அது 1975ஆம் ஆண்டு. மதுராந்தகம் அருகே புலம்பாக்கம் என்ற கிராமத்தில் 5 கல்லூரி மாணவிகள் சமூகச் சேவை செய்வதற்காகச் சென்றனர். ஏழ்மை தாண்டம் ஆடிய அந்த ஊரில் மிகப்பெரிய நிலச்சுவான்தாரர்களுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஊரில் விவசாயக் கூலிகளாக வேலைப் பார்த்தவர்களுக்கு வெறும் ஒன்னரை ரூபாய் மட்டுமே கூலியாகக் கொடுத்துகொண்டிருந்தனர் அவர்கள். அக்கம்பக்கத்து ஊரில் 5 ரூபாய் கூலியாக வழங்கும் நிலையில், இங்கு மட்டும் ஒன்னரை ரூபாய் கூலியாக வழங்கப்படுவதைக் கண்டு கொதித்தார் ஒரு மாணவி.
விவசாயக் கூலிகளின் குடும்பங்கள் உண்ண உணவில்லாமலும் உடுத்த உடையில்லாமலும் சாதிய அடக்குமுறைகளுடன் ஒடுங்கி இருப்பதைக் கண்ட அந்த மாணவி, கூலியை உயர்த்தி தரக்கோரி நிலச்சுவான்தாரர்களுடன் மல்லுக்கட்டினார். கல்லூரிப் பருவத்திலேயே ஏழை விவசாய கூலிகளுக்காகத் தைரியமாகக் குரல் கொடுத்த அந்த மாணவி வேறு யாருமில்லை, ரூத் மனோரமாதான் அவர். அப்போது சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துக்கொண்டிருந்த ரூத் மனோரமா, முதுகலையில் சமூகச் சேவை படிப்பை எடுத்து படிக்கவும் இந்தச் சம்பவமே காரணமாக அமைந்தது.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரூத் மனோரமா, இன்று தேசிய அளவில் அறியப்பட்ட முதல் நிலை தலித் செயற்பாட்டாளராகவும், சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண்ணியவாதியாகவும் பரிணமித்துள்ளார். ‘மாற்று நோபல் விருது’ என அழைக்கப்படும் ‘ரைட் டூ லைவ்ஹூட்’ என்ற விருது பெற்றவர் இவர். இது இவரது செயல்பாட்டுக்கான ஒரு சோறு பதம்.
1975 - 77-களில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேரிப் பகுதிகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தது, சைதாப்பேட்டையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்தது ஆகியவை சென்னையில் அவரது குறிப்பிட்டத்தக்க பணிகளில் முக்கியமானவை. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ரூத் மனோரமா, 1980-களில் பெங்களூருவில் தனது தளத்தை மாற்றிக்கொண்டபோது அவரது போராட்டம் வீரியமடைந்தது. அந்தக் காலகட்டத்தில் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த 'ஆபரேஷன் டொமாலிஷன் ' என்ற திட்டத்தை எதிர்த்து ரூத் மனோரமா நடத்திய போராட்டம், வெகுஜனப் போராட்டமாக மாறியது. ரூத் மனோரமாவுக்கென தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியது இந்தப் போராட்டம்.
குடிசைவாழ் மக்களுக்காகக் குரல் கொடுத்த வேளையில் தலித் மற்றும் ஏழைப் பெண்களுக்காகவும் ரூத் மனோரமாவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தவறவில்லை. சேரிகளில் வாழும் ஏழைப் பெண்களுக்காக உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு இவரது போராட்டக்களம் அமைந்தது. பிற சமுதாயத்தில் இருப்பதுபோன்ற, ஆணாதிக்க மனோபாவம் தலித் ஆண்களிடம் காணப்படுவதை எதிர்க்கும் ரூத் மனோரமா, அதற்காகத் தலித் பெண்களையும் அணித்திரட்டி வெற்றி பெற்றவர்.
பல தளங்களில் பணி செய்துள்ள ரூத் மனோரமா, இஸ்மாமிய பெண்களுக்காகவும், மற்ற சமுதாயத்து பெண்களுக்காகவும், நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். உயிரியல் ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றும் பெண்கள் எல்லோரும் பெண்கள்தான் என்றும் பேசுவதெல்லாம் சுத்த அபத்தம் என்பது இவரது வாதம். “இந்திய துணைக்கண்டத்தில் தலித் விடுதலையில்லாமல் புரட்சிகர சமூக மாற்றம் எப்படி சாத்தியமில்லையோ அதுபோல பெண் விடுதலை பெறாத தலித் விடுதலையும் சாத்தியமில்லை’’ என்கிறார் ரூத் மனோரமா.
கர்நாடக மாநில குடிசை மக்களுக்கான சங்கம், பெண் குரல், பெண்கள் தேசிய கூட்டமைப்பு, கிறிஸ்தவர் தலித் அணி, அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான தேசிய மையம், தலித் பெண்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு வலுப்பெற்றன.
- தி இந்து, 2013 தீபாவளி மலர்