04/01/2016

கவர்ச்சி அஸ்திரம்! 1990-களில் தமிழ் நடிகைகள்

 
தென்னக நடிகைகள் மட்டுமே மையம் கொண்டிருந்த கோலிவுட், வட இந்திய நடிகைகளுக்கு வாசலைத் திறந்துவிட்டது தொண்ணூறுகள். தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக தொடர்ச்சியாக மும்பை வரவுகள் அறிமுகமான தருணம் அது. 1980-கள் வரை இலைமறை காயாக இருந்த கவர்ச்சி அஸ்திரம், விஸ்வரூபமெடுத்ததும் இந்தப் பத்தாண்டுகளில்தான்.  அழகு, நடிப்பைத் தாண்டி வெள்ளைத் தோலும் கவர்ச்சியும் பிரதானமானதும் அப்போதுதான். வெள்ளைத் தோல் ஈர்ப்பு, கவர்ச்சியைத் தாண்டி ஒரு சில நடிகைகள் தங்களுக்கே உரிய ஸ்டைலில் முத்திரைப் பதிக்கவும் செய்தனர்!

அழகான நாயகிகள், நடிப்புத் திறமை என இரண்டும் கலந்த கலவைகளாக 1980-கள் வரை தமிழில் நடிகைகள்  ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள். 1980-களிலும்கூட ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, சரிதா, ராதிகா, மாதவி, ராதா, அம்பிகா, ரேவதி, நதியா உள்ளிட்ட என சில தென்னிந்திய நடிகைகளின் பிடியிலேயே கோலிவுட் பத்திரமாக இருந்தது. இந்த நடிகைகளோடு 1980-களின் பிற்பகுதியில் அறிமுகமான குஷ்பு, ரூபிணி, கவுதமி போன்ற நாயகிகள் 1990-களின் தொடக்கத்திலும்கூட தங்களைத் தக்கவைத்துக்கொண்டார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும்விட தமிழ் சினிமாவில் அப்போது தன் ஆதிக்கத்தை விஸ்தரித்தவர் மும்பை வரவான நடிகை குஷ்பு மட்டுமே.



தென்னிந்திய நடிகைகளைவிட சுண்டியிழுக்கும் வெள்ளைத் தோலும், வசீகரமான தோற்றமும் தொடக்கக் காலத்தில் குஷ்புக்கு தமிழ் சினிமாவில் சிவப்புக் கம்பளம் விரிக்க உதவியது. 1991-ம் ஆண்டில் வெளியாகி அந்தக் கால கட்டத்தில் உச்சம் தொட்ட  ‘சின்னத்தம்பி’ படம் குஷ்புக்குக் கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களை வெறியர்களாக மாற்றியது.  அழகுப்பதுமையாக வந்து ரசிகர்களைக் கிறங்கடித்த குஷ்பு, அந்தப் படத்துக்குப் பிறகு கனவுகன்னியாக ரசிகர்களின் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். ஒல்லிபெல்லி  நடிகைகளின் மீது மோகம் கொண்ட தமிழ் ரசிகர்கள், குஷ்புவின் எடுப்பான பூசினார்போன்ற தேகத்தையும் ஆரவாரமாக ரசித்தார்கள்.  அவரை ‘குஷ்பு இட்லி’ என செல்லமாக அழைத்து, இட்லிக்கு திருநாமம் சூட்டும் அளவுக்கு அவரது கவர்ச்சிக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.

முன்னணி நாயகர்களின் படங்களில் நவநாகரீக பெண்ணாகவும், கவர்ச்சிப் பொம்மையாகவும் வெற்றிக்கொடி கட்டிய வேளையிலும்  ‘நாட்டாமை’,  ‘புருச லட்சணம்’,  ‘ஜாதி மல்லி’,  ‘கேப்டன் மகள்’,  ‘எட்டுப்பட்டி ராசா’ போன்ற படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி, தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் குஷ்பு.   ‘புருச லட்சணம்’ படத்தில் ‘கோலவிழி அம்மா, ராஜா காளியம்மா..’ எனத் தாலி வரம் கேட்டு குஷ்பு வாயசைத்த பாட்டு தாய்மார்களை உருக்கியது.  தொண்ணூறுகளின் இறுதி வரை குஷ்புவின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் தொடர அவரது அழகு மட்டுமல்ல நடிப்புத் திறமையும் ஒரு காரணமாக அமைந்தது.

