25/01/2014

மு.க.அழகிரி நீக்கம் - யார் காரணம்?

கட்சிக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ எந்தப் பிரச்சினை என்றாலும், அதை சரி செய்யப் பொறுமையாகச் செயல்பட்டுத் தீர்த்து வைப்பதில் பெயரெடுத்தவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. சில நேரங்களில் ஆதங்கத்தை வெளிக் காட்டினாலும் விட்டுக் கொடுத்துப் போகக்  கூடிய தலைவர். அதுவும் தேர்தல் சமயம் என்றால் எச்சரிக்கையாகச் செயல்படுபவர். ஆனால், மு.க. அழகிரி நீக்கப்பட்ட விவகாரத்தில் பொறுமையையோ, எச்சரிக்கை உணர்வையோ அவரிடம் காண முடியவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்தைத் தன் பக்கம் இழுக்கக் கலைஞர் கருணாநிதி ஏவிய இறுதி அம்பா இது? இல்லையென்றால் திமுகவில் நடைபெறும் சகோதரச் சண்டையின் வெளிப்பாடா? என்ற கேள்வி உரக்க எழுந்திருக்கிறது.

அண்மையில் ஒரு விழாவில் பேசிய விஜயகாந்த், 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர அழகிரி தெரிவித்த கருத்துதான் (என்னக் காரணம் என்பதை அவர் குறிப்பிடவில்லை) காரணம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி சேருவாரா என்று அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘’விஜயகாந்த் என் நண்பர். அவர் நல்ல முடிவு எடுப்பார்’ என்று மட்டுமே அழகிரி தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த விஜயகாந்த்,  ’’நண்பர்கள் என்றால் சிறு வயதில் கோலி விளையாடினோமா’’ என்று பதில் அளித்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததைத் தொடர்ந்து அவரைத் திட்டுவதற்காகவே நடிகர் வடிவேலுவைக் களமிறக்கி விட்டவர் சாட்சாத் அழகிரிதான். வடிவேலுவை அழகிரி அழைத்து வந்தாலும், வடிவேலுவின் விமர்சனங்களைத் திமுக தலைமையும், கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொண்டன என்பதை மறுக்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில்தான்  தேமுதிகவுடன் திமுக கூட்டணி சேர முயற்சி எடுப்பதைத்  தனியார் தொலைக்காட்சி நேர்க்காணலில் கண்டித்த மு.க. அழகிரி, விஜயகாந்த் அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று விமர்சனமும் செய்தார். அப்போதே மு.க.அழகிரிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். கட்சியின் தலைமையின் முடிவுக்கு (தேமுதிகவுடன் கூட்டணி) எதிராகச் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அழகிரியைக் குறிப்பிடாமல் எச்சரிக்கை செய்தார் கருணாநிதி. 

தற்போது அழகிரியைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய பிறகு கருணாநிதியைச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அழகிரி மீதான நடவடிக்கை தேமுதிகவைச் சமாதானப்படுத்தும் முயற்சியா என்ற கேள்விக்கு, உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் என்று கவனமாக வார்த்தையைக் கையாண்டார் கருணாநிதி. இந்தக் கருத்தை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அப்படியானால் விஜயகாந்தைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையா இது? திமுக - தேமுதிக கூட்டணிக்கு அழகிரி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று விஜயகாந்தோ, அக்கட்சியைச் சேர்ந்த வேறு சிலரோ இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

அப்படி இருக்கும் போது, மறைமுகமாகத் தேமுதிகவுடன் கூட்டணி குறித்துக் கருணாநிதி தரப்பில் பேசியவர்களிடம் அவர் இப்படித் தெரிவித்தாரா? ஆனால், தேமுதிகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றுதானே கருணாநிதி கூறி வருகிறார்.

உண்மையில் விஜயகாந்துக்கும் அழகிரிக்கும் மிகப்பெரிய அளவில் பிணக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எப்போதும் வார்த்தை போரையும் நடத்தியதில்லை. மாறாக, கடந்த திமுக ஆட்சியின் போது  ‘‘சட்டப்பேரவைக்குக் குடித்து விட்டு விஜயகாந்த் வருகிறார்’’ என்று தற்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதான் விஜயகாந்தை விமர்சித்தார். அதற்குப் பதிலடியாக ’ஊத்திக்கொடுத்தியா’ என்று ஜெயலலிதாவிடம் கொச்சையாகக் கேட்டு அறிக்கை விட்டார் விஜயகாந்த். விஜயகாந்தின் இமேஜை (இன்றளவும் பேசப்படும் விஷயம்) கெடுக்கும் அளவுக்குப் பேசிய  ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்கவில்லையா? ஜெயலலிதா-விஜயகாந்த் அறிக்கை போருடன் ஒப்பிடும் போது விஜயகாந்த் - அழகிரி விவகாரம் ஒன்றுமே இல்லை.  இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது  விஜயகாந்துக்காக அழகிரி மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கையாக இது தெரியவில்லை.

அப்படியானால் ஸ்டாலின் - அழகிரி மோதல் வெளிப்பாடா இது? இருக்க வாய்ப்புண்டு. திமுகவில் கருணாநிதி ஒரு முடிவு எடுத்து விட்டால் கட்சியின் வேறு சில தலைவர்களோ, மாவட்டச் செயலாளர்களோ அத்தனை சுலபத்தில் விமர்சனம் செய்து விட முடியாது. கடந்த ஆண்டு ஓர் இலக்கிய விழாவில் கருணாநிதி பேசும் போது, ‘’தமிழ் இனத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் தன் காலத்திற்குப் பிறகு ஸ்டாலின் போராடுவார்’ என்று கருணாநிதி கூறியதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தவர் அழகிரி.  ’‘திமுக ஒன்றும் சங்கரமடமில்லை’ என்று கருணாநிதி பாணியிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அழகிரி. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய கருணா நிதி, ‘‘ ஸ்டாலினை முன்மொழியக்கூடிய வாய்ப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு வரும் என்றால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்டாலினைத்தான் தலைவராக முன்மொழிவேன்’’ என்று கருணாநிதி குறிப்பிட்டார்.

ஆனால், அழகிரியைப் பொறுத்தவரைக்  கருணாநிதிதான் எப்போதும் தலைவர் என்பதை வலியுறுத்தி வருபவர். ஸ்டாலினைத் தலைவராக ஏற்க மாட்டேன் என்பதுதான் இதன் பொருள். தனியார் தொலைக்காட்சி பேட்டியில்கூட இதைத்தான் அழகிரி சுட்டி காட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாக மதுரையில்  நிகழ்ந்த போஸ்டர் சம்பவங்கள், அழகிரி ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை, இறுதியில் அழகிரி மீதே நடவடிக்கை ஆகியவை ஸ்டாலினுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கருத வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், 2000-ம் ஆண்டில் அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை விட்டதையும், பின்னர் அழகிரி திமுகவில் விஸ்வரூபம் எடுத்ததையும் பார்த்தவர்கள், இது கண் துடைப்பு நாடகம் என்று கூறுவதையும் மறுப்பதற்கில்லை.   

தி இந்து, 25-01-2014