13/10/2021

நடிகர் ஸ்ரீகாந்த்: மிஸ்டர் ஜெகனை மறக்க முடியுமா?


 

றுபதுகளில் தமிழ் சினிமா எம்ஜிஆர் - சிவாஜியை மையம் கொண்டிருந்த வேளையில், புதிய இளம் நாயகர்கள் காலடி எடுத்து வைத்தார்கள். இளவட்டத் துடிப்போடு தனித்த பாணியில் பயணத்தை ஆரம்பித்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார் எனப் புதிய தலைமுறை நடிகர்கள் பிரகாசிக்கத் தொடங்கினார்கள். அவர்களில், நாயகன், வில்லன், குணச்சித்திரம் என முப்பரிமாணத்தில் ஜொலித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

நாடகத்திலிருந்து வந்த வெங்கி...

சினிமாவுக்கெல்லாம் முன்னோடியான நாடகக் கலை, தமிழ் சினிமாவுக்கு ஜாம்பவான் கலைஞர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறது. 70, 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்களில் பெரும்பாலானோர் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். 1965-இல் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நாயகனாக அறிமுகமான ஸ்ரீகாந்தும் மேடை நாடகக் கலைஞராக இருந்தவர்தான். இந்தப் படத்தில்தான் ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி போன்ற நடிகர்களும் அறிமுகமானார்கள். ஒரு படத்தில் அறிமுகமாகி, அதில் கிடைக்கும் புகழ் காரணமாகப் படத்தின் பெயரையும் தன் பெயரோடு சேர்த்துக்கொள்வது அப்போது வழக்கம். ஸ்ரீகாந்துடன் சேர்ந்து அறிமுகமான வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்களே இதற்கு உதாரணம்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், ஸ்ரீகாந்த் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல. வெங்கட்ராமன் என்பதுதான் அவரது இயற்பெயர். சுருக்கமாக வெங்கி. ஈரோட்டைச் சேர்ந்த வெங்கி அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாடகம், சினிமாவில் இருந்த ஈடுபாடு காரணமாக இயக்குநர் கே.பாலசந்தரின் மேடை நாடகக் குழுவில் இணைந்தார். 1966-ல் பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ படம் வெளியாவதற்கு முன்பே, அது நாடகமாக அரங்கேறியது. அதில் ‘ஸ்ரீகாந்த்’ (படத்தில் முத்துராமன் நடித்த கதாபாத்திரம்) என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வெங்கி. அந்த நாடகக் கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்றதால், ஒரிஜினல் பெயரைத் துறந்து ஸ்ரீகாந்தாக மாறினார்.

கிடைத்த வாய்ப்புகளில் முத்திரை பதித்தவர்

முதல்படமான ‘வெண்ணிற ஆடை’யில் மனநல மருத்துவராக, ஸ்டைலாக நடித்து அசத்தினார் ஸ்ரீகாந்த். அசத்தலாக அறிமுகமாகியிருந்தாலும் தொடர்ந்து நாயகனாக அவரால் நிலைபெற முடியாமல் போனது. தொடர்ந்து பாலசந்தரின் படங்களில் வாய்ப்பு கிடைத்தபோதும் குழு நாயகர்களில் ஒருவர், 2-ம் நாயகர் போன்ற கதாபாத்திரத்தில்தான் நடித்து வந்தார். அதனால், ஸ்ரீகாந்த் கவலைப்படவில்லை. கிடைத்த பாத்திரங்களில் எல்லாம் முத்திரை பதித்தார். எனினும் வாய்ப்பு கிடைக்கும்போது நாயகன் கதாபாத்திரத்திலும் ஜொலித்தார்.

60-களின் பிற்பகுதியில் பாலசந்தர் படங்களிலும், முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோர் நாயகர்களாக நடித்த படங்களிலும் ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடித்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியான ‘நாணல்’, ‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நவக்கிரகம்’ போன்ற வெற்றிப் படங்களில் பங்கு வகித்தார். ‘எதிர் நீச்சல்’ படத்தில் ‘கிட்டு’ என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை ததும்ப ஸ்ரீகாந்த் நடித்தது இன்றும் சிலாகிக்கப்படுகிறது. குறிப்பாக, செளகார் ஜானகியுடன் ஸ்ரீகாந்த் தோன்றிய ‘அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா...’ காலத்தால் அழிக்க முடியாத எவர்கிரீன் பாடல்.

தொடர்ந்து கவனம் ஈர்த்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த், பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்களிலும் வாய்ப்பு பெறத் தொடங்கினார். ‘வியட்நாம் வீடு’ படத்தில் முதன்முதலாகச் சேர்ந்து நடித்தார் ஸ்ரீகாந்த். ‘பிராப்தம்’, ‘ஞான ஒளி’ எனத் தொடர்ந்த இந்தப் பயணம் சிவாஜி-ஸ்ரீகாந்த் என்ற காம்போவாக உருவானது. அதற்கு ‘ராஜபார்ட் ரங்கதுரை’ பாதை அமைத்துக் கொடுத்தது. பாசமே திருவுருவான அண்ணனாக சிவாஜி நடிக்க, பாசமே இல்லாத அடாவடி தம்பியாக, சிவாஜிக்கு இணையாக ஸ்ரீகாந்த் வெளுத்துவாங்கியிருப்பார். அந்தக் கதாபாத்திரம் ஸ்ரீகாந்தை எதிர்மறை கதாபாத்திரத்துக்குரியவராகவும் மாற்றியது.

