14/06/2010

கோல்! உலகக் கோப்பை கால்பந்து திருவிழா


உலகக் கோப்பை உற்சவத்தால் களைகட்டியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. சாம்பியன் கனவில் 32 நாடுகள் முட்டி மோதிக்கொள்ளத் தயாராகிவிட்டன. எந்த அணி சாம்பியன் என கால்பந்து ரசிகர்களின் ரத்த அழுத்தமும் எகிற ஆரம்பித்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து, விளையாட்டு ரசிகர்களைக் கட்டிப்போடும் ஒரே விளையாட்டு - உலகக்கோப்பை கால்பந்தாட்டமே. தென் அமெரிக்க அணிகள் 10 முறையும், ஐரோப்பிய அணிகள் 9 முறையும் கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை இந்த முறை தென்னாப்பிரிக்காவி ஜூன் 11 அன்று தொடங்குகிறது. பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுற்றுப்போட்டிகள், காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என பல கட்டங்களைக் கண்டுகளிக்க உலகம் முழுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

உலகக்கோப்பையில் விளையாட, அணிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. தரவரிசைப் பட்டியலில் டாப் லிஸ்டில் உள்ள அணிகள்கூட வாய்ப்பு கிடைக்காமல் பார்வையாளராகும் அபாயம் கால் பந்தாட்டத்தில் மட்டுமே உண்டு!

சர்வதேச தரவரிசைப் பட்டியல்படி உலகக்கோப்பைப் போட்டியை நடத்தினால் 32 அணிகளில் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அணிகளுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வட, தென் அமெரிக்காவிலிருந்து 8 அணிகள் மட்டுமே விளையாட இருக்கின்றன. உலகக்கோப்பை என்பதால், எல்லா கண்டங்களிலும் உள்ள நாடுகளும் பங்குபெற வாய்ப்பை அளிக்கிறது சர்வதேச கால்பந்து குழுமம்.

அனைத்து நாடுகளில் உள்ள அணிகளுக்கு இடையே பல கட்டங்களில்  தகுதிப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் அணிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஆசியாவில் ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, செர்பியா, ஸ்லோவேனியா, ரஷ்யா என 6 அணிகளும் வட அமெரிக்காவில் பிரேசில், பராகுவே, உருகுவே, சிலி, அர்ஜெண்டினா என 5 அணிகளும் ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு என 10 அணிகளும், ஆப்பிரிகாவில் அல்ஜீரியா, காமரூன், காங்கோ, ஐவரிகோஸ்ட், நைஜீரியா என 5 அணிகளும், ஓசியானாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 2 அணிகளுமாக 31 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணி நேரடியாகவே தகுதி பெறுகிறது.

முதல் உலகக்கோப்பை 1930-ல் உருகுவே நாட்டில் நடைபெற்றது. அப்போது 13 அணிகள் மட்டுமே கலந்துகொண்டன. இறுதியாட்டத்தில் உருகுவேயும் அர்ஜெண்டினாவும் மோதின. 4-2 என்ற கோல் கணக்கில் வென்று முதல் உலகக்கோப்பையை வசப்படுத்தியது உருகுவே. இதன்பின் 1934-ல் இத்தாலியிலும், 1938-ல் பிரான்சிலும் நடைபெற்றன. அதன்பின் இரண்டாம் உலகப்போர் காரணமாக 12 ஆண்டுகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படவே இல்லை. இடைவெளிக்குப்பின் 1950-ல் பிரேசிலில் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன. பல அணிகள் பங்கேற்பது பற்றிய விதிமுறைகள் அப்போது செயல்படுத்தப்பட்டது.

