தொலைக்காட்சிச் சேனல்களை மாற்ற மாற்ற படங்கள், நினைத்த வேளையில் இணையத்தில் பார்க்க படங்கள், வீட்டிலேயே ஹோம் தியேட்டரில் படங்கள் என முன்பைவிட சினிமாவுக்கும் மனிதர்களுக்குமான நெருக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்த வசதிகளெல்லாம் இல்லாத காலத்தில், திரையரங்குகளில் மட்டுமே சினிமா பார்க்க முடியும் என்ற காலம் எப்படி இருந்திருக்கும்? அதுதான் ‘டூரிங் தியேட்டர்’ காலம். சினிமாவுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பு ஆத்மார்த்தமாக இருந்த காலம்!
மால்களில் சொகுசு திரையரங்குகளில் நவீன ஒளிஒலியின் ஊடே டிஜிட்டல் வடிவத்தில், விலையுர்ந்த தின்பண்டங்களைக் கொறித்துக்கொண்டு படம் பார்க்கும் அளவுக்கு சினிமா திரையரங்குகளின் முகம் இன்று உருமாறிவிட்டது. ஆனாலும், பொதுவெளியிலோ டூரிங் தியேட்டரிலோ மணலைக் குவித்து, அதன் மீது உட்கார்ந்து, தன் அபிமான நட்சத்திரங்களைப் பார்த்து அதிசயத்து மகிழந்த காலம், ஒரு கனாக்காலம்!
சினிமாவிம் தொடக்கம்
இருபதாம் நூற்றாண்டு தொடங்கும் முன்பே தமிழ் நாட்டுக்குள் சினிமா காலடி எடுத்துவைத்துவிட்டது. 1895-ம் ஆண்டில் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த லூமியேர் சகோதரர்களால் சலனப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தப் படம் இரண்டே ஆண்டுகளில் சென்னையை எட்டிப் பார்த்தது. எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை 1897-ம் ஆண்டு பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டினார். சினிமா தியேட்டருக்கான பிள்ளையார் சுழி இங்கிருந்துதான் தொடங்கியது. 1900-ம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை மவுண்ட் ரோட்டில் வார்விக் மேஜர் எனும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. அந்த தியேட்டருக்கு எலக்ட்ரிக் தியேட்டர் என்று பெயர்.
பயணப்பட்ட திரையரங்கம்
தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு சென்னையில் தொடங்கினாலும், டூரிங் தியேட்டருக்கான முதல் படியை எடுத்துவைத்தவர் என்று சுவாமிக்கண்ணு வின்சென்ட்டைதான் சினிமா உலகம் கைக்காட்டுகிறது. திருச்சி ரயில்வேயில் டிராப்ட் மேனாக வேலைப் பார்த்துவந்த இவர், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை 1905-ம் ஆண்டில் தொடங்கினார். இதுதான் தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் தியேட்டர்’ இதுதான். பல ஊர்களுக்கு புரொஜெக்டரையும் படப் பெட்டியையும் தூக்கிக்சென்று, பொதுவெளியில் திரையைக் கட்டி இயேசுவின் வாழ்க்கை படங்களைத் திரையிட்டு காட்டினார் இவர். மவுனப் படங்களாக இருந்தாலும், இவை மக்கள் மத்தியில் சினிமாவுக்கான ஆதரவைக் கூட்டியது.
தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வரவு அதிகரித்த காலத்தில், டூரிங் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், இந்த டூரிங் தியேட்டர்கள் எல்லாமே சுவாமிக்கண்ணு வின்சென்ட் காட்டிய வழியில்தான் பயணித்தன.
ஆனால், திறந்தவெளியில் இல்லாமல் திரையரங்கு வடிவத்துக்கு இந்த டூரிங் தியேட்டர்கள் மாறின. ஒரு ஊரில் சினிமா காட்ட அங்கே தற்காலிகமாக ஒரு ஓலைக்கூரைக் கொட்டகையைக் கட்டினார்கள். அந்த ஊர்க்காரர்களும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே வந்து படம் பார்க்க வந்தார்கள். அந்த ஊரில் படங்களைக் காட்டி முடித்த பின், இனிமேல் சினிமாவுக்குக் கூட்டம் கூடாது என்ற நிலை வரும்போது கொட்டகையைப் பிரித்து, வேறொரு ஊருக்கு படப் பெட்டியுடன் கிளம்பினார்கள். அந்தக் காலத்தில் இப்படி திரையரங்கமே ஊர் ஊராகப் பயணப்பட்டது. அதனால்தான் ‘டூரிங் தியேட்டர்’ என்ற பெயரே வந்தது.
