27/12/2013

2013: மின்னிய நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கக் காரணம், புதிய புதிய திறமை மிக்க கலைஞர்கள் உருவாவதுதான்.  அந்த வகையில் அண்மைக் காலங்களில் தமிழ் சினிமாவில் நுழைந்து தவிர்க்க முடியாதக் கலைஞர்களாக உருவெடுத்திருப்பது ஒரு சிலரே. வாரிசு கலைஞர்களாக இருந்தாலும் சரி, சினிமா பின் புலம் இல்லாத கலைஞர்களாக இருந்தாலும் சரி,  திரை வானில் நட்சத்திரமாக ஜொலிக்க மிகவும் மெனக்கெட வேண்டும்.  அப்படி மெனக்கெட்டு நடித்து,  ரசிகர்கள் மத்தியில் இந்தாண்டு ஜொலித்த சிலர்:

சிவ கார்த்திகேயன்

பெரிய திரையில் ஜொலித்து ரிட்டயர்மென்ட் ஆன பிறகு சின்னத்திரை பற்றி நினைக்கும் தமிழகச் சினிமா நட்சத்திரங்களின் எண்ணத்தைச் சிதறடித்தவர் சிவ கார்த்திகேயன். மிமிக்ரி கலைஞராகத் தோன்றியத் தொலைக்காட்சியிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, அங்குத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, இன்று பெரிய திரையில் வெற்றிக்கொடி கட்டியவர் இந்த நாயகன்.

கடந்த ஆண்டு ‘மெரினா’ படத்தில் அறிமுகமானபோது பத்தோடு பதினொன்று என நினைத்தவர்கள்கூட இன்று அவரது கேரியர் கிராப் மேலே ஏறி வருவதைப் பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். ஓர் ஆண்டில் ஒரு வெற்றிப் படம் கொடுக்கவே பெரிய நட்சத்திரங்கள் மல்லுக்கட்டும் இந்தக் காலகட்டத்தில்  ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என இரு வெற்றிப்படங்களைக் கொடுத்து அமைதியாகப் பயணிக்கிறார் இந்த  நாயகன்.

 காமெடி என்ற பலத்தோடு சினிமாவுக்குள் நுழைந்த சிவ கார்த்திகேயன் அந்த இமேஜில் இருந்து வெளி வர  மெனக்கெடுவதும் இப்போது தெரிகிறது. அது அவருக்குச் சாதகமாகப் பாதகமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.   ‘மான் கராத்தே’, ‘அந்த ஒன்னுதான் இது’ என அடுத்த ஆண்டிலும் நிறையப் படங்கள் கைவசம் வைத்திருக்கும் சிவ கார்த்திகேயன் இந்த ஆண்டில் பிராகசித்த கலைஞனாக மின்னுகிறார்.

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் இப்போது பிசியான  நடிகர் யார் தெரியுமா?  அது விஜய்
சேதுபதிதான். ‘சுந்தரபாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ எனத் தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது 5-க்கும் மேற்பட்ட படங்கள். இன்னும் பல படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று சொல்வார்கள். இதற்கு  நல்ல உதாரணம் விஜய் சேதுபதி.  2010-ம் ஆண்டில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர்.
அந்த அனுபவத்தையே களமாக அமைத்துக்கொண்டு வேகமாக முன்னேறி வருகிறார்.

 தற்போது பாப்புலராக உள்ள இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டு நிலையில், விஜய் சேதுபதி மட்டும் விதிவிலக்காகச் செயல்படுகிறார். சீனியர் இயக்குநர்களின் இணை, துணை மற்றும் குறும்படங்களின் இயக்குநர்கள்தான் இவரது சாய்ஸ்.
முன்னணி ஹீரோக்களுடன் இரட்டையர்களில் ஒருவராகவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறும் விஜய் சேதுபதி,  தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதக் கலைஞனாக உருவெடுத்து வருகிறார்.

