23/04/2009

முகத்தை புதுசாக்கலாம்! பிளாஸ்டிக் சர்ஜரியின் புதிய பரிமாணம்


சில ஆண்டுகளுக்கு முன் கறுப்பின பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தன் முகத்தோற்றத்தை மாற்றி, திடீரென வெள்ளை நிறமாகி பரபரப்பு ஏற்படுத்தினார். நம்மூர் நடிகை ஸ்ரீதேவி மூக்கை மாற்றியமைத்ததும் முக்கிய செய்தியானது. இவையெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொல்லக்கூடிய அறுவை சிகிச்சையால் சாத்தியமானவைதான். இப்போதோ ‘முகம் மாற்று அறுவை சிகிச்சை’ மருத்துவ உலகில் புதிய அத்தியாயத்தை அரங்கேற்றி வருகிறது. லண்டனில் இச்சிகிச்சை செய்ய 34 பேர் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு புதிய முகம்  அளிக்க அரசு அனுமதி பெற்றிருக்கிறார் டாக்டர் பீட்டர் பட்லர்.

முகம் மாற்று அறுவை சிகிச்சை என்பது இறந்தார் ஒருவருடைய முகத்தின் தசை, கண், இமையின் கீழ் இருக்கும் பகுதி, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றை எடுத்து, முகம் சேதமடைந்து வேறொருவருக்குப் பொருத்துவதே. இதற்கு, முகப் பகுதிகளை இறந்த சில சில மணி நேரத்துக்குள்ளாக எடுத்தாக வேண்டும். இறந்தவரின் பாலினம், வயது, தசைகள் ஆகியவையும் பொருத்தப்பட வேண்டியவருக்குப் பொருத்தமானதா எனப் பார்க்க வேண்டும். இன்னும் முக்கியம்,  திசுக்கள் பொருத்தம் பார்ப்பது.

 ‘புதிய முகம்’ படத்தில் நடிகர் வினீத்துக்கு இப்படி ஆபரேஷன் செய்து, சுரேஷ் மேனனாக அவர் மாறிவிடுவார். ‘குரு சிஷ்யன்’ படத்தில் நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் செந்தாமரையின் முகமூடியை அணிந்துகொண்டு பிரபுவின் பெற்றோரைக் கொன்றுவிடுவார். இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்! முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவரின் முகம், தானம் செய்தவரின் முகம் போல இருக்குமா என்றால், ‘இருக்காது’ என்பதுதான் மருத்துவர்களின் பதில். ஏற்கனவே முகம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னொருவரின் முகப்பகுதிகளை பொருத்தும்போது அதே தோற்றம் கிடைக்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

2005-ம் ஆண்டுதான் முகம் மாற்று அறுவை சிகிச்சைக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. பிரான்ஸ் நாட்டில் இசபெல்லா டினோரி என்ற 38 வயது பெண்ணை நாய் கடித்து குதறியது. இதில் அவருடைய முகம் ரணகளமானது. டாக்டர் அமின்ஸை அவர் அணுகவே, முகம் மாற்று அறுவை சிகிச்சை நடந்தேறியது. மூக்கு, உதடு, தாடை ஆகிய பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. அடுத்து சீனாவில் லீ கோவ்ங் என்பவர் கரடியால் தாக்கப்பட்டு இச்சிகிச்சையைப் பெற்றார். ஐரோப்பாவில் மரபியல் காரணங்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இச்சிகிச்சை தரப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் முகம் மாற்று சிகிச்சை செய்ய அரசு
இசபெல்லா டினோரி
அனுமதி வழங்கியது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டுதான் முதல் முகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது உலகின் 4-வது சிகிச்சை. இதற்கு நும் நடந்தவற்றைக் காட்டிலும் இது முழுமையான சிகிச்சையாக அமைந்தது. இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை பெயர் வெளியிடப்படாத பெண்ணின் முகத்தில் 80 சதவீதம் பொருத்தினர் 12 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர்.

