நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளின் கோர்வைதான் இந்தப் படம். நயன்தாராவின் சோகம், உணர்வுபூர்வமான கோபத்தைத் தவிர்த்து படத்தில் நகைச்சுவை ஆக்கிரமித்திருக்கிறது. அதற்கு தகுந்தார்போல் தொய்வின்றி, கணிக்க முடியாத திரைக்கதையால் படம் ரசிக்க வைக்கிறது. ‘போடா போடி’ படத்தில் சொதப்பிய இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறிது இடைவெளி விட்டு இப்படத்தை எடுத்திருந்தாலும் பாஸாகிவிடுகிறார்.
விஜய் சேதுபதி துறுதுறுவென இருக்கிறார். இதுவரை கிராமத்து இளைஞனாக, லோக்கல் பையனாக வந்தவருக்கு மாடர்ன் இளைஞன் வேடம். அளவான வசனங்கள், அழகான மேக்கப் என பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்திவிடுகிறார். வசன உச்சரிப்பிலும் தேறியிருக்கிறார். ரவுடியாக இல்லாவிட்டாலும் ரவுடி போல பில்டப் கொடுப்பது, ரவுடியாக ‘ நான் கடவுள்’ ராஜேந்திரனிடம் பயிற்சி எடுப்பது, தனது நண்பர்களைச் சேர்ந்துகொண்டு தாதா அளவுக்கு திட்டம் போடுவது, காதலி நயன்தாராவுக்காக உருகி மருகுவது என அசத்தியிருக்கிறார்.
வயதாக வயதாக நயன்தாராவுக்கு அழகுக் கூடிக் கொண்டே போகிறது. செவித்திறன் குறைபாடுள்ள அந்தப் பாத்திரத்தில் அப்படியே ஒன்றிவிடுகிறார். முதன் முறையாகச் சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறார் இந்தப் படத்தில். இவரது குரலும் நடிப்பும் அந்தப் பாத்திரத்துக்குள் சுலபமாக ஊடுருவிடுகிறார். அப்பா அழகம் பெருமாள் உயிரோடு இருக்கிறார் என்று நினைக்கும் வேளையில், இறந்தபோன விஷயம் தெரிய வருகிறது. காவல் நிலையத்தில் அடக்க முடியாத அழுகையையும், நம்பிக்கை பொய்த்துபோன விரக்தியையும் ஒரு சேர வெளிப்படுத்தும்போது நயன்தாரா சிக்ஸர் விளாசி விடுகிறார்.
இந்தப் படத்தில் பார்த்திபன் முழு நீள வில்லனாக புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். வில்லனாக வந்தாலும் அவருக்கே உரிய ஸ்டைலில் கலக்குகிறார். பார்த்திபனை கொல்ல நயன்தாரா நிராயுதபாணியாக வருகிறார். கையில் எந்த ஆயுதமோ, முன் தயாரிப்போ இல்லாமல், அவரிடமே வந்து ‘உன்னை கொல்லப் போகிறேன்’ என்று சொல்வது லாஜிக் ஓட்டை. அதுவும் அந்த வசனத்தை ‘உன்னை போடப் போறேன்’ என்று நயன்தாரா சொல்வதும், அதை பார்த்திபன் இரட்டை அர்த்தமாகக் கொள்வதும் காமெடி என்ற பெயரில் அருவருக்க வைக்கிறது. பார்த்திபனை நயன்தாராவும் அவரது அப்பாவும் கொல்லத் துடிக்கும் அளவுக்கு என்ன பகை என்பதை சொல்லாமல் விட்டது படத்தில் பெரிய மைனஸ்.
படத்தில் ராதிகா, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ஆர்ஜே பாலாஜி என ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதம். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘கண்ணான கண்ணே’ ,’வரவா வரவா’ பாடல்கள் கேட்கும்படியாக உள்ளன. நயன் தாராவை மட்டுமல்லாமல், புதுச்சேரியையும், வடசென்னை கடலோர பகுதியையும் அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.
‘நானும் ரவுடிதான்’ - ரசிகர்களை வெறுப்பேற்றாத ரவுடி.
மதிப்பெண்: 2.5 / 5