விக்ரம் பிரபு


நடிகர் திலகத்தின் பேரன், இளைய திலகத்தின் மகன் என்ற பெருமையோடு சினிமாவுக்குள் நுழைந்த விக்ரம் பிரபு,  தாத்தா, அப்பாவின் பெயரைக் காப்பாற்றத் தவறவில்லை. தாத்தா போலவே பேரன் விக்ரம் பிரபுவுக்குக் ‘கும்கி’ வெற்றிப் படமாக அமைந்தது இவருக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, சிறந்த இயக்கம், வருடும் இசை எனச் சம விகிதத்தில் கலந்த ‘கும்கி’ப் படத்தில் யானைப் பாகன் பொம்மனாக மிளிர்ந்தார் விக்ரம் பிரபு.

முதல் படம் வெற்றியாக அமைந்து அவருக்கு யானைப் பலம் கொடுத்தது என்றால், ஓராண்டு கழித்து இப்போது வேற மாதிரியாக வந்திருக்கிறார் விக்ரம் பிரபு. சமகாலத்தில் நீதிமன்றத்தில் நிகழ்ந்த கலவரத்தை ஒன் லைனாக கொண்ட கதையில்  கோபம் கொப்பளித்திருக்கிறார் விக்ரம் பிரபு. வர்த்தக ரீதியாக வெற்றி பட்டியலில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் இடம் இருக்கும்.
இரு படங்களைக் கடந்து அடுத்த கட்டமாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற ரீமேக் படத்தில் இறங்கியிருக்கிறார் விக்ரம் பிரபு.

 விஜயகாந்துக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த இந்தப் படம் விக்ரம் பிரபுவுக்கும் பெயர் கொடுக்கலாம். நடிப்பையும், சினிமாவையும் கடலளவு நேசிக்கும் குடும்பத்தில் இருந்து வந்த இந்த மீன் குஞ்சுக்கு, நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

லட்சுமி மேனன்

கோடம்பாக்கத்தில் இப்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் லட்சுமி மேனன்.
பாவாடை, தாவணியைத் தமிழ் நாட்டு இளம் பெண்களே மறந்து விட்ட இந்தக் காலத்தில் பாவாடை, தாவணியில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார் லட்சுமி.
அறிமுகப்படம் வெற்றி பெற்றாலே தலைகால் புரியாத திரையுலகில் வரிசையாகச் ‘ சுந்தரப்பாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’ என நான்கு வெற்றி படங்களில் நடித்தும் அலட்டிக்கொள்ளாத நடிகை.  தொடர்ந்து  ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘சிப்பி’, ‘வசந்தகுமாரன்’ என 4 படங்கள் இவரது கைவசம் உள்ளன.

 சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ளக்  கிளாமர் எனும் ஆயுதத்தை ஏந்தாமல் இருப்பது பெண்கள் மத்தியிலும் லட்சுமிக்கு ரசிகைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.  நடிப்புக்கு இடையேயும் பள்ளிப் படிப்பையும் விடாமல் ஆச்சரியம் தரும் லட்சுமி மேனன்  நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்சியளிக்கிறார்.

நஸ்ரியா

நடிகர் சிவ கார்த்திகேயன் போலச் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நஸ்ரியா.  அழகும் திறமையும் உள்ள நடிகை. மலையாளப் படங்களில் இவர் நடித்திருந்தாலும், தமிழ் படத்தில் நடித்த  ‘நேரம்’ இவருக்குப்  நல்ல நேரமாகவே அமைந்தது என்று சொல்லலாம். இவர் தேர்ந்தெடுக்கும் படங்களுக்காகவே இவரை நிச்சயம் பாராட்டலாம்.

அறிமுகமான நேரம் திரைப்படம் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள நாயகியாக  நஸ்ரியாவை அடையாளம் காட்டியது. அடுத்த படமான  ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவுக்கு இணையாக இவரது நடிப்பும் பேசப்பட்டது. தனுசுடன்  நடித்த  ‘நையாண்டி’ படம் சரியாகப் போகாவிட்டாலும், இவருக்கான வாய்ப்புகளில் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை. நடிகர் ஜெய்யுடன் இவர் சேர்ந்து நடித்த  ‘திருமணம் எனும் நிக்காஹா’ படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் ‘நீ நல்லா வருவடா’, ‘வாய் மூடி பேசவும்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவே இருக்கிறார் நஸ்ரியா.