டூரிங் தியேட்டர்களின் வரவு
ஊர் ஊராகத் டூரிங் தியேட்டர்கள் பயணப்பட்ட காலத்தில், சினிமாவின் நீளமும் அதிகரித்தது. அதற்கேற்ப தற்காலிக சினிமா தியேட்டர்களுக்குப் பதிலாக நிரந்தர தியேட்டர்களுக்கான தேவையும் அதிகரித்தது. ஒரு வழியில் டூரிங் தியேட்டருக்குப் பிள்ளையார் சுழிப் போட்ட சாமிக்கண்ணு வின்சென்ட்தான் சினிமா தியேட்டருக்கான பயணத்தையும் தொடங்கிவைத்தார். ஆமாம், 1914-ம் ஆண்டில் தன் சொந்த ஊரான கோவையில் ‘வெரைட்டி ஹால்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான திரையரங்கத்தைக் கட்டி எழுப்பினார் இவர். இதே காலகட்டத்தில்தான் ஆர். வெங்கய்யா என்பரால் சென்னை மவுண்ட் ரோடையொட்டி கெயிட்டி தியேட்டர் உருவானது. இவையெல்லாம் நிரந்த தியேட்டர்களாக இயங்கத் தொடங்கின.
ஆனால், சினிமா மீதான மோகம் அதிகரித்த வேளையில் சிறிய ஊர்கள், கிராமங்களிலும் தியேட்டர்களுக்கான அவசியம் ஏற்பட்டது. முன்பைப்போல தற்காலிக கொட்டகைப் போடாமல், நிரந்தரமாக ஓலைக் கொட்டகை தியேட்டர்கள் அப்போது தமிழகத்தின் பல ஊர்களிலும் முளைத்தன. இப்படிக் கட்டப்பட்ட தியேட்டருக்கு நிரந்தர கொட்டகை என்ற அந்தஸ்தை அரசு வழங்கவில்லை. அவற்றுக்கு ‘டூரிங் தியேட்டர்’ என்றே அரசு உரிமம் வழங்கியது.
நிரந்தரமாகக் கட்டப்பட்ட டூரிங் தியேட்டர்களாக இவை இருந்தாலும், பெரிய அளவில் வசதிகளெல்லாம் இருக்காது. கிராமங்களில் இருந்த டூரிங் தியேட்டர்கள் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்டில்தான் இருந்தன. தென்னந்தட்டி அல்லது பனை ஓலைகள் வைத்துக் கூரை போட்டிருப்பார்கள். இருபக்கமும் ஏறத்தாழ தரையிலிருந்து மூன்றடி கீழே வரை கூரையைப் போட்டிருப்பார்கள். ஒரு வேளை பகலில் சினிமா ஓட்டினால் சாக்கைக் கொண்டு மூடுவதற்காக இந்தப் பாணியில் கூரையை அமைத்தார்கள். நீளமான கொட்டகையின் முன்புறம் திரையை இழுத்துக் கட்டியிருந்தார்கள். தரையில் மண் நிரம்பி கிடக்கும். இரண்டு பிரிவாக ஒரு குட்டிச் சுவர் வைத்துப் பிரித்திருப்பார்கள். ஆண்கள்-பெண்கள் பகுதி என்று இரு பகுதிள் இருக்கும். கொஞ்சம் உயரம் குறைவானவர்கள் மணலைக் குவித்து அதன்மீது உட்கார்ந்துகொள்வார்கள். தரையில் அமர, சேரில் அமர, மர நாற்காலியில் அமர என தனித்தனியாக காசும் வாங்குவார்கள். டூரிங் தியேட்டர்களில் பெரும்பாலும் பெண்களுக்கு முன்னுரிமை தருவார்கள். குறிப்பாக தரை டிக்கெட் முழுவதும் பெண்களுக்கே கொடுத்துவிடுவார்கள். ஏனென்றால், டிக்கெட் கிடைக்காமல் போகும் பெண்கள், திரும்பவும் சுலபத்தில் படம் பார்க்க வரமாட்டார்கள் என்பதால் இந்த முறையை டூரிங் தியேட்டர்கள் பின்பற்றின.
