29/05/2016

உறியடி விமர்சனம்

ஜாதிய தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுக்கொண்டிருக்கும் நுட்பமான அரசியலையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம்  ‘உறியடி’. ஏராளமான புதுமுகங்களைக் களத்தில் இறக்கி உறியடிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா?

இறந்துபோன ஒரு ஜாதிய தலைவருக்கு சிலை வைப்பதில் கதை தொடங்குகிறது. சிலை வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார்.  உடனே அரசியல் கட்சி தொடங்க திட்டமிடுகிறார்கள் சாதி சங்கத்தினர். ஜாதி சங்கத்தில் உள்ள மைம் கோபி, ஒரு பொறியியல் கல்லூரிக்கு எதிரே பார் கடையை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு எப்போதும் மது அருந்த வரும் நான்கு மாணவர்களைப் பகடைக்காயாக்கி அரசியல் கட்சியைத் தொடங்க திட்டமிடுகிறார். இந்த நுட்பமான ஜாதி அரசியல் விளையாட்டில் சிக்கி மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

படத்தை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கிறார் விஜயகுமார். அவரோட மூன்று நண்பர்கள். நான்கு பேருமே கல்லூரி மாணவ பருவத்துக்குரிய துறுதுறுப்புடன் சுற்றுகிறார்கள். அவர்களின் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 15 ஆயிரம் ஜாதி ஓட்டுகளை அரசியல் கட்சியாக மாற்ற  துடிக்கும் பாத்திரத்தில் மைம் கோபி ஸ்கோர் செய்கிறார். ஜாதி அரசியல்வாதிகளின் உண்மையான மனத்தை காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்துகிறார். லாட்ஜ் ஓனராக வரும் சுருளி வஞ்சமே உருவானவ பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். பொது இடத்தில் அவமானபடுபவன் பழிவாங்கப் புழுங்குவதை கண் முன்னே கொண்டு  வந்து நிறுத்துகிறார். படத்தில்  நடித்துள்ள ஹெல்லா பென்னாவை நாயகி என்று நாமே நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். தமிழ் படத்தில் வசனமே பேசாத நாயகி இவராகத்தான் இருப்பார். 

படம் முழுவதுமே மாணவர்கள் குடியும் கும்மாளமுமாகவே இருக்கிறார்கள். எப்போதும் பாரிலேயே விழுந்துக்கிடக்கிறார்கள். ஏதாவது பிரச்சினை என்றாலும் முறுக்கிக்கொண்டு சண்டைக்குக் கிளம்பிவிடுகிறார்கள். ரத்த வெறியுடன் அலைகிறார்கள்.  கொலை செய்யும் அளவுக்கு அடிதடியில் ஈடுபட்டாலும் திரும்பவும் கல்லூரியில் ஜாலியாகவே இருக்கிறார்கள்.  படத்தில் போலீஸே இல்லை. இப்படி காதில் நிறையவே பூமாலையைச் சுற்றுகிறார் இயக்குநர் விஜயகுமார்.

ஜாதி சங்கத் தலைவர் சிட்டிஸன் சிவக்குமார், பார் ஓனர் மைம் கோபி, சாதி வெறி கொண்ட ஆட்களை மாணவர்கள் ஓர் இரவில் எதிர்க்கொள்ளும் காட்சிகள் திக்திக் ரகமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஜாதிய படமாக இருந்தாலும, எந்த ஜாதி என்றுகூட அனுமானிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக படம் பண்ணியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

மிகவும் அழுத்தமான கதைத்தான். ஓரிடத்தில் சறுக்கினாலும் மொத்த திரைக்கதையும் சீட்டுக் கட்டுப் போல சரியும் அபாயம் உள்ள படைப்புதான். ஆனால், படத்தில் அதுதான் நடந்திருக்கிறது. சாதி அரசியல் கதையும், மாணவர்கள் நான்கு பேரின் கதையும் தனியாகப் பயணிக்கிறது. ஆனால், இரண்டையும் ஒரு கோட்டில் ஒன்றாக இணைப்பதில் இயக்குநர் கோட்டை விடுகிறார். இதனால், பிரேக் இல்லாத வண்டி போல படம் இஷ்டத்துக்குப் பயணிக்கிறது.

