28/12/2009

இந்திய மாநிலங்கள் எப்படித் தோன்றின?



தெலங்கானா, கூர்க்காலாந்து, பண்டல்கண்ட், கூர்க், விதர்பா, ஹரித் பிரதேசம், மிதிலாஞ்சல், சவுராஷ்டிரா, போடோலாந்து. இவையெல்லாம் தனி மாநில கோரிக்கைகளின் பெயர்கள். ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்க மட்டும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது மத்திய அரசு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘பிரிட்டிஷ் இந்தியா’ என்ற பெயரில் சில மாநிலங்களே இருந்தன. இப்போது 28 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. புதிய மா நிலங்கள் எப்படி உருவாகின?

இப்போதைய இந்தியாவுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிதான் ‘பிரிட்டிஷ் இந்தியா’ என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் சமஸ்தானங்கள் ஆளப்பட்டுவந்தன. பிரிட்டிஷ் இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தன. அஜ்மேர்-மேர்வாரா, அஸ்ஸாம், பலுசிஸ்தான், மத்திய மாகாணங்கள், பெரார், கூர்க், டெல்லி, மதராஸ், வடகிழக்கு எல்லை மாகாணங்கள், ஒரிஸா, பஞ்சாப்-சிந்து, ஐக்கிய மாகாணங்கள் - இவை 15 மாநிலங்களின் பெயர்கள். இந்த 15 மாநிலங்களுக்குள் 500-க்கும் அதிகமான சமஸ்தானங்கள் இருந்தன.

இவை தவிர ‘போர்த்துக்கீசிய இந்தியா’ என்ற பெயரில் கோவா, டாமன், டையூ, தத்ரா நகர், ஹைவேலி ஆகிய பகுதிகளும் ‘பிரெஞ்சு இந்தியா’ என்ற பெயரில் சண்டர்நகர், ஏமன், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியிருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்தது. மாகாணங்களும் சமஸ்தானங்களும் பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும் சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இஸ்லாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார். ஆனால், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. இதேபோல ஜம்மு காஷ்மீருக்கு இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுமே உரிமை கோரின. ஆனால், ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர் இந்தியாவுடன் இணைந்துகொண்டார்.

தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை ஒரே இந்தியாவாக இருங்கிணைக்கப் பாடுப்பட்டவர் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல். ‘ஒரே இந்தியா’ என்ற சிந்தனையுடன் சுதந்திரக் காற்றை அனுபவிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே இந்தியாவுக்கு மொழிவாரி மாநிலக் கோரிக்கைகள் தலைவலியாக மாறின.

தனி மாநில பிரிவினைக்காக முதன்முதலில் போராடியவர் பொட்டி ஸ்ரீராமுலு. மதாஸ் மாகாணத்தில்தான் ஆந்திரப் பகுதிகள் இணைந்திருந்தன. தெலுங்கு பேசுபவர்களுக்காகத் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று குரல் உயர்த்திப் போராட்டத்தில் குதித்தார் பொட்டி ஸ்ரீராமுலு. மொழிவாரி மாநிலங்கள் அமைத்தால் இந்தியா சிதறும் என்று நேருவும் வல்லபாய் படேலும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்தியாவை மொழிவாரியாக பிரிப்பதைவிட 3 பெரிய மாநிலங்களாகப் பிரித்து
பொட்டி ஸ்ரீராமுலு
அதை ‘தட்சிணப் பிரதேசம்’ என்று அழைக்கலாம் என யோசனை கூறினார் நேரு. இந்த யோசனைக்கும் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கிடையே 1952-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலுக்காக மதாராஸ் மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேருவை, தெலுங்கு மொழி பேசுபவர்கள் முற்றுகையிட்டு தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தினர். அதே ஆண்டு 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் பொட்டி ஸ்ரீராமுலு. அவர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால், ஆந்திரப் பகுதியில் கலவரம் பற்றி எரிந்தது. 1952-ல் டிசம்பர் மாதத்தில் ஆந்திரா என்ற தனி மாநிலம் உருவாக்கப்படுவதாக அறிவித்தார் நேரு.

இதே காலகட்டத்தில் கன்னடம், மராட்டி, மலையாளம், குஜராத்தி, மராத்தி மொழி பேசுபவர்களும் தனி மாநிலம் கேட்டு போராடினர். மற்ற மொழி பேசுபவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க ‘மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிஷன்’ அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1956-ல் 14 புதிய மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, ஐதராபாத் பிரிக்கப்பட்டு ‘ஆந்திரப்பிரதேசம்’ என்ற பெயரில் புதிய மாநிலம் முறைப்படி உருவானது. ஆந்திரப்பிரதேசம் புதிதாக உருவாக்கப்பட்டாலும் பிரச்னை தீராமலேயே இருந்தது. ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினர் ஆந்திரவாசிகள். ஆனால், தமிழக தலைவர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர்.

இறுதியில் கர்னூலை தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவானது.
1960-ல் மராத்தி மொழி அதிகம் பேசும் பம்பாய் மாகாணம் ‘மகாராஷ்டிரா’ என்றும் குஜராத்தி மொழி பேசுபவர்களுக்காக ‘குஜராத்’ என்றும் பெயரிடப்பட்டு தனி மாநிலங்கள் உருவாகின. பம்பாய் மாகாணம் மகாராஷ்டிராவுடன் இருப்பதை குஜராத்வாசிகள் கடுமையாக எதிர்த்தனர். பம்பாயின் வணிகத்தையும் தொழில் துறையையும் உருவாக்கியவர்கள் அங்கு வாழ்ந்த குஜராத்திகள் என்பதால் அதை மகாராஷ்டிராவுடன் இணைக்கக்கூடாது என்று வாதம் செய்தனர். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் இதுபோன்ற பேச்சுகளை கடுமையாக சாடினார். இதனால், அந்தப் பிரச்னை முடிந்து, பம்பாய் மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது.

அஸ்ஸாமில் இணைந்து இருந்த நகா மக்கள் பகுதி பிரிக்கப்பட்டு நாகாலாந்து உருவானது. 1966-ல் பஞ்சாப் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஹரியானா, இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உருவாயின. வடகிழக்கு மாகாணம்
மேகாலயா, மணிப்பூர், திரிபுரா என்று புதிய மாநிலங்களாக அறிமுகமாயின. பெரிய மாநிலங்கள் எல்லாம் வடக்கிலேயே இருந்தன. உ.பி., பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய பெரிய மாநிலங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற திட்டமும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே எழுந்தது.
ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு 2000-ம் ஆண்டில் உ.பி., பீகார், ம.பி. ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தெலுங்கு பேசுபவர்களுக்காக ஆந்திரா கேட்டுப் போராடியவர்களே இப்போது தெலங்கானாவுக்காக இதை மேலும் கூறுபோட போர்க்கொடி உயர்த்தி, கிட்டத்தட்ட வெற்றிக்கொட்டியும் நாட்டிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் புதிய மாநிலக் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. இதில் யாரெல்லாம் வெற்றி பெறுவார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வி!

முத்தாரம், 28-12-2009