இடைவேளைகளுக்கு பஞ்சமில்லை
ஆரம்ப கால டூரிங் தியேட்டர்களில் படம் பார்க்க பொறுமையும் சகிப்புத்தன்மையும் ரசிகர்களுக்குத் தேவைப்பட்டது. ஏனென்றால், டூரிங் தியேட்டரில் ஒரே ஒரு புரொஜக்டர் மட்டுமே இருக்கும். ஃபிலிம் சுருள் ஓடிக்கொண்டேயிருக்கும். ஃபிலிம் சுருள் ஓடி முடிந்ததும், திரையில் சினிமா காட்சி முடிந்துவிடும். பிறகு அதைக் கழற்றிவிட்டு அடுத்த சுருளை வரிசைப்படி மாட்டி ஓட்டுவார்கள். இப்பொதெல்லாம் பாடல் காட்சிகள் வந்தால், தியேட்டரிலிருந்து எழுந்து ரசிகர்கள் செல்கிறார்களே, அதுபோல சுருளுக்குச் சுருள் ரசிகர்களுக்கு இடைவேளை கிடைத்தது. தியேட்டரில் மின் சப்ளை நின்றுபோனாலே, உடனே ரசிகர்கள் எழுப்பும் விசில் சத்தம் தியேட்டர்காரர்களையே அலற வைத்துவிடும். ஆனால், அந்தக் காலத்தில் இடைவேளை அடிக்கடி வந்தாலும், பொறுமையுடன் சினிமாவைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
ஆனால், இந்தப் பொறுமையும் ரசிகர்களின் சகிப்புத்தன்மையையும் டூரிங் தியேட்டர்கள் வேறு ஒரு வடிவில் நீர்க்கச் செய்தார்கள். அந்தக் காலகட்டத்தில் ஒலிப்பதிவுத் தொழில்நுட்பமும் வரவில்லை. அதனால், மவுனப்படங்களே தயாரிக்கப்பட்டன. மவுனப் படங்களாலும் டூரிங் தியேட்டர்களின் இடைவிடா இடைவேளையாலும் ரசிகர்கள் சோர்வடையாமல் இருக்க, சில வழிமுறைகளை அன்று கையாண்டனர் டூரிங் தியேட்டர் முதலாளிகள். படம் தொடங்குவதற்கு முன்பும் இடைவேளைகளின்போதும் திரையின் முன்னால் வந்து, நடந்த கதையையும் நடக்கப்போகிற கதையையும் ஒருவர் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். ரசிகர்களுக்காகக் கூத்துக்கலைஞர்களைச் சம்பளம் கொடுத்து நியமிக்கவும் செய்தார்கள். ரசிகர்களுக்கு அலுப்பு ஏற்படாதவகையில் கோமாளி நடிகர்கள் திரைக்கு முன்னால் வந்து நகைச்சுவையாகப் பேசுவும் ஏற்பாடு செய்தார்கள். ஒரு கட்டத்தில் சிலம்பாட்டம், குத்துச்சண்டை என ஏற்பாடுகள் மாறவும் செய்தன.
ஆத்மார்த்தமான தியேட்டர்
ஆனால், 1931-ல் முதல் ஒலிப்படமாக ‘காளிதாஸ்’ வந்தது. இதன்பிறகு மவுனப் படங்களுக்கு வேலையில்லாமல் போனது. அதோடு டூரிங் தியேட்டர்களில் ரசிகர்களின் அலுப்பைப் போக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கும் தேவையில்லாமல் போனது. ஒளி ஒலிப் படங்கள் வந்த காலகட்டத்தில் சினிமாவின் நீளம் அதிகரித்தது, டூரிங் தியேட்டர்களில் இரண்டு புரொஜெக்டர்கள் வந்தன. ஒரு புரொஜெக்டரில் ஃபிலிம் சுருள் ஓடி முடிகிற நேரத்தில், அடுத்த புரொஜெக்டரில் தயாராக மாட்டப்பட்டுள்ள ஃபிலிம் சுருள் ஓட ஆரம்பிக்கும். இதனால் இடைவேளைகளின் எண்ணிக்கையும் குறைந்தன.
