13/08/2009

அரிஹந்த் ஆட்டம் ஆரம்பம்!


இனி நாமும் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். வளர்ந்த நாடுகளிடம் மட்டுமே உள்ள அணு நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவும் சுயமாகத் தயாரித்துள்ளது. இந்தியாவிடம் அணு நீர்மூழ்கிக் கப்பல் இருக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டார் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. அவருடைய 25-வது நினைவு தின ஆண்டில் அணு நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை தொடங்கியுள்ளதன் மூலம் இந்திராவின் கனவும் நிறைவேறியிருக்கிறது!

சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அணு நீர்மூழ்கிக் கப்பல்  தேவை என்ற சிந்தனை 1960-களில் எழுந்தது. குறிப்பாக சீனா நிலம், நீர், ஆகாய மார்க்கமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தது. இதனால், 1974-ல் பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனை நடத்த அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி உத்தரவிட்டார். தொடர்ச்சியாக இந்திய கடற்படையும் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையமும் சுயமாகவே அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் யோசனையை மத்திய அரசுக்கு தெரிவித்தன.

அதே 1974-ம் ஆண்டில் அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் பணியை மேற்கொள்ளுமாறு பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கும் (டி.ஆர்.டி.ஓ) உத்தரவிட்டார் பிரதமர் இந்திராகாந்தி. இந்தியா சுயமாகவே ஓர் அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கினால், அது உலக நாடுகளிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இந்திரா நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால், அணு நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை ரகசியமாகவே வைத்திருந்தது இந்தியா.
1974-ல் உத்தரவிட்டிருந்தாலும், பணி  தொடங்கியது 1984-ம் ஆண்டில்தான்.

‘கப்பல் நகரம்’ என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ‘அதிநவீன தொழில்நுட்பக் கப்பல்’ என்ற பெயரில் அணு நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணி ரகசியமாகத் தொடங்கியது. அதே ஆண்டே இந்திரா காந்தி
மறைந்தார். இதன்பின் வந்த பிரதமர்களும் அணு நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்குவதில் ஆர்வம் காட்டினர். 25 ஆண்டு கால உழைப்புக்குப் பிறகு ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ எனப் பெயரிடப்பட்ட அணு நீர்மூழ்கிக் கப்பல் ஜூலை 26-ம் தேதி அன்று சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவிடம் ஏற்கனவே டீசல் - மின்சாரம் மூலம் இயங்கும் 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இந்தக் கப்பல்களால் நீண்ட நாட்களுக்கு நீருக்குள்ளேயே இருக்க முடியாது. புகையை வெளியிடவும் பேட்டரியை சார்ஜ் செய்யவும் அவ்வப்போது கடல் நீருக்கு மேலே வர வேண்டும்.

அணு உலையால் உருவாகும் உயர் வெப்பநிலையில் செயல்படும் நீராவி எஞ்சினால் இயங்குகிறது, அணு நீர்மூழ்கிக் கப்பல். கடல் நீரில் ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இக்கப்பலில் உள்ளதால், அணு நீர்மூழ்கிக் கப்பல் நீரில் பல மாதங்கள் இருக்க முடியும். பல ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மூழ்கியபடியே பயணிக்கவும் செய்யும். கப்பலில் ஊழியர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் பல நாட்களுக்கு சேமிக்கும் வசதி இருக்கிறது.
அவசரப் பணிக்காக மட்டுமே வெளியே வரலாம். கடலுக்கு அடியில் அணு நீர்மூழ்கிக் கப்பல் இருக்கிறதா என்று எதிரிகள் சோதித்தாலும் பயனில்லை. அந்தளவு நவீன தொழில்நுட்பங்கள் இக்கப்பலில் புகுத்தப்பட்டுள்ளன.

ஐ.என்.எஸ். அரிஹந்த் அணு நீர்மூழ்கிக் கப்பல் 112 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் கொண்டது. கப்பலின் அதிநவீன வெசல்ஸ் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. கடலுக்கு அடியில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கப்பல் பயணிக்கும். கடலுக்கு அடியில் 44 கி.மீ. வேகத்திலும் கடலுக்கு மேலே 28 கி.மீ. வேகத்திலும் பயணம் செய்யும் திறன் உடையது. 95 பேர் பயணம் செய்யலாம்.
கடலுக்கு இருந்தபடியே எதிரிகளை குறிப்பார்த்து ஏவுகணையால் வீழ்த்தும் வசதியும் இக்கப்பலில் உள்ளது. இதில் ‘சகாரா பாலிஸ்டிக்’ ஏவுகணை பொருத்த கடற்படை முடிவு செய்துள்ளது. ஒரே நேரத்தில் 4 புறமும் ஏவுகணையைச் செலுத்தி எதிரிகளின் இலக்குகளை 750 கி.மீ. தாண்டி தாக்கும் வல்லமை இக்கப்பலுக்கு உள்ளது. எதிர்காலத்தில் 3,500 கி.மீ. தாண்டி இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தவும் திட்டமுண்டு.

ஏவுகணைகளோடு அணுகுண்டுகளையும் இணைத்து அனுப்ப முடியும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 80 மெகாவாட் அணுசக்தி உலையால் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி உலை கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. இதனால், தமிழகத்தின் பங்கும் இக்கப்பலில் உள்ளது. இப்போது இக்கப்பல் வங்காள விரிகுடா கடல் பகுதியில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இரண்டாண்டுகள் கழித்து ஐ.என்.எஸ். அரிஹந்த் இந்திய கப்பல் படையில் சேர்க்கப்படும்.

1950-களில்தான் அணுக் கருத்திறன் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்த வரிசையில் உலகில் அணு நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கும் 6-வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. ஏற்கனவே வான் மற்றும் நிலம் மூலம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. அணு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியிருப்பதன் மூலம் கடல் மார்க்கமாகவும் அணு ஆயுதங்களை கையாளும் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இந்தியா. அரிஹந்தின் ஆட்டம் (Atom) இனி ஆரம்பம்!

அரிஹந்த்!

* அரிஹந்த் என்பது சமஸ்கிருத வார்த்தை. இதற்கு ‘எதிரிகளை அழிப்பவன்’
என்று பொருள்.
* இந்தியாவின் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்யாவின் சார்லி அணு நீர்மூழ்கிக் கப்பல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
* அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க செலவான தொகை 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.
* நீர்மூழ்கிக் கப்பல் இயங்க தேவையான அணுசக்தி உலையை அமைக்க தொடக்கத்தில் சிக்கல் எழுந்தது. இதை சரிசெய்ய இந்தியாவுக்கு கைக்கொடுத்தது ரஷ்யா.
* இந்திய போர்க்கப்பல்களை பெண்கள்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. இதன்படி, பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குருசரண் கவுர் தேங்காய் உடைத்து கப்பல் சோதனை ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

உலக அணுக் கப்பல்கள்!

நீர்மூழ்கிக் கப்பல்கள் 19-ம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்துள்ளன. இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் பயன்படுத்தியது அமெரிக்கா. இப்போது உலகில் 49 நாடுகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அமெரிக்கா (79), ரஷ்யா (44), இங்கிலாந்து (13), பிரான்ஸ் (10), சீனா (10), இந்தியா (1) என ஆறு நாடுகளிடம் மட்டுமே அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. முதல் அணு நீர்மூழ்கிக் கப்பலை 1954-ல் அமெரிக்கா உருவாக்கியது. சோவியத் யூனியன் 1956-ல் உருவாக்கியது. அர்ஜெண்டினா, பிரேசில் நாடுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளன.

- முத்தாரம், 13-08-2009