80-களின் எதிர்மறை நடிகன்

அதன்பிறகும் சிவாஜியின் பல படங்களில் நடித்த ஸ்ரீகாந்துக்குப் பெயரும் புகழும் பெற்றுக்கொடுத்தது ‘தங்கப்பதக்கம்’ படம். தமிழ்த் திரையுலகில் மகன், தனது தந்தையையே எதிரியாகப் பாவித்து வளர்பவனாகக் காட்டிய முதல்படமாகவும் நிலைபெற்றது. எஸ்.பி.செளத்ரியாக சிவாஜியும் ஜெகனாக ஸ்ரீகாந்தும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தார்கள். படம் பார்க்கும் ரசிகர்களையே அந்தக் கதாபாத்திரத்தின்மீது கோபம் கொள்ளும் அளவுக்கு ஸ்ரீகாந்த் மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்.

குணச்சித்திரம், நாயகன், எதிர்மறை கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் நிலைபெற்றிருந்த காலத்தில் ‘காசி யாத்திரை’, ‘ராஜநாகம்’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்கள் ஸ்ரீகாந்துக்கு அழியாப் புகழையும் தேடிக்கொடுத்தன. எதிர்மறை கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடித்திருந்தாலும், அவர் அதிகாரபூர்வமாக வில்லனாக நடித்த முதல்படம் ‘பைரவி’. அந்தக் காலத்தில் சினிமாவில் ‘ரேப்’ காட்சிகளில் நடிப்பவரைத்தான் அசல் வில்லனாகப் பார்க்கும் நிலை இருந்தது. அந்தவகையில் ‘ரேப்’ காட்சிகளில் ஸ்ரீகாந்த் நடித்த ‘பைரவி’ அவருக்கு முதல் வில்லன் படம் எனலாம். இந்தப் படத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலில் கதாநாயகனாக மிளிர்ந்தார். இந்தப் படத்தில்தான் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அழியாப் படத்தை ரஜினி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

‘பைரவி’ படத்துக்கு பிறகான காலத்தில் ரஜினி-கமல் ஆகியோர் படங்களில் ஸ்ரீகாந்த் மாறி மாறி நடித்திருக்கிறார். 80-களின் இறுதிவரை சினிமாவில் தொடர்ந்து இயங்கிவந்த ஸ்ரீகாந்துக்கு, பிறகு பட வாய்ப்புகள் குறைந்துபோனது துரதிர்ஷ்டம்தான். அதன்பிறகு ஸ்ரீகாந்த் சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் அவருக்குப் பெயர் சொல்லும் அளவுக்கு அமையவில்லை.

ஜெயகாந்தனின் வாசகர்

முதல்படமான ‘வெண்ணிற ஆடை’ படத்தில் சேர்ந்து நடித்தது முதலே, ஜெயலலிதாவுடன் நல்ல நட்பில் இருந்தார் ஸ்ரீகாந்த். ஜெயலலிதா முதல்வரான பின்னரும்கூட அவரை ஸ்ரீகாந்த், ‘அம்மு’ என்று அழைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் நட்பு இருந்தது. ஜெயலலிதாவின் முதல்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்ததைப் போலவே அவருடைய கடைசிப்படமான ‘நதியைத் தேடி வந்த கடல்’ படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். சினிமா, நடிப்புக்கு அடுத்து இலக்கியம், படிப்பு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர் ஸ்ரீகாந்த். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிப்பில் மூழ்கிவிடுவதும் அவருடைய பழக்கம். குறிப்பாக, எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தின்மீது காதல் கொண்டவர். ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த், அவரது நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற படங்களில் நடித்தது அவருக்குப் பெருமையைத் தேடித் தந்தது.

கூர்மையான அவதானிப்பு

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீகாந்த் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், சினிமா விஷயங்கள் அனைத்தையுமே அத்துப்படியாக வைத்திருந்தார். தன் சமகாலத்து நடிகர் இல்லை என்றாலும் ரஜினி மீது அன்பும் அபிப்ராயமும் கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் குறித்து அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்புகூட ரஜினியைப் பார்க்க விரும்புவதாக ‘இந்து தமிழ்’ இணையத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அந்த அளவுக்கு ரஜினிமீது அவருக்கு பாசம் இருந்தது.

80 வயதில் இருந்த ஸ்ரீகாந்த் வயது முதிர்வால்கூட படுத்த படுக்கையாகவில்லை. அவர் அமரரான அக்டோபர் 12 காலை வரை நன்றாக இருந்தவர், மதியத்தில் இல்லாமல் போய்விட்டார். ஸ்ரீகாந்துக்குப் பெரும் பெயரும் புகழும் தேடித் தந்த ‘தங்கப்பதக்கம்’ படத்தில் தந்தை சிவாஜி, மகன் ஸ்ரீகாந்தை ‘மிஸ்டர் ஜெகன்’ என்றே அழைப்பார். தமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெகனை என்றென்றும் மறக்க முடியாது!