ரஜினி, கமல், விஜயாந்த் போன்ற முன்னணி நாயகர்களுக்கு மத்தியில் விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா போன்றவர்களும் தங்கள் சினிமா பயணத்தை அந்தக் காலகட்டத்தில்தான்  தொடங்கினார்கள். இவர்களுக்குத் தொடக்கக் காலத்தில் பெரும்பாலும்  சங்கவி, சுவாதி, யுவராணி, சிவரஞ்சனி, மதுபாலா  போன்ற நடிகைகளே ஜோடிகளாக வாய்த்தார்கள். இவர்கள் கொஞ்சம் நடிப்புக்கும், கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்து ரசிகர்களை வளைக்க ஆரம்பித்தார்கள்.  ‘சின்ன குஷ்பு’ என்று சொல்லுமளவுக்கு பூனைக்கண்ணழகி  சிவரஞ்சனி பெயர் பெற்றார். ஆனால், அப்போதைய இளம் நாயகர்களுடன் இவர்கள் மூட்டைக் கட்ட வேண்டிய நிலை  ஏற்பட்டது துரதிர்ஷ்டம்.

 இவர்களும், அப்போது முன்னணியில் இருந்த  நடிகைகளும் நாயகர்களுடனான காதல் காட்சியில் நெருக்கத்தையும், பாடல் காட்சிகளில் படுகவர்ச்சி என்ற அஸ்திரத்தால் ரசிகர்களின் மனங்களைத் துளைத்தார்கள். உச்சி முதல் உள்ளங்கால் வரை நாயகியை மோப்பம் பிடிப்பது போன்ற காட்சிகளைக் கண்டு ரசிகர்கள் ஏக்க பெருமூச்சி விட்டார்கள் அப்போது.  நாயகிகளின் நெஞ்சில்  நாயகர்கள் தலை வைக்காத காட்சிகளே வராத படங்களே இல்லை என்று அப்போது சொல்லலாம். அந்த அளவுக்கு நாயகிகள் தாராளம் காட்டினார்கள். கவர்ச்சிப் பாடல்களுக்கென தனியாக இருந்த நடிகைகளின் வேலையையும் நாயகிகளே பறித்துக்கொண்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். அரைகுறை ஆடையுடன் மிட் நைட் மசாலா பாடல்களில் நாயகர்களுடன் ஆடி பாடி  ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தார்கள்.

வட இந்திய நடிகைகளின் வரவுகள் அதிகரிப்புக்கு 1993-ம் ஆண்டில் ஜெண்டில்மேன் படம் மூலம் அறிமுகமான பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரும் ஒரு காரணம். முதல் படத்தில் மதுபாலாவை நடிக்க வைத்த பிறகு அவரது பார்வை மும்பையை நோக்கி பதிந்தது. நக்மா (காதலன்), மனிஷா கொய்ராலா, ஊர்மிளா (இந்தியன்), ஐஸ்வர்யாராய் (ஜீன்ஸ்), மனிஷா கொய்ராலா (முதல்வன்) என வட இந்திய நாயகிகளை வளைத்து வளைத்து நடிக்க வைத்தார் ஷங்கர். இவர்களில் மதுபாலா(ரோஜா), மனீஷா கொய்ராலா(பம்பாய்), ஐஸ்வர்யா ராய் (இருவர்) ஆகியோரை தமிழில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் மணிரத்னம். இந்த நடிகைகள் எல்லாம் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் தடத்தைப் பதிக்கவும் தவறவில்லை.

 ஆனால், விதிவிலக்காக நக்மா ஓரிறு ஆண்டுகள் தமிழ் சினிமாவின் மையமானார். செக்கச்செவேர் நிறத்திலும், கொளுகொளு உடலமைப்பையும், தாரளமான கவர்ச்சியையும் தவிர நடிப்பு என்பதெல்லம் நக்மாவுக்கு இரண்டாபட்சம்தான்.  ‘காதலன்’ படத்தில் நடித்த கையோடு ரஜினியின்  ‘பாட்ஷா’ படத்தில் டூயட் பாடி திடீர் கனவுக்கன்னியாக உயர்ந்தார் நக்மா. ஆனால்,  ‘லவ் பேர்ட்’,  ‘வில்லாதி வில்லன்’,  ‘மேட்டுக்குடி’,  ‘பிஸ்தா’ என சில படங்களுடன் நக்மா தமிழிலிருந்து மூட்டைக் கட்டிக்கொண்டு இந்தி, போஜ்புரி, தெலுங்கு பக்கம் செட்டிலானார்.

