கிரேஸி மோகன். தமிழ்க் கூறும் கொல்லுலகம் அறிந்த காமெடிச் சுரங்கம். டைமிங் காமெடியில் கிங். தமிழ் மொழியில் நகைச்சுவை வசனங்களை அவர் கையாளும் விதம் குறித்து கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல கொட்டினார். இனி ஓவர் டூ கிரேஸி மோகன்.
மொழின்னா என்ன? ரமண மகரிஷி அழகாக சொல்லியிருக்கிறாரு. மெளனமே ஒரு மொழிதான்னு. மெளனமே மிகப்பெரிய பேச்சுதான். எல்லா விஷயங்களுக்குமே பேச்சுதான் காரணம். நாம் நினைப்பது நன்றாக இருக்கும். அதை சொல்ல வரும்போது கொஞ்சம் குறைவாகும். எழுத வரும்போது இன்னும் குறைவாகும். பிரிண்ட்ல அதை பார்க்குபோது மோசமா தெரியும். சினிமாவும் அப்படித்தான். யோசிக்கிறப்ப நல்லா யோசிப்பாங்க. வசனம் எழுதும்போது நன்றாக எழுதுவாங்க. முடிக்கிறப்ப எல்லாமே மாறி போயிருக்கும்.
எனது குரு
கேமராவில் சூட்டிங் செய்கிறோம். அதை டிவிடிக்கு மாற்றுகிறோம். ஸ்பெஷல் எஃபெக்ட் சேர்க்கிறோம். ஒவ்வொன்றிலும் தரம் உயர வேண்டுமா இல்லையா? ஆனால், குறைந்திருக்கும். மொழியும் அப்படித்தான். ஒருவருக்கு இயற்கையாக, சுபாவமாக வருகிறது பாருங்க, அதுதான் நல்ல மொழி. ஆரம்ப காலங்களில் மொழியே இல்லாமல் மெளன படங்கள் வந்துச்சு. அதன்பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் வந்தாரு. காலத்தைத் தாண்டி மொழியில் சில பேரு முத்திரை பதித்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் அப்படியானவர்தான். மொழியில என்னுடைய குரு நாதர்கள் யாரென்று பார்த்தால், கி.வ.ஜெகநாதன், கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, கிருபானந்த வாரியார், கவிஞர் வாலி ஆகியோரைச் சொல்லலாம். மொழியில் கையாளுவதில் இவர்கள் எல்லாம் வல்லவர்கள்.
மொழி ஆளுமை
மொழி என்பது ஒரு ஊடகம், அவ்வளவுதான். அது ஒரு கடைக்கு போயி துணி வாங்குவது மாதிரிதான். துணியை எடுத்து அதை முழுக்கை தைப்பதா, ஸ்டைலா தைப்பதா, காலர் வைப்பதா, வேண்டாமா என்பதை அதை கையாளுபவரிடம்தான் அந்தத் திறமை இருக்கு. என்னைப் பொறுத்தவரை மொழியினாலதான் நான் ஜெயித்துக் கொண்டு இருக்கிறேன்.
நம்ம தொழிலுக்கு மொழி ஆளுமை ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போ பாத்தீங்கன்னா, மைக்கேல் மதன் காமராஜன் படத்தில், கல்யாண விருந்து பண்ணும் காட்சி வரும். சாம்பார்ல மீன் விழுந்திடும். காட்சியில பாக்குறப்ப எல்லாருக்கும் சிரிப்பு வரும். இது இயல்பு. அதன்பிறகு ’வாட் யு மீன்.. ஐ மீன்..’ என்று பேசும்போதுதான் மொழி வரும். இந்த வசனம் காமெடியைக் கூட்டியது. அதாவது, சாம்பாரில் பல்லி விழுந்தாலும் தப்புதான். ஆனால், அந்த இடத்தில் ’வாட் யு மீன்..., ஐ மீன்...’ என்ற வசனம் எனக்கு கிடைத்ததால மீனை வைச்சுக்கிட்டேன். இந்த வசனம் அந்தக் காட்சியில் பளிச்சென வருவதற்கு வசனம் உதவியது. வசனத்திற்கு ஏற்ற காட்சி அமைத்தால் அதற்கு ‘ரிவர்ஸ் இன்ஜினியரிங்’ என்று பெயர். கதை, திரைக்கதை, வசனம் என வரிசையாக எழுத வேண்டுமென்று இல்லை. வசனம், திரைக்கதை, கதை என மாற்றியும் எழுதலாம். கொடியசைந்ததும் காற்று வந்ததா... காற்றசைந்ததும் கொடியசைந்ததா என்பது மாதிரிதான். அந்த நேரத்தில் எது நன்றாக வருகிறதோ அதை செய்துவிட வேண்டியதுதான்.