படத்துக்கு பின்னணி இசையையும் விஜயகுமாரே செய்திருக்கிறார். ஆண்டனிதாசனின் இசை பாடலுக்கு வலு சேர்க்கவில்லை. பால் லிவிங்ஷ்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

உறியடி - குறியில்லாத அடி

மதிப்பெண் - 2.5 / 5

27/05/2016

வாக்களித்தார்களா செல்போன் சிங்கங்கள் ?


முன்பெல்லாம் அரசியல் சங்கதிகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாக இருந்தன டீக்கடைகளும், முடி திருத்தும் நிலையங்களும். இன்றோ அது தலைகீழாக மாறிவிட்டது.

அரசியல் தொடர்பான விஷயங்களாக இருந்தாலும், அரசியல் விவாதங்களாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில்தான் முதலில் எதிரொலிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் எடுத்துக்கொள்ளப்படும் விஷயங்களைப் பொறுத்து அரசியல் தலைவர்கள் தங்களது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் களமாடும் பகுதியாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழக தேர்தல் புதிய பிரசாரக் களமாக மாறிப்போனது. சமூக வலைத்தளங்களில் உலவும் இளைஞர்களின் வாக்கு யாருக்கு என்று சொல்லுமளவுக்குப் பட்டிமன்றங்களும் சூடுபிடித்தன.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சியும் பொறுப்பேற்றுவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழக தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது என்று பார்க்கலாம். சமூக வலைத்தளங்கள் ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டாலும், அது பெரும் வளர்ச்சி கண்டது அண்மைக்காலத்தில்தான்.

அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரசாரம் செய்து ஒபாமா வெற்றி மாலையைச் சூடியபோது, பல நாடுகளின் அரசியல்வாதிகள் இதைப் புதிய பிரசார களமாகப் பார்த்தார்கள்.
குறிப்பாக இந்தியாவில் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. தன்னை தேசிய அளவில் நிலை நிறுத்திக்கொள்ள ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக வலைத்தளங்களை அவர் பயன்படுத்திக்கொண்டார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லா அரசியல்வாதிகளின் ஃபேஸ்புக் பக்கங்களும் மெருகூட்டப்பட்டன.

ஒவ்வொரு தலைவருக்கும் புதிய பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவை லைக்குகளையும் அள்ளின. மோடியின் சமூக வலைத்தள பிரச்சார உத்தி இளைஞர்களை ஈர்த்தது. சமூக வலைத்தளங்கள் மூலமாக வெற்றிகரமாகப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியும் என்று மோடி நிரூபித்த பிறகு பிற தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் குதித்தார்கள். 90 வயதைக் கடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கி சிறு கட்சிகளின் தலைவர்கள்கூட சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை எடுத்துச் செல்லத் தொடங்கினர்.
அதுவும் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 1.50 கோடி இளைஞர்கள் புதிய வாக்காளர்கள் என்ற அறிவிப்பு வெளியானவுடன், சமூக வலைத்தளங்கள் மீதான அரசியல் கட்சிகளின் ஈர்ப்பு கூடிக்கொண்டே போனது.

ஏனென்றால் இன்று சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லாத இளைஞர்களை இந்தச் சமூகம் வேற்றுக் கிரகவாசிபோல பார்க்கும் நிலை வந்துவிட்டது. அப்படி இளைஞர்களின் களமாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக் கோடிக்கணக்கில் செலவு செய்யவும் கட்சிகள் தயங்கவில்லை.

