05/11/2014

வாசன் - கரை சேருமா கப்பல்?

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கி, ஆட்சியைப் பிடித்தவர் என்றால், அது எம்.ஜி.ஆர். மட்டுமே. அதன்பிறகு எத்தனையோ கட்சிகள் பிளவு கண்டுள்ளன. கட்சியில் இருந்து வெளியேறிவர்களால் தங்களை தனி வெற்றியாளராக ஒருபோதும் அடையாளம் காட்டிக் கொள்ள முடிந்ததில்லை.  யாருடனாவது கூட்டணி அமைத்தே தங்களின் இருப்பை வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. இதோ, ஜி.கே.வாசன் இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, வாக்கு வங்கியைத் தொலைத்து கொண்டிருக்கிற கட்சியாக உள்ளது தமிழக காங்கிரஸ். இந்த நேரத்தில் அங்கிருந்து வெளியேறியுள்ள ஜி.கே.வாசன் கரை சேருவாரா?

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். எப்போது? 15 ஆண்டுகளுக்கு முன்பு. இரு திராவிடக் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தால், அது வெற்றிக் கூட்டணியாகவே இருந்தது. ஒரு சில தோல்விகள் தவிர. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அப்படி . 1989-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஜி.கே. மூப்பனார் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்போது 26 தொகுதிகளில் வெற்றியோடு 19.83 சதவீத வாக்குகளைப் பெற்றது காங்கிரஸ்.

 அதன்பிறகு காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது 1998 நாடாளுமன்றத் தேர்தலில்தான். இந்தத் தேர்தலின்போதும் தமிழக காங்கிரஸ் பிளவுட்டிருந்த நேரம்தான். ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மா நில காங்கிரஸ் (தமாகா) திமுகவுடன் கூட்டணி அமைந்திருந்த காலகட்டம். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற ஓட்டு 5 சதவீதம். 1999-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்குச் சென்றுவிட்டது. திமுக கூட்டணியில் இருந்த தமாகா தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தமாகா பெற்ற வாக்குகள் வாக்குகள் 10.6 சதவீதம். ஆக, 1998-ல் காங்கிரஸ் கட்சி தனித்தும், 1999-ல் தமாகா தனித்தும் பெற்ற மொத்த வாக்குகளைக் கூட்டினால் 15.6 சதவீதம் வரும். 15 ஆண்டுகளுக்கு முன்புகூட 15 சதவீத வாக்கு வங்கி வைத்திருந்த கட்சி காங்கிரஸ்.

இப்போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி என்ன? 4.3 சதவீதம். 2014-ம்  ஆண்டு நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்குகள். அதாவது, காங்கிரஸ், தமாகா இரண்டும் ஒன்றாக இருந்து பெற்ற வாக்குகள். 15 ஆண்டுகளுக்குள்   சுமார் 11 சதவீத வாக்குகளைத் தொலைத்திருக்கிறது இக்கட்சி. இதில் பழைய தமாகாவின் வாக்கு எவ்வளவு? திமுகவும் அதிமுகவும் பின்னடைவைச் சந்திந்த வேளையில்கூட 20 சதவீதத்துக்கும் மேலேயே அவற்றின் வாக்கு சதவீதம் இருந்திருக்கின்றன. காங்கிரஸ் போல் ஒரேடியாக இக்கட்சிகள் வாக்குகளைத் தொலைக்கவில்லை.

மூப்பனார் தமாகா தொடங்கியபோது பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ்தான் தமிழகத்தின் உண்மையான காங்கிரஸ் போல செயல்பட்டது. ஆனால், இப்போது வாசன் கோஷ்டி, தனியாக பிரிந்து தனி கட்சி கண்டிருக்கிறது, அவ்வளவுதான். ப. சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, கிருஷ்ணசாமி கோஷ்டி என பல கோஷ்டிகள் காங்கிரஸ் கட்சியிலேயேதான் இருக்கின்றன.  இப்போது தனது பலத்தை நிரூபிக்க ஜி.கே.வாசனுக்கு உடனடி தேர்தல் எதுவும் இல்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் எப்படி நடக்கும் என்பதைபற்றி சொல்லத் தேவையும் இல்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் கட்சியை எப்படி வளர்த்தெடுக்கப் போகிறார் வாசன்? வாக்கு வங்கியை எப்படி உயர்த்தப் போகிறார்?

“தமிழகத்தில் இளைஞர்கள் ஒரு புதிய விடியலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்” என்று கூறுகிறார் ஜி.கே.வாசன். காங்கிரஸ் கட்சியில் எல்லா கோஷ்டிகளும் ஒன்றாக இருந்தபோதே, இளைஞர்களின் வாக்குகளைக் கவர வாசன் உள்ளிட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

ஈழ விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடாமல் புறக்கணித்தார்களே, அவர்களை வாசன் தங்களுக்கு ஆதரவாக எப்படி மாற்றப் போகிறார்? பரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர்கூட இப்போது அக்கட்சிக்கு வாக்களிப்பதில்லையே, இதை எப்படி கையாளப்போகிறார் வாசன்? இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் கட்சியைப் பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கலாம். கிராம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். இளைஞர்களைக் கவர புது உத்திகளை கையாளலாம். திமுக, தேமுதிக அல்லது அதிமுகவோடு கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து அடி எடுத்து
வைக்கலாம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்வது நல்லது.

 1996-ம் ஆண்டில் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது இருந்த சூழல் வேறு. கட்சித் தொடங்கிய உடனே நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மற்றும்  நாடாளுமன்றத் தேர்தலில்  திமுகவுடன் கூட்டணி, ரஜினியின் ஆதரவு வாய்ஸ், அதிமுகவுக்கு எதிராக வீசிய பேரலை என தமாகவுக்கு வெற்றி வீடு தேடி வந்தது. அன்றைய அரசியல் சூழலில் திடீர் குழந்தையாகப் பிறந்த தமாகவை தமிழக வாக்காளர்கள் தொட்டிலில் போட்டு தாலாட்டினார்கள்.

ஆனால், இன்று நிலைமையே வேறு. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதில் இருந்து பிரிந்து வந்த வாசன் எப்படி கரையேரப் போகிறார்? தனது ஆதரவாளர்களை எப்படிக் கரைச் சேர்க்க போகிறார்? அவர் வெற்றிவாகைச் சூடும்வரை இதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாக இருப்பதை தவிர்க்க முடியாது.

- 05/11/2014