போலி சான்றிதழ்கள் புழக்கம், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார வர்க்கத்தினரின் கூட்டு பற்றி ஒரு செய்தியாகப் பார்த்து கடந்தப் போகும் கிரிமினல் சதியையும், அதன் உள்ளார்ந்த நுண் அரசியலையும் அக்கு வேறாக ஆனி வேறாக ஆராய்ந்திருக்கும் படம்தான் கணிதன்.
அதிகம் பிரபலமாகாத ஒரு சேனலில் செய்தியாளராகப் பணிபுரிகிறார் நாயகன் கவுதம் (அதர்வா). புகழ்பெற்ற பிபிசி சேனலில் செய்தியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கனவு, லட்சியம் எல்லாம். எதிர்பார்த்தபடியே பிபிசி சேனலில் வேலை கிடைக்கிறது. அந்த நேரத்தில், போலி சான்றிதழ் மூலம் கல்விக் கடன் பெற்றதாக அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது. அவர் படித்து வாங்கிய பட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்கிறது. பெருத்த அவமானத்துடன் ஜாமினில் வெளியே வரும் அதர்வா, செய்தியாளருக்குரிய புலனாய்வு மூளையை வைத்து என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
போலி கல்விச் சான்றிதழ் சமூகத்தில் எப்படி வேரூன்றியிருக்கிறது, அதனால் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், திறமையே இல்லாதவர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்புகளை எப்படியெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை துணிந்து கதையாக சொன்ன விதத்தில் இயக்குநர் டி.என். சந்தோஷ்க்கு சபாஷ் போடலாம்.
போலி சான்றிதழ் கும்பலின் நெட்வொர்க்கில் சாதாரண பெட்டிக் கடைக்காரர் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை எப்படியெல்லாம் பிணைந்திருக்கிறார்கள் என்பதை காட்சிகளில் சொல்லும்போது கண்கள் விரிகின்றன. அந்தக் கும்பல் எல்லா இடங்களிலும் எப்படி வியாபித்திருக்கிறது, கன்சல்டன்சி நிறுவனத்தில் பெறப்படும் இளைஞர்களின் சான்றிதழ்கள் எப்படி கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எப்படி போலியாகத தயாரிக்கப்படுகின்றன என்பதை நுணுக்கமாகச் சொல்லி ரசிகர்களைப் பீதியூட்டுகிறார் இயக்குநர்.
ஆனால், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் அசிஸ்டெண்ட் என்பதை சந்தோஷ் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். பல சிக்கலான கண்டுபிடிப்பு முடிச்சுகளை அவிழ்க்கும்போதும், வில்லனை சந்திக்கும்போதும் ரமணா, துப்பாக்கி படங்கள் ஞாபகத்துக்கு வந்துபோகின்றன.
அதர்வாவை போலீஸ் கைது செய்வதோடு சரி, அதன்பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். போலி சான்றிதழ் கும்பல் பற்றி போலீஸ் பெயரில் போலி செய்திகளை அதர்வா செய்தி சேனல்களில் ஒளிபரப்ப செய்ய வைக்கிறார். அதைப் பற்றியும்கூட போலீஸூக்கு எதுவுமே தெரியாமல் இருப்பது மிகப் பெரிய ஓட்டை. போலி சான்றிதழ் பற்றி தொடர்ந்து மீடியாவில் செய்தி வரும்போதும் அந்தக் கும்பல் விடாமல் அந்த வேலையைத் தொடர்ந்து செய்வது, உருட்டி மிரட்டும் வில்லன் இடத்துக்கு ஆபிஸ் பையன் ஒருவர் சென்று கம்ப்யூட்டரில் உள்ள எல்லா தகவல்களைச் சுட்டுக் கொண்டு வருவது எல்லாம் காதில் பூ சுற்ற வைக்கிறது.
அதர்வாவுக்கு ஏற்ற சரியான வேடம். போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை பிடிக்க சிபிஐ ரேஞ்சுக்கு திட்டம் போடும்போது துறுதுறுவென மாறிவிடுகிறார். வில்லன்களிடம் மோதும்போது ஆக்ஷன் அவதாரம் எடுத்து தெறிக்க விடுகிறார். காதலி கேதரீன் தெரசாவிடம் உருகும்போது பியூஷ் போன பல்பாக மாறி அவுட் ஆகிவிடுகிறார். இவை எல்லாவற்றிலும் கச்சிதமாகப் பொருந்துகிறார் அதர்வா.
இதுவரை பக்கத்துவீட்டுப் பெண் சாயலில் ரசிகர்களை கொள்ளைக் கொண்ட கேத்ரீன் தெரசா, இந்தப் படத்தில் கவர்ச்சிக் குண்டை வீசி கிறங்கடித்திருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகள், அதர்வாவுக்கு உதவுவது என கேத்ரீன் வந்துப் போகிறார். செய்தி வாசிப்பவராக வரும் அதர்வாவின் அப்பா ‘ஆடுகளம்’ நரேஷ், அதர்வாவவுக்கு உதவும் போலீஸாக பாக்கியராஜ், வழக்கறிஞராக கருணாகரன், டி.வி. சேனல் அதிகாரியாக மனோ பாலா என அவர்கள் பாத்திரத்துக்கு ஏற்ப செய்திருக்கிறார்கள். போலி சான்றிதழ் அச்சடிக்கும் கும்பலின் தலைவனாக தருண் அரோரா நடித்திருக்கிறார். பார்வையிலும் உடல் மொழியிலும் மிரட்டுகிறார். தமிழுக்கு இன்னொரு நல்ல வில்லன்.
படத்துக்கு இசை டிரம்ஸ் சிவமணி. பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை வாய்ப்பை மட்டும் வேறொருவருக்கு வழங்கிவிட்டார்கள். முதல் பாதியிலேயே படத்தின் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடுகிறது. அதனால் இரண்டாம் பாதியை இழுவையாக இழுத்திருப்பது சோர்வடைய செய்கிறது.
வழக்கமான ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மீடியா பார்வையில் படமாக்கியிருப்பதன் மூலம் ‘கணிதன்’ கவனிக்க வைக்கிறான்!
மதிப்பெண்: 2.5 / 5