இளைஞர்களும், புதிய ஒன்றரைக் கோடி வாக்காளர்களும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது. அதுவும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் அவர்கள்தான் என்றும் கோடிட்டுக் காட்டப்பட்டது.

அதற்கு ஏற்றாற்போல தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திய மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்குச் சமூக வலைத்தளங்களில் ஆதரவும் பெருகியது போன்ற ஒரு தோற்றம் உருவானது. ஆன்லைன் கருத்துக் கணிப்புகள் என்றால் இந்தக் கட்சிகள் முன்னணி வகித்தன.

அரசியல் களத்தில் கட்சிகளால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள், பிரசாரங்களில் செய்யப்படும் தவறுகள், அந்தர்பல்டிகள், உளறல்கள் போன்றவற்றைச் சமூக வலைத்தளங்களில் உள்ள இளைஞர்கள் மீம்ஸ்களாகப் பதிவு செய்து உலவவிட்டு ஹிட் அடிக்கவும் செய்தார்கள்.
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தை உணர்ந்துதான் வைகோ போன்ற தலைவர்கள் தொடக்கம் முதலே, “சமூக வலைத்தளங்களில் எங்கள் கூட்டணியைக் கொண்டாடுகிறார்கள்” என்று கூறி வந்தார்கள். பிற தலைவர்கள் எல்லாம் தங்கள் பிரச்சாரத்தின் பேச்சு, ஒளிப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பிரசாரம் செய்தார்கள்.
ஆனால், வைகோ போன்ற தலைவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை நேரிடையாகவே விளித்து பிரசாரம் செய்யும் காட்சியும் அரங்கேறியது. “செல்போன் சிங்கங்களே, அலைபேசிப் புரட்சியாளர்களே’ என்று விளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்கள். ஆனால், சமூக வலைத்தளத்தில் புழங்கும் இளைஞர்கள் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று சொல்லப்பட்டதற்கு மாறாகத் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

இளைஞர்களை முன்னிறுத்தி மாற்றத்தை எதிர்நோக்கியவர்கள் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார்கள். வயது வாரியாக வாக்களித்தவர்களின் புள்ளிவிவரங்கள் கிடைக்காது என்றாலும் சுமார் ஒன்றரைக்கோடி புதிய வாக்காளர்களும், இளைஞர்களும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. நோட்டாவுக்குக்கூட சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள் மட்டுமே மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ளன. இது இளைஞர்கள் அளித்த வாக்குகளாக இருக்கலாம் என்றாலும் அந்த எண்ணிக்கையும் குறைவுதான்.

தமிழகத்திலேயே வாக்குப் பதிவு மிகவும் குறைவாகப் பதிவானது சென்னையில்தான். 60.9 சதவீதம் வாக்குகளே இங்கே பதிவாயின. இதேபோல தமிழகத்தில் சுமார் ஒரு கோடிப் பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் சுமார் 52 லட்சம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 48 லட்சம் பேர் தமிழகத்தின் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் கிடையாது. ஆனால், 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களே இதில் மிக அதிகம். தமிழகத்திலே சென்னையில் வாக்குப் பதிவு குறைவு என்றால் சமூக வலைத்தளங்களில் அதிகம் புழங்கும் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
வழக்கமாக வாக்களித்துவிட்டு செல்ஃபி எடுத்து பதிவிடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் இந்த முறை குறைவாகவே இருந்தது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தது.

கொஞ்சம் உற்று நோக்கினால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்கள் குறைவாகவே வாக்களித்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதற்கு சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களைத் தொடர்ந்து திங்கள்கிழமை தேர்தலை வைத்தால் தொடர்ச்சியாக வந்த விடுமுறையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உற்பத்தி செய்து, லைக்குகளைப் பெறுவதில் காட்டும் ஆர்வம், விரல் நுனியில் வைக்கப்படும் மையின் மீது இன்னும் வரவில்லையோ என்னவோ!

- தி இந்து, 27-5-2016 (தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு எழுதியது)