ஒரு மரணம் பொசுக்கும் ஐந்து நண்பர்களின் கனவையும் அதிலிருந்து மீள அவர்கள் செய்யும் திகுதிகுக் காரியங்களையும் சொல்லும் படம்தான் ‘நெருப்புடா’.
விக்ரம் பிரபுவுக்கும் அவருடைய நான்கு நண்பர்களுக்கும் தீயணைப்பு படை வீரர்களாக வேண்டும் என்பது சிறுவயது கனவு. இதற்காக சொந்தமாக ஒரு தீயணைப்பு வண்டியை வைத்துக்கொண்டு மக்களுக்கு உதவுகிறார்கள். தீயணைப்பு அதிகாரி நாகிநீடு இவர்களை அந்தப் பணியில் சேர்த்துவிட உதவுகிறார். தீயணைப்புப் படை தேர்வுக்கு முந்தைய நாள் ரவுடி விண்சென்ட் அசோகன் மரணமடைகிறார். விபத்தாக நடக்கும் அந்த மரணத்தில், விக்ரம் பிரபுவின் நண்பர் சிக்குகிறார். நண்பரைக் காப்பாற்றுவதற்காக விக்ரம் பிரபுவும் அவரது மற்ற நண்பர்களும் முயல்கிறார்கள். இன்னொரு புரம் ரவுடியின் மரணத்துக்கு காரணமானவர்களை அழிக்க ரவுடிக் கூட்டத்தின் தாதா மதுசூதனராவ் முயற்சிக்கிறார். இந்தப் போராட்டத்தில் யார் வெற்றி பெற்றார்கள்? விக்ரமும் அவரது நண்பர்களும் சிக்கலின்றி தீயணைப்பு வீரர்கள் ஆனார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
தீயணைப்புப் படை வீரர்களின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை படத்தின் முதல் காட்சியிலேயே அழகாக சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்குநர் அசோக். தீப்பற்றி எரியும் குடிசைகளிலிருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் விக்ரம் பிரபு காப்பாற்றும்போது பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொள்கிறது. ஆனால், அதன்பிறகு பரபரப்புக்கும் சுவாரஸியத்துக்கும் விடை கொடுத்துவிடுகிறார் இயக்குநர். படம் முழுவதும் அந்தக் கொலைக்காகப் பழி வாங்கத் துடிக்கும் தாதாவும் கொலை பழியிலிருந்து தப்பிக்க விக்ரம் பிரபுவின் நண்பர்கள் செய்யும் பகடித்தனமான காரியங்கள்தான் திரைக்கதையை ஆக்கிரமித்துவிடுகின்றன. இது கதையின் மீதான அழுத்தத்தை மொத்தமாகக் குறைத்துவிடுகிறது.
தீயணைப்பு பணியில் சேர்வதையே லட்சியமாக வைத்திருக்கும் விக்ரம் பிரபு, தன் நண்பர் செய்த கொலையை தான் செய்ததுபோல சொல்வது, மற்ற நண்பர்கள் ரவுடியைக் கடத்துவது என ஏடாகூடாமாகப் பேசுகிறார்கள், சிந்திருக்கிறார்கள். கடைசியில் தீயணைப்பு வேலையில் சேர முடியாமல் போய்விடுமோ என மருகுகுவது என கதையில் மட்டுமல்ல, வசனத்தில்கூட லாஜிக்கைப் பார்க்க முடியவில்லை. சோர்ந்துபோன திரைக்கதையை விறுவிறுப்பாக்க திடீர் ‘ட்விஸ்ட்’களும் வருகின்றன. ஆனால், தாதா மதுசூதனராவ் இறந்தபிறகும், தொடர்ந்து நீளும் ட்விஸ்ட்டுகளுக்கு கிளைமாக்ஸில்தான் விடை கிடைக்கிறது. அத்தனை ரவுடிகளையும் ஓரே இடத்தில் திருநங்கை கொலை செய்யும் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை.
விக்ரம் பிரபுவின் உயரமும் ஆக்ஷனும் பாத்திர வார்ப்புக்குச் சரியாகப் பொருந்துகிறார். நண்பர்களுக்காக வாழ்வது, ரவுடியுடன் நெஞ்சை நிமிர்த்தி மோதுவது, பார்த்தவுடன் காதல் நெருப்பு பற்றிக்கொள்வது என ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால், கதைத் தேர்வில் விக்ரம் பிரபு இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவது அவருக்கு நல்லது. மருத்துவ மாணவியாக வரும் நிக்கி கல்ராணிக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையை இயக்குநர் வழங்கவில்லை. விக்ரம் பிரபுவின் அப்பாவாக வரும் பொன்வண்ணன், கழிவு நீர் அகற்றும் எளியத் தொழிலாளியாக வருகிறார். சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸில் திருநங்கையாக வந்து வெடிக்கிறார் சங்கீதா. சமுதாயத்தில் தங்களைப் பார்க்கும் விதத்தை வலியுடன் பதிவு செய்கிறார். தோற்றத்திலும் பாவணையிலும் உடல் மொழியிலும் திருநங்கைப் பாத்திரத்துக்கு சங்கீதா பொருந்தியிருக்கிறார். காமெடிக்காக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். அவர் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் மொக்கையான காமெடியை செய்யப் போகிறாரோ தெரியவில்லை. ‘ஆடுகளம்’ நரேன் விரைப்பான போலீஸ் கமிஷனராக வருகிறார். படத்துக்கு இசை ஜான் ரோல்டன். ‘ஆலங்கிளியே..’ என்ற பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு தீ ஜூவாலையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.
படத்தின் தலைப்பில் இருந்த ‘நெருப்பு’ திரைக்கதையில் இருந்திருந்தால் படம் ‘அடடா’ போட வைத்திருக்கும்.
மதிப்பெண்: 2 / 5