இப்படி வட இந்திய நடிகைகளைச் சுற்றி தமிழ் சினிமா நகர்ந்து கொண்டிருந்த வேளையில் கோலிவுட், டோலிவுட் நடிகைகளும் அவர்களுக்குப் போட்டியாக தங்கள் திறமைகளைக் காட்டவும் தவறவில்லை. வட இந்திய நடிகைகளின் கவர்ச்சிக்குப் போட்டியாக நடிகை ரோஜாவும் கோதாவில் குதித்து தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தினார். 1991-ல்  ‘செம்பருத்தி’யில் அறிமுகமாகி 1992-ல்  ‘சூரியன்’ படத்தில் உச்சம் தொட்டு, 1993-94-களில் முறையே ரஜினியுடன்  ‘உழைப்பாளி’,  ‘வீரா’ படங்களில் ஜோடி போட்டு அப்போதைய முன்னணி நடிகைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார். கவர்ச்சியைத் தாண்டி  ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ போன்ற சில படங்கள் ரோஜாவின் நடிப்புக்கு தீனிப்போட்டது.

இதே காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக முத்திரைப் பதித்த நடிகை மீனாவும் அப்போது முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ரஜினியுடன்  ‘எஜமான்’,  ‘வீரா’,  ‘முத்து’, கமலுடன்  ‘அவ்வை சண்முகி’ என முன்னணி நாயகர்களுடன் ஜோடிப் போட்டு தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். கவர்ச்சிக்குப் பொருந்தாத உடலமைப்பைத் தாண்டி பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றம் மீனாவுக்கு தனியாக ரசிகர்களைச் சம்பாதித்துக்கொடுத்தது.  ‘எஜமான்’,  ‘பொற்காலம்’,  ‘பாரதி கண்ணம்மா’,  ‘ஆனந்த பூங்காற்றே’ போன்ற படங்கள் மீனா முத்திரைப் பதித்தப் படங்கள். வட இந்திய நடிகைகள் போல இல்லாமல் ரோஜாவும், மீனாவும் தொண்ணூறுகள் முழுவதும் முழுமையாக தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 

ரேவதிக்குப் பிறகு எல்லாமே கவர்ச்சி பொம்மைகளாகவே இருக்கிறார்கள் என்று அலுத்துக்கொண்டோர் மத்தியில் சுகன்யா, தேவயாணி, சுவலட்சுமி, கவுசல்யா போன்ற நடிகைகள் குடும்ப குத்துவிளக்குகளாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்கள்.   இவர்களையும் கவர்ச்சி என்ற பந்து தாக்கியபோதும், அதிலிருந்து கொஞ்சம் விலகி  நடிப்பு என்ற எல்லைக்குள் சிக்ஸர் அடித்தனர். குறிப்பாக தேவயாணி தன் நடிப்பால் எழுப்பிய  ‘காதல் கோட்டை’ தமிழ் சினிமாவில் தனி முத்திரைப் பதித்தது. இவர்களுக்கிடையே தெலுங்கு,

கன்னடத்திலிருந்து வந்த ரம்பாவும், சவுந்தர்யாவும் தமிழில் கொஞ்சம் கலைச்சேவை செய்துவிட்டுப் போனார்கள்.  ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் மூலம்  ‘தொடையழகி’ என்ற பட்டத்தைத் தாங்கிப்பித்துக்கொண்டார் ரம்பா.
1980-களில் குட்டிப் பெண்ணாக வந்து தமிழ் சினிமாவில் சுட்டித்தனம் செய்த பேபி ஷாலினி, 1997-ல் ‘காதலுக்கு மரியாதை’ மூலம்  நாயகியாக அறிமுகமாகி வந்தணம் செய்தார்.  கவர்ச்சி எல்லைக்குள் சிக்காமல் நாகரீகப் பெண்ணாக கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துவிட்டு, அஜித் வீட்டில் குடும்ப குத்துவிளக்காக மாறிபோனார். இந்தக் காலகட்டத்தில் குடும்பப் பாத்திரங்களுக்கு சங்கீதா, கவர்ச்சி விருந்துக்கு மந்த்ரா என தரம் பிரித்து சில நடிகைகள் நடித்ததும் உண்டு. நடிப்புத் திறமையுடன் தமிழில்  ‘உன்னைத் தேடி’ மூலம் அறிமுகமான மாளவிகா, விலாங்கு மீனாகி கவர்ச்சி வலையில் சிக்கியது தனிக்கதை. 

