23/06/2020

தோல்வியும் சூப்பர் ஸ்டாராக்கும்!


கொரோனா பீதிக்கு மத்தியில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் (34) தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டது, கடந்த வாரம் பேசுபொருளானது. ‘எம்.எஸ்.தோனி-அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் பாலிவுட் முதல் கிரிக்கெட் ரசிகர்கள்வரை அனைவருடைய மனதிலும் இடம்பிடித்தவர் சுஷாந்த் சிங். ஆனால், அவருடைய பட வாய்ப்புகளை பாலிவுட் மூத்த நடிகர்களும் வாரிசு நடிகர்களும் தட்டிப் பறித்ததாகவும், அதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காரணம் உண்மையென்றால் அது துரதிர்ஷ்டம். பல முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதன்பின் தங்கள் துறையில் ஜொலித்து சூப்பர்ஸ்டாராக வலம்வந்தவர்கள் நம் கண் முன் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் மர்வன் அட்டப்பட்டு சிறந்த எடுத்துக்காட்டு.

‘டக் அவுட்' புகழ்

1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை அணி வென்ற பிறகு, அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் புகழ் வெளிச்சம் பெறத் தொடங்கினார்கள். அந்தப் புகழ் வெளிச்சத்தில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர் அட்டப்பட்டு. ஆனால், இலங்கை அணி உலகக் கோப்பை வென்ற பிறகு, அந்த அணியில் அறிமுகமான ஜெயவர்த்தனே, சங்கக்கார, தில்சன் ஆகியோருடன் சேர்த்து அறியப்பட்டவராகவே அவர் இருக்கிறார். உண்மையில் அட்டப்பட்டு 1990-ம் ஆண்டே இலங்கை அணியில் அறிமுகமானவர்.

கத்துக்குட்டி அணியாக இலங்கை அறியப்பட்டபோதே தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். அந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக சண்டிகரில் விளையாடியதுதான் அவருடைய முதல் போட்டி. அந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’ ஆனார். முதல் சர்வதேசப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ‘டக்’ ஆகும் வீரரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்தப் போட்டிக்கு பிறகு 21 மாதங்கள் அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

ஒரு நாள் போட்டியிலும்...

மீண்டும் 1992-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆஸ்திரேலிய அணி இலங்கை வந்தபோது அட்டப்பட்டுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்டம் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’தான். அந்தப் போட்டியில் 181 ரன் என்ற எளிய இலக்கோடு இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. 133 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று இலங்கை இருந்தபோது, பேட்டிங் செய்ய வந்தார் அட்டப்பட்டு. ஆனால், துரதிர்ஷ்டம் இந்த இன்னிங்ஸிலும் விளையாடியது.

ஒரு ரன் எடுத்த நிலையில் அட்டப்பட்டு அவுட். அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக 16 ரன்களில் இலங்கை தோற்றுப்போனது. இந்தப் போட்டிக்குப் பிறகு மீண்டும் அணியிலிருந்து அட்டப்பட்டு விலக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அட்டப்பட்டு, 6 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார். டெஸ்ட் போட்டி மட்டுமல்ல, ஒரு நாள் போட்டிகளும் அவருடைய காலை வாரின.

வெளிச்சம் பிறந்தது

ஆனால், அவர் மனம் தளரவில்லை. மீண்டும் உள்ளூர்ப் போட்டிகளில் கவனம் செலுத்தினார். முதல்தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். 23 மாதங்கள் கழித்து 1994-ம் ஆண்டில் அவர் மீது இலங்கை அணியின் பார்வை பட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு. இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ‘பட்டக் காலிலேயே படும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த முறையும் துரதிர்ஷ்டம் அவரை விடவில்லை. அந்த டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’. எவ்வளவு நொந்துபோயிருப்பார்?

திறமை கொட்டிக் கிடந்தபோதும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் அவரைத் துரத்தியது. அணியிலிருந்து நீக்கப்பட்ட அட்டப்பட்டு, மீண்டும் அணிக்குள் வருவதே பெரும்பாடுதான் என்று நினைக்கப்பட்டது. ஆனால், மனம் தளராமல் உள்ளூர்ப் போட்டிகளில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்ட அட்டப்பட்டு, 37 மாதங்கள் கழித்து 1997-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாய்ப்பைப் பெற்றார்.