- தி இந்து, 27-12-2013







24/12/2013

வியன்னா ஒப்பந்தமும் அமெரிக்காவும்

வியன்னா ஒப்பந்தத்தை ஏற்ற நாடுகள் பச்சை நிறத்தில்...
இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் தேவயானி, அமெரிக்கா அத்துமீறல் என்கிற வார்த்தைகளுக்
கு அடுத்து அதிகம் அடிபடும் பெயர் வியன்னா ஒப்பந்தம். வியன்னா ஒப்பந்தம் என்றால் என்ன?

சர்வதேச நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளைப் பேணுவதற்காக 1963-ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது. ஒரு நாட்டில் ராஜ்ஜிய ரீதியில் பணியாற்றும் நபர் (தூதர்) பயமின்றித் தன் பணியை மேற்கொள்ளவும், எந்தத் துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் இருப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ஏற்று 48 நாடுகள் கையெழுத்திட்டன.

2013-ம் ஜூன் நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை ஏற்று 189 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டில் உள்ள தூதர் சிறப்பு விருந்தினர் என்ற தகுதியைப் பெறுகிறார். சிறப்புச் சலுகைகளுக்குத் தகுதி படைத்தவராகிறார். தாய்நாட்டுடன் அவர் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும், சுதந்திரமாகவும் பயமின்றியும் தூதர்கள் பணி செய்வதை ஒவ்வொரு நாடும் உறுதிசெய்ய வேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
முக்கிய ஷரத்துகள்

வியன்னா ஒப்பந்தத்தில் மொத்தம் 79 ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன. சில முக்கியமான ஷரத்துகளைப் பார்ப்போம்.

ஷரத்து 1 டி: ஒரு தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சிறப்பு விலக்குரிமையைப் பெறத் தகுதி படைத்தவர்கள்.

ஷரத்து 9 : ஒரு நாட்டில் உள்ள தூதர் மற்றும் தூதரகப் பணியாளர்களை, சம்பந்தப்பட்ட நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என எந்த விளக்கமும் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இதை ஏற்று சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லா விட்டால் ராஜதந்திரப் பாதுகாப்பை இழக்க நேரிடும்.

ஷரத்து 22: தூதரகம் அமைந்துள்ள வளாகம் கேடு, சேதம் விளைவிக்கக் கூடாத இடமாகும். தூதரின் அனுமதியின்றிச் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த எவரும் வளாகத்துள் நுழையக் கூடாது. தூதரகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை. தூதரகத்துக்குள் எதையும் தேடுவதற்கோ, ஆவணங்களைப் பறிமுதல் செய்யவோ அனுமதி கிடையாது.

ஷரத்து 30: தூதர்கள் குடியிருக்கும் வீட்டுக்கும் இது பொருந்தும்.

ஷரத்து 27: தூதர்கள் தங்கள் தாய்நாட்டுடன் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றத்துக்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்க வேண்டும். சந்தேகத்தின்பேரில் தூதரின் கைப்பையைத் திறந்து சோதனையிடக் கூடாது. தூதரின் தபால்கள், கூரியர் கவர்கள் தடுத்து வைக்கப்படக் கூடாது.

ஷரத்து 29: தூதர்கள் எந்த வடிவத்திலும் கைதுசெய்யப்படுவதற்கு உள்ளாக மாட்டார்கள். சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு உண்டு.

ஷரத்து 31 (1சி): ராஜதந்திரப் பாதுகாப்புப்படி நடவடிக்கைகள் பொருந்தாது. வெளி இடங்களில் அலுவலகம் சார்ந்த பணியில் இருக்கும்போதும் இது பொருந்தும்.

ஷரத்து 34 மற்றும் 36: வரியில் இருந்து விலக்கு. சுங்க வரியில் இருந்தும் விலக்கு.