இதுவரை நடைபெற்ற 18 உலகக்கோப்பைகளில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற நாடு பிரேசில். 1958, 1962, 1970, 1994, 2002ம் ஆண்டுகளில் இதை சாதித்துக் காட்டியது. உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய இன்னொரு அணி இத்தாலி. 1934, 1938, 1982, 2006 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வசப்படுத்தியிருக்கிறது. 1954, 1974, 1990 ஆண்டுகளில் ஜெர்மனி வென்றிருக்கிறது. உருகுவே இருமுறை (1930, 1950), அர்ஜெண்டினா இருமுறை (1978, 1986), இங்கிலாந்து ஒரு முறை (1966), பிரான்ஸ் (1998) கோப்பைகளை வென்றிருக்கின்றன.

உலகக்கோப்பை இறுதியாட்டத்துக்கு அதிக முறை  தகுதி பெற்ற அணி என்ற பெருமையை பிரேசிலும் ஜெர்மனியும் பகிர்ந்துகொள்கின்றன. இரு அணிகளும் தலா 7 முறை இறுதிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. இத்தாலி 6 முறை, அர்ஜெண்டினா 4 முறை, பிரான்ஸ், நெதர்லாந்து, செக் குடியரசு, ஹங்கேரி தலா 2 முறை, ஸ்வீடன் ஒரேயொரு முறை இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. இவற்றில் நெதர்லாந்து, செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்வீடன் ஆகியவை கோப்பையை வெல்லவில்லை.
கடந்த கால உலகக்கோப்பைப் போட்டிகளை வைத்து பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் கால்பந்தாட்ட நிபுணர்கள். அது ஜூலை 11 அன்று தெரிந்துவிடும்.

உலகக்கோப்பை துளிகள்

* ஐந்து முறை கோப்பை வென்றுள்ள பிரேசில் ஒருமுறைகூட சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் கோப்பை வென்றதில்லை.
* உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), ஜெர்மனி (1974), அர்ஜெண்டினா (1978) ஆகிய நாடுகள் சொந்த ஊரில் கோப்பையை வென்ற நாடுகள் ஆகும்.
* அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களுக்கு தங்க காலணி வழங்கும் முறை 1930-ம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்பட்டுவருகிறது.
* நாகரிகமாக விளையாடும் அணிகளுக்கு சிறந்த அணிக்கான விருது 1978-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
* உலகக் கோப்பையில் மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்டனியோ கார்பஜல் மற்றும் ஜெர்மனியின் லூதர் மேத்யூஸ் இருவரும் தலா 5 முறை விளையாடி உள்ளனர்.
* உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் பிரேசிலின் ரொனால்டோ. 3 உலகக்கோப்பைகளில் 15 கோல்கள் அடித்துள்ளார்.
* 1982-ல் பிரான்ஸ் - இங்கிலாந்து ஆடிய ஆட்டத்தில், பிரான்ஸ் வீரர் பிரையன் ராப்சன் 27 விநாடிகளில் அடித்த கோல்தான், உலகக்கோப்பையில் மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல்.

தட்டிப் போகும் வாய்ப்பு..

இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானா நாடுகள் கோப்பை வென்றதில்லை. 1966-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் ரஷ்யாவும், 2002-ல் தென்கொரியா மற்றும் ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக்கோப்பையில் தென்கொரியாவும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. ஆசியாவிலிருந்து அரையிறுதி வரை தகுதி பெற்ற அணிகள் இவை மட்டுமே. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இறுதிக்கு முன்னேறவில்லை. இதேபோல ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றுகூட அரையிறுதி வாய்ப்பைப் பெற்றதே இல்லை. இதே கதிதான் ஓசியானா நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கும்.

தங்கக்கோப்பை!