26/09/2021

One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் கனவு பலிக்குமா..? எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆகுமா.?


“தமிழகத்தில் 2024-ல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல் வரவும் வாய்ப்புள்ளது. ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் எம்.பி-க்கள் எண்ணிக்கை உயரலாம். எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்” - என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சொல்வது போல இன்னும் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடப்பது சாத்தியமா?

பாஜகவுக்குத் துணைபோகும் அதிமுக
எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டும் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் கட்சியினர் மத்தியில் இதையே பேசிவருகிறார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகான சில நாட்களிலேயே, தன்னைச் சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகளிடம் இதே கருத்தை அவர் சொன்னதாக, அப்போதே தகவல்கள் வெளிவந்தன. இப்போது அதை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியிருப்பது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் திட்டம் தொடர்பான தனது எண்ணத்தைத்தான்!
2014-ல் பிரதமராகப் பதவியேற்றது முதலே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற எண்ணத்தைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகிறார் மோடி. ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தினால், கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்று தொடர்ந்து பாஜக பேசி வருகிறது. ‘மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களுக்கென தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது வீண்வேலை. இவை அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பொதுவான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தலாம்” என்று கடந்த ஆண்டுகூட பிரதமர் மோடி பேசியது தேசிய அளவில் விவாதமானது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 2018-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவாதம் சூடுபிடித்தது. அப்போது அதிமுக தெரிவித்த கருத்துதான் ஹைலைட். “இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். தமிழகத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் 2021 வரை இருக்கிறது. எனவே, அதை இப்போதைய நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்க்க வேண்டாம். ஆனால், 2024-ல் ஒன்றாகச் சேர்த்து தேர்தல் நடத்தினால் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அன்று அமைச்சராக இருந்த ஜெயக்குமார் பேட்டி அளித்திருந்தார். இந்தத் திட்டத்தால் தங்கள் ஆட்சிக்கு சிக்கல் வரக் கூடாது என்று நினைத்த அதிமுகதான், இன்று திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை மாதங்களே கடந்துள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலைப் பற்றி பேசுகிறது. சரி, இதற்கு வாய்ப்புகள் உள்ளனவா?
சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?
தற்போது எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, 2024-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல், இன்னொன்று ஆயிரம் எம்.பி-க்கள் எண்ணிக்கை. இந்த இரண்டுமே வெவ்வேறு விஷயங்கள். தமிழக சட்டமன்றத்துக்கு 2024-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வர வேண்டுமென்றால், அதற்கு முதலில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று திட்டம் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும். அத்திட்டத்துக்கு தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள், சிறு கட்சிகள் வரை ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். இத்திட்டத்தை எல்லோரும் மனம் திறந்து ஆதரிக்க வேண்டும். மிக முக்கியமாக, இதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். 2024-ல் இத்திட்டம் வருகிறது என்றால், இனி வரும் மாநில சட்டப்பேரவைகளின் தேர்தலை ரத்து செய்து, அந்தந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.
இத்திட்டத்தைப் பற்றி ஆரவாரமாகப் பேசும் பாஜகவே, இன்னும் ஐந்து மாதங்களில் வர உள்ள உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. அதேபோல ஓராண்டில் வர உள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கும் முதல்வரை மாற்றி தயாராகிவிட்டது. 2024-ல் எல்லா மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் என்றால், இப்போது இந்த மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. எனவே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற விவாதம் வழக்கம்போல 2024 மக்களவைத் தேர்தலையும் கடந்து சென்றுவிடும் வாய்ப்புகளே உள்ளன.
நாடாளுமன்றத்தில் ஆயிரம் எம்.பி-க்கள் எனும் வாதத்துக்கு வருவோம். தலைநகர் டெல்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் உருவாகிவரும் புதிய நாடாளுமன்றக் கட்டிட வளாகம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் அமரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஆயிரம் எம்.பி.க்கள் என்ற அளவில் இருக்கும் என்ற விவாதம் தேசிய கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தற்போதைய மக்களவையின் எண்ணிக்கையான 543-இல் 530 பேர் மாநிலங்களிலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சியவர்கள் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு- 81, ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, ‘ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கைக்கும் அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதம் முடிந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. இதேபோல அரசமைப்புச் சட்டக்கூறு81-ன்3-வது பிரிவு, ‘மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்’ என்கிறது. அதாவது, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இது இருக்க வேண்டும். இந்த இரண்டுமே 1971 முதலே சாத்தியமாகவில்லை.
ஒத்திவைத்த இந்திரா காந்தி
1971-ல் இந்தியாவின் மக்கள்தொகை 56 கோடி. 2011-ல் 125 கோடி. 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்னும் தொடங்காத நிலையில், நாட்டின் மக்கள் தொகை 137 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1971-ஐ விட மக்கள் தொகை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே மக்களவையில் எண்ணிக்கை மாறியிருக்க வேண்டும். ஆனால், அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதைச் செய்யவில்லை.
தொகுதிகள் மறுவரையறை, மக்கள்தொகை எண்ணிக்கைப்படி அதிகரிப்பது போன்றவற்றை 2001 வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை எம்.பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்தால், தென்னிந்திய மாநிலங்களில் எம்.பி-க்கள் எண்ணிக்கை குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சர்ச்சை எழுந்தது. அதாவது, அன்று குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தென்னிந்திய மாநிலங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொண்டிருந்தன. இதன்மூலம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்தி, மக்கள்தொகை எண்ணிக்கையைக் குறைத்த மாநிலங்களுக்கு எம்.பி-க்கள் எண்ணிக்கை குறைப்பு, சரியாக செயல்படுத்தாத மாநிலங்களுக்கு எண்ணிக்கை அதிகரிப்பு என்ற வினோதமான காட்சி அரங்கேறும் நிலை ஏற்பட்டது. இது அரசமைப்புச் சட்டக்கூறு 81-க்கு எதிராக இருக்கும் என்பதால், அதை 2001 வரை ஒத்திவைப்பதாக இந்திரா காந்தி அறிவித்தார்.
இதன்படி பார்த்தால், 2001-க்குப் பிறகு எம்.பி-க்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும், தொகுதிகள் எல்லை மறுவரையறை நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதும் மாறவில்லை. அப்போது இருந்த வாஜ்பாய் அரசும் இந்திரா காந்தி சந்தித்த அதே சர்ச்சையைத்தான் சந்திக்க வேண்டியிருந்தது. இதனையடுத்து 2003-ல் வாஜ்பாய் அரசு, இந்தத் திருத்தத்தை 2026 வரை ஒத்திவைத்தது. தென்னிந்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் காரணமாகவே வாஜ்பாய் அரசும் அந்த முடிவை எடுத்தது.

