28/10/2016

இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் நாயகர்கள்!


ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 900 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புதிய மைல் கல்லைப் பதித்திருக்கிறது இந்திய அணி. அதுவும் 900 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி இந்தியாதான். அக்டோபர் 16 அன்று தர்மசாலாவில் நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான போட்டிதான் இந்தியாவுக்கு 900-மாவது போட்டி. இந்தத் தருணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் முத்தான முதல் முத்திரைகளைப் பதித்த 10 வீரர்களைப் பார்ப்போமா?

அஜித் வடேகர்

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியை வழி நடத்திய முதல் கேப்டன் இவர்தான். 1974-ம் ஆண்டு ஜூலை 13 அன்று இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இவரது தலைமையில் களமிறங்கியது. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட  அந்தத் தொடருக்கு இவர் கேப்டனாக இருந்தார். இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தது. இதுஒரு புறம் இருக்க, அந்த இரண்டு போட்டிகளுடன் அஜித் வடேகர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். முதல் கேப்டன் என்ற வகையில் பிள்ளையார் சுழி இவர்தான்.

வெங்கட் ராகவன்

கிரிக்கெட்டில் அம்பயராக பலரும் அறிந்த வெங்கட் ராகவனுக்கும் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு இருக்கிறது. இந்தியா முதன்முதலாக ஒரு நாள் போட்டியை வென்ற அணிக்கு கேப்டனாக இருந்தவர் இவர்தான். 1975-ம் ஆண்டு முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிழக்கு ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான் இந்தியா பெற்ற முதல் வெற்றி. முதல் உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த பெருமையும் வெங்கட் ராகவனையே சேரும். 1979-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கும் இவரே கேப்டனாக இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

கபில்தேவ்

1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த ஹீரோ. இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகி, சிறப்பான ஆட்டத்தையும் தலைமையையும் வெளிப்படுத்தி உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் கபில்தேவ். இந்த உலகக் கோப்பையில் டன்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் மளமளவென வீழ்ந்த விக்கெட்டுகளுக்கு மத்தியில், தனி ஒருவனாக 175 ரன்களை விளாசி, அணிக்கு வெற்றித் தேடித் தந்தார் கபில்தேவ். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் ஒரு வீரர் செஞ்சுரி போட்டதும் இதுதான் முதல்முறை. அந்தச் சாதனையும் கபிலுக்கே சொந்தம்.

சேத்தன் சர்மா

மொத்தமே 65 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய சேட்டன் சர்மாவுக்கு இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்போதுமே தனி இடம் உண்டு. முதன்முதலாக ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்ந்திய இந்திய நாயகன் இவர். 1987-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் நாக்பூரில்  நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் கென் ரூதர்போர்ட், இயான் ஸ்மித், ஈவென் சேட்ஃபீல்ட் என மூன்று பேரையும் பவுல்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். உலகக் கோப்பையில் படைக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் சாதனையும் இதுதான்.

சச்சின் டெண்டுல்கர்

சாதனை நாயகன், கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் ஆராதிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் படைக்காத சாதனைகளே இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் சச்சின். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தச் சாதனையை எட்டினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49 சதங்கள்), அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர் (463 போட்டிகள்), உலகக் கோப்பையில் அதிக சதங்கள் (6 சதங்கள்) விளாசியவர், முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய வீரர், அதிக ஆட்ட நாயகன் விருது (62 விருது)பெற்றவர், அதிக முறை தொடர் நாயகன் (16 முறை) பெற்றவர் என சச்சினின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சவுரவ் கங்குலி

தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருது என்பது எந்தக் கிரிக்கெட் வீரருக்குமே சவாலான விஷயம். ஆனால், அந்தச் சாவலை சாத்தியமாக்கியவர் சவுரவ் கங்குலி. இரண்டுல்ல; மூன்றல்ல, தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டியில் நான்கு முறை ஆட்ட நாயகன் விருது வாங்கி உலக அளவில் ஆச்சரியமூட்டினார் கங்குலி. 1997-ம் ஆண்டு கனடாவின் டொரண்டோ நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட சஹாரா கோப்பைத் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் நான்கு ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருது பெற்றார் சவுரங் கங்குலி. இந்நாள் வரை இது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

அனில் கும்ப்ளே

ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் ஐ.சி.சி. பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் அனில் கும்ப்ளே. ஒரு நாள் போட்டியில் கும்ப்ளே எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 337. மொத்தம் 271போட்டிகளில் விளையா,டி இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போதைய நிலையில் ஐ.சி.சி.-யின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார் கும்ப்ளே.

ரோஹித் சர்மா

ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடிப்பது அரிதான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ரோஹித் சர்மா இரண்டு முறை இரட்டைச் சதங்களை விளாசி பெரும் சாதனை புரிந்திருக்கிறார். உலக அளவில் இரண்டு முறை இரட்டை சதங்கள் விளாசியவர்கள் யாரும் கிடையாது. 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் 16 சிக்ஸர்களுடன் 209 ரன்களும், 2014-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 33 பவுண்டரிகளுடன் 264 ரன்களும் குவித்து வியப்பூட்டினார் ரோஹித் சர்மா. உலக அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னும் 264 ரன்கள்தான். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (16 சிக்ஸர்கள்), அதிக பவுண்டரிகள் (33 பவுண்டரிகள்) விளாசிய ஒரே வீரரும் இவரே.

மகேந்திர சிங் டோணி

இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே சூப்பர் மேன் மகேந்திர சிங் டோனி. இதுவரை எந்த இந்திய விக்கெட் கீப்பர்களும் செய்யாத சாதனைகளைப் படைத்திருக்கிறார் மகேந்திர சிங் டோனி. ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பின் மூலம் 355 பேரை அவுட் ஆக்கியிருக்கிறார் டோனி. 281 போட்டிகளில் இந்தச் சாதனையை எட்டியிருக்கிறார் இவர். உலக அளவில் அதிக பேரை அவுட் ஆக்கியதில் நான்காவது இடம். இதுவரை ஒரு நாள் போட்டியில் இந்தியா சார்பில் 24 விக்கெட் கீப்பர்கள் விளையாடியுள்ளனர். இவர்களில் அதிக போட்டிகளில் (281 போட்டிகள்) பங்கேற்றவரும், அதிக ரன்கள் (9058 ரன்) விளாசியவரும் டோனி மட்டுமே.

விராட் கோலி

ரன் குவிப்பதைப் போல சாதனைகளைக் குவிப்பதில் விராட் கோலிக்கு நிகர் அவரேதான். இந்தியாவில் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் போட்டியில்  விரைவாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் கோலிக்குதான். 2013-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி, 52 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார் கோலி. இந்திய வீரர்களின் சார்பில் அதிரடியாக குறைந்த பந்தில் விளாசப்பட்ட சதம் இதுதான். அந்த வகையில் கோலி சாதனைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்.

தி இந்து, 28/10/2016