சேதுபதி. சிறு தவறு செய்துவிட்டு பிரியும் காதலை தொடர தொடர்ந்து முயற்சிப்பது, உண்மைக்காக கோபப்படுவது, ஆற்றாமையால் துடிப்பது என கிடைத்த எல்லா இடங்களிலும் கைத்தட்டலை அள்ளுகிறார் விஜய் சேதுபதி. வழக்கமான பாணியிலிருந்து தலையலங்காரத்தை மாற்றி கவரவும் செய்கிறார். காட்சிக்கேற்ப உடல்மொழியை வெளிப்படுத்துவதில் ஜொலிக்கிறார்.

நாயகி மடோனா செபாஸ்டியன் நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கோபப்படும்போதும், விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும்போதும் யதார்த்த நடிப்பைத் தந்திருக்கிறார்.   நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரியத் திரையில் முகம் காட்டியிருக்கும்  டி.ராஜேந்தர் நஷ்டத்தில் இயங்கும் ஊடக முதலாளியாக நடித்திருக்கிறார். வழக்கமான தன்னுடைய பாணியில் எதுகை, மோனையோடு பேசி நடித்திருக்கிறார்.  ஊடக முதலாளி பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் அக்ஸ்தீப் சைகால். பாண்டியராஜன், ஜெகன், விக்ராந்த், போஸ் வெங்கட், பவர் ஸ்டார் சீனிவாசன், நாசர், தர்ஷனா ராஜேந்திரன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா ஆகியோர் பாத்திரத்துக்கேற்ப பொருந்துகிறார்கள்.

'கக்கூஸ் கப்படிச்சா பாலூத்தியா கழுவுறீங்க, அதுக்காக ஆசிட்டை வெச்சு காலைக் கழுவ முடியாது’ போன்ற வசனங்கள் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.  தொலைக்காட்சி நிறுவனத்தை அபிநந்தன் ராமானுஜத்தின் கேமரா அழகாக காட்டியிருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில், கண்ணம்மா ராக் பாடல் மட்டும் கவர்கிறது.

ஊடக அறத்தை சொல்ல வந்து குறி தப்பி நிற்கிறது ‘கவண்’.

மதிப்பெண்: 2.5 / 5