எளிதான காரியமல்ல
இனி, இன்றைய மோடி அரசு எம்.பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையைக் கையில் எடுக்க வேண்டுமெனில், முதலில் 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற வேண்டும். அந்தக் கணக்கெடுப்பில் அரசமைப்புச் சட்டக்கூறு 81-ன் படி மாநிலங்களின் மக்கள்தொகைக்கும் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கைக்குமான விகிதத்தில் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலையிலும் தென்னிந்திய மாநிலங்களில் பாதிப்பு ஏற்படும் நிலைதான் உள்ளது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே பேசத் தொடங்கிவிட்டன. எனவே, 2024-ல் மக்களவைத் தேர்தலில் எம்.பி-க்களின் எண்ணிக்கையை 1,000-ஆக உயர்த்துவது என்பதைச் சாத்தியப்படுத்துவது லேசுப்பட்ட காரியமல்ல.
ஆக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபடி 2024-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல், 1,000 எம்.பி-க்கள் எண்ணிக்கை போன்றவை விவாதமாகவும், உள்ளாட்சித் தேர்தலுக்காகக் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் உத்தியாக மட்டுமே பார்க்க முடியும்!

20/04/2021

அந்த ஒரு நிமிடம் 2: கவனம் சிதறிய சிறுவனின் விஸ்வரூபம்!

 

“இந்தச் சிறுவன் எதற்கும் உதவ மாட்டான்” - மைக்கேலின் அம்மா டெப்பியைப் பார்ப்பவர்கள் எல்லாம் இதைத்தான் சொன்னார்கள். சிறு வயதிலிருந்தே மைக்கேல் வித்தியாசமாக இருந்தான். எதிலும் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டேயிருப்பான். எதையுமே அவனால் ஒழுங்காகச் செய்ய முடியாது. படிப்பிலும் படுமந்தம். ஏற்கெனவே கணவர் பிரிந்துசென்றுவிட்ட நிலையில், மகன் மைக்கேலின் நிலையால் நிலைகுலைந்துபோனார் டெப்பி.

பயந்த குழந்தை

தன் மகனை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார். மைக்கேலுக்குக் ‘கவனச்சிதறல்’ பிரச்சினை இருப்பதாக சில மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்குத் தீர்வாக நீச்சல் கற்றுக்கொடுக்கும்படி பரிந்துரைத்தார்கள். அதன்படியே டெப்பி செய்தார். ஆனால், நீச்சல் குளத்தைக் கண்டதுமே பயந்து தெறித்து ஓடினான் மைக்கேல். இதைக் கண்டு டெப்பி மேலும் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்.

அந்த நேரத்தில்தான் மைக்கேலுக்கு, பாப் பவுமன் என்கிற நல்ல பயிற்சியாளர் கிடைத்தார். துறுதுறுவென இருக்கும் மைக்கேலைக் கண்டதும், ‘பிற்காலத்தில் இவன் பெரிய நீச்சல் வீரனாக வருவான்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார். இதைக் கேட்டு டெப்பிக்கு ஆச்சரியம். எல்லோருமே எதிர்மறையாகக் கூறும் தன் பிள்ளையை, இவர் மட்டும் நேர்மறையாக கணிக்கிறாரே என்று உள்ளுக்குள் சந்தேகம்.