உலகக்கோப்பையில் மூன்றுமுறை கோப்பை வெல்லும் அணிக்கு நிரந்தரமாக அந்தக் கோப்பை வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 1970-ல் மூன்றாவது முறையாக கோப்பை வென்ற பிரேசில அணிக்கு ‘ஜூல்ஸ் ரிமேட் கோப்பை’ வழங்கப்பட்டுவிட்டது. இதன்பின் 1974-ல் உலகக்கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக இத்தாலியக் கலைஞர் சில்வியோ கஸ்ஸானிகா வடிவமைத்த கோப்பைதான் இப்போதைய கோப்பையின்  தோற்றம். முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட இக்கோப்பை 36 செ.மீ. உயரமும், 4.9 கிலோ எடையும் கொண்டது. 2038-ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக்கோப்பையில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களை கோப்பையில் பொறிக்க முடியும். இக்கோப்பை சர்வதேச கால்பந்து குழுமத்திடமே இருக்கும். வெற்றி பெறும் அணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட பிரதிதான்  வழங்கப்படுகிறது.

முத்தாரம், 14-06-2010

07/06/2010

தாகம் தீர்க்குமா கடல்?


சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல... மகாராஷ்டிரா மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. ஆம்.. அங்கும் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள். அதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள். பல நாடுகளிலும் கடல் நீரைக் குடிநீராக ருசித்து வருகிறார்கள். கரிக்கும் கடல் நீர், எப்படி சுவைமிக்க சிறுவாணி தண்ணீராக மாறுகிறது?

பூமியில் நான்கில் 3 பங்கு நீர்தான் சூழ்ந்திருக்கிறது. இப்படி நீர் சூழ்ந்த உலகில்தான் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. ஏன் தண்ணீர் பஞ்சம்? காரணம், உப்பு நீர்! உலக நீர்வளங்களில் 97 சதவீதம் உப்பு நீரே. 3 சதவீதம் மட்டுமே நன்னீர். இந்த நீரையும் போட்டிப்போட்டுக்கொண்டு மாசுபடுத்திவருகின்றனர் மக்கள். நிலத்தில் மிச்சம் மீதியுள்ள நிலத்தடி நீரையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சாத குறை. உலகில் தண்ணீர் தேவை ஜிவ்வென இழுத்துக்கொண்டிருக்கும் நிலையில், நீர் இருப்போ தள்ளாடுகிறது. அப்படியானால், தண்ணீருக்காக யுத்தம் வருமோ? கவலை வேண்டாம்... நிலப்பரப்பில் நீர் தீர்ந்தாலும் இருக்கவே இருக்கிறது. கடல்!

கடல் நீரை அப்படியே எடுத்துப் பருகினால்தானே உப்புச்சுவை தெரியும். உப்பு நீக்கி சுத்திகரித்து பருகினால், உப்பு இருக்கும் இடமே தெரியாது. சென்னைக்கு அருகே மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் வங்காள விரிகுடா தண்ணீர், சென்னை வீட்டுக் குழாய்களில் கொட்ட இருக்கிறது.
உலகில் இப்போது 7,500 உப்பு நீக்கி நிலையங்கள் இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகளில் மக்களின் குடிநீர் தேவையைக் கடல் நீர்தான் நிவர்த்திசெய்கிறது. தினமும் கோடிக்கணக்கான லிட்டர் கடல் நீர், மக்களின் வயிற்றில் குடிநீர் வார்த்துவருகிறது!

தொழில்நுட்பம் 1

 கடல் நீர் எப்படி குடிநீராகிறது? இது ரொம்ப சிம்பிள். பள்ளியில் படித்த தொழில்நுட்பம்தான். தலைகீழ் சவ்வூடு பரவல். அந்த முறையில் சுலபமாக உப்பை நீக்கிவிடலாம். சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதே.

தொழில்நுட்பம் 2

வளைகுடா நாடுகளில் வேறொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக குழாய் நீரை நன்றாகச் சூடாக்கி, ஆற வைத்து
பருகியிருக்கிறீர்களா? தண்ணீரைக் காய்ச்சுவதற்கு முன் இருந்த சுவை, அதைச் சூடாக்கிய பின் இருக்காது. தண்ணீரைச் சூடாக்கும்போது அதில் கலந்துள்ள தாதுக்கள் குறைந்துவிடும். கனல்சக்தி மூலம் உப்பு நீக்கும் திட்டமும் இப்படித்தான். வளைகுடா நாடுகளில் கடல் நீரை பிரமாண்ட பாய்லர்களில் பெட்ரோல், டீசல் கொண்டு சூடாக்கி, குளிர்வித்து, சில  தொழில்நுட்பங்கள் மூலம் உப்பு நீக்கி பயன்படுத்துகின்றனர்.

