தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கோடு இருந்தாலும், திரையில் ஜொலிக்கும் நாயகர்கள்தான் அந்தந்தப் படங்களின் ஒட்டுமொத்த அடையாளங்கள். நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டிகள் எப்போதும் இருந்தாலும், ஓர் ஆண்டில் நாயகர்கள் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை, படங்களின் வெற்றி, தோல்வி போன்ற விஷயங்கள் நாயகர்களின் உச்சத்தையும், வளர்ந்து வரும் வேகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்?
முன்னணி நாயகர்களான கமல்ஹாசன், அஜித்குமார் நடித்த படங்களைத் தவிர பிற முன்னணி நாயகர்களின் எல்லா படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தன. ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பல படங்கள் வரிசை கட்டி ரசிகர்களை மகிழ்வித்தன. ஏற்கெனவே வெற்றிக்கொடிகளை பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டு பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று மட்டும் பார்ப்போம்.
விஜய்
ஆண்டுக்கு ஒரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும்
விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’. பாசமுள்ள சாதுவான அப்பா, ஃபிளாஷ்பேக்கில் ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களைக் காட்டி அவரது ரசிகர்களைத் தெறிக்கவிட்டார் விஜய். அந்தக் காலத்து சாயல் கொண்ட படம் என்ற விமர்சனத்தைப் பெற்றபோதும், படம் பாக்ஸ் ஆபிஸை நிரப்பியது. ஏற்ற இறக்கங்களாக விஜய்க்கு இருந்து வரும் வெற்றி - தோல்வி படங்களின் வரிசையில் ‘தெறி’ ஓரளவு வெற்றி படம்தான்.
விக்ரம்
கமலஹாசனுக்கு அடுத்து உடலை வருத்தி, மெனக்கெட்டு நடிக்கும் நடிகர் விக்ரம், இரட்டை வேடங்களில் நடித்து இந்த ஆண்டு தலைகாட்டிய படம் ‘இருமுகன்’. நாயகனாக ‘அகிலன்’, வில்லனாக ‘லவ்’ என இரண்டு கதாபாத்திரங்களுக்கான வேறுபாட்டை அனாயாசமாகக் காட்டி விக்ரம் நடித்த படம். வில்லனைப் பிடிக்க அகிலன் காட்டும் தீவிரம், அதற்கு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத ‘லவ்’வின் வில்லத்தனம் இரண்டும் ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது. ஆனால், காட்சிகளில் இல்லாத நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் ரசிகர்களின் கவனத்தை ‘இருமுகன்’ பெறவில்லை.
சூர்யா
முன்னணி நாயகர்கள் எல்லோரும் ஒரு படத்தில் தலைகாட்டினால் போதும்
என்ற இலக்கணத்துக்கு இந்த ஆண்டு சூர்யாவும் தப்பவில்லை. ‘24’ என்ற த்ரில்லர் பாணி படமொன்றில் மட்டுமே சூர்யா நடித்தார். மூன்று பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நன்கு வித்தியாசம் காட்டி நடித்ததில் ரசிகர்களை சீட்டில் நிமிர உட்கார வைத்தார் சூர்யா. ஆனால், சூர்யாவின் வழக்கமான முக பாவனைகளும், காட்சி அமைப்புகளும் ஏற்படுத்தும் சலிப்புகள் படத்தின் மீதான ஈடுபாட்டை குறைக்கவும் செய்தது.
சிம்பு
கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு படம் வெளியாவதற்கே நீண்ட காத்திருப்பில் இருந்த சிம்புவுக்கு, இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாயின. அதுவும் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தள்ளிப்போய்க்கொண்டிருந்த ‘இது நம்ம ஆளு’, மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ என இரு படங்கள் வெளியாயின. ‘இது நம்ம ஆளு’ படத்தில் சாக்லெட் பையனாகவும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் தாடி வைத்து சிம்பு நடித்ததும்தான் வித்தியாசங்கள். சிம்புவுக்கு நயன்தாரா ஜோடி என்று ஏற்படுத்திய பரப்பரப்பு அளவுக்கு ‘இது நம்ம் ஆளுவில்’ எந்தப் பரபரப்பையும் விறுவிறுப்பையும் பார்க்க முடியவில்லை. ‘அச்சம் என்பது மடமையடா’ அவ்வப்போது ‘விடிவி’ பார்த்த பாதிப்பை ஏற்படுத்துவதால், பெரிய ஆரவாரமில்லாமல் இருபடங்களும் நகர்ந்தன.