செதுக்கிய சிற்பி

பாப் பவுமன் சொன்ன அந்த வார்த்தைகள் உண்மையாகின. மைக்கேலைப் படிப்படியாகச் செதுக்கினார் பாப். அவர் அளித்த பயிற்சியில் மைக்கேலுக்கு நீச்சல் அத்துப்படியானது. தண்ணீரைக் கண்டு பயந்த மைக்கேல், எப்போதும் நீச்சல் குளமே கதியெனக் கிடக்கத் தொடங்கினான். பிறகு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டிகளுக்கு அனுப்பத் தொடங்கினார் பாப். சில போட்டிகளில் வெற்றி கிடைத்தது. அதுவே மைக்கேலின் அம்மாவுக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஆனால், ‘மைக்கேலின் திறமைக்கு இந்த வெற்றியெல்லாம் தூசு’ என்று மைக்கேலை இன்னும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினார் பாப்.

சிறிது சிறிதாக முன்னேறி வந்த மைக்கேல் 15 வயதிலேயே அமெரிக்க தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களைக் குவித்தான். அந்தத் தருணத்தில் வீடு திரும்பிய மைக்கேலை, அவனுடைய அம்மா டெப்பி ஆடம்பரமாகச் செலவுசெய்து வரவேற்றார். இதைக் கண்டு பாப் முகம் சுளித்தார். “சின்ன சின்ன வெற்றிக்காக மைக்கேலைக் கொண்டாதீர்கள். அது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மறைத்துவிடும். தான் சாதித்துவிட்டோம் என்கிற எண்ணத்தை வரவழைத்துவிடும். மைக்கேல் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்” என்று டெப்பியிடம் முகத்துக்கு நேராகவே கடுகடுத்தார் பாப்.

ஒலிம்பிக் நாயகன்

மைக்கேலின் அம்மாவுக்கு அது புரிந்ததோ இல்லையோ, அருகிலிருந்த மைக்கேலுக்குப் பளிச்செனப் புரிந்தது. அன்று முதல் நீச்சலில் புதியபுதிய நுணுக்கங்களைத் தேடித்தேடிக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான் மைக்கேல். எப்போதும் தீவிரப் பயிற்சியில் இருந்தான். இவற்றையெல்லாம் விடாப்பிடியாக பின்தொடர்ந்த மைக்கேல், 23-வது வயதில் நீச்சலில் உச்சம் தொட்டான்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நீச்சலில் எட்டுத் தங்கப் பதக்கங்களை வென்று மலைக்கவைத்த அந்தச் சாதனையாளர் மைக்கேல் பெல்ப்ஸ். தொடர்ந்து 2012 ஒலிம்பிக்கில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி என ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை வென்று நீச்சலில் புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்கள், அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே வீரர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இந்த வெற்றி மைக்கேல் பெல்ப்ஸையே சேரும் என்றாலும், அதன் பின்னணியில் முழுக்கமுழுக்க உழைத்தவர் பயிற்சியாளர் பாப் பவுமன்தான். யாருமே ஒரு பொருட்டாக நினைக்காத சிறுவனைப் பார்த்த நிமிடத்தில் கணித்தது மட்டுமின்றி, அவன் பிரம்மாண்ட வெற்றியைப் பெற கவனச்சிதறல் கூடாது, சின்னக் கொண்டாட்டம்கூடக் கூடாது என்று அவர் சொன்ன அந்த ஒரு நிமிட அறிவுரையும்தான் மைக்கேல் பெல்ப்ஸை ஒலிம்பிக் சாதனையாளராக்கியது!

13/04/2021

2011 Cricket world cup : அந்த ஒரு நிமிடம் 1: கிரிக்கெட்டில் வலது இடது சங்கமம்!


அது 2011ஆம் ஆண்டு. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம், கட்டுக்கடங்காத கூட்டம். 275 ரன் என்று இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி விரட்டத் தொடங்கியது. வந்த வேகத்தில் வீரேந்திர சேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் நடையைக் கட்டினார்கள். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனம் உடைந்து சுக்குநூறானது. 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக் கோப்பையை ஏந்துமா அல்லது கனவாகிப் போகுமா என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

அடுத்தது யார்?

ஆனால், கவுதம் கம்பீரும் விராட் கோலியும் இலங்கை பந்துவீச்சைச் சமாளித்து விளையாடி, ரன்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், அன்றைய கேப்டன் தோனி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், சேவாக் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் இறங்கினார். மூத்த வீரர் சச்சின் கொடுத்த யோசனையைப் பற்றியே ஆலோசனை. கோலி, கம்பீரில் யாராவது ஒருவர் அவுட் ஆனால், யாரைக் களமிறக்குவது என்று பரபரத்தார்கள்.

சச்சின் தெரிவித்த அந்தத் திடீர் யோசனை இதுதான். ‘இடதுகை ஆட்டக்காரர் கம்பீரும் வலதுகை ஆட்டக்காரர் கோலியும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே யுவராஜ் சிங், தோனி என இரு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஒருவேளை வலதுகை வீரர் கோலி அவுட்டானால், களத்துக்கு வலதுகை பேட்ஸ்மேனான தோனியே களமிறங்குவது நல்லது. இடதுகை பேட்ஸ்மேன் கம்பீர் அவுட்டானால், இடதுகை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் களமிறங்குவது நல்லது’.