நியூசிலாந்துக்கு எதிராக டூனிடின் நகரில் நடந்த போட்டியில் களமிறங்கினார். பதற்றமும் பயமும் கலந்து களமிறங்கிய அட்டப்பட்டு, இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 25, 22 ரன்களை எடுத்தார். அவர் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் ரணதுங்கா அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கினார். அந்தப் போட்டிக்குப் பிந்தைய 6-வது போட்டியில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். அடுத்த இரு போட்டிகளில் முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.

மறக்கக்கூடாத கதை

அதன்பின்னர் இலங்கை அணியில் டெஸ்ட், ஒரு நாள் என இரு வடிவங்களிலும் அட்டப்பட்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தவிர்க்க முடியாத வீரரானார்; நம்பிக்கை நட்சத்திரமானார். அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டனாக உயர்ந்தார். தொடக்கத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தோல்விகளையும் அவமானங்களையும் துரதிர்ஷ்டங்களையும் ஒருசேர சந்தித்த அட்டப்பட்டு, இலங்கை அணிக்காக பின்னாளில் 90 டெஸ்ட் போட்டிகள், 268 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி சிறந்த, ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் என்ற பெயருடன் 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. தடங்கல்கள் வரும்; சஞ்சலங்கள் வரும். ஆனால், அவற்றிலிருந்து ஒவ்வொரு முறையும் அனுபவம் கிடைக்கும். ஏன் சறுக்கினோம் என்ற அனுபவத்தை நேர்மறையாக அணுகி, விடா முயற்சியுடன் களமிறங்கும்போது வெற்றி ஒரு நாள் நம்மை நோக்கிவரும். 1990-97 வரை 8 ஆண்டுகள் அணியில் இடம் கிடைக்காமல் அல்லாடிய மர்வன் அட்டப்பட்டுவின் வாழ்க்கை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய நிஜக் கதை!

- இந்து தமிழ்

20/06/2020

சீனாவின் ஐந்து விரல்கள் உத்தி... அத்துமீறல்களின் பின்னணி கதை!


கரோனா பீதிக்கு அப்பால் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததுதான் தற்போது ஹாட் டாபிக். இதனால், எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. சீனப் பொருட்கள் புறக்கணிப்பு என்ற கோஷங்கள் ஆளும் பாஜகவினரால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நாடு கடந்த திபெத்திய தலைவர் லோப்சங் சங், இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை பொதுவெளியில் கவனம் ஈர்த்துள்ளது. 

“லடாக்கில் சீனா மேற்கொண்ட அத்துமீறல் எதிர்பார்த்ததுதான். சீனாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தந்திரத்தை ‘திபெத் உத்திகளின் ஐந்து விரல்கள்’ (Five Fingers of Tibet strategy) என்று கூறுவார்கள். திபெத்துக்கு எதிராக சீனா தலைவர் மாசே துங் இதைத்தான் பயன்படுத்தினார். இதைச் சொல்லித்தான் சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்தார்கள். திபெத்தை முழுமையாக சீனா ஆக்கிரமித்த பிறகு அதன் தேசிய தலைவர் மாசே துங் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘திபெத் என்பது சீனாவின் பாதம். அதை கைப்பற்றிவிட்டோம். இனி பாதத்தின் ஐந்து விரல்களை கைப்பற்ற வேண்டும்.’ என்று சொன்னார். திபெத்தின் ஐந்து விரல்கள் என்பது லடாக், நேபாளம், பூடான், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய ஐந்து பகுதிகள்தான்.” - லோப்சங் சங் விடுத்த எச்சரிக்கை இதுதான்.

சீனாவின் இந்த ‘ஐந்து விரல் உத்தி’ என்பது என்ன? அப்போது 1940. சீனப் புரட்சியின் மூலம் மாசேதுங் தேசிய தலைவராக உயர்ந்தார். அப்போதிருந்தே ‘ஐந்து விரல்’ உத்தியைப் பற்றி பேசிவந்திருக்கிறார் மாசேதுங். திபெத்தும் அதன் அருகிலுள்ள பகுதிகளும் ஒரு காலத்தில் சீனப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்தன என்று எப்போதும் நம்பினார் மாசேதுங். அதை அடைய வேண்டும் என்றும் விரும்பினார். 1950-களில் இருந்தே சீனா அண்டை நாடுகளின் பல பகுதிகளின் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. காலங்களும் அந்நாட்டின் தலைவர்களும் மாறியபோதும், தனது அதிகாரத்தை இப்போது வரை விடாமல் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறது சீனா.