தேவயானி கோப்ரகடே
ஷரத்து 37: தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினரும் இந்தச் சலுகைகள் அனைத்தையும் பெற முடியும். - இவை வியன்னா ஒப்பந்தத்தில் உள்ள முக்கியமான ஷரத்துகள்.

அத்துமீறல் வரலாறு

சர்வதேச ஒப்பந்த ஷரத்துகளைத் தங்கள் விருப்பப்படியும், தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போலவும் பயன்படுத்துவது எல்லா நாடுகளுக்கும் வழக்கமே. முக்கியமாகப் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு. சில உதாரணங்கள்:

# 1997-ல் அமெரிக்காவுக்கான ஜார்ஜியா நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே குடித்துவிட்டு கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். நால்வர் காயம் அடைந்தனர். ஜார்ஜியா, தூதரகச் சட்டப் பாதுகாப்பு கோராமல் துணைத் தூதரின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது. அமெரிக்க அரசு விசாரித்து அவருக்குத் தண்டனை வழங்கியது

# 2004-ல் ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த வான் கோதம் என்கிற கடற்படை ஊழியர் குடித்து விட்டு கார் ஓட்டி இசைக் கலைஞர் ஒருவரைக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பி ஜெர்மனிக்கு ஓட்டம் பிடித்தார். ஆனால், அமெரிக்க அரசு தூதரக விலக்கைக் காரணம் காட்டி, அவரை ருமேனியாவுக்கு அனுப்ப மறுத்தது.

# 2011-ல் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றது லாகூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றிய சி.ஐ.ஏ. முகவர் ரேமண்ட் அலென் டேவிஸ். பாகிஸ்தான் அவர்மீது நடவடிக்கை எடுத்தது. உடனே அமெரிக்க அரசு வியன்னா ஒப்பந்தத்தைக் காரணம் காட்டியதோடு ராஜதந்திரப் பாதுகாப்பு என்ற வாதத்தையும் முன்வைத்துப் பாகிஸ்தானை அடிபணிய வைத்தது (சுட்டுக்கொல்லப்பட்ட இரு பாகிஸ்தானியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்து ரேமண்ட் அலென் டேவிஸ் வழக்கிலிருந்து தப்பித்தது தனிக் கதை).

# இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் ஒருவருக்கு ஆபாச மின்னஞ்சல் அனுப்பியதாக  அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தேவாசிஷ் விஸ்வாஸின் 18 வயது மகள் கைதுசெய்யப்பட்டு, பாலியல் தொழிலாளர்களுடன் தங்க வைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் இல்லை. வியன்னா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டிச் சட்ட விலக்கு கோரியபோது, தூதரகப் பணியாளர்களுக்கு மட்டுமே விலக்கு பொருந்தும் என்று மறுத்தனர் அமெரிக்க அதிகாரிகள். இந்த வழக்கில் இருந்து பின்னர் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டார்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. தனக்குச் சாதகமானது என்றால், வியன்னா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டுவதும், பாதகமானது என்றால் ஒப்பந்தத்தைக் காலில் போட்டு மிதிப்பதும் அமெரிக்காவுக்குக் கைவந்த கலை. கடந்த காலங்களில் வியன்னா ஒப்பந்தத்தை அமெரிக்கா சாக்குப்போக்குக் காட்டி மீறியிருக்கிறது என்பதே உண்மை.

- தி இந்து நடுப்பக்கம், 23/12/13

10/12/2013

வில்லனாக உருவெடுக்கும் மின் குப்பைகள்

உலகில் எந்தத் துறையில் ஏற்படும் வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தவறுவதில்லை. இதற்கு அண்மைக்கால உதாரணம்  ‘இ-வேஸ்ட்’ என்றழைக்கப்படும் மின் குப்பைகள். புவி வெப்பமடைதல் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியப் பிரச்சினையாக மாறி வருகிறது பல் நாடுகளில் கொட்டிக் கிடக்கும் மின்குப்பைகள்.

