14/08/2015

வாலு விமர்சனம்


 நேசமான குடும்பம்; பாசமான நண்பர்கள்; வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் நாயகன் சிம்பு,  நாயகி ஹன்சிகாவைப் பார்த்த உடனேயே காதலில் விழுகிறார். காதலை ஹன்சிகாவிடம் சிம்பு சொல்லும்போது ஏற்கெனவே முறைமாமனுக்கு நிச்சயக்கப்பட்ட பெண் என்பது தெரிய வருகிறது. முறைமாமனோ ரவுடிகளை வைத்துக்கொண்டு  கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வசூலிப்பது என எதிலும் கரார் காட்டும் அடாவடி பார்டி. இருந்தாலும் பத்து நாட்களுக்குள் நாயகியை காதலில் விழ வைக்கிறேன் என்று சபதம் செய்து சிம்பு செய்யும் ரவுசுகள்தான்  ‘வாலு’ கதை.

 கதை என்னனோ புளித்தப் போன பழைய கதைதான். அதில் கொஞ்சம் ஜனரஞ்சகத்தைப் புகுத்தி கலகலப்பாக வார்க்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் விஜய சந்தர்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு நடித்திருக்கும் படம். சிம்பு ஃப்ரெஷாக இருந்தாலும் கொஞ்சம் பூசியது போல காணப்படுகிறார். படம் முழுவதும் தத்துவத்தை காமெடியாக பேசுகிறார் சிம்பு. சண்டைக்காட்சியில் மாஸ் ஹீரோக்களை விஞ்சும் அளவுக்கு பலம் காட்டியிருக்கிறார் சிம்பு. ஒரே அடியில் எல்லாருமே தாறுமாறாகக் காணாமல் போகிறார்.

அழகுபதுமையாக படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறார் ஹன்சிகா. சிம்புவுக்கு போட்டி போடும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்னசின்ன முகபாவனைகளில் கூட ஸ்கோர் செய்கிறார். படத்தின் முதல் பாதி சிம்புவும், சந்தானமும் செய்யும் காமெடிகள் சிரிப்பு வெடிகளாக வருகின்றன. ஆனால், ஏற்கெனவே பல படங்களில் சந்தானம் ஹீரோக்களோடு சேர்ந்து செய்த டைமிங் காமெடி என்பதால் சலிப்பும் வருகிறது.

முறைமாமனாக வரும் ஆதித்யாவுக்கு முரட்டுக் குணம், பிடிவாதம், அடிதடி ஓவர் பில்டப் கொடுக்கப்படுகிறது. ஆனால், படத்தில் அந்த பில்டப்புக்கு ஏற்ற தீனி இல்லவே இல்லை.  ஆதித்யா கல்யாணம் செய்ய வேண்டிய ஹன்சிகாவை, சிம்பு தன் வலையில் விழ வைத்ததும் படம் சூடுபிடிக்கும் என்று பார்த்தால், பொசுக்கென்று சிம்புவிடம் உன்னை எனக்கே பிடிக்கிறது; என் முறைப்பெண்ணுக்கு ஏன் பிடிக்காது என்று சொல்லிவிட்டு காமெடியனாக மாறிவிடுகிறார்.

 நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கிறார் நடிகை மந்த்ரா. ஆனால், படத்தோடு சம்பந்தமே இல்லாமல் ஒரு விலைமாதுவை போல பேசிவிட்டு செல்லும் மந்த்ரா அந்தப் பாத்திரத்துக்கு தேவையே இல்லை. விடிவி கணேஷ், சிம்புவுக்கு அப்பாவாக வரும் நரேன், அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

தமன் இசையில் ‘ஓ மை டார்லிங்’ பாடல் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பின்னணி இசை சில நேரங்களில் இரைச்சலை தந்தாலும்  சிம்புவுக்கு மாஸ் காட்ட உதவியிருக்கிறது. ஷக்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ப்ரெஷ்ஷாக உள்ளன. முதல் பாதி மட்டும் சற்று மெதுவாக செல்வதுபோல் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி சூடு பிடித்து விறுவிறுப்பாக செல்கிறது.

மொத்தத்தில் ‘வாலு’ செய்யும் சேட்டைகள் சோடை போகவில்லை.

மதிப்பெண்: 2.5 / 5

07/08/2015

உலகைக் காக்கும் எறும்பு



ஸ்பைடர்மேன் , எக்ஸ்-மேன், அயன் மேன், சூப்பர் மேன் என ஹாலிவுட்டில் கில்லியாடிய மார்வெல் ஸ்டூடியோ, அடுத்ததாக கையில் எடுத்திருக்கும் படம் ஆண்ட்-மேன். எறும்பு மனிதனாக மாறி அரிதாரம் பூசி தீயவர்களை அழிக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. ஹாலிவுட் படங்களில் சாகசத்துக்கும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆண்ட்-மேனில் கிராபிக்ஸ் காட்சி அமைப்புகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

உலகை அழிக்க வரும் வில்லன்களை துவம்சம் செய்ய எறும்பு அவதாரம் எடுத்து உலகைக் காக்கிறார் நாயகன் பெளல் ரூட். அவரது நல விரும்பி மைக்கேல் டக்ளஸ் கொடுக்கும் எறும்பு உடையை அணிந்ததும் எறும்பு போலவே மாறி விடுகிறார் ஹூரோ ரூட். அதன் பின் நடக்கும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரியாக திரையில் விரிகிறது. நிஜ எறும்பு போலவே மாறி யானை சைஸ் வில்லன்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சாய்க்கிறார் எறும்பு ஹீரோ.  எறும்பு புற்றில் குதித்து ஆயிரக்கணக்கான எறும்புகளுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்து எறும்பு மனிதன் ஓடும் காட்சியில் கிராபிக்ஸ் மிரட்டல் ரகம்.

எறும்பு மனிதனை அழிக்க, அதே சைஸில் இன்னொரு எறும்பை வில்லனாக களமிறக்கி சண்டைப் போட வைத்திருக்கும் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம். இதுவரை ஹாலிவுட் படங்களில் உலகை அழிக்க வரும் வில்லன்களை அழிக்க விதவிதமான உருவத்தில் வந்து வெற்றிக் கொள்ளும் சூப்பர் ஹீரோ கதைகள் வரிசையில் ஆண்ட் மேன் வித்தியாசமாக உருவாக்கப்பட்டதில் படத்தின் இயக்குநர் பீட்டன் ரீட்டின் உழைப்பு தெரிகிறது.

‘நான் ஈ’  படம் பார்த்த வியந்த தமிழ் ரசிகர்களுக்கு ஆண்ட்-மேன் இன்னொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம். குறிப்பாகக் குழந்தைகளை இந்தப் படம் மிகவும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.