தனுஷ்
கடந்த ஆண்டு நான்கு படங்களில் நடித்த சிம்புவின் சகப் போட்டியாளரான தனுஷ், இந்த ஆண்டு ‘தொடரி’, ‘கொடி’ என இரண்டு படங்களோடு திருப்தியாகிவிட்டார். இதில் ‘கொடி’ படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் தலை காட்டினார். கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ரயிலில்
நடக்கும் ஒரு காதல் பயணம் என எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அளவுக்கு சறுக்கியதால் ‘தொடரி’ ரசிகர்களின் தொடர் ஆதரவைப் பெற முடியாமல் போனது. ஆனால், அதிகமான சவால்கள் இல்லாத வேடத்திலும் தனுஷ் பக்குவமான நடிப்பைத் தந்தது ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம்.
அதேசமயம், தீபாவளி அன்று வெளிவந்த ‘கொடி’ படம் ஓரளவு உயர பறந்தது. இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம் சேர்த்திருந்தார். வழக்கமான திரைக்கதை பாணி, அரசியலில் லாஜிக்கே இல்லாமல் சுலபமாக வெற்றி பெறுவது போன்ற அர்த்தமற்ற காட்சிகள் ‘கொடி’ உயர பறக்க தடையாக இருந்தன. இருந்தாலும் இரண்டு படங்களில் ஒன்று ஓரளவு சோடைபோகமல் போன வகையில் தனுஷுக்கு ஃபிப்டி மகிழ்ச்சி கொடுத்திருக்கும்.
ஜீவா
முன்னணி நாயகர்களின் பட்டியலில் இருந்தாலும், இன்னும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் திணறும் ஜீவாவுக்கு இந்த ஆண்டு ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ என மூன்று படங்கள் வெளியாயின. ‘போக்கிரி ராஜா’ படம் நகைச்சுவை கலந்த ஃபேன்டஸி கதை. ‘திருநாள்’ படத்தில் ரவுடி, ‘கவலை வேண்டாம்’ படத்தில் காதல், திருமணம் என தடுமாறும் இளைஞர் வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், மூன்றுமே ஜீவாவுக்கு கைகொடுக்காமல் போனது. பழைய பாணி கதைகள், சலிப்பேற்றும் திரைக்கதை மற்றும் பாத்திர அமைப்புகள் என மூன்று படங்களும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றன. சிறப்பான நடிப்பை உடல்மொழியிலும் பேச்சிலும் ஜீவா வெளிப்படுத்துவதில் சோடைபோகாவிட்டாலும், அதையும் தாண்டி அவருக்கு அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது.
விஷால்
பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுக்கப் போராடிக் கொண்டிருக்கும்
விஷாலுக்கு இந்த ஆண்டு ‘கதகளி’, ‘மருது’ என இரண்டு படங்கள் வெளியாகின. ‘கதகளி’ ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் என்றால், ‘மருது’வோ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்தைய கதை. கதையைப் போலவே பாத்திர படைப்பிலும் புதுமை இல்லை. ஆக்ஷன் மற்றும் கூலித் தொழிலாளிக்கு ஏற்ற உடற்கட்டும் உயரமும் கைக்கொடுக்கும் அளவுக்கு அவருக்கு நடிப்பு கைக்கொடுக்கவில்லை. அதற்கு விஷாலைக் குறைகூற முடியாது. அதற்கு இயக்குநர்களின் கற்பனை பற்றாக்குறையே காரணம். இதுபோன்ற் காரணங்களால் வெற்றிப் படத்துக்காக விஷால் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
மூன்று பேர்
முன்னணி வரிசையில் உள்ள நாயகர்கள் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு பிரம்மாண்ட வெற்றிக்காகக் காத்திருக்கும் வேளையில் மூன்று நடிகர்களின் கேரியர் கிராஃப் மட்டும் பரமபத ஏணியில் ஏறுவதைப் போல ஏறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி.