இன்று தொழிற்சாலைகள், வீடுகள், நிறுவனங்கள் என எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பயன்படுத்தாத இடங்களே இல்லை. டி.வி, கம்ப்யூட்டர், பிரிண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மொபைல், ஏ.சி., ஜெராக்ஸ் இயந்திரம், ஆடியோ-வீடியோ என அடுக்கிக் கொண்டே போகலாம். இவை பயன்பாட்டில் உள்ளவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. பழுதானால்..? பழைய கடையிலோ, குப்பையிலோ எறிந்து விடுகின்றனர். இப்படித் தூக்கியெறியப்படும் பழைய மின் சாதனப் பொருட்கள்தான் மின் குப்பைகளாகின்றன.

இந்தியாவில் பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை, புனே, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்குப்பைகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றன என்று கூறுகிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி 8 லட்சம் டன் மின் குப்பைகள் இந்தியாவில் குவிந்துள்ளன. இது 2009ஆம் ஆண்டில் 3.30 லட்சம் டன்னாக மட்டுமே இருந்தது கவனிக்கத்தக்க விஷயம். இந்தியாவில் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 1.85 மில்லியன் டன் மின் குப்பைகள் வீதம் சேர்ந்துவருகின்றன. குறிப்பாகப் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்குப்பைகள் சேர்ந்து வருவதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் மின் குப்பைகள் உருவாவதில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின் குப்பைகளில்  60 சதவீதத்திற்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.
இந்தியாவில் இப்படி என்றால், வளர்ந்த நாடான அமெரிக்காவில் இன்னும் மோசம். இங்கு ஆண்டுதோறும் 5 கோடி டன் மின் குப்பைகள் சேர்வதாகத் தெரிவித்துள்ளது ஐ.நா.சபை சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு. ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் அங்குக் குப்பைகள் அதிகரித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது அது. சீனாவிலும் இதே நிலைமைதான். அங்கும் மின் குப்பைகள் குவிந்து வருகின்றன.

இது சில நாடுகளில் குவிந்துள்ள மின் குப்பைகளுக்கு உதாரணங்கள்தான். இப்படிப் பல நாடுகளிலும் மின் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவை முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றனவா என்றால், இல்லை. மின் குப்பைகளை மறுசுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனாலும் வளரும்  நாடுகளிலும் 10 சதவீதம் மட்டுமே சரியான வழியில் இவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. எஞ்சியவை உடைத்துத் தூக்கி எறியப்படுகின்றன அல்லது  ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வளர்ந்த நாடுகளே மின் குப்பைகளைக் கையாள முடியாமல் திணறும் நிலையில், வளரும் நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்நாடுகளில்  மறுசுழற்சி செய்வதற்கான சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், உபயோகமில்லாத மின்குப்பைகள் வளரும் நாடுகளில் மலை போலக் குவித்து வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
மின் குப்பைகளைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. இவற்றில் காரீயம், காட்மியம், பாதரசம்,  நிக்கல் போன்ற ஆபத்தான உலோகங்கள் உள்ளன. மின்குப்பைகளில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் டாக்சின், ப்யூரன் போன்ற நச்சு வாயுக்களும் கலந்துள்ளன. இவற்றினால் மனிதர்களுக்குப் பல நோய்கள் வரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கம்ப்யூட்டர், டி..வி.களில் மானிட்டராகப் பயன்படுத்தும் கேத்தோட் ரே டியூப்பில் பேரியம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றை உடைத்தும், தூளாக்கியும் எறியும் போது நிலங்கள்  மாசடைகின்றன.
மேலும் மின்குப்பைகளில் உள்ள ஈயம், பாதரசம், பொன் முதலிய உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்காக அமிலம், ரசாயனங்களைப் பயன்படுத்திக் கரைக்கின்றனர். அல்லது நெருப்பிலிட்டு உருக்குகின்றனர். இதையே வளரும் நாடுகளில் மறுசுழற்சியாகச் செய்கின்றனர். இவற்றில் இருந்து வெளியேறும் நச்சுவாயுகளும் நச்சுக் கழிவுகளும் காற்று, நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன. வளரும் நாடுகளில் கிராமப்புறங்கள், சிறிய நகரங்களின் குடிசைத் தொழில் போல நடக்கும் இதுபோன்ற பணிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே  நடைபெறுகின்றன. இதனால் விவசாயத்துக்கு ஆதாரமான நிலம், நீர், கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகின்றன.