யோசனைக்குச் செயல்வடிவம்

கிரிக்கெட்டில் வலது, இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும்போது அது எதிரணி பந்துவீச்சாளர்களுக்குக் கூடுதல் சுமையையும் குழப்பத்தையும் தரும். இருவருக்கும் ஏற்றாற்போல பந்துவீச்சு முறையை மாற்ற வேண்டும். இதைப் பயன்படுத்தி ரன்களைக் குவிக்கலாம். விக்கெட்டையும் காப்பாற்றிக்கொள்ளலாம். இதுதான் அனுபவ வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த யோசனை. இதைப் பற்றிதான் ஆலோசனை நடந்தது. இது கேப்டன் தோனிக்கும் சரியெனப்பட்டது.

அப்போதுதான் இலங்கை அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் முரளிதரன் பந்துவீசத் தொடங்கியிருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முரளிதரன் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் இருந்ததால், பயிற்சியின்போது அவருடைய பந்துவீச்சில் விளையாடிய அனுபவம் தோனிக்கு இருந்தது. எனவே, விக்கெட் விழாமல் அவருடைய பந்துவீச்சைச் சமாளித்து விளையாட முடியும் என்று தோனியும் தன் கருத்தைப் பகிர்ந்தார். இந்தத் திட்டம் அணிக்கு நல்லது என்கிற முடிவுக்கு எல்லோரும் வந்தனர்.

வெற்றிக்கான பாதை

114 ரன்களை இந்திய அணி எட்டியபோது வலதுகை ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்டமிழந்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் 4-வது வீரராகக் களமிறங்கிக்கொண்டிருந்த இடதுகை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் அடுத்து களமிறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், வலதுகை ஆட்டக்காரரான கேப்டன் தோனி களமிறங்கினார்.


மீண்டும் களத்தில் இடது (கம்பீர்), வலது (தோனி) ஆட்டக்காரர்களின் ஆட்டமே நீடித்தது. இந்த இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இது இந்திய அணியை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றது. 223 ரன்களில் இடதுகை ஆட்டக்காரர் கம்பீர் ஆட்டமிழந்த பிறகு, இன்னொரு இடது கை ஆட்டக்காரரான யுவராஜ் சிங் களமிறங்கினார்.

யுவராஜ் சிங்கும் (இடது) தோனியும் (வலது) சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கையின் குலசேகரா பந்துவீசியபோது, தோனி ஓங்கி அடித்த சிக்ஸ் பெவிலியனைத் தாண்டியபோது இலங்கை தோல்வியைத் தழுவியது. 28 ஆண்டுகால கனவு நனவானதில் நாடே குதூகலித்தது.

அனுபவம் பேசும்

அனுபவம் எப்போதுமே கைகொடுக்கும். அன்றைய தேதியில் இந்தியாவுக்காக 22 ஆண்டுகள் விளையாடியிருந்த அனுபவ வீரர் சச்சின், அந்த சில நிமிடங்களில் கொடுத்த யோசனை மிகப் பெரிய பலனைத் தந்தது. வெற்றி பெற சூழ்நிலைக்கேற்ப திட்டங்கள் தேவை. அதைத் துணிந்து செயல்படுத்த திறமையும் தேவை. அதைவிட முக்கியம், அணி விளையாட்டில் ஒருங்கிணைப்பு அவசியம். விளையாடும் எல்லோருமே ஒருங்கிணைப்புடன் இயங்கும்போதுதான் வெற்றி நம்மைத் தேடி வரும்.

(2011 உலகக் கோப்பையை இந்தியா வென்று ஏப்ரல் 2ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவு)


18/01/2021

Udayanidhi overtake M.K.Stalin : மு.க. ஸ்டாலினை ஓவர்டேக் செய்கிறார் உதயநிதி?


 

திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் நேரடியாகவே இளைஞரணி செயலாளராக ஆன உதயநிதி ஸ்டாலினின் ஆதிக்க கிராஃப் கட்சியில் கிடுகிடுவென மேலே உயர்ந்துகொண்டிருக்கிறது. கட்சித் தலைவரைத் தாண்டி முக்கியத்துவம் கொடுப்பது, கட்சி நடவடிக்கையில் தலையிடுவது, சர்ச்சையாகப் பேசுவது எனச் சென்றுக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கைகள் இன்று கட்சித் தலைவருக்கே உத்தரவிடும் அளவுக்கு மாறியிருக்கிறது.

நாடறிந்த நடிகர் என்ற பிம்பத்தோடு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பிரசாரத்துக்குக் களமிறக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். அதற்கு முன்புவரை கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யின் நிர்வாக இயக்குநர் என்ற அளவில்தான் உதயநிதிக்கும் கட்சிக்கும் தொடர்பு இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் உதயநிதியின் பிரசாரத்தையும் இடைச்செருகலாக செருகினார்கள். 