ஒரு காலத்தில் ஆசியாவில் சீனாவின் அண்டை நாடான மங்கோலியாதான் மிகப் பெரிய பேரரசாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்று வரலாற்று சான்றுகளும் உண்டு. ஆனால், சீனாவின் பேரரசில் திபெத் இருந்தது என்று சீனா விடாப்பிடியாக நம்பியது. சீனத் தலைவர் மாசேதுங் திபெத்தை சீனாவின் பாதம் என்றும், அந்தப் பாதத்தின் ஐந்து விரல்கள் லடாக், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், நேபாளம், பூடான் என்றும் வர்ணித்தார்.

சீனா தங்கள் பாதம் என்று வர்ணித்த திபெத்தில் சீனப் படைகள் 1959-ல் நுழைந்து, அந்தப் பகுதியை முழுமையாக கைப்பறியது. சீனாவின் அந்த அத்துமீறலை
லோப்சங் சங்
அப்போது உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை. சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.   திபெத்தின் சீனப் படைகளின் இந்த ஆக்கிரமிப்பை அமைதியை விரும்பும் நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் கூட ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்பவில்லை. அன்று அரசியல் அடைக்கலம் கோரிய திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்தது. அவர் தனது மிகப் பெரும் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குள் வந்தார். அன்று திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்ததைத் தடுத்திருந்தால், இன்று மற்ற பகுதிகளில் அதன் உரிமைக் கோரலை தடுத்திருக்க முடியும். 

ஐந்தாம் விரல் சிக்கிம்

இன்று இந்தியாவின் ஒரு மாநிலமாக உள்ள சிக்கிம், 1975-ம் ஆண்டுக்கு முன்புவரை தனி நாடு போல இருந்தது. சிக்கிமில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி 1975-ல் சிக்கிம் இந்தியாவின் ஓர் அங்கமானது. சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது முதலே சிக்கிமில் ஊடுருவல் அல்லது எல்லையில் நடமாட்டம் மேற்கொள்வதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது சீனா.
 
நான்காம் விரல் அருணாச்சல்

வடகிழக்கு எல்லைப்புற முகமை (North East Frontier Agency) என்று அழைக்கப்பட்ட வடகிழக்கு எல்லைப்புற பிரதேசங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் ஒன்றியப் பகுதியாகவும், சுதந்திர இந்தியாவில் மாநிலங்களாகவும் மாறின. ஆனால், அருணாச்சலப்பிரதேசம் தங்களுடைய பகுதி என்று சீனா கூறத் தொடங்கியது. 1962-ம் ஆண்டில் இந்திய - சீனா இடையே போர் நடந்தபோது அருணாச்சலப்பிரதேசத்தில் மிக ஆழமாக ஊடுருவியது சீனா. அருணாச்சலப்பிரதேசத்தில் பல பகுதிகளை சீனா கைப்பற்றியது. இன்று வரையிலும் அருணாச்சலப்பிரதேசத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.

அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய  தலைவர்கள் செல்லும்போதெல்லாம், அதிகாரப்பூர்வமாக எதிப்பு தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது சீனா. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ளவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதை சீனா ஏற்கவில்லை. அருணாச்சல்பிரதேசத்திலிருந்து சீனா செல்வோருக்கு விசா வழங்குவதில்லை. அருணாச்சலப்பிரதேசம் அருகே சீனப் படைகள் முகாமிட்டு தொந்தரவு தருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது சீனா.