மெல்லக் கொல்லும் விஷம் போன்ற மின் குப்பைகளைப் பற்றி 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை  உலக நாடுகள் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. உலக வெப்பமயமாதல் பிரச்சினை தீவிரமடைந்த பிறகே மின்குப்பைகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச மாநாடுகளின் தாக்கத்தால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கேத்தோட் ரே டியூப்பை நிலத்தில் கொட்டத் தடை விதித்துள்ளன. வளர்ந்த நாடுகளில் இருந்து மின் குப்பைகளை இறக்குமதி செய்யச் சீனா மற்றும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் மின் குப்பைகளை மிக மோசமாகக் கையாளும் நைஜீரியாவில் மறு சுழற்சி செய்யத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரும் பணியில் இங்கிலாந்து முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. ஜப்பான், தைவான் இங்கெல்லாம் எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் மின்குப்பைகளை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யச் சட்டத்தின் மூலம் வழிமுறைகளைக் கொண்டு வந்துள்ளன.

இப்படி ஒவ்வொரு நாடும் முடிந்த அளவு நடவடிக்கை மேற்கொண்டாலும், வளரும் நாடுகளில் மின் குப்பைகளைப் பாதுகாப்பாகக் கையாளப் போதுமான சட்டங்கள் இல்லை என்பதே உண்மை. இந்தியாவில் ஆபத்தான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்-2003) சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2011ல் புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, மின்குப்பைகளுக்கான பொறுப்பையும் உற்பத்தியாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தது. மின் குப்பைகளின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கச் சட்டங்கள் மட்டுமே போதாது. அவற்றின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் மறுசுழற்சிக்கான கட்டமைப்புகளும் அவசியம். அதுவே இன்றைய தேவை.

மறுசுழற்சி எப்படி?

வளர்ந்த நாடுகளில் மின் குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்கின்றனர். இதற்காகவே பிளாண்ட் அமைக்கின்றனர். அங்கு மின்குப்பைகளை 600 முதல் 800 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சாம்பலாக்கிப் பாதுகாப்பாகப் புதைக்கின்றனர். இந்தியாவில் மின்குப்பைகளை அகற்றும் பணி குடிசைத் தொழிலாகவே நடப்பதால், அவற்றை உடைத்து எறிந்து விடுகின்றனர். பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்குப்பைகளை மறுசுழற்சி செய்ய வசதிகள் உள்ளன.

எவ்வளோ நச்சு

ஒரு கம்ப்யூட்டரில் உள்ள நச்சுப் பொருட்கள் பட்டியலைப் பார்த்தாலே பயம் வரும். இப்போது பிரபலமாகியுள்ள ஃப்ளாட் ஸ்கிரீன் மானிட்டரில் பாதரசம் உள்ளது. கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் காரீயம், காட்மியம், நச்சுத் தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உள்ளன. டாக்சின் வாயுக்களை வெளிப்படுத்தும் பாலிவினைல் குளோரைடு, கேபிள் இன்சுலேசன் கம்ப்யூட்டரில் உள்ளது. ஓசோன் படலத்தை மெலிவடையச் செய்யும் ரசாயன நச்சுப் பொருட்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு கம்ப்யூட்டரிலேயே 20 சதவீதம் பிளாஸ்டிக் உள்ளது.

இந்த நச்சுப் பொருட்கள் எல்லாம் தவறான முறையில் கழிக்கப்படும் போது சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப்படும்? பல்வேறு வகையான புற்று நோய்கள், அலர்ஜி, தோல் நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு, கண் நோய் என ஏராளம். இனப் பெருக்க, நரம்பு, ரத்த மண்டலங்களிலும் நாளமில்லாச் சுரப்பிகளிலும் பெரியப் பாதிப்புகளை நீண்
ட காலத்துக்கு ஏற்படுத்தும் ஆற்றல் மின்குப்பைகளுக்கு உள்ளது.

- தி இந்து, 9/12/13