விளைவு, பல ஆண்டுகளாக இன்னொரு அதிகார மையமாகப் பார்க்கப்பட்ட இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு தாரை வார்க்கப்பட்டது. 35 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே திமுக இளைஞரணியின் உறுப்பினராக முடியும் என்ற விதியை வைத்துக்கொண்டு, 40 வயதைத் தாண்டிய உதயநிதிக்கு மகுடம் சூட்டப்பட்டது. ஆனால், மு.க. ஸ்டாலினே 60 வயதைத் தாண்டிய பிறகும் அந்தப் பொறுப்பில் இருந்தவர்தானே என்ற எதிர்க்கேள்வியோடு, உதயநிதிக்கு கட்சியில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளரானது முதலே காட்சி மாறியது. கருணாநிதி - மு.க. ஸ்டாலின் காலம் போல மு.க. ஸ்டாலின் - உதயநிதி என்றானது. 

கருணாநிதி தலைவராக இருந்தபோது மு.க. ஸ்டாலினை எப்படி அணுகினார்களோ, அதுபோல உதயநிதியை கட்சி சீனியர்கள் அணுகும் சூழ்நிலை ஏற்பட்டது. மு.க. ஸ்டாலினாவது படிப்படியாக கட்சியில் வளர்ந்து பொறுப்புகளில் வந்தவர் என்ற அடிப்படையில், மு.க. ஸ்டாலினுக்கு எதிரான பிரசாரங்கள் எளிதில் முறியடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல், மு.க. ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது விமர்சனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்திருப்பதை தவிர்க்க முடியவில்லை.

69 வயதான கே.என். நேரு போன்ற சீனியர்கள், வயதில் இளையவரான உதயநிதியிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றது சமூக ஊடங்களில் கேலி, கிண்டாலுக்கு உள்ளானதைப் பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு திமுகவில் உதயநிதிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு கட்சி தலைமையை முறைத்துக்கொண்டு பாஜகவுக்கு சென்ற கட்சி துணை பொதுச்செயலாளரான வி.பி.துரைசாமி, ராஜ்ஜிய சபா எம்.பி. பதவியைப் பெறுவதற்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதி ஸ்டாலினிடம் கெஞ்சினேன் என்று கூறியதையும் இப்போது நினைப்படுத்திக்கொள்வது சாலப்பொருந்தும். 

கருணாநிதி ஆக்டிவாக இருந்தவரை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை தன் விருப்பப்படியே நிரப்புவார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தாலும் மாவட்டச் செயலாளர் நியமனத்தில் உதயநிதியின் நேரடி தலையீடு இருப்பதாக சீனியர்களே குற்றம் சாட்டும் அளவுக்கு பவர் சென்டராக மாறியுள்ளார் உதயநிதி. 

உதாரணத்துக்கு சென்னை மேற்கு மாவட்டத்துக்கு சீனியர்கள் பலர் இருக்க, தனக்கு நெருக்கமான சிற்றரசு என்ற இளைஞரணியைச் சேர்ந்தவரை மாவட்டச் செயலாளர் ஆக்கினார் உதயநிதி.இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலக நேரிட்டது. இதேபோல நாமக்கல் மாவட்ட பொறுப்பாளராக ராஜேஷ் நியமிக்கப்பட்டதிலும் திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டதிலும் தன்னுடைய நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழி திருச்சி மாவட்ட பொறுப்பாளராக்கப்பட்டதிலும் உதயநிதியின் தலையீடு இல்லாமல் இல்லை. இதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே மாவட்டச் செயலாளர்கள் நியமனம், தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பு போன்றவற்றில் உதயநிதியின் ஆதிக்கம் இருந்து வருவதாக அக்கட்சியினரே சொல்கிறார்கள். 

உச்சகட்டமாக எம்எல்ஏவாக இல்லாத உதயநிதியை தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் புகழ்ந்து பேசும் அளவுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றவராக மாறியிருக்கிறார். இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்றதன் ஓராண்டையொட்டி கத்தார் திமுக பிரிவு சார்பாக உதயநிதியைப் பாராட்டி பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. அதுதொடர்பான செய்தி உடனடியாக ‘முரசொலி’யிலும் வெளியானது. கட்சி நிறுவனரான சி.என்.அண்ணாதுரைக்குக் கூட இதுபோன்ற புகழ் பாடல்கள் இயற்றப்பட்டதில்லை என்கிறார்கள் திமுகவினர். 

கட்சி போஸ்டர்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, கட்சித் தலைவர் படங்களே மட்டுமே இடம் பெற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டும் கட்சிக்குள் அதை யாரும் கண்டுகொள்ளாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்படி திமுகவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள உதயநிதி, பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லும்போதெல்லாம் நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று கிண்டலான உடல்மொழியில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கலாய்ப்பது அக்கட்சிக்கே தீங்காகும் என்பதை நினைக்காமல் பேசிவருகிறார். 

