தொழில்முறை நீச்சல் போட்டியாளராக இருப்பது ஒரு ரகம். சாதனை நோக்கில் நீச்சல் போட்டியாளராக இருப்பது இரண்டாவது ரகம். புலா சவுத்ரி இந்த இரண்டும் சேர்ந்த கலவை. தொடக்கத்தில் தொழில்முறை நீச்சல் போட்டியாளராக உருவாகி, பின்னர் சாதனை படைக்கும் நோக்கில் நீச்சலில் புலிப் பாய்ச்சல் காட்டியவர் இவர். ‘இந்தியாவின் நீச்சல் ராணி’ எனப் புகழப்பட்டவர். தொழில்முறையாகக் குறைந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் சாதனை நோக்கில் இவர் நிகழ்த்தியவை மலைக்க வைப்பவை.
ஆறு வயதில் நீச்சல்
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் புலா சவுத்ரி. சிறுவயதில் மற்ற குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிய போது புலாவோ வீட்டருகே இருந்த குட்டையில் இறங்கி விளையாடுவாராம். தினமும் குட்டையில் நேரத்தைக் கழித்த , புலா கை, கால்களைத் தண்ணீரில் அடித்து நீந்தப் பழகியபோது அவருக்கு ஆறு வயது. தொடர்ந்து நீச்சலில் ஆர்வம் காட்டியதால், ஹூக்ளி ஆற்றில் நீச்சல் பழகப் பெற்றோர் அனுப்பி வைத்தனர். அந்த ஆற்றில் நீந்தித்தான் நீச்சல் நுணுக்கங்களை அவர் கற்றுக்கொண்டார்.
தங்கம் மேல் தங்கம்
மூன்றாண்டுகளுக்குள் நீச்சல் அத்துப்படியான நிலையில் போட்டிகளில் களம்கண்டார். ஒன்பது வயதில் தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்றார். அவரைவிட வயதில் மூத்தவர்கள் போட்டியிட்டபோதும் வெற்றி என்னவோ புலாவுக்குத்தான் கிடைத்தது. அவர் பெற்ற முதல் பதக்கம் இது. இதன்பிறகு தேசிய ஜூனியர், சீனியர் அளவிலான போட்டிகளில் புலா தொடர்ந்து பங்கேற்றார். தேசிய அளவில ஆறு தங்கப் பதக்கங்களையும் வென்றார்.
சர்வதேசப் போட்டிகளிலும் புலா பங்கேற்றிருக்கிறார். தெற்காசிய அளவிலான நீச்சல் போட்டி அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது. 1991-ல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற புலா, தங்கப் பதக்கம் வென்றார்.
கடல்களின் மீது காதல்
இந்த வெற்றிக்குப் பிறகு தொழிற்முறை நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதைக் குறைத்துக்கொண்ட புலா, நீண்டதூர நீச்சல் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டினார். அந்த ஆர்வம் பின்னர் வெவ்வேறு கண்டங்களில் கடல்களைக் கடக்கும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்தது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகளை எதிர்த்து நீந்தவும் பயிற்சியெடுத்தார். சுமார் இரண்டரை ஆண்டுகள் கடலிலேயே பொழுதைக் கழித்தார். கடல் பயிற்சி எதுவும் வீணாகவில்லை. 1989-ல் முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஆச்சரியமூட்டினார்.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்த பிறகு புலா சவுத்ரியின் தன்னம்பிக்கை அதிகரித்தது. தொடர்ந்து உலகில் உள்ள பல வளைகுடாக்களையும் கால்வாய்களையும் கடக்க அவர் முடிவு செய்தார். இதற்கிடையே 1996-ல் உள்நாட்டிலும் அவர் மிகப் பெரிய சாதனையை அரங்கேற்றினார். அப்போது முர்ஷிதாபாத்தில் தேசிய நீச்சல் போட்டி நடந்தது. அதில் நீண்டதூர நீச்சல் போட்டியில் பங்கேற்ற புலா சவுத்ரி 81 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வெற்றிவாகை சூடி, புதிய சாதனையையும் படைத்தார். அப்போது அவருக்கு 16 வயதுதான்!