முகம் மாற்று அறுவை சிகிச்சை முதலில் நடைபெற்ற பிரான்சில் இப்போது அடுத்தடுத்து 2 சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. பாரிஸில் உள்ள ஹென்றி மாண்டோர் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் முகத்தில் காயமடைந்த நபருக்கு சிகிச்சை நடைபெற்றது. 2004-ம் ஆண்டில் தீ விபத்தில் காயமடைந்த 30 வயது ஆணுக்கு, இந்த மாதம் (2009, ஏப்ரல்) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆணுக்கு நெற்றி, மூக்கு, கண் இமைகள், காதுகள், தொண்டைப் பகுதி, கைகள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த அளவு அதிகமாக முகம் மாற்றி சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை.

“முகம் மாற்று அறுவை சிகிச்சை இப்போது வெற்றிகரமாகவும் நுட்பமாகவும் செய்யப்படுகிறது. நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்பவே செய்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் அதிகளவில் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சிறப்பு மையங்களை தொடங்குவோம்” என்கிறார் இச்சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் லாரன்ட் லான்ட்ரி. இது மருத்துவ உலகில் அதிசயமாகவும் புதிய அத்தியாயமாகவும் கருதப்படுகிறது. முகம் அதிகளவில் சேதமடைந்த ஒருவருக்கு மற்ற சிகிச்சைகள் எதுவும் பலன் தரவில்லை என்றால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும் என்ற குரலும் மருத்துவ உலகில் எதிரொலிக்கிறது.

இச்சிகிச்சையை மேற்கொள்வதால், நோயாளி வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும். அதுவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய மருந்துகள். பின்விளைவுகளுக்கு நோயாளியின் மனதையும் தயார் செய்ய வேண்டும். சிகிச்சை தோல்வி அடைந்தாலோ நோயாளிக்கு நரக வேதனைதான். இப்படிப் பல பிரச்னைகளும் இருப்பதால், இந்தச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இன்னும் பல நாடுகளில் முகம் மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி தரப்படவில்லை. தேடப்படும் பயங்கரவாதிகள்,  முக்கிய குற்றவாளிகள் தங்கள் முகத்தை மாற்றியமைத்து தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக நினைப்பதே இதற்குக் காரணம். இந்தியாவில் பலவித மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வந்தாலும், முகம் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய சிந்தனை வலுப்பெறவில்லை. இதயம், சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைப் போல உயிர்க் காக்கும் சிகிச்சையாக இல்லாமல், உடலை மேம்படுத்தும் சிகிச்சையாகவே இது பார்க்கப்படுகிறது என்பதும் உண்மையே!

- முத்தாரம், 23-04-2009

16/04/2009

ஜி20 நாடுகள் உருவான கதை!


லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது ஜி20 உச்சி மாநாடு. உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அப்படி என்னதான் விவாதிக்கிறார்கள்? இது பாமர மக்களுக்கு எழும் கேள்வி.

உலகப் பொருளாதாரம் இப்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி காரணமாக வேலையிழப்பு, ஊதியம் இழப்பு, வாங்கும் சக்தி இழப்பு எனப் பல நாட்டு மக்களின் கனவுகள் தகர்ந்துகொண்டிருக்கின்றன. ஜி20 உச்சி மாநாடு என்பது பொருளாதாரம் சார்ந்து விவாதிக்கும் இடம். அந்த வளர்ச்சியைத் தக்க வைப்பது, வளரும் நாடுகளின் பொருளாதார நிலை எனப் பலவற்றை இந்த மாநாட்டில் பேசுவதைத் தலைவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாகத் திகழும் நாடுகள்தான் ஜி20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் 85 சதவீத வளர்ச்சி ஜி20 கூட்டமைப்பு நாடுகளைச் சார்ந்தே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

1990ம் ஆண்டுக்கு முன்புவரை ஜி20 என்ற கட்டமைப்பே இல்லை. ஜி8 என்ற வளர்ந்த நாடுகளின் கூட்டமைபு மட்டுமே இருந்தது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. பல நாடுகள் உலக சந்தையாக மாறிய பின் ஜி8 கூட்டமைப்பு நாடுகள் மட்டுமல்லாமல், பல நாட்கள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது.