இன்றைக்கு சுமார் இரண்டே கால் மணி நேர படத்தை பார்க்க சென்றாலே, படம் எப்போது முடியும் என நினைக்கும் அளவுக்கு நம்முடைய எண்ணம் உள்ளது. அன்றைய டூரிங் தியேட்டர் காலத்தில் ‘சிந்தாமணி’, ‘வள்ளி திருமணம்’, ‘அரிதாஸ்’, ‘சத்தியவான் சாவித்திரி’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘லவகுசா’ போன்ற 4 மணி நேரத்துக்கு மேல் ஓடிய நீளமான படங்களைச் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து மக்கள் பார்த்தார்கள் என்பதை நினைக்கும்போதே பிரமிப்புதான் ஏற்படுகிறது.
நகைச்சுவை காட்சி என்றால் வாய் விட்டு சிரிப்பது, வில்லன் நடிகருக்கு எதிராக உணர்ச்சி வேகத்தில் குரல் கொடுப்பது, கைதட்டி ஆரவாரம் செய்வது, வண்ணக் காகிதங்களை வீசுவது எல்லாம் டூரிங் தியேட்டர்களில் சாதாரணமாக நடக்கும். அபிமான நடிகர்கள் திரையில் தோன்றும் தருணத்தில் சூடம் காட்டிய வெறி பிடித்த ரசிகர்களையும் கண்ட காலம் டூரிங் தியேட்டர்கள் காலம்தான்.
இன்றைய நவீன திரையரங்குகளில் இடைவேளையில் எதையாவது கொரிக்க வேண்டும் என்றால், தியேட்டர் கேண்டீன் சென்று திண்பண்டங்களைக் வாங்க வேண்டியிருக்கும். வெளியே இருந்து தியேட்டருக்குள் திண்பண்டங்களை எடுத்து செல்ல அனுமதி வழங்குவதில்லை. ஆனால், டூரிங் தியேட்டர் கால இடைவேளையில் மக்களைத் தேடி திண்பண்டங்கள் வரும். சீடை, முறுக்கு, கடலை மிட்டாய், தட்டை, தேங்காய் பர்பி போன்ற எளிய திண்பண்டங்களை மக்கள் விரும்பி வாங்கி உண்டார்கள். வீட்டில் இருந்தே பைகளில் திண்பண்டங்களை கொண்டு வந்து, படம் முடியும்வரை சாப்பிட்டப்படி படம் பார்ப்பதிலும் அலாதி ஆனந்தம் உண்டு.
அன்றைய டூரிங் தியேட்டர் படங்களைப் பார்க்க ரசிகர்களை
வீதிவீதியாகச் சென்று அழைத்த சம்பவங்கள் எல்லாம் இன்று 50 வயதைக் கடந்தவர்களிடம் கேட்டால், கதை கதையாகச் சொல்வார்கள். அதற்காக சுவரொட்டிகளும், தெருத் தெருவாக மாட்டு வண்டி, தள்ளு வண்டியில் விளம்பரம் செய்து, ‘படத்தைக் காண வாருங்கள்; அபிமான நட்சத்திரங்களைத் தரிசிக்க வாருங்கள்’ என்று அழைத்த தருணங்கள் எல்லாமே டூரிங் தியேட்டர் காலத்தின் அங்கம்தான். மக்களோடு சினிமா மட்டும் பிணைப்பாக இருக்கவில்லை. சினிமா ரசனையைத் தாண்டி டூரிங் தியேட்டர்களும் மக்கள் மனதில் இரண்டற கலந்திருந்தன.
டூரிங் தியேட்டர்களின் வீழ்ச்சி
டூரிங் தியேட்டர்கள் இருந்த காலத்தில் நகரங்களில் வசதிகளுடன்கூடிய தியேட்டர்கள் அறிமுகமாயின. தமிழகத்தில் 1940-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டுவரை டூரிங் தியேட்டர்களின் ஆதிக்கம் இருக்கவே செய்தது. ஒரு கட்டத்தில் கிராமங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, டூரிங் தியேட்டர்கள் களையப்பட்டு திரையரங்குகளாக மாறின. இருந்தாலும் சில ஊர்களில் டூரிங் தியேட்டர்கள் சென்று படம் பார்ப்பதை 1990-களின் இறுதிவரை பார்க்க முடிந்தது.
