கம்பீர கர்ஜனைக்கும் ஆஜானுபாகு தோற்றத்துக்கும் வீரத்துக்கும் அடையாள விலங்கு, சிங்கம். இப்போது அதற்கு போதாத காலம். புலி, யானை போன்ற ஜாம்பவான்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் குறைந்து வருவதைப் போலவே, சிங்கங்களின் எண்ணிக்கையும் நம் நாட்டில் சர்ரென குறைந்துவருகிறது. இப்போது 250 - 300 சிங்கங்கள் மட்டுமே இருக்கும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளிலும் இதே கதிதான்!
குஜராத்தில் உள்ள கிர் காடு என்றால், ஒரே விலங்கு மட்டுமே நம் கண் முன்னே வந்து நிற்கும். அது சிங்கம்! இந்தியாவில் சிங்கங்கள் வாழும் ஒரே ஒரு காடு இதுதான். சிங்கங்கள் மிகுந்த இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ‘கிர் தேசிய பூங்கா’வாகப் பராமரிக்கப்படுகிறது. சிங்கங்கள் அடந்த காட்டுப் பகுதிகளை விரும்புவதில்லை. இலையுதிர் காடுகளே இவற்றின் விருப்பம். கிர் காடுகள் அந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். அதனால், இயல்பாகவே கிர் காட்டில் சிங்கங்கள் உலா வருகின்றன. இக்காடு 1412 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.
2006-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 359 சிங்கங்கள் இந்தக் காட்டை அலங்கரித்தன. கடந்த 3 ஆண்டுகளிலோ 100 சிங்கங்கள் இறந்துள்ளன. இவற்றில் இயற்கையாகவே இறந்த சிங்கங்கள் சில மட்டுமே. அவற்றின் பல்லுக்காக வேட்டையாடப்பட்டும் தொற்று நோயாலும் இறந்தவை பல.
உலக அளவில் சிங்கத்தின் பல், எலும்பு மற்றும் முடி ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு. அதனால், சிங்கங்கள் சட்ட விரோதமாகவும் ஈவு இரக்கமின்றியும் வேட்டையாடப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 15 சிங்கங்கள் பல்லுக்காகக் கிர் காட்டில் கொல்லப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் 5 சிங்கங்கள் தொற்று நோயால் இறந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரேத பரிசோதனையில் இச்சிங்கங்களுக்கு ரேபிஸ் தொற்றுநோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது. தப்பித்தவறி கிணற்றில் விழுந்தும் மின்சார வேலிகளை மிதித்தும் சிங்கங்கள் இறந்தது அடுத்த
சோகம்!
கிர் காட்டில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைவது புதிதல்ல. 1907-ம் ஆண்டில் சிங்கங்கள் காட்டுமிராண்டித்தனமாக வேட்டையாடப்பட்டன. கணக்கெடுப்பில் 13 முதல் 25 சிங்கங்களே கிர் காட்டில் இருப்பதாகத் தெரிய வந்தது. கிர் காடுகள் அமைந்துள்ள ஜூனாகத் மாவட்ட நவாப் சிங்கங்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சிங்கங்களைக் கொல்ல தடை விதித்தார். அதன் விளைவாக சிங்கங்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டு, மெல்ல மெல்ல அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அவர் அப்போது மேற்கொண்ட முயற்சியால். சிங்கங்களின் எண்ணிக்கை மூன்று சதங்களைத் தாண்டியது. இப்போதும் அதுபோன்ற ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை விரும்புகின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.
இந்தியா தவிர சிங்கங்கள் நிறைந்துள்ள கண்டம் ஆப்பிரிக்கா. இங்கும் அழிவுநிலைதான். நமீபியா, கென்யா, தான்சானியா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு காடுகளில் சிங்கங்கள் நிறைய உள்ளன. 1990-களில் ஒரு லட்சம் சிங்கங்கள் வரை இக்காடுகளை அலங்கரித்தன. 2004-ல் இந்த எண்ணிக்கை அதளபாதாளத்தில் சென்றது. 14 ஆண்டுகளில் 43 ஆயிரம் சிங்கங்கள் மடிந்தும் , கொல்லப்பட்டும் தொற்று நோயாலும் மறைந்தன. 2004-ல் தொற்றுநோய் தாக்கியபோது ஒரே நேரத்தில் ஆயிரம் சிங்கங்கள் ஆப்பிரிக்காவில் இறந்தது மிகப்பெரிய சோகம்.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 30 முதல் 50 சதவீதம் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகச் சர்வதேச விலங்குகள் நல நிதியம் கவலை தெரிவித்துள்ளது. இப்போதைய நிலையில் 16, 500 சிங்கங்கள் மட்டுமே ஆப்பிரிக்காவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிங்கத்தின் பற்களும் எலும்புகளும் கலையம்சமுள்ள பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஆப்பிரிக்காவில் சராசரியாக தினந்தோறும் 2 முதல் 3 சிங்கங்கள் கொல்லப்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், சிங்கங்களைப் புத்தகத்தில் மட்டுமே பார்க்கும் அரிய விலங்காகிவிடும் என்று சர்வதேச விலங்குகள் நல நிதியம் எச்சரித்துள்ளது.
இந்திய, ஆப்பிரிக்க நாட்டு சிங்கங்களுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்க சிங்கங்களும் அழியும் விலங்குகள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. உலகிலேயே இக்காட்டுப் பகுதிகளில்தான் அரிய வகை வெள்ளை சிங்கங்கள் உள்ளன. 1994-ம் ஆண்டில் 100 வெள்ளை சிங்கங்கள் அங்கு இருந்தன. இப்போது 75 - 80 சிங்கங்கள் மட்டுமே உள்ளன.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரும்பாலானவை ஏழை நாடுகளாக இருப்பதால், அங்கு பலர் சட்டவிரோதமாக விலங்குகளைக் கொல்வதைத் தொழிலாகவே செய்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் அஜாக்கிரதையாகவே சிங்கங்கள் மடிகின்றன. ‘சிங்கம் இல்லா உலகம்’ என்ற நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், உடனடி தேவை, அதிரடி நடவடிக்கை!
சோம்பேறி ஆண்!
* ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்பதெல்லாம் சினிமாவுக்கு மட்டும்தான் பொருந்தும். இவை கூட்டமாக வாழும் இயல்புடையவை.
* ஆண் சிங்கம் 120 - 150 கிலோ எடை இருக்கும். பெண் 100 கிலோ வரை இருக்கும்.
* சிங்கங்களுக்கு கேட்கும் திறன் மிக அதிகம்.
* பெரும்பாலும் பெண் சிங்கங்களே மாடு, பன்றி, மான், ஆகிய விலங்குகளை வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் சரியான் சோம்பேறி!
* நன்கு வேட்டையாடி உண்ட சிங்கங்கள் பல நாட்களுக்கு வேட்டையாடாது. அந்த நேரத்தில் அதன் அருகே வேறு பிராணிகள் சென்றாலும் அது தாக்காது.
* சிங்கங்கள் 10 - 14 ஆண்டுகள் வரை வாழும். ஆப்பிரிக்க சிங்கங்கள் 15 ஆண்டுகள் வரை வாழும்.
- முத்தாரம், 19-04-2010