குறிப்பாக, வளரும் நாடுகள் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. 1998-ம் ஆண்டில் ஜி8 உச்சி மாநாடு வாஷிங்டனில் நடந்தது. ஜி8 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் உட்பட் மற்ற நாடுகளும் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் அப்போதுதான் நிறைவேற்றப்பட்டது. இதன் முக்கிய சாரம்சமே, உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதியம் மற்ற நாடுகளுடன் இணைந்து மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இதைத் தொடர்ந்து மற்ற நாடுகள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்க, 1999-ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருமுறை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டன. தொடக்கத்தில் 33 நாடுகளைக் கொண்ட ஜி33 கூட்டமைப்பை உருவாக்கவே முடிவு செய்யப்பட்டது. இறுதியாக, அது குறைக்கப்பட்டு ஜி20 ஆக ஆனது. இந்தக் கூட்டமைப்பில்
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, செக் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பாக உருவானது. ஜி20 நாடுகளின் முதல் உச்சி மாநாடு 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெர்லின் நகரில் நடைபெற்றது.

சிஸ்டமெடிக்காக இயங்கும் முக்கிய ஆலைகளின் வளர்ச்சி, உலகப் பொருளாதார வளர்ச்சி, அதை நீட்டிக்கச் செய்வது, சர்வதேச நிதி சந்தையை ஒருங்கிணைந்து ஒத்துழைப்பை மாற்றியமைப்பது, சர்வதேச நிதி நிறுவனத்தை மாற்றுவது ஆகியவை குறித்து ஜி20 உச்சி மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு நாடும்  தங்களின் ஒரு கருத்தை ஜி20 உச்சி மாநாட்டில் பதிவு செய்ய முடியும். கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள மற்ற நாடுகள் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அது செயல் திட்டத்தில் சேர்க்கப்படும்.

இப்போது லண்டனில் நடந்த ஜி20 உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக உலக நாடுகள் பல தத்தளித்து வரும் சூழலில் இந்த உச்சி மாநாடு நடந்துள்ளது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றபின் முதன் முறையாக ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில், சர்வதேச பொருளாதார நெருக்கடியைக் குறைக்க ஒரு ட்ரில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 50 லட்சம் கோடி ரூபாய்) உலக வங்கிக்கும், சர்வதேச நிதியத்துக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வருங்காலங்களில் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இதன் மூலம் ஓரளவுக்காவது பொருளாதார நெருக்கடி குறைந்தால், அது உலக மக்களை கொஞ்சமாவது நிம்மதியடையச் செய்யும் என்று நம்பலாம்.

ஜி20 - சில தகவல்கள்

* ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோரைக் கொண்டுதான் இது தோற்றுவிக்கப்பட்டது.
* இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சர்வதேச கண்காணிப்பு நிதியம் ஆகிய அமைப்புகளும் கலந்துகொள்ளும்.
* கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பை வகிப்பார்கள். தற்போது சுழற்சி முறையில் இங்கிலாந்து, தலைமை பொறுப்பில் உள்ளது. இதனாலேயே ஜி20 உச்சி மாநாடு இந்த முறை லண்டனில் நடைபெற்றது. அடுத்த தலைமைப் பொறுப்பு தென் கொரியாவுக்குக் கிடைக்கும்.
* ஜி8 பணக்கார நாடுகளின் கூட்டமைப்பைவிட ஜி20 கூட்டமைப்பு சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பணக்கார நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும் வளரும் நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றிருப்பதால், அவர்களின் குரலுக்கு மதிப்பு தரும் நிலையில் ஜி8 கூட்டமைப்பு உள்ளது.
* 1999-ம் ஆண்டு முதல் ஜி20 உச்சை மாநாடு நடந்தது. இதன்பின் 15 முறை உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
* பணக்கார நாடுகள் எப்படி ஜி8 என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனவோ, அதுபோல இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகள் சேர்ந்து ஜி4 என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில், நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஒருவரையொருவர் ஆதரிக்கவே ஜி4 உருவாக்கப்பட்டது.

முத்தாரம், 16-04-2009