நகைச்சுவை மனோபாவம்

எனக்கு வாலி ரொம்பப் பிடிக்கும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை அவரோடு இருந்தப்போது, ஒருவர் வந்து கேட்டார். எப்போதும் கதர் உடையிலேயே இருக்கிறீர்களே என்று. அதற்கு வாலியிடம் இருந்து, ‘வெதருக்கு ஏற்ற கதர்’ய்யா என்று பதில் வந்தது. இப்படி நகைச்சுவையாக கூற ஒரு கெட்டிகாரத்தனம் வேண்டுமில்லையா? பஞ்ச் இல்லாத இடத்திலும், நகைச்சுவை இல்லாத இடத்திலும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறோம் பாருங்க, அது ரொம்ப முக்கியம். அதேமாதிரி வாலியோட ‘கண்ணன் வந்தான் ராமா’வில் தேங்காய் சீனிவாசன் சொல்வாறு. ‘பாருப்பா கிருஷ்ணா, நான் இவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறேன்’ என்று. ‘அதற்கு எல்லாம் நீ செய்த பாவம்தான் காரணம்’ என்று எதிர்க்குரல் வரும். டெட்ராமைசின், டெராமைசின், குரோசின் என சின்(பாவம்)..சின்னு... மாத்திரைகள் பெயர் பதிலாக விழும். அப்படி வசனம் அமைக்க கெட்டிகாரத்தனம் வேண்டுமில்லையா? எல்லாவற்றிலும் நகைச்சுவை இருக்கு என்று நினைக்கும் மனோபாவம் வேண்டும். அதற்கு கொஞ்சம் உழைக்கணும். மேலோட்டமாக இது போதும் என்று நினைத்தால் போதும்தான். நான் சில ஜோக்குகளுக்கு பத்து மணி நேரம் காத்திருந்திருக்கிறேன். அது மொழிக்கான காத்திருப்பு. மொழிக்காக காத்திருப்பது அலாதியானது.
என்னோட நாடகம் ஒன்றில் ஹீரோ ஒரு பார்பரை டாக்டரா நடிக்க வைப்பாரு. பார்பரா அவர் இருக்குறப்ப கதாநாயகி பார்த்திருப்பா. டாக்டரா பார்க்கிறப்போ, கதாநாயகி கேட்பாள்,’ நான் உங்கள எங்கேயோ பார்த்திருக்கிறேனே’ என்று. அதற்கு பதில் எழுதனும். இதற்கு இரவு முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். காலையில 5 மணிக்குதான அதற்கு பதில் கிடைத்தது. அந்த ஜோக் டைலாக் என்னான்ன, ‘என்னை நீங்க பார்த்தே இருக்க முடியாது. ஏன்னா நான் ஒன்லி ஃபார் ஜென்ஸ்’ என்று சொல்லுவான். அவன் வேற எதையோ சொல்லும்போதே அவனுடைய குணாதிசயம் வந்துடுச்சி இல்லையா. இதை எதுக்கு சொல்றோனா, மொழி இருக்கு பாருங்க, அதுக்காக காத்திருக்கணும். பொறுமை இருக்கணும். காத்திருக்கவனுக்கு மொழி நிச்சயமாக கிடைக்கும். மொழி மாறுவதை பத்தி ரொம்ப கவலைப்படக்கூடாது. மொழி கலப்பில்லாமல் எதையும் செய்ய முடியாது.