தொழில்நுட்பம் 3

இவை இரண்டும் 50 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பம்தான். 2,400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க கப்பல் மாலுமிகள் ஆவியாக்கும் முறையைப் பயன்படுத்தி கடல் நீரில் உப்பை நீக்கிக் குடிநீராக்கி உபயோகப்படுத்துகின்றனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ‘ஆவியாதல்’ முறையும் ஏற்கனவே சொன்னது போலத்தான். உப்பு நீரை பலமுறை கொதிக்க வைத்து குளிரூட்டி வடிகட்டிப் பயன்படுத்தினால், உப்புச்சுவை குறைந்துகொண்டே வரும்.

தொழில்நுட்பம் 4

பெருகிவரும் மக்கள்தொகை, மாசடைந்து வரும் தண்ணீர் ஆகியவற்றின் காரணமாக, வருங்காலங்களில் தேவை இரட்டிப்பாகலாம். அப்போது தண்ணீர் தேவையைத் தீர்மானிப்பதில் கடல் நீரே தீர்வாக இருக்கலாம். எல்லா நாடுகளிலும் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில் நுட்பமும் கடல் நீரை குடி நீராக மாற்ற உதவுகிறது. அது அனல் மின்சார நிலையம் அல்லது அணுமின் நிலையத்தின் டர்பைன் வெளிக் கழிவிலிருந்து வெளியேறும் வெப்பத்தை உபயோகிப்பது. எரிபொருள் வளங்கள் இல்லாத நாடுகளில் சவ்வூடு பரவல் முறையில் கோடிகணக்கில் பணம் செலவு செய்து, கடல் நீரைக் குடிநீராக்குவதைவிட, மலிவான வழியில் அனல்மின் அல்லது அணுக்கரு வெப்ப சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரைக் குடிநீராக்கலாம்.

உலகில் 2025-ம் ஆண்டில் மக்கள்தொகை 800 கோடியாக உயரும் என்றும் இவர்களில் 100 கோடி பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்று குண்டு வீசியிருக்கிறது சமீபத்திய அமெரிக்க ஆய்வு. அப்போது மக்களின் தண்ணீர் தேவையைத் தீர்க்கப்போவது கடல் அன்னைதான்!

தாகம் தீர்க்கும் கடல்!

* வளைகுடா நாடுகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் 1,483 நிலையங்கள் உள்ளன. முதன்முதலில் இதற்கான நிலையம் அமைத்த நாடு - குவைத் (1957). ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார் ஆகிய மூன்று நாடுகளிலும் சேர்ந்து தினமும் 50 கோடி லிட்டர் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.
* 1965-ல் இஸ்ரேல், 1970-ல் சவுதி, 1997-ல் ஜப்பான், 2000-ல் கத்தார் எனப் பல நாடுகளிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன.
* 2000-ல் அமெரிக்காவின் டெக்சாஸ், ஃபுளோரிடா, அட்லாண்டா, கலிஃபோர்னியா ஆகிய மாகாணங்களில் 1,200 உப்பு நீக்கி நிலையங்கள் அமைக்கப்பட்டன.
* 2000-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் பல நாடுகளில் தினமும் 600 கோடி லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* இந்தியாவில் 2004-ம் ஆண்டிலேயே ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறிய நிலையங்கள் அமைக்கப்பட்டு, தினமும் 30 ஆயிரம் லிட்டர் கடல் நீர் குடி நீராக்கப்பட்டுவருகிறது.
* ஆயிரம் லிட்டர் கடல் நீரில் உப்பு நீக்க ரூ.200 முதல் ரூ.250 வரை செலவு ஆகும்.

முத்தாரம், 07/06/2010