காலமும் வளர்ச்சியும் கருணையின்றி பழமையைக் கொல்லும் என்ற விதிக்கு டூரிங் தியேட்டர்களும் விதிவிலக்காக இல்லாமல் போயின. காலத்துக்கு ஏற்ப டூரிங் தியேட்டர்கள் நவீன திரையரங்குகளாக மாறும் காலமும் வந்தது. அதுவும் 1990-களில் கேபிள் டி.வி. நுழைந்த பிறகு எப்போதும் டி.வி.யில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களைப் பார்த்து மக்கள் வீட்டுக்குள்ளே முடங்க ஆரம்பித்துதான், டூரிங் தியேட்டர்களின் மூடுவிழாவுக்கான தொடக்கமாக அமைந்தது. கேபிள் வரவு நவீன திரையரங்குகளையே ஆட்டம் காண செய்த வேளையில், டூரிங் தியேட்டர்கள் எம்மாத்திரம்? 2000-மாவது ஆண்டுக்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகி, டூரிங் தியேட்டர்கள் மட்டுமல்ல நவீன திரையரங்குகளும் கல்யாண மண்டபங்களாகவும் குடோன்களாகவும் வணிக வளாகமாகவும் மாறின. வளர்ச்சியின் பசி, டூரிங் தியேட்டர்களை வேகமாகவே விழுங்கியது.
ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் 1300 டூரிங் தியேட்டர்கள் இருந்ததாக ஒரு கணக்கு உண்டு. ஆனால், இன்று டூரிங் தியேட்டர்கள் இருந்த தடமே இல்லாமல் போய்விட்டன. சென்ற ஆண்டு பல பத்திரிகைகளிலும் ஒரு செய்தி வந்தது. ஆசியாவின் கடைசி டூரிங் தியேட்டரான திருப்பரங்குன்றம் லட்சுமி தியேட்டர் மூடப்படபோகிறது என்பதுதான் அந்தச் செய்தி. அசல் டூரிங் தியேட்டரான லட்சுமியைப்போல தமிழகத்தில் வேறு எங்கும் டூரிங் தியேட்டர்கள் இல்லை என்றே சினிமா ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், டூரிங் தியேட்டர்கள் இருந்த காலத்தில் கட்டப்பட்ட நிரந்த திரையரங்குகள் பல இன்று டூரிங் தியேட்டர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகின்றன. அதாவது, டிஜிட்டல் வசதிக்கு மாற முடியாத தியேட்டர்களை டூரிங் தியேட்டர்களாகவே பார்க்கப்படுகின்றன. இந்தப் பாணியிலான தியேட்டர்களும்கூட மூடுவிழாவை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன. சென்னை சோழிங்கநல்லூரையடுத்த நாவலூரில் ஒரு பழைய சினிமா தியேட்டரை அண்மையில் பார்க்க சென்றபோது அது தனது கடைசி மூச்சைவிட்டப்படி தரைமட்டமாகிக்கொண்டிருந்தது. இன்னும் சில ஊர்களில் டூரிங் தியேட்டர் பாணியிலான பழைய தியேட்டர்கள் வெற்றிகரமாக ஓடவும் செய்கின்றன. பல ஊர்களில் பழைய தியேட்டர்களைக் காவு வாங்க காலம் காத்துக்கொண்டிருக்க்கவும் செய்கிறது.
இன்றும் பழைய டூரிங் தியேட்டர் இருந்த இடத்தை கடந்து செல்லும்போது ஏதோ ஒரு சந்தோஷத்தை தொலைத்து விட்ட உணர்வு 45 வயதைக் கடந்தவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கலாம். அன்று 50 பைசா கொடுத்து டூரிங் தியேட்டரில் படம் பார்த்த அனுபவமும் சந்தோஷமும் இன்று நவீன திரையரங்குகளில் 153 ரூபாய் முதல் 2000 ரூபாய்வரை கொடுத்தது பார்க்கும்போது வருவதில்லை . ‘டூரிங் தியேட்டர்’, ‘சினிமா கொட்டகை’, ‘கீற்று கொட்டகை’, ‘டென்ட் கொட்டகை’ என பல செல்லப் பெயர்களில் அழைக்கப்பட்ட அந்தக்கால திரையரங்குகள் இன்றைக்கு இல்லாமல் போயிக்கலாம். ஆனால், அவற்றின் நினைவுகள் என்றும் நம்மைவிட்டு அழியாது.
(2017, தி இந்து தீபாவளி மலர்)