வட்டார வழக்கு
மொழியில் வட்டார வழக்கு இருக்கு இல்லையா? அதிலிருந்துதான் புதுக்கவிதைகள் எல்லம் வந்தன. ஆரம்ப காலங்களில் சினிமாவில், ’வாங்கோண்ணா,போங்கோண்ணா’ என்ற வசனங்கள் அதிகம் இருந்துச்சு. இதை சக்தி கிருஷ்ணசாமி போன்றவர்கள் மேம்படுத்தினாங்க. பாலச்சந்தர், சோ காலத்தில் ஒரு வரியில வசனங்களை கொண்டு வந்தாங்க. என்னோட காலத்தில் பட் பட்டென சொல்ற மாதிரி வசனங்கள் வந்து ரொம்ப சுலபமாயிடுச்சு. ஒரு வசனத்தை சொல்லும் போது பூர்வ பீடிகைகளையெல்லாம் சொல்லாமல் நேரடியாகவே சொல்லும் முறை வந்துடுச்சி. ஜனங்கள் ரொம்ப புத்திசாலியாக இருக்கிறார்கள். அவங்களவிட நாம் புத்திசாலியாக இருந்தால்தான் படம் ஓடும் என்பதை மனசுக்குள் வைத்துக்கொண்டு வசனம் எழுதனும்.
வட்டார வழக்கில் ஜோக் சொல்வது ரொம்ப ஈஸி கிடையாது. சதிலீலாவதி படம் எடுத்துக்கோங்க. படத்தில் கமல் கொங்கு பாஷை பேசியிருப்பாரு. நான் கோயமுத்தூர்காரன் இல்லை. இந்தப் படத்தில் என்னோட வசனங்களை எழுதின பிறகு அதை கோவை சரளாவிடம் கொடுத்து படிக்க வைச்சேன். அவர் படிக்கும் போது அதை பதிவு செய்து வசனங்களில் பயன்படுத்திக்கொண்டேன். ‘என்ற புருஷன்’ என்று சரளா பேசியதை வைத்தே, ‘ஒன்ற புருஷன், ரெண்டற புருஷன்’னு காமெடி ஜோக் வைச்சேன். இதுதான் ஒரு எழுத்தானின், வசனகர்த்தாவின் திறமை. எந்த மொழியாகவும் இருந்தாலும் சரி, வட்டார மொழியாக இருந்தாலும் சரி, அதை பயன்படுத்திக்கொள்ளும் கெட்டிகாரத்தனம் வேண்டும்.
கண்ணதாசன் ஒரு முறை அவருடைய நண்பர் வீட்டுக்கு போயிருந்தார். காலிங் பெல்லை அழுத்தியதும், ‘’who is standing out side?'' என்று வீட்டுக்குள் இருந்து கேள்வி வந்தது. சிறிதும் தாமதிக்காமல், ‘’outstanding poet is standing out side'' என்று கண்ணதாசன் பதில் சொன்னார். ஆங்கிலமாக இருந்தாலும், அந்த வார்த்தைப் பிரயோகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள். ‘தெனாலி’ படத்தில் ஈழத்தமிழை பயன்படுத்தியபோது நானும் கமலும் ஈழ நாடகங்களை நிறைய பார்த்தோம். கேட்டோம். அதை வைத்துதான் வசனங்களை அமைத்தேன். நாம் சாதாரணமாக ‘அவர் எனக்கு கடவுள் மாதிரி’ என்று சொல்வதை, ‘’நீ சாதாரண மச்சான் இல்லை. தெய்வ மச்சான்’’ என்று மெருகேற்றி வசனம் அமைக்கப்பட்டது. அந்த வசனத்தை படத்தில் கமல் டெலிவரி செய்யும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.