கார்த்தி
கார்த்தி நடித்த ‘தோழா’’, ‘காஷ்மோரா’ இரண்டும் வசூலிலும், ரசிர்கர்களைக் கவர்ந்ததிலும் குறைவைக்கவில்லை. கழுத்துக்குக் கீழே செயலிழந்துபோன உடலுடன் வலம் வரும் நாகர்ஜூனாவின் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றும் பாத்திர வார்ப்பில் கொஞ்சமும் பிசகாமல் நடித்து ‘தோழா’வில் கவர்ந்தார் கார்த்தி. இன்னொரு புறம் ‘காஷ்மோரா’வில் இரண்டு வேடங்கள்; மூன்று பரிமாணங்களில் வந்து ஈர்த்தார். அதுவும் ‘காஷ்மோரா’ பாத்திரத்தில் கலகல கார்த்தியாக ரசிர்களின் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டார். இரண்டு படங்களுமே வெவ்வேறான கதையமைப்புகள், திரைக்கதையமைப்புகள், பாத்திர உருவாக்கங்கள், என அமைந்தத்தில் கார்த்திக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டுதான்.
சிவகார்த்திகேயன்
ஒரே பாணியிலான நடிப்பு, கதைத் தேர்வு, கலகலப்பான நகைச்சுவை பிளஸ் காதல் என கலந்து கொடுத்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வியாபார ரீதியில் உச்சம் பெற்று வரும் இவர்,
தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நாயகராக இந்த ஆண்டு மாறியிருக்கிறார். ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ என இரண்டு படங்களுமே இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்கள். ‘ரஜினி முருகன்’ படத்தில் அவரது நடனம், நக்கலான முகப் பாவனை, காமெடி சென்ஸ் மூலம் படத்தை ஹிட் அடிக்க வைத்தவர், ‘ரெமோ’வில் காதலர், நர்ஸ் என இருவிதத் தோற்றங்களில் வித்தியாசம் காட்டி நடித்தார். இதில் பெண் வேட நடிப்பில் தனி முத்திரையும் பதித்தார். துரத்தி காதலிக்கும் கதையம்சம் கொண்ட ‘ரெமோ’ எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களை ஈர்க்கவே செய்தது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் முன்னேறிகொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டும் ஏறுமுகம்தான்.
விஜய் சேதுபதி
மசாலா படமா, முறுக்கு மீசை போலீஸ் படமா, கிராமத்துப் படமா, பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாத ஆணின் படமா, குடும்ப சூழ்நிலையில்

தடுமாறும் இளைஞனின் படமா, சிரிப்பு ரவுடி பாத்திரமா- இவை எல்லாவற்றுக்கும் ஒரேசாய்ஸ் விஜய் சேதுபதி என்ற நிலையை இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகம் பார்த்தது. ஒரே ஆண்டில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 6 படங்களில் நடித்து இந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த நாயகன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதையையும், பாத்திரப் படைப்புகளையும் கொண்ட படங்கள்தான். இதில் எல்லாவற்றிலும் பொருந்திக்கொண்டது விஜய் சேதுபதிக்கே உரிய தனிச்சிறப்பு. 6 படங்களில் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, சேதுபதி, இறைவி ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆரவாரம் இல்லாத இயல்பான நடிப்பு, பாத்திரத்துக்கு ஏற்ற பேச்சும், உடல்மொழி மாற்றமும் விஜய் சேதுபதிக்கு கைக்கொடுக்கிறது. தொடர்ந்து மாறுப்பட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்த ஆண்டு படங்களின் எண்ணிக்கையிலும், வெற்றிகளின் எண்ணிக்கையிலும், வணிக ரீதியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு கவனம் ஈர்த்த நாயகர்களில் விஜய் சேதுபதியே முன்னணியில் உள்ளார்.
- தி இந்து, 02-12-2016