மூன்றாம் விரல் நேபாளம்

சீனா குறிப்பிடும் மூன்றாவது விரல் நேபாளம். ஒரு காலத்தில் நேபாளத்தின் பரம எதிரியாக சீனா இருந்தது. திபெத்தை சீனா கைப்பற்றியது முதலே, அது தங்களுக்கு ஏற்பட்ட காயமாக நேபாளம் நினைத்தது. நீண்ட காலமாகவே நேபாளத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கோரிவருகிறது. அப்போது முதலே நேபாளம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தியாவின் படைகள் நேபாளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சீனாவின் அச்சத்தி போக்கிவந்திருக்கின்றன. 

கடந்த 70 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நேபாளத்துக்கு இந்த உதவியை செய்துவருகிறது இந்தியா. ஆனால், இன்று நேபாளத்தின் எதிரி இந்தியா என்று அங்கே கட்டமைக்கப்படுகின்றன. இந்தியாவின் மூன்று பகுதிகளை  தங்கள் வரைப்படத்தில் இணைத்து சீண்டிப் பார்க்கிறது நேபாளம். இதில் சீனாவின் ஐந்து விரல் உத்தியை  நேபாளம் மறந்துவிட்டதுதான்  நகைமுரண்.

இரண்டாம் விரல் பூடான்

கிழக்கு இந்தியாவின் முடிவில் உள்ள ஓர் அழகிய நாடு பூடான். இந்த நாட்டின் மீதும் சீனா தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்றுவருகிறது. நீண்ட காலமாகவே பூடனை சீனா உரிமை கொண்டாடிவருகிறது. இதுவும் சீனாவின் ஐந்து விரல்கள் உத்திகளில் ஒன்றுதான். 
சீனாவும் அண்டை நாடுகளும்

இந்தியாவுக்கு பூடானுக்கும் ராணுவ ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பூடானுக்கு இந்தியா ஆதரவு வழங்கிவருகிறது. பூடானின் பாதுகாப்பில் இந்தியப் படைகள் பங்காற்றிவருகின்றன. நீண்ட காலமாகவே சிறிய நாடான பூடானில் கவர்ச்சிக்கரமான அன்னிய முதலீடுகளை வழங்கி அந்நாட்டை கவரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுவருகிறது. ஆனால், சீனாவின் இந்த உதவிகளை பூடான் இது நாள் வரை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது.  

முதல் விரல் லடாக்

சீனாவின் முதலாவது விரல் லடாக். சீனாவால் அதிகம் உற்று நோக்கப்படும் பகுதி இது. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் அதிகளவில் ஊடுருவல்களை சீனா நிகழ்த்தி உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்தப் பிராந்தியத்தில் சீனா ஆக்கிரமித்துள்ளது. சீனா ஆக்கிரமிப்பு செய்யும் வரை, அக்சாய்சின் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்று அக்சாய்சின்னில் உட்கார்ந்துகொண்டு கல்வான் பள்ளத்தாக்கு வரை முன்னேறி வந்துள்ளது சீனா. கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தம் என்று பகிரங்கமாக உரிமை கொண்டாடவும் செய்கிறது சீனா.

அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், லடாக், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளில் சீனா எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும் இதன் அடிப்படையில்தான்.

- இந்து தமிழ் ஆன்லைன்
 

17/06/2020

1999: அதிர்ஷ்ட ஆஸ்திரேலியா; துரதிர்ஷ்ட தென் ஆப்பிரிக்கா!


உலகக் கோப்பை கிரிக்கெட் நாக் அவுட் போட்டிகளில் எத்தனையோ மறக்க முடியாத ‘கிளாஸிக்’ ஆட்டங்கள் இருந்தாலும், 2019 உலகக் கோப்பை இறுதியாட்டத்துக்கு முன்புவரை மகுடம் வைத்த ஆட்டம் என்றால், அது 1999-ல் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டிதான். மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கும், கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு சென்றிருக்க வேண்டிய  தென் ஆப்பிரிக்க அணி தலை கவிழ்ந்து ஊருக்குக் கிளம்பியதும் நடந்த ஆட்டம் அது.

1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வலுவான அணி, கோப்பை வெல்லும் அணி எனக் கணிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்கா. லீக் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகளைக் கடந்து அரையிறுதிக்கு வேகமாக முன்னேறியது தென் ஆப்பிரிக்கா. சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. அதற்கு முன்பே தென் ஆப்பிரிக்காவுக்கு அரையிறுதி ‘பர்த்’ ரெடியாகிவிட்டது. என்றாலும் ஆஸ்திரேலியாவை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 272 ரன்களைக் குவித்தது. 