பிடித்த வசனம்
நான் எழுதிய வசனங்களிலேயே அவ்வை சண்முகியில் எழுதிய வசனம் ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி கோபித்துக்கொண்டு அப்பா வீட்டுக்கு போய்விடுவாறு. குழந்தையை பார்த்துக்கொள்ள கமலே பெண் வேடமிட்டு இன்டர்வியூவுக்கு வருவார். அவரைப் பார்த்ததும் குழந்தை ஓடி வந்து கட்டிப்பிடிக்கும். குழந்தையை தூக்கியவுடன் அப்பா என்று சொல்லும். உடனே கமல், ‘எப்படி கண்டிபிடிச்ச’ என்று குழந்தையைப் பார்த்து கேட்பார். உடனே அதுக்கு குழந்தை,’ என் அப்பா வாசனை எனக்குத் தெரியாதா?’ என்று கூறும். பொதுவாக அம்மா வாசனை குழந்தைகளுக்கு நன்றாகத் தெரியும். அப்பா வாசனையும் குழந்தைகளுக்குத் தெரியும் என்பதை ஆடியன்சுக்கு சொல்லணும் என்பதற்காக இந்த வசனத்தை வைத்தோம்.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்தின் ரீமேக். இந்தப் படத்தில நான் முன்னாபாய் படத்தின் ஒரு வசனத்தைக் கூட நான் பயன்படுத்திகொள்ளவில்லை. முழுவதுமாக என் பாண்யில் எழுதியிருந்தேன். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்துல நானும் நடிச்சிருக்கேன். சூட்டிங் போது பேப்பர்ல மடிச்சு கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பேப்பர திருப்பி பார்த்தப்ப அதுல மார்க்கப்பந்து என்ற பெயரைப் பார்த்தேன். உடனே என் கேரக்டருக்கு மார்க்கப்பந்து என்று வைத்துக்கொண்டேன். உதவியாளர்கள் நல்ல பெயரா வைக்கலாமேன்னு சொன்னாங்க. நான் கேட்கல. அந்தப் பேரு நல்லா இருக்கும்னு உள் மனது சொல்லுச்சி. அந்தப் பெயரை வைச்சுதான், ‘மனமிருந்தால் மார்க்கப்பந்து’ என்ற வசனத்தையும் எழுதினேன். அது மிகவும் பிரபலமாச்சு. எந்த ஒரு விஷயத்தையும் நுணுக்கமாக அணுகி வசனம் எழுதுவதற்கு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சமயோசித வசனம்
வசனகர்த்தாவுக்கு சமயோசிதமாக வசனம் எழுதும் திறமையும் வேண்டும். அருணாச்சலம் படத்துல தங்கையோட கல்யாண காட்சி. ஏற்பாடுகள் நடந்திக்கிட்டு இருக்கும். ரஜினி நடந்து வரும் முதல் காட்சி. அவரு என்ன நினைச்சரோ தெரியலை. ‘சும்மா நடந்து வந்தா ஒரு மாதிரி இருக்கு. ஒரு டையலாக் கொடுங்க மோகன்’னு சொல்லிட்டாரு. என்ன வசனம் வைக்கலாம்னு சின்ன யோசனை. வேலையாள் ஒருவரை ஒரு இடத்துல உட்கார வைத்துவிட்டோம். இப்போ ரஜினி நடந்து வராரு. ரஜினி பக்கத்துல வந்ததும், வேலையாள் பொருளைத் துடைப்பார். உடனே ரஜினி, ‘பார்த்து வேலை செய். என்னை பார்த்தவுடன் வேலை செய்யாதே’ என்று சொல்வார். அது ஒரு பஞ்ச் டயலாக்கவும் வந்துச்சு.
ஆஹா படம் கூட நல்ல காமெடி வசனங்கள் நிரம்பிய படம்தான். கல்யாண வீட்டில் கதா நாயகி ஸ்வீட் பறிமாறிக்கொண்டிப்பாள். அவளிடம் போய், ‘பெயர் என்ன?’ என்று கேட்பான் நாயகன். ‘ஜாங்கிரி’ என்று பதில் சொல்வாள் நாயகி. நான், ‘உன் பெயர கேட்டேன்’ என்பான் நாயகன். ‘ஜானகி’ என்று பதில் கூறுவாள் நாயகி. உடனே நாயகன், ‘ஸ்வீட் நேம்’ என்பான். அதற்கு நாயகி, ‘ஸ்வீட் பேரு ஜாங்கிரி’ என்பாள். இப்படி வசனங்கள் எழுதுறது இயற்கையாக அமைஞ்சிடிச்சு. வசனம் எழுதுவது எனக்கு சுலபமான வேலை ஆகிடுச்சு
வாசிப்புத் தேவை
என்னைப் பொறுத்தவரை ஆடியன்சுக்காக வசனம் எழுதுறவங்க ஜெயிப்பாங்க. மற்றவர்களை திருப்திபடுத்த வசனம் எழுதினா வெற்றி கிடைக்காது. வசனங்களை ஆடியன்சுக்கு புரிய மாதிரி எழுதணும். புதுமையாக எழுதனும். அதற்கு ரொம்ப படிக்கணும். வாசிப்புகள் இல்லாமல் எதையும் புதிதாக சிந்திக்கவும் முடியாது. எழுதவும் முடியாது.
- தி இந்து தமிழ்ப் புத்தாண்டு மலர், 2014