அண்மையில் அப்படி கிண்டலாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, “எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படித்தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு” என்று பேசி சலசலப்புக்கு வித்திட்டார் உதயநிதி. பெண்ணை அவதூறாகப் பேசியதாக எதிர்க்கட்சிகளைத் தாண்டி கூட்டணி கட்சியினரே கண்டிக்கும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு இருந்ததை மறுக்க முடியாது. இதுவரை கட்சிக்குள் மட்டுமே தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த உதயநிதி, 

தற்போது கட்சி கூட்டணி பங்கீடு, தொகுதி பங்கீடு வரை தன்னுடைய ஆதிக்கத்தை மெல்ல பரவவிட்டு, கூட்டணி கட்சிகளையும் சீண்டத் தொடங்கியிருக்கிறார். கருணாநிதி இருந்தபோது மு.க. ஸ்டாலின் என்னத்தான் அதிகாரம் பெற்ற, அனுபவம் பெற்ற கட்சி நிர்வாகியாக இருந்தாலும்கூட, கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில்தான் முதன் முறையாக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட ஆரம்பித்தார். அதுவும் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக தடுமாறிய காரணத்தால். 

அதற்கு முன்பாக 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆலோசனைகள் மட்டுமே மு.க. ஸ்டாலின் வழங்கினார். ஆனால், 2011 சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பும் சரி, திமுகவுக்காக பிரச்சாரம் செய்யும் வேலையை மட்டுமே ஸ்டாலின் பார்த்தார். வேட்பாளர் தேர்வில்கூட மு.க.ஸ்டாலின் தலையிட்டதில்லை. அதிகபட்சமாக தனது ஆதரவாளர்களை வேட்பாளராக அறிவிக்க பரிந்துரை செய்வதோடு நிறுத்திக்கொள்வார் ஸ்டாலின். தேர்தல் வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு போன்றவற்றையெல்லாம் கருணாநிதிதான் இறுதி செய்வார். ஆனால், தற்போது அந்தக் காட்சியும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. 

இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்று முழுமையாக 2 ஆண்டுகள்கூட நிறைவடையாத உதயநிதி, திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும், எந்த கட்சிகள் இருக்க கூடாது, யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தெல்லாம் வெளிப்படையாகவே பேசும் அளவுக்கு தற்போது செயல்பாடுகள் மாறியுள்ளன. தனது தந்தைதான் திமுக தலைவர் என்பதையே மறந்துவிட்டு தலைவரான ஸ்டாலின் பேச வேண்டியதை எல்லாம் பேசி வருகிறார் உதயநிதி.

“மயிலாப்பூர், தியாகராய நகர் தொகுதி இந்த முறை கண்டிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கப்படாது. இந்த தொகுதியில் கண்டிப்பாக திமுக வேட்பாளர்கள்தான் போட்டியிடுவார்கள். திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க கூடாது, திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என்று உதயநிதி பொதுவெளியில் பேசியிருப்பது மு.க.ஸ்டாலினை அவர் ஓவர்டேக் செய்ய முயல்கிறாரா என்கிற கேள்விக்கு வித்திட்டுள்ளது. 

கூட்டணி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கட்டளையிடுகிறாரா என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது மு.க.ஸ்டாலின் தனக்கு கொடுத்த வேலைகளை மட்டுமே செய்வார். தேர்தல் தொடர்பாக பொதுவெளியில் பேசுவதை முற்றிலும அவர் தவிர்த்துவிடுவார். ஆனால், தற்போதைய இளைஞர் அணிச் செயலாளர், தலைவரை விஞ்சிய சூப்பர் பவர் சென்டராக உருவெடுக்கும் அளவுக்கு மாறியுள்ளார். உதயநிதியின் இந்த பேச்சு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை நிச்சயம் யோசிக்க வைக்கும்.

ஏற்கெனவே திமுக த லைமை திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைக்கும் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் தான்தான் தொகுதிகளை ஒதுக்க உள்ளது போல் உதயநிதி பேசியிருப்பது அரசியல் கள நிலவரத்தை முழுமையாக அறிந்து கொள்ளாததன் வெளிப்பாடு என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். இதுபோன்ற உதயநிதியின் பேச்சுகள் கூட்டணி கட்சிகளை உள்ளடி வேலை பார்க்கவோ, அல்லது கடைசி நேரத்தில் கழுத்தை அறுக்கவோ காரணமாகிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். . உதயநிதியின் இந்தஎல்லையில்லா அதீத ஆதிக்கத்துக்கு ‘கிச்சன் கேபினெ’ட்டையும் அக்கட்சிக்குள் காரணமாகக் கூறுகிறார்கள். 

கருணாநிதி இருந்தவரை மு.க. ஸ்டாலினால் தலையெடுக்க முடியாமல் போனது. அதுபோன்றதொரு நிலை தன்னுடைய மகனுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே விரைவாக கட்சிக்குள் வளர்த்துவிடப்பட வேண்டும் என்று ‘கிச்சன் கேபினெட்’டின் அழுத்தத்தை கட்சி தலைமையால் மீற முடியவில்லை என்கிறார்கள். பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இல்லாமல் இருக்கும் திமுக, வாழ்வா, சாவா என்ற தேர்தலில் வெற்றி பெறுவதை இதுபோன்ற அழுத்தங்கள், குறுக்கீடுகள் தடுத்துவிடும் என்பதை அக்கட்சி உணரவில்லையோ என்ற இயல்பான கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.