272 என்னும் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தட்டுத்தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஆபத்பாந்தவன் ‘கூல் கேப்டன்’ ஸ்டீவ் வா, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 120 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தன்னுடைய அணி வெல்ல உதவினார். ஸ்டீவ் வா 56 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை கிப்ஸ் தவறவிட்டார். ரீபிளேயில், அவர் பந்தைப் பிடித்த அடுத்த வினாடியே, அதை தூக்கிப்போட முயற்சித்து, அது கீழே விழும். ஆனால், ஆட்டப் போக்கோடு பார்க்கும்போது கிப்ஸ் அந்த கேட்சை தவறவிட்டது போலவே இருக்கும். கிப்ஸ் செய்த இந்தத் தவறு கடைசியில் அந்த அணி உலகக் கோப்பையிலிருந்தே வெளியேற வைக்கும் என்று அப்போது தென் ஆப்பிரிக்க அணி  நினைத்து பார்த்திருக்காது.

அந்த கேட்சை தவறவிட்டபிறகு, கிப்ஸிடம் ஸ்டீவ் வா இப்படி சொன்னார். “நண்பா.. நீ தவறவிட்டது கேட்ச்சை அல்ல. உலகக் கோப்பையை” என்று. அது உண்மையானது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அரையிறுதிப் போட்டியில் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்தித்தது. எட்ஸ்பாஸ்டன் நகரில் இதே நாளில் (ஜூன் 17) நடைபெற்ற போட்டியில் அரையிறுதியில் இரு அணிகளும் மல்லுக்கட்டின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களை மட்டுமே சேர்க்க, எளிதில் வெல்லும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்தது. ஆனால், 61 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணியின் கிப்ஸ், காலீஸ், ரோட்ஸ், பொல்லாக் ஆகியோர் அமைத்த சிறுசிறு பார்ட்னர்ஷிப் அந்த அணியின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்தது.

கடைசி கட்டத்தில் அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய முழு பாரமும் குளூஸ்னர் தலையில் ஏறியது. கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டேமியன் ஃப்ளெமிங்கை எதிர்கொண்டார் குளூஸ்னர். மறுமுனையில் கடைசி ஆட்டக்காரரான டொனால்ட் நின்றார். குளூஸ்னருக்கு 9 ரன்கள் மிகச் சாதாரணம் என அனைவரும் நினைத்தனர். அந்த உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டம் காட்டி அவர் நான்கு முறை ஆட்ட நாயகன் விருது வென்று மிரட்டியதால், குளூஸ்னர் அந்த ரன்னை எட்டிவிடுவார் என்று எதிர்பார்த்தனர். அதுபோலவே,முதல் இரு பந்துகளிலும் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார் குளூஸ்னர். 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவை. தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிவிடும் என ஆஸ்திரேலிய வீரர்களே நம்பத் தொடங்கிய நேரத்தில் அதிசயம் நிகழ்ந்தது.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை அடித்துவிட்டு, வெற்றி ரன்னுக்காக குளூஸ்னர் ஓடினார். டொனால்டோ, அவரைப் பார்க்காமல் பந்தை பார்த்தபடி இருந்தார். குளூஸ்னர் ஓடிவந்துவிட்டதைக் தாமதமாகவே பார்த்த டொனால்ட், சுதாரித்து ஓடத் தொடங்கினார். வழியில் தடுமாறி டொனால்ட் மட்டையைக் கீழே போட்டு தடுமாறினார். அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் மார்க் வா, பந்தை பவுலரிடம் வீசினார். பவுலர் பதற்றப்படாமல் கீப்பர் கில்கிறிஸ்ட்டிடம் வேகமாக அதை உருட்டி விட்டார். அதைப் பிடித்து டொனால்ட்டை ரன்-அவுட் செய்தார் கில்கிறிஸ்ட். ஆட்டம் சமனில் முடிந்தது. ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்ததால், அதன் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா ‘சர்ப்ரை’ ஸாக நுழைந்தது. தென் ஆப்பிரிக்க ஊருக்குக் கிளம்பியது. 