ஏழு கடல் தாண்டி...
இந்த வெற்றிக்குப் பிறகு அவரது கவனம் முழுக்க கடலின் பக்கம் திரும்பியது. 1996-க்கும் 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களில் நீந்தி உலக சாதனை படைத்தார். 1998-ல் மத்திய தரைக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கும் ஜிப்ரால்டர் ஜலசந்தியை மூன்றரை மணி நேரத்தில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். அதன் பின்னர் ஐரோப்பாவில் உள்ள திர்ரேனியக் கடல், நியூசிலாந்தில் உள்ள குக் ஜலசந்தி, கிரீஸில் உள்ள டொரன்னஸ் வளைகுடா, கலிபோர்னியாவில் உள்ள கேட்டலினா கால்வாய் ஆகியவற்றை நீந்திக் கடந்தார்.
தென்னாப்பிரிக்காவின் ரோபன் தீவிலிருந்து கேப்டவுன் நகருக்கு நீந்தி சாதனை படைத்தார். 1999-ல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததன் பத்தாவது ஆண்டு தினத்தையொட்டி மீண்டும் ஆங்கிலக் கால்வாயை இன்னொரு முறை கடந்தார். இதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை இரண்டு முறை கடந்த முதல் ஆசியப் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.
2004-ல் இலங்கையின் தலைமன்னார் இந்தியாவின் தனுஷ்கோடி இடையிலான தொலைவை 14 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் உலகில் ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல்களில் நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார்.
அரசியலில் வெற்றிமுகம்
உலகில் உள்ள கால்வாய்களைக் கடந்த வெற்றிப் பெருமிதத்துக்கு நடுவே புலாவுக்குத் திருமணமும் முடிந்திருந்தது. புலாவின் வெற்றிக்கு அவருடைய கணவர் சஞ்சீவ் சக்கரவர்த்தி பக்கத்துணையாக இருந்தார். திருமணத்துக்குப் பிறகு அவர் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் சஞ்சீவ் ஊக்குவித்துவந்தார். வீட்டை அவர் கவனித்துக்கொண்டதால்தான், புலாவால் பயிற்சிகளுக்குச் செல்ல முடிந்தது. ஏழு கடல்களையும் நீந்திக் கடக்க முடிந்தது.
முதன்முறை ஆங்கிலக் கால்வாயைக் அவர் கடந்த பிறகு 1990-லேயே அர்ஜூனா விருதுக்குப் புலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இன்னொரு மகுடமாக அதே ஆண்டில் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வானார். ஒரே ஆண்டில் இரட்டை விருதுகளைப் பெற்று அந்த விருதுகளுக்குப் பெருமைச் சேர்த்தார். நீச்சலைத் தாண்டி அரசியலிலும் இறங்கி, மூழ்காமல் நீந்தி வெற்றிக்கொடி நாட்டினார் புலா. மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் அவர் இருந்ததே அதற்குச் சான்று.
ஊக்கமளிக்கும் புலா
தற்போது 48 வயதாகும் புலா சவுத்ரி, கொல்கத்தாவில் நீச்சல் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி, ஏராளமான இளம் பெண்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்துவருகிறார். நீச்சலில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் அடிக்கடி கேள்வி எழுப்பப்படுவது வாடிக்கை. அப்போதெல்லாம் அவர் சொல்லும் ஒரே பதில் இதுதான்: “ஒரே ஒரு நாள்கூட பயிற்சியைத் தவறவிட்டுவிடாதீர்கள். சாதிப்பதற்குக் கடினப் பயிற்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை. நீச்சலில் சாதிக்க வேண்டுமென்றால் கனவில்கூட கடல்தான் வர வேண்டும்”.
(வருவார்கள் வெல்வார்கள்)
- தி இந்து, 27/05/2018