வட இந்திய நடிகைகளின் மீதான மோகம் 1990-களின் தொடக்கத்தில் தொடங்கி இறுதி வரையிலும் தொடர்ந்து. தொண்ணூறுகளில் தொடக்கத்தில் குஷ்பு நீண்ட கால கனவு கன்னியாகவும், தொண்ணூறுகளின் மத்தியில் நக்மா குறுகிய கால கனவுக் கன்னியாக வலம் வந்த பிறகு அந்த இடத்தை யாரும் பிடிக்கவில்லையே என்று எண்ணிய வேளையில், இன்னொரு மும்பை வரவான சிம்ரன் 1997-ல் ‘ஒன்ஸ்மோர்’ மூலம் அறிமுகமானார். அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாத நடிகைகளில் சிம்ரனும் ஒருவர்.  தமிழ் சினிமாவில் நீண்டநாள் ஆதிக்கம் செய்து, கொஞ்சம் நடிக்கவும் செய்த நாயகி. ஸ்லிம்மாக இருந்தாலும் பரவசமூட்டும் கட்டழகு, சிக்கென்ற இடையழகு என சிலிர்ப்பூட்டும் அங்கங்களைக் கொண்டவர். தமிழ் சினிமா நாயகிகளில் இடையழகி என்றாலே நினைவுக்கு வரும் அளவுக்கு, கைகளை மேலே தூக்கி இடையை வெடுக்கென ஆட்டி ரசிகர்களைத் தூண்டிலில் விழ வைத்தவர் நடிகை சிம்ரன் மட்டும்தான்.

இவரும் குஷ்புவைப் போலவே கவர்ச்சி பொம்மையாக மட்டுமில்லாமல் நடிப்பிலும் முத்திரை பதிக்க முடியும் என்று நிரூபித்தார். கவர்ச்சிக்கும் நடிப்புக்கும் இடையிலான மெல்லியக் கோட்டை உள்வாங்கி இரண்டிலும் ஒரு சேர சவாரி செய்து அப்ளாஷ் வாங்கினார். அவரது நடிப்புத் திறமைக்குத் தீனிப்போட முதல் படம் வாலி. இப்பவும் பல நடிகைகள் நடிக்க விரும்பும் பாத்திரம் அது. வாலியைத் தொடர்ந்து  ‘துள்ளாத மனமும் துள்ளும்’,  ‘ப்ரியமானவள்’,  ‘நட்புக்காக’,  ‘கண்ணெதிரே தோன்றினாள்’,  ‘பஞ்ச தந்திரம்’, ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ போன்ற பல படங்களில் நடித்து தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கனவுக் கண்ணியாக வலம் வந்தார் சிம்ரன்.

தொண்ணூறுகளின் இறுதியில் சிம்ரன் என்ற சூறாவளி தமிழ் திரையுலகில் வீசிக்கொண்டிருந்தபோது 1999-ம் ஆண்டில், அந்தச் சூறாவளியுடன் சேர்ந்து  ‘வாலி’ படத்தில் சோனாவாக அறிமுகமானவர் ஜோதிகா. முதல் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அவரது விழிகளும், உடல் மொழியும் தமிழர்களின் மனதில் பசைப் போட்டு ஒட்டிக்கொண்டது. தனது கொடியிடையான இடையழகால் சிம்ரன் ரசிகர்களை மிரட்டியவேளையில், விழி அழகாலும், குண்டான உடலும் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார் ஜோதிகா. இவர் நடித்து வெளிவந்த முதல் படம்  ‘வாலி’யாக இருந்தாலும் அறிமுகமான படம்  ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’. அதில் சுடிதார் அணிந்த சொர்க்கமாக மாறி, சூர்யாவின் தூக்கத்தை மட்டுமல்ல, ரசிகர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுத்தார். கவர்ச்சி சுனாமிகளுக்கு மத்தியில் தமிழ்சினிமாவில் தென்றலாக வீசியவர் ஜோதிகா. இப்போது கோலிவுட்டில் தொடர்ச்சியாக வரும் பேய் படங்களுக்கு வழிகாட்டியும் இவர்தான்.  ‘சந்திரமுகி’யாக ரஜினியுடன் சேர்ந்து நடிப்பில் பயம் காட்டிய ஜோதிகாவை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா என்ன?

தமிழ் சினிமாவில் எப்போதுமே டிரெண்டு செட்டராக  நாயகர்களே இருப்பார்கள். ஆனால், ஆண்களுக்கு இணையாக  நாயகிகளும் டிரெண்டு செட்டராக உருவெடுத்தது தொண்ணூறுகளில்தான். அதற்குக் கவர்ச்சி அஸ்திரமும் ஒரு பாதையை ஏற்படுத்திக்கொடுத்தது.  இந்த டிரெண்டு செட்டிங்கில்  நடிகைகள் ஏற்ற பாத்திரங்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இப்போது சொல்லுங்கள், தொண்ணூறுகளில் உங்களுக்குப் பிடித்த ட்ரெண்ட் செட்டிங் கனவுக்கன்னி யார்?

- ‘தி இந்து’ 2016 பொங்கல் மலர்