தொடக்கத்திலிருந்து அற்புதமாக விளையாடி, கடைசியில் நம்ப முடியாத வகையில் சொதப்பி ‘சோக்கர்ஸ்’ என்னும் அடைமொழியோடு தென் ஆப்பிரிக்கா வெளியேறிய நாள் இன்று. 21 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்தப் போட்டியை இப்போது யூடியூபில் பார்க்க நேர்ந்தாலும், அதே பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொள்வதை கிரிக்கெட் ரசிகர்கள் உணர்வார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்த உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பசையாக ஒட்டியிருக்கும்.

01/06/2020

சாக்‌ஷி எனும் சாகசம்!


ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது தேசமே பதக்கத்துக்காகக் காத்திருக் கையில் கிடைக்கும் பதக்கத்துக்கு ஈடு இணையே இல்லை. ரியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைய மூன்று தினங்களுக்கு முன், அந்தப் பெண் வென்ற வெண்கலப் பதக்கமும் அப்படியானதுதான். அவர் வென்ற வெண்கலப் பதக்கம் இந்தியாவைப் பதக்கப் பட்டியலில் சேர்த்தது. அதோடு ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த அந்தப் பெண், சாக்‌ஷி மாலிக்.

ஹரியாணாவில் உள்ள ரோட்டக் என்ற நகரம்தான் சாக்‌ஷியின் சொந்த ஊர். அவருடைய தாத்தா, மல்யுத்த வீரர். சிறு வயதிலிருந்தே தனது மல்யுத்தப் பராக்கிரமங்களை பேத்தி சாக்‌ஷியிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் சொன்ன மல்யுத்தக் கதைகளால் சாக்‌ஷிக்கு அந்த விளையாட்டு மீது ஆர்வம் பிறந்தது. குஸ்தி, சண்டை என்றாலே ஒதுங்கிச் செல்லும் சிறுமிகளுக்கு மத்தியில் தாத்தா வழியில் மல்யுத்த விளையாட்டில் குதித்தார். மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டபோது சாக்‌ஷிக்கு 12 வயது. “மல்யுத்த விளையாட்டைத் தேர்வுசெய்தது என் வாழ்வில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு” என்று பின்னாளில் சாக்‌ஷி குறிப்பிடும் அளவுக்கு அந்த விளையாட்டில் புகழ்பெற்றார்.

தடைகள் தாண்டி

மல்யுத்த விளையாட்டில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில், வீட்டில் அதற்குப் பெரிய அளவில் ஆதரவில்லை. மல்யுத்த விளையாட்டில் ஈடுபட அவருக்குப் பலவிதத் தடைகள் ஏற்பட்டன. அவற்றைத் தாண்டித்தான் சாக்‌ஷியால் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. தன் மீது அவருக்கு இருந்த அபாரமான நம்பிக்கையால், விடாமுயற்சியுடன் பயிற்சிசெய்து அந்த விளையாட்டில் முன்னேறிவந்தார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடத் தொடங்கி பிறகு, அவர் பெற்ற வெற்றிகள், சர்வதேசப் போட்டிகளில் அவருக்குச் சிவப்புக் கம்பளத்தை விரித்துக்கொடுத்தன.

மறக்க முடியாத ஆண்டு

2010-ல் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாக்‌ஷி பங்கேற்கத் தொடங்கினார். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சாக்‌ஷி, 58 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று கவனம் ஈர்த்தார். முதல் சர்வதேசத் தொடரையே அமர்க்களமாகத் தொடங்கிய சாக்‌ஷியின் பக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வெற்றிக் காற்று வீசியது. 2014-ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச மல்யுத்தத் தொடரில் 60 கிலோ எடைப் பிரிவில் முதன் முறையாகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதே ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் நைஜீரிய வீராங்கனையை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014-ல் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். ஒரே ஆண்டில் மூன்று சர்வதேசத் தொடர்களில் சாக்‌ஷி பெற்ற வெற்றி, அவரது ஒலிம்பிக் கனவை அதிகப்படுத்தியது.

ஒலிம்பிக் வாய்ப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 2015-ல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி, பயிற்சியாக அமைந்தது. அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினாலும், ஒலிம்பிக் போட்டிக்கு முழுமையாகத் தயாராக அது உதவியது. சாக்‌ஷி மாலிக் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறவில்லை. 2016 தொடக்கத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுதான் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது, யோகேஸ்வர் தத், வினேஷ் போகத் போன்ற நட்சத்திர வீரர், வீராங்கனைகள் மீதுதான் எல்லோருடைய கவனமும் குவிந்திருந்தது. ஆனால், இவர்கள் யாரும் பெரிதாகச் சோபிக்கவில்லை.

ஒலிம்பிக் பதக்கம்

மாறாக, மல்யுத்தப் போட்டிகளில் சாக்‌ஷி மாலிக் முன்னேறிவந்தார். காலிறுதிப் போட்டியில் சாக்‌ஷி மாலிக், ரஷ்யாவின் வெலெரியா கோப்லோவாவிடம் தோல்வியடைந்தார். வெலெரியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால் ‘ரெபிசேஜ்’ சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்‌ஷிக்குக் கிடைத்தது.

இந்தச் சுற்றில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்தப் போட்டியில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் சாக்‌ஷி. கடைசிவரை போராடித்தான் பதக்கம் வென்றார். 2016-ல் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெற சாக்‌ஷி வென்ற வெண்கலப் பதக்கம் உதவியது. இதன் பிறகுதான் பாட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 
இதற்கு முன்னர் பளு தூக்குதலில் கர்ணம் மல்லேஷ்வரி, குத்துச்சண்டையில் மேரிகோம், பாட்மிண்டனில் சாய்னா நேவால் என மூன்று பெண்கள் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தனர். அந்தப் பட்டியலில் சாக்‌ஷியும் சேர்ந்தார்.

மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் சாக்‌ஷிக்குக் கிடைத்தது. இதற்கு முன்பு ஜே.டி.ஜாதவ், யோகேஷ்வர் தத், சுஷில் குமார் ஆகியோர் மட்டுமே மல்யுத்தத்தில் பதக்கம் வென்றிருந்தனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு, தனது 12 ஆண்டு காலக் கனவு நனவானதாக சாக்‌ஷி குறிப்பிட்டார். சாக்‌ஷி பெற்ற வெண்கலம் அவரை ஒரே நாளில் தேசத்தின் நாயகியாக்கியது. ஆனால், அதற்காகக் கடின உழைப்பு, விடா முயற்சி, எப்போதும் மனம் தளராதிருப்பது எனப் பல பாடங்களை அவர் பயின்றார். அந்தப் பாடங்களே சாக்‌ஷிக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உறுதுணையாக இருந்தன. சாக்‌ஷியின் ஒலிம்பிக் வெற்றி அவருக்கு மட்டுமல்ல, இந்திய மல்யுத்தத்துக்கும் புதிய வாசலைத் திறந்துவைத்தது.

மல்லுக்கட்டி மோதும் இந்த விளையாட்டை நோக்கி இளம் பெண்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அன்று தாத்தாவின் மல்யுத்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்த சாக்‌ஷியைப் போல, இன்று சாக்‌ஷியின் வெற்றிக் கதையைக் கேட்டு, வட இந்திய கிராமங்களில்கூட மல்யுத்த விளையாட்டில் இளம் பெண்கள் காலடி எடுத்துவைத்தவண்ணம் உள்ளார்கள். மல்யுத்தத்தில் பிரம்மாண்ட சாதனையைப் படைத்த சாக்‌ஷியைப் பெருமைப்படுத்தும் கவுரவிக்கும் வகையில், அவர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 2016-ம் ஆண்டிலேயே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அவருக்கு வழங்கிக் கவுரவித்தது. 2017-ல் இந்தியாவின் நான்காவது பெரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் மத்திய அரசு வழங்கியது.

2017-ல் மல்யுத்த வீரர் சத்யவர்த்தை மணந்துகொண்ட பிறகு, இருவரும் சேர்ந்து மல்யுத்தப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை மனத்தில் வைத்து சாக்‌ஷி உழைக்கத் தொடங்கியிருக்கிறார் வெற்றிக்கொடியைப் பறக்கவிடும் கனவோடு!

இந்து தமிழ்,  03-02-2019